திருப்புகழ் தலங்களுக்கு எவ்வாறு; எவ்வித மனநிலையில் யாத்திரை மேற்கொள்ளுதல் வேண்டும்? (சில சிந்தனைகள்):

முதற்கண், தொண்டைநாடு; நடு நாடு; சோழ நாடு; பாண்டிய நாடு; கொங்கு நாடு; துளுவ நாடு; மலை நாடு; வட நாடு; ஈழ நாடு உள்ளிட்ட நிலப்பரப்புகள் தோறும் தன் திருவடிகள் தோயுமாறு பலகாலும் நடந்தே சென்று ஆறுமுகக் கடவுளை அற்புத அற்புதப் பாமாலைகளால் போற்றிப் பரவியுள்ள, மேரு மலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமானை நன்றியோடு நினைவு கூர்ந்து பணிதல் வேண்டும். 

அருணகிரியாரின் வரலாற்றினை நம் வாரியார் சுவாமிகள் அருளிச் செய்துள்ள விரிவுரைகள் வாயிலாகவும்; 'குருநாதர்' எனும் சிறிய நூல் மூலமாகவும் குற்றமறக் கற்றுத் தெளிதல் வேண்டும் (46 பக்கங்கள் கொண்ட இந்நூல் குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தில் கிடைக்கப் பெறுகின்றது). அருணகிரிப் பெருமானின் திருவடிகளில் கொண்டொழுகும் பக்தி மற்றும் ஈடுபாட்டினால் மட்டுமே 'திருப்புகழ் தல யாத்திரை' எனும் ஞானவேள்வி நமக்குச் சித்தியாகும். 

'திருப்புகழ் தலமென்று அறிந்து கொண்டு அதற்கென முயற்சி மேற்கொண்டு தரிசிக்கும் தலங்களை' மட்டுமே 'நாம் இதுவரையில் தரிசித்துள்ள திருப்புகழ் தலங்கள்' எனும் பட்டியலில் இணைத்தல் வேண்டும். 'நாம் முன்னர் தரிசித்துள்ள தேவாரத் தலத்தையோ, முருகப் பெருமானின் திருக்கோயிலையோ பின்னாளில் நண்பரொருவரின் மூலம் திருப்புகழ் தலமென்று அறியப் பெறுகையில், அதனைத் தேவாரத் தலயாத்திரை அல்லது திருத்தல தரிசனமாகக் கொள்ளலாமே அன்றி திருப்புகழ் தல யாத்திரையின் ஒரு பகுதியாகக் கொள்ளுதல் நியமமாகாது. 

திருப்புகழ் திருத்தலங்களுக்கான ஒரே பிரமாண நூல் 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' (ஆசிரியர்கள்: பேராசிரியர் திரு.இராமசேஷன் அவர்கள் மற்றும் திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள்). இவ்வரிய நூலுக்கு தெய்வத்திரு வாரியார் சுவாமிகளும், வாகீச கலாநிதி திரு.கி.வ.ஜகந்நாதன் அவர்களும் அணிந்துரை எழுதி அருளியுள்ளார்கள் (யுனிவெர்சல் பதிப்பகம்: விலை ரூ350 முதல் 375 வரையில், routemybook எனும் வலைத்தளத்தில் "arunagirinadhar adichuvattil" என்றும், universalbooks.in வலைத்தளத்தில் "Arunaginathar Adichuvatil" என்றும் தேடினால் இந்நூலினை ஆர்டர் செய்வதற்கான பக்கத்திற்கு இட்டுச் செல்லும்). 

திருப்புகழ் தலயாத்திரையில் முக்கிய அங்கம் வகிப்பது, முருகப் பெருமானின் திருமுன்பு அத்தலத்திற்கான திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் புரிதலாகும். 'திருப்பாடல்களை இசையோடு மட்டுமே பாட வேண்டும்' என்று கருதும் அன்பர்கள் பலர், தங்களுக்கு இசைப்பயிற்சி இல்லாத காரணத்தால், பாராயணம் புரிவதை முழுவதுமாய்த் தவிர்த்து விடுகின்றனர். இது தவறான புரிதல், ஒவ்வொரு திருப்புகழ் திருப்பாடலுக்கும் சந்த (அல்லது தாள) நயம் உண்டு, அதன்வழி நின்று பாராயணம் புரிந்து வருதலே போதுமானது. 
-
உதாரணத்திற்கு 'முத்தைத் தரு' எனும் திருப்புகழைப் பின்வரும் சந்தநயத்தோடு பாராயணம் புரிதல் வேண்டும்,
-
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..தனதான
-
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும்

கருணைப் பெருங்கடலான நம் கந்தப் பெருமான் நம்மிடம் எதிர்பார்ப்பது இசைத் திறமையையோ, புலமையையோ அல்ல, அருணகிரியார் பால் நாம் கொண்டுள்ள ஈடுபாட்டையும்; திருப்புகழ் திருப்பாடல்கள் மீது நாம் கொண்டுள்ள ஆர்வத்தையும் மட்டுமே. 

பெரும்பான்மையான தலங்களுக்கு ஓரிரு திருப்பாடல்களையும்; அறுபடை வீடுகள்; திருவண்ணாமலை; சிதம்பரம் முதலிய திருத்தலங்களுக்கு 50 முதல் 100 வரையிலான திருப்புகழ் திருப்பாடல்களையும் அருணகிரியார் அருளியுள்ளார். திருப்புகழ் யாத்திரையில் அந்தந்த தலத்திற்கான திருப்பாடல்கள் முழுமையையும், பொறுமையாய் நேரம் அமைத்துக் கொண்டு பாராயணம் புரிந்து வழிபடுவது உன்னதமான ஆன்மீக அனுபவத்தினை நல்க வல்லது. 

முருகப் பெருமானின் திருமேனியை அருகாமையில் நின்றவாறு உற்றுநோக்கி தரிசித்தல் வேண்டும். நின்ற அல்லது மயில் மீதமர்ந்த திருக்கோலமா, தனித்தா அல்லது  தேவியருடன் கூடிய திருக்கோலமா, திருமுகங்கள்;  திருக்கரங்கள் அவற்றிலுள்ள ஆயுதங்கள்; திருவடிகள் என்று ஒவ்வொன்றாக அணுஅணுவாய்த் தரிசித்து குமரப் பெருமானின் வடிவழகில் ஈடுபட்டு மகிழ்தல் வேண்டும்.    

அருணகிரிநாதரின் திருவடிகளை வாழ்த்தி வணங்கி, மேற்குறித்துள்ள வகையில் திருப்புகழ் தலங்களைத் தரிசித்து வர, முருகப் பெருமான் மெதுமெதுவே தன்னை வெளிப்படுத்திப் பேரருள் புரிவான் (சிவ சிவ)!!

No comments:

Post a Comment