சூரபத்மன் கண்ட விஸ்வரூப தரிசனம் (பகுதி 1) - (கந்தபுராண நுட்பங்கள்):

சூரபத்மன் எண்ணிறந்த மாய வடிவங்களையெடுத்து போர் புரிந்து வர, வேலாயுதக் கடவுள் அவையனைத்தையும் அழித்து 'சூரனே உன்னுடைய வடிவங்கள் யாவையும் அழித்தொழித்தோம், இனி நம்முடைய அழிவில்லா வடிவத்தையும் காண்பாயாக' என்றுரைக்கின்றார். இன்னதென்று விளக்கவொண்ணா பேருருவம் கொண்டு அதனைத் தரிசிப்பதற்கு சூரனுக்கு விசேடப் பார்வையையும், நல்லறிவையும் அளித்தருள் புரிகின்றார்.   

சூரன், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்றருளும் ஆறுமுகப் பெருங்கடவுளின் திருமேனியில் ஆயிரமாயிரம் கோடி அண்டங்களையும், அவற்றுள் விளங்கி வரும் உயிரினங்களையும், விண்ணவர் முதலான கடவுளர் யாவரையும் காண்கின்றான்.  

(1)
அழகிய மயிலின் மீது எழுந்தருளி வரும் குமர நாயகனை இதுவரையிலும் பாலன் என்றெண்ணினேன், அப்பெருமானின் தன்மையினை உள்ளவாறு அறியாதிருந்தேன். விண்ணவர்க்கும் மற்றுமுள்ள கடவுளர் யாவர்க்கும் மூல காரணமாக விளங்கியருளும் ஆதி மூர்த்தி இவரேயென்று இத்தருணத்தில் தெளிந்துணர்ந்தேன், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 433)
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலன்என்றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன்யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ
-
(சொற்பொருள்: மஞ்சை - மயில், பரிசு - தன்மை)

(2)
முன்னர் தூதாய் வந்திருந்த வீரவாகு 'வேலவனே விருப்பு வெறுப்புகளைக் கடந்து விளங்கும் முழுமுதற் பொருள்' என்றுரைத்தான், அக்கூற்றை கருத்தில் கொள்ளாது விடுத்தேன். இன்று இம்மூர்த்தியே தனிப்பெரும் தலைவர் என்றுணர்ந்தேன்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 434)
ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிகலின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாம் துணிபெனக் கொண்டிலேனால்
இற்றைஇப்பொழுதில் ஈசன் இவனெனும் தன்மை கண்டேன்

(3)
குமாரக் கடவுளின் மேன்மை பொருந்திய இப்பெருவடிவத்திலுள்ள தோற்றப் பொலிவும், பேரழகும், இளமையும் பிறிதொருவரிடம் கண்டுவிடவும் இயலுமோ? அற்புதம் அடைந்து தரிசித்துக் கொண்டேயிருந்தாலும் இத்திருக்காட்சி தெவிட்டவில்லை, 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 437)
சீர்க்குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவம் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள உலகில் அம்மா அற்புதத்தோடும் பல்கால் 
பார்க்கினும் தெவிட்டிற்றில்லை இன்னுமென் பார்வை தானும்

(4)
ஒப்புவமையின்றி நின்றருளும் மூல முதல்வனாகிய ஆறுமுகப் பெருமானின் இப்பெருவடிவத்தை நேரெதிரில் நின்றவாறு, உள்ளத்தில் அச்சமின்றி இத்தன்மையில் தரிசிக்க இயலுகின்றதெனில் அது முன்னர் சிவபரம்பொருளிடம் கடும் தவமியற்றிப் பெற்றுள்ள சிறப்புடைய வரங்களே காரணம் என்பேன், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 438)
நேரிலனாகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேருருஅதனை நோக்கிப் பெரிதும் அச்சுறுவதல்லால்
ஆரிது நின்று காண்பார் அமரரில் அழிவிலாத
சீரிய வரம் கொண்டுள்ளேன் ஆதலில் தெரிகின்றேனால்

(5)
ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகையெல்லாம் ஒன்றாகத் திரட்டினும் இம்முருகக் கடவுளின் திருவடி அழகிற்கு அதனை ஒப்பாகக் கூறிவிட இயலாது எனில் இம்மூர்த்தியின் அரிய பெரிய இவ்வடிவத்திற்கு எவரொருவரால் உவமை கூடி விவரித்து விட இயலும்,  
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 439)
ஆயிர கோடி காமர் அழகெலாம் திரண்டொன்றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்
தூயநல் எழிலுக்(கு) ஆற்றாதென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற்கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்

No comments:

Post a Comment