கந்தபுராணத்திற்கான அற்புத உரைநூல் (முக்கியக் குறிப்புகள்):

8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 10ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலான காலகட்டத்தில், காஞ்சிப்புரத்தில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ்; வடமொழி இரண்டிலுமே பெரும் புலமை கொண்டிருந்த தகைமையாளர். 

முருகக் கடவுள் கச்சியப்பரின் கனவில் தோன்றி, 'வேத வியாசரின் ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சம்ஹிதையில், சிவரகசிய கண்டத்திலுள்ள முதல் ஆறு பகுதிகளைத் தமிழில் இயற்றுவாயாக' என்று கட்டளையிட்டுப் பின்னர் 'திகட சக்கரம்' என்று அடியெடுத்தும் கொடுத்தருளியுள்ளார். அது மட்டுமா, அனுதினமும் கச்சியப்பர் இயற்றி வரும் திருப்பாடல்களில், (அவர் அறியுமாறு) அவ்வப்பொழுது சில திருத்தங்களையும் தன் திருக்கரங்களாலேயே புரிந்தருளி உள்ளார். இறுதியாய் நூல் அரங்கேற்ற சமயத்தில், 'திகழ் தச கரம்' என்பது 'திகட சக்கரம்' என்று புணர்வதற்கான இலக்கண விதியில்லை எனும் மறுப்பொன்று உருவாக, புலவரொருவரின் உருவில் அங்கு எழுந்தருளி வந்து, தக்க இலக்கணச் சான்றுகளைக் காண்பித்து அத்தடையினை நீக்கிப் பேரருள் புரிந்துள்ளார். 
இவ்விதம் குமாரகோட்டத்து இறைவனே இந்நூலின் பொருட்டு இத்தனை பிரயத்தனம் மேற்கொள்வார் எனில்,  இதனை முழுவதுமாய்க் கற்றுணர்வது அடியவர் கடனன்றோ!
தமிழில் வழங்கிவரும் சிறப்பான 3 புராணங்களுள், தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவமூர்த்தியின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது. உற்பத்தி காண்டம்; அசுர காண்டம்; மகேந்திர காண்டம்; யுத்த காண்டம்; தேவ காண்டம்; தக்ஷ காண்டம் எனும் ஆறு காண்டங்களாக, 10,345 திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றுள்ளது கந்தபுராணம்.  

ஏற்றமிகு இப்புராணத்திற்கான முழுமையான உரையை, ஆறு தனித்தனி பகுதிகளாக 'பாரி நிலையம்' எனும் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர், இதன் உரையாசிரியர் 'கயிலை மாமணி, முனைவர் சிவ.சண்முகசுந்தரம்' எனும் பெருமகனாராவார். அரிதினும் அரிதான திருப்பணியிது!!
வைதீக சைவ மரபு ஒருசிறிதும் பிறழாமல் உரையாசிரியர் இதனைக் கையாண்டிருப்பது மிகமிகச் சிறப்பு. ஒவ்வொரு திருப்பாடலின் கீழும் அப்பாடலில் இடம்பெறும் கடின பதங்களுக்கான பொருள் கொடுக்கப் பெற்றுள்ளது. மேலும் திருப்பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளிலோ வார்த்தைகளிலோ குறிக்கப் பெறும் புராண நிகழ்வுகளை, உரையாசிரியர் அந்ததந்த இடங்களிலேயே முழுமையாய் விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. பன்னிரு திருமுறைச் சான்றுகளையும் ஆங்காங்கே ஒப்பு நோக்கிக் குறித்திருப்பது மேலும் இனிமை சேர்க்கின்றது.  

கந்தபுராணம் ஒரு 'சிவநூல்' என்று நம் வாரியார் சுவாமிகள் தம்மடைய விரிவுரைகள் தோறும் கூறி வருவார். அதன் சத்தியத் தன்மையினை, இப்புராணத்தைப் பயிலுகையில் முழுமையாய் உணரப் பெறலாம். 'சிவ பரத்துவம் பேசப் பெறாத பகுதிகளே இதிலில்லை' எனலாம்.
அற்புத அற்புதமான சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இப்புராணத்தின் திருப்பாடல்கள் தோறும் விரவி இருக்கின்றது, நிகழ்வுகளின் மூலம் சித்தாந்த நுட்பங்களை இன்னமும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள இயலுமென்பது தெளிவு. இது வரையிலும் சமூக ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் புராண நிகழ்வுகளைச் சிறிது சிறிதாக, சரியும் தவறுமாகக் கண்டும் கேட்டும் வந்திருப்போம். 'கற்க கசடற' எனும் வள்ளுவனார் திருவாக்கிற்கேற்ப, அற்புதமான இந்த உரை நூலினைப் படிக்கையில், அந்நிகழ்வுகளுக்கான முறையான விளக்கங்களை அறிந்து கொள்ள முடிவதோடு, நம் புரிதலும் முழுமை பெறுவதை உணரப் பெறலாம். 

புராண இறுதியில் இடம்பெறும் பின்வரும் திருப்பாடலில், 'ஆறுமுக தெய்வத்தின் இப்புராணத்தினைக் கூறுவோரும், நூற்பொருளை ஆய்ந்து தெளிபவரும், கசடறக் கற்பவர்களும், கற்க முயற்சி மேற்கொள்பவர்களும், கசிந்துருகிக் கேட்போரும் சிவமுத்தியினைப் பெற்று இன்புறுவர்' என்று அறுதியிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் ,  
-
(தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 266)
வற்றா அருள்சேர் குமரேசன் வண்காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகளுறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே
(சென்னை மயிலாப்பூர் 'கிரி டிரேடிங் சென்டரில்' இவ்வுரை நூல் கிடைக்கப் பெறுகின்றது. பாரி பதிப்பகத்தாரின் நேரடி தொலைபேசி எண்கள்: 044-25270795, 044-43227745, அஞ்சல் முகவரி: 184/88 பிராட்வே, சென்னை 104)  
(குறிப்பு: ஆறுமுகக் கடவுளின் திருவருளால், இந்நூலிலுள்ள 10,345 திருப்பாடல்களையும் உரையோடு, இரண்டு முறை முழுமையாய்ப் படித்து மகிழ்ந்து, அந்த அற்புத அனுபவத்தையே இப்பதிவில் விவரித்துள்ளேன்).

காஞ்சியில் விகடசக்கர விநாயகர் எங்கு கோயில் கொண்டுள்ளார்?

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய கந்தபுராண நூலினை விகட சக்கர விநாயகரைப் போற்றிப் பணிந்த பின்னரே துவங்குகின்றார்,
-
(விநாயகர் காப்பு - திருப்பாடல் 1)
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

பிரணவ முகத்தினரான இம்மூர்த்தி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுள், இறைவரின் திருச்சன்னிதிக்கு செல்லும் பிரதான வழியில் அல்லாமல், ஆயிரங்கால் மண்டபத்தில்; இறைவர் விழாக்காலத்தில் வெளிவரும் கோபுர வாயிலுக்கு இடப்புறம் எழுந்தருளி இருக்கின்றார். கச்சி ஏகம்பமெனும் இவ்வாலயத்திற்குச் செல்லுகையில் அவசியம் 'விகட சக்கர' விநாயகக் கடவுளைத் தரிசித்துப் பணிந்து நலமெலாம் பெற்று வாழ்வோம்,
-
(விநாயகர் காப்பு - திருப்பாடல் 2)
உச்சியின் மகுட மின்ன ஒளிர்தர நுதலின்ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகம் கொண்டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக்(கு) அன்பு செய்வாம்
-
(சொற்பொருள்: நுதலின் ஓடை - நெற்றிப் பட்டம், மருப்பு - தந்தம், கிம்புரி - தந்தத்தின் பூண், தூங்க - அசைய)

ஸ்காந்த புராணத்திலிருந்து தோன்றிய கந்த புராணம்:

காஞ்சீபுரத்தில் 10ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில், ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவர் குமாரக் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளாலேயே 'திகட சக்கரம்' என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்று, வேத வியாசர் வடமொழியில் அருளியிருந்த ஸ்காந்த புராணத்தின் சிவரகசிய கண்டத்தினைத் தமிழ் மொழியில் கந்தபுராணத் திருப்பாடல்களாய் இயற்றித் தந்த உத்தம சீலராவார். இனி இக்குறிப்புகளுக்கான அகச் சான்றுகளைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்களின் வாயிலாகவே உணர்ந்து மகிழ்வோம், 

பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், 'முன்னர் வேத வியாசர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ஆறுமுக தெய்வத்தின் வரலாற்றை அறிந்து, அதனைத் தென்மொழியான தமிழில் இச்சிறியேன் உரைக்க முனைந்துள்ளேன்' என்று குறிக்கின்றார் (முனி - வேத வியாசர், தெரீஇ - தெரிந்து) , 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 3):
முன்சொல்கின்ற முனி வடநூல் தெரீஇத்
தென்சொலால் சிறியேன்உரை செய்தலால் 
மென் சொலேனும் வெளிற்றுரையேனும் வீண்
புன்சொலேனும் இகழார் புலமையோர்

பின்வரும் திருப்பாடலில், 'முன்னர் சிவபரம்பொருள் புராண நிகழ்வுகள் யாவையும் திருநந்திதேவருக்கு உபதேசிக்க, அவர் அதனை சனற்குமாரருக்கு உரைக்க, சனற்குமாரர் மூலம் அவைகளை அறியப் பெறும் வேத வியாசர் அவைகளைப் பதினெண் புராணங்களாக இயற்றியளித்து சூத முனிவரிடம் உபதேசிக்க, சூத முனிவர் வாயிலாக யாவருக்கும் உபதேசிக்கப் பெற்றுள்ளவையே இப்புராணங்கள்' என்று ஸ்காந்த புராண மூலத்தினைப் பதிவு செய்கின்றார் ('மூவாறு தொல்கதை' - பதினெண்  புராணங்கள், 'வாதராயண முனி' -  வேத வியாசர்). 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 8):
நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக்
கோதிலாதுணர் சனற்குமரன் கூறிட
வாதராயண முனி வகுப்ப ஓர்ந்துணர்
சூதன் ஓதியது மூவாறு தொல்கதை

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில், 'ஸ்காந்தமாகிய பெருங்கடலுள், சிவபெருமானின் திருநெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுக தெய்வம் வெளிப்பட்ட நிகழ்விலிருந்துத் துவங்கி, சூர சம்ஹாரம் முதலிய முக்கிய நிகழ்வுகளை இப்புராணத்தில் கூறவுள்ளேன்' என்று மேலும் விவரிக்கின்றார் (காந்தம் - ஸ்காந்தம்),
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 14):
காந்தமாகிய பெருங் கடலுள் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல் வந்தவுணர்கள் யாரும் அவ்வழி
மாய்ந்திட அடர்த்தது மற்றும் கூறுகேன்

இறுதியாய்ப் பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், வடமொழியில் சூதமுனிவர் முன்பு உபதேசித்த ஸ்காந்த புராணத்தினை ('முன்பு சூதன் மொழி வடநூல் கதை'), சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழியில் கூறுகின்றேன் ('பின்பு யான் தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்') என்று மீண்டுமொரு முறை ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி, கந்தபுராணத்தின் மூலமான ஸ்காந்த புராணத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 16):
முன்பு சூதன் மொழிவட நூல்கதை
பின்பு யான்தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்
என்பயன்எனில் இன்தமிழ்த் தேசிகர்
நன்புலத்தவை காட்டு நயப்பினால்

வேத வியாசரின் அவதார நோக்கம் (கந்த புராண விளக்கங்கள்):

திருக்கயிலையிலுள்ள சிவபரம்பொருளின் திருச்சபையில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்; நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகாவிஷ்ணு முதலியோர் கூடியிருக்கின்றனர். தேவர்கள் முக்கண் முதல்வரிடம், 'நிலவுகிலுள்ளோர் யாவரும் தாம் அருளியுள்ள மறைகளுக்குத் தத்தமது விருப்பம் போல் பொருள் கற்பித்துக் கொண்டு, அற நெறியிலிருந்து பிறழ்ந்து வருகின்றனர்' என்று முறையிட்டுப் பணிகின்றனர்.   

நான்மறை நாயகரான சிவமூர்த்தி ஸ்ரீமகாவிஷ்ணுவிடம், 'காதலுடன் காத்தல் தொழிலைப் புரிந்து வரும் பரந்தாமா!, உம்முடைய குற்றமற்ற கலைகளில் ஓர் அம்சத்தைக் கொண்டு நிலவுலகில் வியாச முனியாகத் தோன்றுவீராக' என்று அருளிச் செய்கின்றார், 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 32)
காதலின் அருளுமுன் கலையின் பன்மையில் 
கோதறும் ஓர்கலை கொண்டு நேமிசூழ்
மேதினி அதனிடை வியாதன் என்றிடு
போதக முனியெனப் போந்து வைகுதி

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'அவ்வாறு வியாசனாய்த் தோன்றிய பின்னர், நாமருளிய மறைகளை ஆய்ந்தறிந்து அதனை நான்காகப் பகுத்து நிலவுலகிலுள்ளோர் அகஇருளை நீக்குவீராகுக, 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 33)
போந்தவண் இருந்தபின் புகரிலா மறை
ஆய்ந்திடின் வந்திடும் அவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபினோர்க்கெலாம்
ஈந்தனை அவர்அகத்திருளை நீத்தியால்

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'துன்பங்களைப் போக்கிடும் பதினெண் வகைப் புராணங்களை நாம் முன்னமே நந்தி அறியுமாறு கூறியுள்ளோம்', 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 36)
என்பெயர் அதற்கெனில் இனிது தேர்ந்துளோர்
துன்பம் அதகற்றிடும் தொல் புராணமாம்
ஒன்பதிற்றிருவகை உண்டவற்றினை
அன்புடை நந்திமுன்அறியக் கூறினேம்

சிவபெருமான் மேலும் தொடர்கின்றார், 'நந்தி அப்புராணங்களை சனற்குமாரருக்கு கூறினான், நிலவுலகில் வியாசனாய்த் தோன்றிய பின்னர் சனற்குமாரரிடமிருந்து அவைகளை அறிந்து கொள்வீராகுக', 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 37)
ஆதியில் நந்திபால் அளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையும் கருணையால் அவன்
கோதற உணர் சனற்குமாரற்கீந்தனன்
நீதியொடவனிடை நிலத்தில் கேட்டியால்

ஆக, 'பராசர மகரிஷியின் திருக்குமாரராகத் தோன்றிய வேத வியாசரின் பிரதான அவதார நோக்கங்கள் இரண்டு' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார், 

1. ஒவ்வொரு துவாபர யுக துவக்கத்திலும் தோன்றி, அது வரையிலும் ஒரே தொகுப்பாக விளங்கி வந்துள்ள வேதங்களை, 'ரிக், யஜூர், சாம, அதர்வணம்' என்று நான்மறைகளாக பகுத்தளிப்பது,

2. ஆதியில் சிவபெருமான் அருளியுள்ள பதினெண் புராணங்களையும் சனற்குமாரரிடமிருந்துக் கேட்டறிந்து அதனைச் சுலோக வடிவமாக்கி நமக்களித்தல், 

இவை நீங்கலாக, பிரம்ம சூத்திரம், 5ஆவது வேதமெனப் போற்றப் பெறும் மகாபாரத இதிகாசம் ஆகியவைகளையும் வடமொழியில் இயற்றி அருளியுள்ளார் வேத வியாசர்.

பதினெண் புராணங்களில் சைவ; வைணவ புராணங்களின் எண்ணிக்கை என்ன? (கந்த புராண விளக்கங்கள்):

வேத வியாசர் பதினெண் புராணங்களை வடமொழியில் இயற்றி அவைகளை சூத முனிவருக்கு உபதேசிக்கின்றார். ஆதலின் ஒவ்வொரு புராணத்தின் துவக்கமும், சூத முனிவர் நைமிசாரண்ய ஷேத்திரத்தில் குழுமியிருக்கும் எண்ணிறந்த முனிவர்களுக்கு அப்புராண நிகழ்வுகளை விவரிப்பதாகவே அமைந்திருக்கும். இனி இப்புராணங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பெற்றுள்ளன என்று நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'சிவபரம்பொருளுக்கென 10 புராணங்களும், ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கென 4 புராணங்களும், நான்முகக் கடவுளான பிரமனுக்கு 2 புராணங்களும், சூரிய தேவன் மற்றும் அக்கினி தேவனுக்கு ஓரோர் புராணமுமாய் மொத்தம் 18 புராணங்கள்' என்று பட்டியலிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் (அலரி - சூரிய தேவன், அங்கி - அக்கினி தேவன்),
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 53)
நம்பனார்க்கு ஒருபது நாரணற்கு நான்கு 
அம்புயத்தவற்கு இரண்டு அலரிஅங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக்கு ஓரொன்று என்பரால்
இம்பரில் இசைக்கும் அப்புராணத்து எல்லையே

பின்வரும் திருப்பாடலில் 12 புராணங்களை வகைப்படுத்தித் தொகுக்கின்றார், 
-
(சைவம் பேணும் சிவசம்பந்தமான புராணங்களின் வரிசை): 
1. சிவ புராணம் 
2. பவிஷ்ய புராணம் 
3. மார்க்கண்டேய புராணம் 
4. இலிங்க புராணம் 
5. ஸ்காந்த புராணம் 
6. வராக புராணம் 
7. வாமன புராணம் 
8. மத்சய புராணம் 
9. கூர்ம புராணம் 
10. பிரமாண்ட புராணம் 
-
(நான்முகக் கடவுளுக்கான புராணங்களின் வரிசை) :
11. பிரம்ம புராணம் 
12. பத்ம புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 54)
எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்டம் இலிங்கம்
மதிகொள் காந்த நல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவை சிவபுராணம்
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம்
*
பின்வரும் திருப்பாடலில் மீதமுள்ள 6 புராணங்களை வகைப்படுத்துகின்றார், 
-
(ஸ்ரீமன் நாராயணருக்கான புராணங்களின் வரிசை):
13. கருட புராணம் 
14. நாரத புராணம் 
15. ஸ்ரீவிஷ்ணு புராணம் 
16. ஸ்ரீமத் பாகவத புராணம் 
-
(அக்கினி தேவனுக்கான புராணம்):
17. ஆக்கினேய புராணம் 
-
(சூரிய தேவனுக்கான புராணம்):
18. பிரம்ம வைவார்த புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 55)
கருது காருடம் நாரதம் விண்டு பாகவதம்
அரிகதைப் பெயர் ஆக்கினேயம் அழல் கதையாம்
இரவி தன்கதை பிரமகைவர்த்தமாம் இவைதாம்
தெரியும் ஒன்பதிற்றிருவகைப் புராணமாம் திறனே

விநாயகப் பெருமானின் தோற்றம் (கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

(1)
திருக்கயிலையில், சோலையொன்றில் அமைந்துள்ள ஓவிய மண்டபத்திற்குச் சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளிச் செல்கின்றனர். அங்குள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றையும் உமையன்னை பார்த்தவாறு, நடந்து செல்கின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 141)
எண்தகு பெருநசை எய்தி ஐம்புலன்
விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
கண்டனள் கவுரி அக்கடிகொள் மண்டபம் 
கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே

(2)
பிரணவ மந்திரம் பொறிக்கப் பெற்றிருக்கும் ஓவியமொன்றினை அம்பிகை பார்த்திருக்கையில், சிவபரம்பொருளின் திருவருளால், மூலத்தனி எழுத்தான அப்பிரணவமானது இரு யானைகளின் வடிவுகொண்டு சங்கமிக்கின்றது, 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 142)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதியாகியே
ஓங்கிய தனியெழுத்(து) ஒன்றிரண்டதாய்த்
தூங்கு கைம்மலைகளில் தோன்றிற்றென்பவே

(3)
அக்கணத்திலேயே அப்பிரணவத்திலிருந்து, மூன்று திருக்கண்களோடும், ஐந்து திருக்கரங்களோடும், மும்மதங்கள் பொழியும் திருவாயுடனும், யானையின் திருமுகத்துடனும், சிறுவனின் திருவுருவில் நம் விநாயகப் பெருமான் தோன்றி வெளிப்படுகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 148)
அக்கணத்தாயிடை ஐங்கரத்தவன் அருள்
முக்கண் நால்வாயினான் மும்மதத்தாறு பாய்
மைக்கரும் களிறெனும் மாமுகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன் வந்தருளினான்

(4)
அந்நிலையில் தோன்றிய விக்னேஸ்வர மூர்த்தி, ஒருமுகப்பட்ட உணர்வினரால் மட்டுமே அறிந்துணர்தற்குரிய பெற்றியை உடையவர், எங்கும் யாவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையர், யாவராலும் தொழப்பெறும் பொன்போலும் திருவடிகளைக் கொண்டருள்பவர், சிவபெருமானே என்று கருதத்தக்க வகையில் திருவருள் புரிந்தருளும் அளப்பரிய பெருமையை உடையவர், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 149)
ஒருமையால் உணருவோர் உணர்வினுக்(கு) உணர்வதாம்
பெருமையால் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
அருமையால் ஏவரும் அடிதொழும் தன்மையான்
இருமையாம் ஈசனே என்ன நின்றருளுவான்

(5)
நான்மறைகளில் போற்றப்பெறும் மெய்ப்பொருளான சிவபரம்பொருள், அண்டசராசரங்களிலுள்ள உயிர்களின் அறியாமை இருளைப் போக்கியருளும் பொருட்டும், அவர்தம் இடர்களைக் களைந்தருளும் பொருட்டும், தாமே ஒரு திருவடிவு கொண்டு தோன்றிய மூர்த்தியே நம் விநாயகக் கடவுளாவார் (சிவபரம்பொருளுக்கும், விநாயகப் பெருமானுக்கும் பேதமின்மையைப் பறைசாற்றும் அற்புதத் திருப்பாடலிது). 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 150)
மருளறப் புகலு(ம்) நான்மறைகளில் திகழுமெய்ப்
பொருளெனப்படும்அவன் புவனமுற்றவர்கள் தம்
இருளறுத்(து)அவர் மனத்திடர் தவிர்த்தருள ஓர்
அருள் உருத்தனை எடுத்(து) அவதரித்துளன் அவன்

திருச்செங்காட்டங்குடி உருவான வரலாறு (கந்தபுராண நுட்பங்கள்):

நாகப்பட்டின மாவட்டத்தில், காவிரித் தென்கரையில், திருவாரூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் திருமருகலிலிருந்து 3 கி.மீ தூரத்திலும், திருப்புகலூரிலிருந்து 4 1/2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது 'திருச்செங்காட்டங்குடி' எனும் திருத்தலம், 'கணபதீஸ்வரம்' எனும் திருப்பெயரும் இதற்குண்டு. ஞானசம்பந்த மூர்த்தி மற்றும் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இறைவர் உத்தராபதீஸ்வரர்; கணபதீஸ்வரர் எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார்.  

சிறுத்தொண்ட நாயனாரின் அவதாரத் தலமாகவும், முத்தித் தலமாகவும் திகழ்வது. 'இத்தலத்து இறைவர் பைரவ வேடத்தில் எழுந்தருளி வந்து, சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டுப் பேரருள் புரிந்துள்ள நிகழ்வு' யாவரும் அறிந்தவொன்றே. இனி இத்திருத்தலம் உருவான வரலாற்றினை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்து மகிழ்வோம்.

பிரணவ முக இறைவனான நம் விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் எனும் அசுரனொருவனைச் சம்ஹாரம் புரிந்தருள, அவ்வசுரனின் உடலிலிருந்து புறப்பட்ட குருதியானது அருகிலிருந்த காடொன்றில் முழுவதுமாய் நிறைய, அப்பகுதி அதுமுதல் செங்காடு என்று வழங்கப் பெறுவதாயிற்று. 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 250)
ஏடவிழ் அலங்கல் திண்தோள் இபமுகத்து அவுணன் மார்பில் 
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர் பெற்றின்னும் காண்தக இருந்ததம்மா
-
(சொற்பொருள்: நீத்தம் - வெள்ளம், கான் - காடு, செய்ய காடு - செங்காடு)

பின்னர் விக்னேஸ்வர மூர்த்தி அச்செங்காட்டில் சிவலிங்கத் திருமேனியொன்றினைப் பிரதிஷ்டை செய்து, திருவுள்ளம் குழைந்துப் பெரும் அன்பு மீதூர ஆதிப்பரம்பொருளைப் பூசித்துப் பணிகின்றார். அதுமுதல் அத்தலம் 'கணபதீஸ்வரம்' என்றும் போற்றப் பெற்று, இன்றும் நம்மால் தரிசித்து மகிழக்கூடிய தன்மையில் சிறப்புடன் விளங்கி வருகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 264)
மீண்டு செங்காட்டில் ஓர்சார் மேவி மெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தாபித்தேத்திப்
பூண்ட பேரன்பில் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதீச்சரம் அதென்பார்
-
(சொற்பொருள்: தாபித்தத்தி - ஸ்தாபித்து ஏத்தி; பிரதிஷ்டை செய்து போற்றி)

பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் பல்லவ மன்னனொருவனுக்காக, வடதேசத்திலுள்ள வாதாபி சென்று, அங்குக் கோலோச்சியிருந்த சாளுக்கிய மன்னரை வென்று, அங்கிருந்து கொணர்ந்த விநாயகப் பெருமானின் திருமேனியை இத்திருத்தலத்தில் 'வாதாபி கணபதி' எனும் திருநாமத்தில் எழுந்தருளச் செய்ததாக வரலாற்றுச் செய்தியொன்று உண்டு (எனினும் பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் 'சிறுத்தொண்ட நாயனார் இவ்விதம் பிரதிஷ்டை செய்ததாக' குறிக்கவில்லை). எதுவாயினும், இதற்கெல்லாம் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே, 'இத்திருத்தலம் உருவாவதற்கே நம் விநாயகப் பெருமான் தான் மூலகாரணர்' என்பதனை கச்சியப்ப சிவாச்சாரியார் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுறுத்தியுள்ளார்.