கந்தபுராணத்திற்கான அற்புத உரைநூல் (முக்கியக் குறிப்புகள்):

8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 10ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலான காலகட்டத்தில், காஞ்சிப்புரத்தில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ்; வடமொழி இரண்டிலுமே பெரும் புலமை கொண்டிருந்த தகைமையாளர். 

முருகக் கடவுள் கச்சியப்பரின் கனவில் தோன்றி, 'வேத வியாசரின் ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சம்ஹிதையில், சிவரகசிய கண்டத்திலுள்ள முதல் ஆறு பகுதிகளைத் தமிழில் இயற்றுவாயாக' என்று கட்டளையிட்டுப் பின்னர் 'திகட சக்கரம்' என்று அடியெடுத்தும் கொடுத்தருளியுள்ளார். அது மட்டுமா, அனுதினமும் கச்சியப்பர் இயற்றி வரும் திருப்பாடல்களில், (அவர் அறியுமாறு) அவ்வப்பொழுது சில திருத்தங்களையும் தன் திருக்கரங்களாலேயே புரிந்தருளி உள்ளார். இறுதியாய் நூல் அரங்கேற்ற சமயத்தில், 'திகழ் தச கரம்' என்பது 'திகட சக்கரம்' என்று புணர்வதற்கான இலக்கண விதியில்லை எனும் மறுப்பொன்று உருவாக, புலவரொருவரின் உருவில் அங்கு எழுந்தருளி வந்து, தக்க இலக்கணச் சான்றுகளைக் காண்பித்து அத்தடையினை நீக்கிப் பேரருள் புரிந்துள்ளார். 
இவ்விதம் குமாரகோட்டத்து இறைவனே இந்நூலின் பொருட்டு இத்தனை பிரயத்தனம் மேற்கொள்வார் எனில்,  இதனை முழுவதுமாய்க் கற்றுணர்வது அடியவர் கடனன்றோ!
தமிழில் வழங்கிவரும் சிறப்பான 3 புராணங்களுள், தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவமூர்த்தியின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது. உற்பத்தி காண்டம்; அசுர காண்டம்; மகேந்திர காண்டம்; யுத்த காண்டம்; தேவ காண்டம்; தக்ஷ காண்டம் எனும் ஆறு காண்டங்களாக, 10,345 திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றுள்ளது கந்தபுராணம்.  

ஏற்றமிகு இப்புராணத்திற்கான முழுமையான உரையை, ஆறு தனித்தனி பகுதிகளாக 'பாரி நிலையம்' எனும் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர், இதன் உரையாசிரியர் 'கயிலை மாமணி, முனைவர் சிவ.சண்முகசுந்தரம்' எனும் பெருமகனாராவார். அரிதினும் அரிதான திருப்பணியிது!!
வைதீக சைவ மரபு ஒருசிறிதும் பிறழாமல் உரையாசிரியர் இதனைக் கையாண்டிருப்பது மிகமிகச் சிறப்பு. ஒவ்வொரு திருப்பாடலின் கீழும் அப்பாடலில் இடம்பெறும் கடின பதங்களுக்கான பொருள் கொடுக்கப் பெற்றுள்ளது. மேலும் திருப்பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளிலோ வார்த்தைகளிலோ குறிக்கப் பெறும் புராண நிகழ்வுகளை, உரையாசிரியர் அந்ததந்த இடங்களிலேயே முழுமையாய் விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. பன்னிரு திருமுறைச் சான்றுகளையும் ஆங்காங்கே ஒப்பு நோக்கிக் குறித்திருப்பது மேலும் இனிமை சேர்க்கின்றது.  

கந்தபுராணம் ஒரு 'சிவநூல்' என்று நம் வாரியார் சுவாமிகள் தம்மடைய விரிவுரைகள் தோறும் கூறி வருவார். அதன் சத்தியத் தன்மையினை, இப்புராணத்தைப் பயிலுகையில் முழுமையாய் உணரப் பெறலாம். 'சிவ பரத்துவம் பேசப் பெறாத பகுதிகளே இதிலில்லை' எனலாம்.
அற்புத அற்புதமான சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இப்புராணத்தின் திருப்பாடல்கள் தோறும் விரவி இருக்கின்றது, நிகழ்வுகளின் மூலம் சித்தாந்த நுட்பங்களை இன்னமும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள இயலுமென்பது தெளிவு. இது வரையிலும் சமூக ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் புராண நிகழ்வுகளைச் சிறிது சிறிதாக, சரியும் தவறுமாகக் கண்டும் கேட்டும் வந்திருப்போம். 'கற்க கசடற' எனும் வள்ளுவனார் திருவாக்கிற்கேற்ப, அற்புதமான இந்த உரை நூலினைப் படிக்கையில், அந்நிகழ்வுகளுக்கான முறையான விளக்கங்களை அறிந்து கொள்ள முடிவதோடு, நம் புரிதலும் முழுமை பெறுவதை உணரப் பெறலாம். 

புராண இறுதியில் இடம்பெறும் பின்வரும் திருப்பாடலில், 'ஆறுமுக தெய்வத்தின் இப்புராணத்தினைக் கூறுவோரும், நூற்பொருளை ஆய்ந்து தெளிபவரும், கசடறக் கற்பவர்களும், கற்க முயற்சி மேற்கொள்பவர்களும், கசிந்துருகிக் கேட்போரும் சிவமுத்தியினைப் பெற்று இன்புறுவர்' என்று அறுதியிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் ,  
-
(தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 266)
வற்றா அருள்சேர் குமரேசன் வண்காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகளுறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே
(சென்னை மயிலாப்பூர் 'கிரி டிரேடிங் சென்டரில்' இவ்வுரை நூல் கிடைக்கப் பெறுகின்றது. பாரி பதிப்பகத்தாரின் நேரடி தொலைபேசி எண்கள்: 044-25270795, 044-43227745, அஞ்சல் முகவரி: 184/88 பிராட்வே, சென்னை 104)  
(குறிப்பு: ஆறுமுகக் கடவுளின் திருவருளால், இந்நூலிலுள்ள 10,345 திருப்பாடல்களையும் உரையோடு, இரண்டு முறை முழுமையாய்ப் படித்து மகிழ்ந்து, அந்த அற்புத அனுபவத்தையே இப்பதிவில் விவரித்துள்ளேன்).

No comments:

Post a Comment