கந்தர் அலங்காரம் (அருணகிரிநாதர்):

பின்வரும் திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு ஏற்ற வகையில் முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது) 

(காப்பு)
அடலருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடஅருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார்தலையில் 
தடபடெனப் படுகுட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்(கு) இளைய களிற்றினையே 

(1)
பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமென்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா!  செஞ்சடாடவி மேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே 

(2)
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர், எரிமூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடும்கயிற்றால் 
கழுத்தில் சுருக்கிட்(டு) இழுக்கும்அன்றோ கவி கற்கின்றதே 

(3)
தேரணியிட்டுப் புரமெரித்தான் மகன் செங்கையில்வேல்
கூரணியிட்(டு) அணுவாகிக் கிரெளஞ்சம் குலைந்(து), அரக்கர்
நேரணியிட்டு வளைந்த கடக(ம்) நெளிந்தது, சூர்ப்
பேரணி கெட்டது, தேவந்த்ர லோகம் பிழைத்ததுவே 

(4)
ஓரவொட்டார், ஒன்றை உன்னவொட்டார், மலரிட்(டு) உனதாள்
சேரவொட்டார் ஐவர்; செய்வதென் யான்; சென்று தேவர்உய்யச் 
சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரி கக்கக்
கூர கட்டாரியிட்டோர் இமைப் போதினில் கொன்றவனே 

(5)
திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டிலேறி; அறுவர் கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும் 
குருந்தைக், குறிஞ்சிக் கிழவன் என்றோதும் குவலயமே 

(6)
பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை, மெய்யன்பினால் மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்(து)அறிந்த அன்றே,
கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே 

(7)
சளத்தில் பிணிபட்(டு) அசட்டு க்ரியைக்குள் தவிக்குமெந்தன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர் உரத்துதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே 

(8)
ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்(து) உச்சியின்மேல்,
அளியில் விளைந்ததொர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறும்தனியைத்,
தெளிய விளம்பியவா, முகம்ஆறுடைத் தேசிகனே 

(9)
தேனென்று பாகென்(று) உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி
கோன், அன்றெனக்கு உபதேசித்த(து) ஒன்றுண்டு, கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே 

(10)
சொல்லுகைக்(கு)இல்லை என்(று) எல்லாம் இழந்து சும்மாயிருக்கும்
எல்லையுள் செல்ல எனைவிட்டவா, இகல் வேலன்; நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள்அண்ணல் வல்லபமே 

(11)
குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத்(து)
அசைபடு கால் பட்டசைந்தது மேரு, அடியிட எண்
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே 

(12)
படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகையென்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச், சலதி கிழிந்(து)
உடைபட்ட(து), அண்ட கடாகம் உதிர்ந்த(து), உடுபடலம்
இடைப்பட்ட குன்றமு(ம்) மாமேரு வெற்பும் இடிபட்டவே 

(13)
ஒருவரைப் பங்கிலுடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசைபடத் திடுக்கிட்(டு) அரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட்(டு), எட்டு வெற்பும் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம்கெட்டதே 

(14)
குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய், இருநான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ, மேரும் குலுங்க, விண்ணாரும்உய்யச்
சப்பாணி கொட்டிய கைஆறிரண்டுடைச் சண்முகனே 

(15)
தாவடியோட்டு மயிலிலும் தேவர் தலையிலும்என்
பாவடிஏட்டிலும் பட்டதன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட(ம்) கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே 

(16)
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத், தானமென்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழு பாரும்உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே 

(17)
வேதாகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாதாரவிந்தம் அரணாக, அல்லும் பகலும்இல்லாச்
சூதானதற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மாயிருக்கப்
போதாய்இனி மனமே தெரியாதொரு பூதர்க்குமே 

(18)
வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யின் பிளஅளவேனும் பகிர்மின்கள், நுங்கட்(கு) இங்ஙன்
வெய்யிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல், 
கையில் பொருளும்உதவாது காணும் கடைவழிக்கே 

(19)
சொன்ன கிரெளஞ்ச கிரியூடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன, கடம்பின் மலர்மாலை மார்ப, மெளனத்தை உற்று
நின்னை உணர்ந்துணர்ந்(து) எல்லாம்ஒருங்கிய நிர்குணம் பூண்(டு)
என்னை மறந்திருந்தேன், இறந்தேவிட்டது இவ்வுடம்பே 

(20)
கோழிக் கொடியன் அடிபணியாமல் குவலயத்தே
வாழக் கருது(ம்) மதியிலிகாள், உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி  உண்ணவொட்டாது, உங்கள் அத்தமெல்லாம்
ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே 

(21)
மரண ப்ரமாத(ம்) நமக்கில்லை யாமென்றும் வாய்த்த துணை
கிரணக் கலாபியும் வேலுமுண்டே, கிண்கிணிமுகுள
சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்து !ரக்ஷா
பரண, க்ருபாகர ஞானாகர சுர பாஸ்கரனே

(22)
மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும்அங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல் 
கைதான் இருபதுடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே 

(23)
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே,
வை வைத்த வேற்படை வானவனே, மறவேன் உனைநான்,
ஐவர்க்(கு)இடம் பெறக் கால்இரண்டோட்டி அதில்இரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே 

(24)
கின்னம் குறித்தடியேன் செவி நீஅன்று கேட்கச்சொன்ன
குன்னம் குறிச்சி வெளியாக்கி விட்டது, கோடுகுழல்
சின்னம் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னம் குறிச்சியில் சென்று கல்யாண(ம்) முயன்றவனே 

(25)
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கிஉன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன், செந்தில் வேலனக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா, வந்துபார் சற்றென் கைக்கெட்டவே 

(26)
நீலச் சிகண்டியில்ஏறும் பிரான் எந்த நேரத்திலும் 
கோலக் குறத்தியுடன் வருவான், குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே 

(27)
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்தெனக்குக்
காலையு(ம்) மாலையு(ம்) முன்னிற்குமே, கந்தவேள் மருங்கில் 
சேலையும், கட்டிய சீராவும், கையில் சிவந்த செச்சை
மாலையும், சேவல் பதாகையும், தோகையும் வாகையுமே 

(28)
வேலே விளங்கு கையான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொள இங்ஙன் காண்பதல்லால், மன வாக்குச் !செய
லாலே அடைதற்கரிதாய், அருவுருவாகி ஒன்று
போலேயிருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே

(29)
கடத்தில் குறத்தி பிரான்அருளால் கலங்காத சித்தத்
திடத்தின் புணையென யான் கடந்தேன், சித்ரமாதர் அல்குல் 
படத்தில்; கழுத்தில்; பழுத்த செவ்வாயில்; பணையில்உந்தித்
தடத்தில்; தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே 

(30)
பாலென்பது மொழி, பஞ்சென்பது பதம், பாவையர்கண்
சேலென்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை; கொற்ற மயூரம்என்கிலை; வெட்சித் தண்டைக்
கால்என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே 

(31)
பொக்கக் குடிலில் புகுதாவகை புண்டரீகத்தினும்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள், சிந்து வெந்து
கொக்குத் தறிபட்(டு)எறிபட்(டு) உதிரம் குமுகுமெனக்
கக்கக் கிரியுருவக் கதிர்வேல் தொட்ட காவலனே 

(32)
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரியூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்(கு)
இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்(து) இரட்சிப்பையே 

(33)
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கு(ம்)
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்; அவுணர் குலம்அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே 

(34)
பொட்டாக வெற்பைப் பொருத கந்தா, தப்பிப் போன(து) ஒன்றற்(கு)
எட்டாத ஞான கலை தருவாய், இரும் காம விடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும் 
கட்டாரி வேல்விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே 

(35)
பத்தித் துறையிழிந்(து) ஆனந்தவாரி படிவதினால்
புத்தித் தரங்கம் தெளிவதென்றோ?, பொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூரனை விட்ட சுட்டியிலே
குத்தித் தரம்கொண்(டு) அமராவதி கொண்ட கொற்றவனே 

(36)
சுழித்தோடும் ஆற்றின் பெருக்கானது செல்வம் துன்பம்இன்பம் 
கழித்தோடுகின்றது எக்காலம் நெஞ்சே? கரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலை, குன்றம்எட்டும் 
கிழித்தோடு வேல்என்கிலை, எங்ஙனே முத்தி கிட்டுவதே? 

(37)
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டுண்(டு) அயர்கினும் வேல்மறவேன், முதுகூளித் திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு
டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே 

(38)
நாளென் செயும்? வினை தான்என் செயும்? எனை நாடிவந்த
கோளென் செயும்? கொடும் கூற்றென் செயும்? குமரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் 
தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே 

(39)
உதித்தாங்(கு) உழல்வதும் சாவதும் தீர்த்தெனை உன்னில்ஒன்றா 
விதித்தாண்(டு) அருள்தரும் காலம்உண்டோ? வெற்பு நட்(டு)உரக
பதித் தாம்பு வாங்கி நின்(று)அம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா, மயிலேறிய மாணிக்கமே

(40)
சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில், தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம், மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும், அவன்
கால்பட்டழிந்த(து) இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே 

(41)
பாலேஅனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறியேன், மலர்த்தாள் தருவாய்,
காலே மிகஉண்டு காலேஇலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு(ம்) மாலோன் மருக, செவ்வேலவனே 

(42)
நிணம்காட்டும் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்க நிற்கும் 
குணம்காட்டிஆண்ட குருதேசிகன்; நம் குறச்சிறுமான்;
பணம்காட்டும் அல்குல் குருகும் குமரன் பதாம்புயத்தை
வணங்காத் தலை வந்தி(து) எங்கே எனக்கிங்ஙன் வாய்த்ததுவே 

(43)
கவியால் கடலடைத்தோன் மருகோனைக், கணபணக் கட்
செவியால் பணியணி கோமான் மகனைத், திறலரக்கர்
புவிஆர்ப்பெழத் தொட்ட போர்வேல் முருகனைப் போற்றிஅன்பால் 
குவியாக் கரங்கள் வந்தெங்கே எனக்கிங்ஙன் கூடியவே 

(44)
தோலால் சுவர்வைத்து, நாலாறு காலில் சுமத்திஇரு
காலால்எழுப்பி வளை முதுகோட்டிக் கைநாற்றி !நரம்
பால்ஆர்க்கையிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்,
வேலால் கிரி தொளைத்தோன் இரு தாளன்றி வேறில்லையே 

(45)
'ஒருபூதரும் அறியாத் தனிவீட்டில் உரைஉணர்வற்(று)
இருபூத வீட்டில் இராமல்' என்றான், இரு கோட்(டு)ஒருகைப்
பொரு பூதரம்உரித்(து) ஏகாசமிட்ட புராந்தகற்குக்
குருபூத வேலவன், நிட்டூர சூர குலாந்தகனே 

(46)
நீயான ஞான விநோதம்தனை என்று நீஅருள்வாய்
சேயான வேற்கந்தனே; செந்திலாய், சித்ர மாதர்அல்குல் 
தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மனோ துக்கமானது மாய்வதற்கே 

(47)
பத்தித் திருமுகம்ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்திருக்கும் அமுதுகண்டேன், செயல் மாண்டடங்கப்
புத்திக் கமலத்(து)உருகிப் பெருகிப் புவனம்எற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே

(48)
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டிஅன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றிலேன், முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ, குவடு தவிடுபடக்
குத்திய காங்கேயனே, வினையேற்(கு)என் குறித்தனையே? 

(49)
சூரில் கிரியில் கதிர்வேல்எறிந்தவன் தொண்டர்குழாம் 
சாரில் கதியன்றி வேறிலை காண், தண்டு தாவடிபோய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வமெல்லாம்
நீரில் பொறி என்றறியாத பாவி நெடுநெஞ்சமே 

(50)
படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால் 
பிடிக்கும் பொழுதுவந்(து) அஞ்சல்என்பாய், பெரும் பாம்பி(ல்) நின்று
நடிக்கும் பிரான் மருகா, கொடும் சூரன்நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயிலேறும் இராவுத்தனே 

(51)
மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும் 
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்,
இலையாயினும் வெந்த(து) ஏதாயினும் பகிர்ந்(து) ஏற்றவர்க்கே 

(52)
சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் 
பகரார்வமீ பணி, பாச சங்க்ராம பணாமகுட
நிகராட்சம பட்ச பட்சி துரங்க ந்ருப குமரா,
குக, ராட்சச பட்ச விட்சோப, தீர குணதுங்கனே

(53)
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால் 
பாடிக் கசிந்(து) உள்ள போதே கொடாதவர், பாதகத்தால் 
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே

(54)
சாகைக்கு(ம்) மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்(கு) ஒன்(று)
ஈகைக்கெனை விதித்தாய்இலையே, இலங்காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலை வளைத்தோன் மருகா, மயில் வாகனனே 

(55)
ஆங்காரமும் அடங்கார்ஒடுங்கார், பரமாநந்தத்தே
தேங்கார், நினைப்பும் மறப்பும்அறார், தினைப்போதளவும்
ஓங்காரத்(து) உள்ளொளிக்குள்ளே முருகன்உருவம் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார், என்செய்வார் யம தூதருக்கே 

(56)
கிழியும்படி அடல் குன்றெறிந்தோன் கவி கேட்டுருகி
இழியும் கவி கற்றிடாதிருப்பீர், எரிவாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே 

(57)
பொருபிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முகவா எனச் சாற்றிநித்தம்
இருபிடி சோறுகொண்டிட்(டு) உண்டிரு, வினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே 

(58)
நெற்றாப் பசும்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கினிய பிரான், இக்கு முல்லையுடன்
பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும்பட விழியால் 
செற்றார்க்(கு) இனியவன், தேவந்த்ரலோக சிகாமணியே

(59)
பொங்கார வேலையில் வேலைவிட்டோன்அருள் போலுதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்(கு) இட்ட(து), இடாமல்வைத்த
வங்காரமும்; உங்கள் சிங்கார வீடு(ம்); மடந்தையரும் 
சங்காதமோ, கெடுவீர் உயிர்போம் அத்தனிவழிக்கே 

(60)
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்,
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே 

(61)
வரையற்(று) அவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித்தவா, பஞ்ச பூதமும்அற்(று) 
உரையற்(று) உணர்வற்(று) உடலற்(று) உயிரற்(று) உபாயமற்றுக்
கரையற்(று) இருளற்(று) எனதற்றிருக்கும் அக்காட்சியதே 

(62)
ஆலுக்(கு) அணிகலம் வெண்தலை மாலை, அகிலமுண்ட
மாலுக்(கு) அணிகலம் தண்ணம் துழாய், மயிலேறும்ஐயன்
காலுக்(கு) அணிகலம் வானோர் முடியும் கடம்பும், கையில்
வேலுக்(கு) அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே

(63)
பாதித் திருவுருப் பச்சென்றவர்க்குத் தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர்வேலனைச் சென்று போற்றிஉய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ, அழுது தொழுதுருகிச்
சாதித்த புத்தி வந்(து)எங்கே எனக்கிங்ஙன் சந்தித்ததே

(64)
பட்டிக் கடாவில் வரும்அந்தகா உனைப் பாரறிய
வெட்டிப் புறம் கண்டலாது விடேன், வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருத செவ்வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன்,
கட்டிப் புறப்படடா சத்தி வாள்எந்தன் கையதுவே 

(65)
வெட்டும் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடும் கயிற்றால் 
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும், கராசலங்கள்
எட்டும் குலகிரிஎட்டும் விட்டோட எட்டாதவெளி
மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே 

(66)
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாதுசெல்வம்,
பார்க்குமிடத்(து)அந்த மின்போலும்என்பர், பசித்து வந்தே
ஏற்கும்அவர்க்கு இடஎன்னின் எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவு(ம்) நன்றே 

(67)
பெறுதற்கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன், மதகும்ப கம்பத்
தறுகண் சிறுகண் சங்க்ராம, சயில சரசவல்லி
இறுகத் தழுவும் கடகாசல பன்னிரு புயனே 

(68)
சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடும் கருத்தை இருத்த வல்லார்க்(கு) உகம்போய்ச் சகம்போய்ப்
பாடும் கவுரி பவுரி கொண்டாடப் பசுபதி நின்(று)
ஆடும் பொழுது பரமாய்இருக்கும் அதீதத்திலே 

(69)
தந்தைக்கு முன்னம் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச்சுவாமி எனைத் தேற்றிய பின்னர்க், காலன் வெம்பி
வந்(து) இப்பொழுதென்னை என்செய்யலாம், சத்தி வாள்ஒன்றினால் 
சிந்தத் துணிப்பன் தணிப்பரும் கோப த்ரிசூலத்தையே

(70)
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகாஎனு(ம்) நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணைஅவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே 

(71)
துருத்தியெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்(து)
அருத்தி உடம்பை ஒருக்கில்என்னாம்?, சிவயோகம்என்னும் 
குருத்தைஅறிந்து முகமாறுடைக் குருநாதன் சொன்ன
கருத்தை மனத்தில்இருத்தும் கண்டீர் முத்தி கைகண்டதே

(72)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்க்(கு) ஒரு தாழ்வில்லையே 

(73)
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும்உள்ளும்
வாக்கும் வடிவு(ம்) முடிவும்இல்லாதொன்று வந்துவந்து
தாக்கும்; மனோலயம் தானே தரும், எனைத் தன்வசத்தே
ஆக்கும், அறுமுகவா சொல்லொணா(து) இந்த ஆனந்தமே     

(74)
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டும், அவிழ்ந்த அன்பால் 
குராப்புனை தண்டையம் தாள்தொழல் வேண்டும்; கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும்; மனமும் பதைப்பறல் வேண்டும் என்றால்,
இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே 

(75)
படிக்கின்றிலை, பழநித் திருநாமம் படிப்பவர்தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமஇட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்த(ம்) மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே

(76)
கோடாத வேதனுக்(கு) யான்செய்த குற்றமென், குன்றெறிந்த
தாடாளனே; தென்தணிகைக் குமர, நின் தண்டையம் தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும், தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே 

(77)
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேரஎண்ணி
மால்வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளி மலையெனவே
கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டு 
நூல்வாங்கிடா(து) அன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே

(78)
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்,
போர்கொண்ட காலன்உமைக்கொண்டு போமன்று பூண்பனவும் 
தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர், ஐயோ கெடுவீர் நும் அறிவின்மையே

(79)
பந்தாடு மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டுழலும் 
சிந்தாகுலம் தனைத் தீர்த்தருள்வாய், செய்யவேல் முருகா
கொந்தார் கடம்புடைசூழ் திருத்தணிக் குன்றினி(ல்)நிற்கும் 
கந்தா, இளம்குமரா, அமராவதி காவலனே 

(80)
மாகத்தை முட்டி வருநெடும் கூற்றவன் வந்தால்என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய், சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந்தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே 

(81)
தாரா கணமெனும் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா(து) உமைமுலைப் பாலுண்ட பாலன் அரையில்கட்டும் 
சீராவும்; கையில் சிறுவாளும்; வேலுமென் சிந்தையவே,
வாரா(து)அகல் அந்தகா, வந்த போ(து) உயிர் வாங்குவனே 

(82)
தகட்டில் சிவந்த கடம்பையு(ம்) நெஞ்சையும் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தருளாய், புண்டரீன்அண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்(து) இந்த்ர லோகத்தை முட்ட வெட்டிப்
பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே 

(83)
தேங்கிய அண்டத்(து) இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள், கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம், தனிவேல்
வாங்கிஅனுப்பிடக் குன்றங்கள்எட்டும் வழிவிட்டவே 

(84)
மைவரும் கண்டத்தர் மைந்த கந்தாஎன்று வாழ்த்தும்இந்தக்
கைவரும் தொண்டன்றி மற்றறியேன், கற்ற கல்வியும் போய்ப்
பைவரும் கேளும் பதியும் கதறப், பழகி நிற்கும்
ஐவரும் கைவிட்டு மெய்விடும் போ(து) உன் அடைக்கலமே 

(85)
காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
வீட்டில் புகுதல் மிக எளிதே, விழி நாசி வைத்து
மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே 

(86)
வேலாயுதன்; சங்கு சக்ராயுதன்; விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த கந்தச் சுவாமி, சுடர்க்குடுமிக்
காலாயுதக் கொடியோன் அருளாய கவசமுண்(டு), என்
பால்ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே 

(87)
குமரா சரணம் சரணமென்(று) அண்டர்குழாம் துதிக்கும்
அமராவதியில் பெருமாள் திருமுகம் ஆறும்கண்ட,
தமராகி வைகும் தனியான ஞான தபோதனர்க்(கு) இங்(கு), 
எமராசன் விட்ட கடையேடு வந்தினி என்செயுமே

(88)
வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய், கொடியும் கழுகும்
பிணங்கத் துணங்கை அலகை கொண்டாடப் பிசிதர் தம்வாய்
நிணம்கக்க விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே 

(89)
பங்கேருகன் எனைப் பட்டோலையிலிடப் பண்டுதளை
தம்காலில்இட்ட(து) அறிந்திலனோ?, தனி வேலெடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னம் சிலம்பு புலம்ப வரும்
எங்கோன் அறியின், இனி நான்முகனுக்கு இருவிலங்கே 

(90)
மாலோன் மருகனை; மன்றாடி மைந்தனை; வானவர்க்கு
மேலான தேவனை; மெய்ஞ்ஞான தெய்வத்தை; மேதினியில் 
சேலார் வயற்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரம்கண் படைத்திலனேஅந்த நான்முகனே

(91)
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வரும் ஆகுலவனைச், சேவற்கைக் கோளனை, வானம்உய்யப்
பொருமா வினைச்செற்ற போர் வேலனைக், கன்னிப் பூகமுடன்
தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சாலநன்றே 

(92)
தொண்டர்கண்(டு) அண்டிமொண்(டு) உண்டிருக்கும் சுத்த ஞானமெனும் 
தண்டையம் புண்டரிகம் தருவாய், சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலம் கொண்டு பண்(டு) அண்டரண்டம் கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண்(டு) அண்டர் விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே 

(93)
மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரியோசை அந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது, வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருஅரையின் 
கிண்கிணியோசை பதினாலு உலகமும் கேட்டதுவே 

(94)
தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள்வேட்டிலை, சிறு வள்ளை தள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே 

(95)
யான் தானெனும் சொல்லிரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் 
தோன்றாது சத்தியம், தொல்லைப் பெருநிலம் சூகரமாய்க்
கீன்றான் மருகன்; முருகன்; க்ருபாகரன்; கேள்வியினால் 
சான்றாரும்அற்ற தனிவெளிக்கே வந்து சந்திப்பதே 

(96)
தடக்கொற்ற வேள்மயிலே, இடர் தீரத் தனிவிடில் நீ
வடக்கில் கிரிக்(கு) அப்புறத்து நின்தோகையின் வட்டமிட்டுக்
கடற்(கு) அப்புறத்தும் கதிர்க்(கு) அப்புறத்தும் கனக சக்ரத்
திடர்க்(கு) அப்புறத்தும் திசைக்(கு) அப்புறத்தும் திரிகுவையே 

(97)
சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்(து) அநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்ததிர்ந்து
காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப்
பாலிக்கு(ம்) மாயனும்  சக்ராயுதமும் பணிலமுமே 

(98)
கதிதனை ஒன்றையும் காண்கின்றிலேன் கந்தவேல் முருகா,
நதிதனை அன்ன பொய் வாழ்வில் அன்பாய் நரம்பால் பொதிந்த
பொதிதனையும் கொண்டு திண்டாடுமா(று) எனைப் போதவிட்ட
விதிதனை, நொந்துநொந்(து) இங்கே எந்தன் மனம் வேகின்றதே 

(99)
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகனனே, துணையேதும் இன்றித்
தாவிப் படரக் கொழு கொம்பிலாத தனிக்கொடி போல்
பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே 

(100)
இடுதலைச் சற்றும் கருதேனைப் போதமிலேனை அன்பால் 
கெடுதல்இலாத் தொண்டரில் கூட்டியவா, கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப் பட்டது, விட்டது பாச வினைவிலங்கே 

(101)
சலம்காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார், யமன் சண்டைக்(கு) அஞ்சார்,
துலங்கா நரகக் குழிஅணுகார், துட்ட நோய்அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும், கந்த(ன்)நன்னூல்
அலங்கார நூற்றுள்ஒரு கவிதான் கற்றறிந்தவரே

(102)
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள்ஆறும் மலர்க் கண்களும் 
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே

(103)
இராப்பகலற்ற இடம்காட்டி யானிருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டையம் தாள்அருளாய்; கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும்
பராக்ரம வேல நிருத சங்கார பயங்கரனே

(104)
செங்கேழடுத்த சினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன் வந்(து) எதிர்நிற்பனே

(105)
ஆவிக்கு மோசம் வருமா(று)அறிந்துன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன், வினை தீர்த்தருளாய்,
வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடையானே, அமர சிகாமணியே

(106)
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமெந்தன் 
உள்ளத் துயரை ஒழித்தருளாய், ஒரு கோடிமுத்தம் 
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே,
வள்ளிக்கு வாய்த்தவனே, மயிலேறிய மாணிக்கமே

(107)
சூலம் பிடித்(து) எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்(கு) ஒருகாலும் அஞ்சேன், கடல் மீதெழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே

நோய் தீர்க்கும் திருத்தணித் திருப்புகழ்:

அருணகிரிப் பெருமான் அருளியுள்ள 'இருமல்உரோக' எனும் பின்வரும் திருப்பாடலை 'நோய் தீர்க்கும் மகா மந்திரம்' என்று சமயச் சான்றோர் போற்றுவர்.

யாருக்குத் தான் நோயில்லை? குறிப்பிட்ட வயதிற்குப் பின்னரோ அல்லது அதற்கு முன்னமேயோ ஒவ்வொருவரும் ஏதோவொரு நோயினால் அவதியுற்று வருந்திய வண்ணமே இருக்கின்றனர். ஒரு நோயிலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொன்று என்று, சிறியதும்; பெரியதுமாய் தொடர்ந்த வண்ணமிருக்கும் இந்நோய்த் துன்பங்களினின்றும் முற்றிலுமாய் விடுபட, நம் அருணகிரியார் பெரும்கருணையோடு இத்திருப்புகழை அருளிச் செய்துள்ளார்.  

முதல் 5 வரிகளில் பலவகையான நோய்களைப் பட்டியலிட்டுப் பின்னர் 6ஆம் வரியில் 'வேறும் உளநோய்கள்' என்று 'விடுபட்டுள்ள பிற நோய்களையும்' குறிப்பிட்டு, இப்பிறவி மட்டுமல்லாது இனி எப்பிறவியிலும் அந்நோய்கள் நம்மை வாட்டாமலிருக்க, திருத்தணி வேலவனிடம் நம் பொருட்டு விண்ணப்பித்து அக்கணமே அவ்வரத்தினைப் பெற்றும் விடுகின்றார்.

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலை நேரம் அமையும் பொழுதெல்லாம், அல்லது காலை; மாலை இருவேளைகளிலாவது உளமுருகப் பாராயணம் புரிந்து வர, பண்டைய வினையால் வந்தெய்தியுள்ள நோய்களின் தீவிரம் மெதுமெதுவே குறைந்துப் பூரண நலம் பெறலாம். நோயுற்ற பொழுது மட்டுமல்லாது, அனுதினமுமே இப்பாராயண வழக்கத்தினைக் கொள்வோமாயின், எவ்வித நோய்களும் நம்மை அண்டாதவாறு அற்புதக் கவசமென இத்திருப்புகழ் நம்மைக் காத்து நிற்கும். 

('நீரிழிவு' எனும் சொல்லின் முதல் எழுத்து 2ஆம் வரியின் இறுதியிலும், மற்ற எழுத்துக்கள் 3ஆம் வரியின் துவக்கத்திலும் இடம் பெற்றுள்ளதால், 2ஆம் வரியின் இறுதியோடு 3ஆம் வரியின் துவக்கத்தையும் தொடர்ச்சியாய் இணைத்துப் பாராயணம் புரிதல் வேண்டும்) 
*
(குறிப்பு: பாடலின் துவக்கத்தில் குறித்துள்ள தாள நயம் மாறாது பாராயணம் புரிதல் அவசியம்).
*
தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான
-
இருமல்உரோக முயலகன் வாதம் 
     எரிகுண நாசி ...... விடமே!நீ
-
ரிழிவுவிடாத தலைவலி சோகை
     எழுகள மாலை ...... இவையோடே
-
பெரு வயிறீளை எரிகுலை சூலை
     பெருவலி வேறும் ..... உளநோய்கள்
-
பிறவிகள் தோறும் எனைநலியாத
     படிஉன தாள்கள் ...... அருள்வாயே
-
வருமொரு கோடி அசுரர் பதாதி
     மடிய அநேக ...... இசைபாடி
-
வருமொரு கால வயிரவராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே
-
தருநிழல் மீதில் உறை முகிலூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா
-
சலமிடை பூவின் நடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.

'கந்தர் அலங்காரத்தில்' செங்கோட்டு வேலவன்:

விநாயக விநாயகப் பாடலோடு துவங்கி, ஆறுமுகக் கடவுளைப் போற்றும் 107 திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றிருப்பது நம் அருணகிரியார் அருளியுள்ள கந்தர் அலங்காரத் தொகுப்பு. அவற்றுள் பின்வரும் அற்புத அற்புதமான 8 திருப்பாடல்களும் திருச்செங்கோட்டுத் தலத்திற்குரியன, செங்கோட்டு வேலவனின் திருவருளை உறுதியாகப் பெற்றுத் தருவன. 

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு ஏற்ற வகையில், தேவைப்படும் இடத்தில் மட்டுமே பதம் பிரிக்கப் பெற்று, நிறுத்தக் குறிகளுடனும் தொகுக்கப் பெற்றுள்ளது)

(திருப்பாடல் 23)
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே,
வை வைத்த வேற்படை வானவனே, மறவேன் உனைநான்,
ஐவர்க்(கு)இடம் பெறக் கால்இரண்டோட்டி அதில்இரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே 

(திருப்பாடல் 36)
சுழித்தோடும் ஆற்றின் பெருக்கானது செல்வம் துன்பம்இன்பம் 
கழித்தோடுகின்றது எக்காலம் நெஞ்சே? கரிக்கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலை, குன்றம்எட்டும் 
கிழித்தோடு வேல்என்கிலை, எங்ஙனே முத்தி கிட்டுவதே? 

(திருப்பாடல் 70)
விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகாஎனு(ம்) நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணைஅவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே 

(திருப்பாடல் 72)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்க்(கு) ஒரு தாழ்வில்லையே 

(திருப்பாடல் 90)
மாலோன் மருகனை; மன்றாடி மைந்தனை; வானவர்க்கு
மேலான தேவனை; மெய்ஞ்ஞான தெய்வத்தை; மேதினியில் 
சேலார் வயற்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரம்கண் படைத்திலனேஅந்த நான்முகனே

(திருப்பாடல் 91)
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வரும் ஆகுலவனைச், சேவற்கைக் கோளனை, வானம்உய்யப்
பொருமா வினைச்செற்ற போர் வேலனைக், கன்னிப் பூகமுடன்
தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சாலநன்றே 

(திருப்பாடல் 97)
சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்(து) அநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்ததிர்ந்து
காலில் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப்
பாலிக்கு(ம்) மாயனும்  சக்ராயுதமும் பணிலமுமே 

(திருப்பாடல் 104)
செங்கேழடுத்த சினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன் வந்(து) எதிர்நிற்பனே


'கந்தர் அலங்காரத்தில்' செந்திலாண்டவன்:

அருணகிரிப் பெருமான் அருளியுள்ள (1 + 107 திருப்பாடல்களைக் கொண்ட) கந்தர் அலங்காரத் தொகுப்பில், பின்வரும் 5 அற்புதத் திருப்பாடல்கள் திருச்செந்தூர் தலத்திற்குரியவை, செந்திலாண்டவனின் திருவருளைப் பரிபூரணமாய்ப் பெற்றுத் தரவல்லவை, 

(திருப்பாடல் 25)
தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கிஉன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன், செந்தில் வேலனக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா, வந்துபார் சற்றென் கைக்கெட்டவே 

(திருப்பாடல் 30)
பாலென்பது மொழி, பஞ்சென்பது பதம், பாவையர்கண்
சேலென்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை; கொற்ற மயூரம்என்கிலை; வெட்சித் தண்டைக்
கால்என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே 

(திருப்பாடல் 40)
சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில், தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம், மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும், அவன்
கால்பட்டழிந்த(து) இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே 

(திருப்பாடல் 46)
நீயான ஞான விநோதம்தனை என்று நீஅருள்வாய்
சேயான வேற்கந்தனே; செந்திலாய், சித்ர மாதர்அல்குல் 
தோயா உருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மனோ துக்கமானது மாய்வதற்கே 

(திருப்பாடல் 106)
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்எந்தன் 
உள்ளத் துயரை ஒழித்தருளாய், ஒரு கோடிமுத்தம் 
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே,
வள்ளிக்கு வாய்த்தவனே, மயிலேறிய மாணிக்கமேa

கந்தர் அனுபூதியில் திருச்செங்கோடு:

அருணகிரிப் பெருமான் கந்தர் அனுபூதியை விநாயக வணக்கத் திருப்பாடலோடு துவங்கி, 51 திருப்பாடல்களால் ஆறுமுகக் கடவுளைப் போற்றிப் பரவியுள்ளார். 

சில வலைத்தளங்களில் (1 + 101) திருப்பாடல்கள் காணப் பெறினும், சிவத்திரு. தணிகைமணி அவர்கள் 'உருவாய் அருவாய்' எனும் 51ஆம் திருப்பாடலுக்கு மேற்பட்டவை அருணகிரியார் திருவாக்கன்று என்று தெளிவுறுத்தியுள்ளார். 
 
இத்தொகுப்பின் 51 திருப்பாடல்களில், 'நாகசலம்' எனும் திருச்செங்கோட்டுத் தலம் மட்டுமே 11ஆம் திருப்பாடலில் குறிக்கப் பெற்றுள்ளது, ஏனைய 50 திருப்பாடல்களும் தலக் குறிப்புகள் ஏதுமின்றிப் பொதுப் பாடல்களாகவே அமைந்துள்ளன. 

(கந்தர் அனுபூதி - திருப்பாடல் 11)
கூகா என என்கிளை கூடிஅழப்
போகா வகை மெய்பொருள் பேசியவா;
நாகாசல வேலவ, நாலுகவித்
தியாகா, சுரலோக சிகாமணியே!

எடுத்த காரியத்தில் வெற்றி பெற வைக்கும் திருத்தணித் திருப்புகழ்:

சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் பின்வரும் திருப்பாடலை 'காரிய சித்தி நல்கும் தந்திரப் பாடலென்றும், வீர ஜெயத் திருப்புகழென்றும், அணுகுண்டுக்கும் மேலான பேராற்றல் பொருந்தியதென்றும்' போற்றுகின்றார். 

திருப்புகழ் திருப்பாடல்களை அனுதினமும் பக்தியோடு ஓதுவோர்க்கு இடர் புரிபவரை, அத்திருப்புகழே நெருப்பென நின்று அழித்து விடும்' என்று அருணகிரிப் பெருமான் இத்திருப்பாடலில் அறுதியிடுகின்றார். 

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ....தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் 
     செகுத்தவர் உயிர்க்கும் ....சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
     நிசிக்கரு அறுக்கும் ....பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் மிடிக்கும்
     நிறைப் புகழுரைக்கும் ....செயல் தாராய்

தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் 
     தகுத்தகு தகுத்தம் ....தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண்டெனத் துடி முழக்கும் 
     தளத்துடன் நடக்கும் ....கொடுசூரர்

சினத்தையும் உடல் சங்கரித்த மலைமுற்றும் 
     சிரித்தெரி கொளுத்தும் ....கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணி இருக்கும் ....பெருமாளே.

அருணகிரிநாதர் (கும்பகோணத்தில் அருளிய ஷேத்திரக்கோவை திருப்புகழ்)

தேவார மூவரும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள பல்வேறு ஷேத்திரங்களைப் பட்டியலிட்டுத் திருப்பதிகங்களை அருளிச் செய்துள்ளனர் (இவ்வகையான பனுவல்களை ஷேத்திரக்கோவை என்று குறிப்பர்). இப்பாமாலைகளில் நேரடியாய்ப் பாடல் பெற்றுள்ள பிரதானத் திருத்தலங்களும், இன்னபிற வைப்புத் தலங்களும் இடம்பெறும்) 

திருப்புகழ் வேந்தரான நம் அருணகிரிப் பெருமானாரும் இவ்வகையான ஷேத்திரக்கோவை ஒன்றினை கும்பகோணத்தில் அருளிச் செய்துள்ளார். இதன் இறுதியில், 'இவ்வுலகில் உள்ள ஆலயங்கள் யாவிலும் (அவை எம்மதத்து ஆலயமாக இருப்பினும்) எழுந்தருளி இருப்பவன் சிவசுவரூபியான நம் அறுமுகக் கடவுளே' என்று உறுதிபடப் புகல்கின்றார் ('உலகெங்கும் மேவிய தேவாலயம் தொறு பெருமாளே'). 
 *
இனி இப்பதிவில் ஷேத்திரக்கோவை திருப்புகழைச் சிந்தித்து மகிழ்வோம்,

தந்த தானன தானான தந்தன
     தந்த தானன தானான தந்தன
          தந்த தானன தானான தந்தன ...தனதான

கும்பகோணமொடாரூர் சிதம்பரம்
     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
          கொன்றை வேணியர் மாயூரமம்பெறு ...சிவகாசி
-
(பிரதானத் தலங்கள்: கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம், சீகாழி, மாயூரம்)
(வைப்புத் தலங்கள்: பாண்டிநாட்டுத் தலமான சிவகாசி என்று கொள்வது ஏற்புடையது)

கொந்துலாவிய ராமேசுரம்; தனி
     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
          கும்பு கூடிய வேளூர்; பரங்கிரி ...தனில்வாழ்வே
-
(பிரதானத் தலங்கள்: இராமேஸ்வரம், புள்ளிருக்குவேளூர் எனும் வைத்தீஸ்வரன் கோயில், திருப்பரங்குன்றம்)

செம்புகேசுரம் ஆடானை இன்புறு
     செந்தில்ஏடகம்; வாழ் சோலையங்கிரி
          தென்றல் மாகிரி; நாடாள வந்தவ ...செகநாதம் 
-
(பிரதானத் தலங்கள்: ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்கா, திருவாடானை, திருச்செந்தூர், திருவேடகம், பழமுதிர்ச்சோலை, தென்றலின் பிறப்பிடமான பொதிய மலை)
(வைப்புத் தலங்கள்: சக்தி பீட ஷேத்திரமான பூரி ஜகந்நாதர் திருக்கோயில்)

செஞ்சொல் ஏரக மாஆவினன்குடி
     குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...வருதேவே
-
(பிரதானத் தலங்கள்: திருவேரகம் எனும் சுவாமிமலை, பழனிமலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி, குன்றுதோறாடல், மூதூர் எனும் திருப்புனவாயில், திருவிரிஞ்சை, சோழ நாட்டிலுள்ள வஞ்சி எனும் கருவூர்)

கம்பை மாவடி மீதேய சுந்தர
     கம்புலாவிய காவேரி !சங்கமு
          கம் சிராமலை வாழ்தேவ தந்திர ...வயலூரா
-
(பிரதானத் தலங்கள்: கச்சி ஏகம்பத்திலுள்ள மாவடி முருகன் சன்னிதி, சிராமலை எனும் திருச்சிராப்பள்ளி, வயலூர்)
(வைப்புத் தலங்கள்: - காவேரி சங்கமமாகும் பூம்புகாரிலுள்ள பல்லவனீச்சுரம், சாயாவனம்)

கந்த மேவிய போரூர் நடம்புரி
     தென்சிவாயமு(ம்) மேயாய் அகம்படு
          கண்டியூர்வரு சாமீ கடம்பணி ...மணிமார்பா
-
(பிரதானத் தலங்கள்: திருப்போரூர், தென் சிவாயமெனும் வாட்போக்கி, திருக்கண்டியூர்)

எம்பிரானொடு வாதாடு மங்கையர்
     உம்பர் வாணி பொனீள்மால் சவுந்தரி
          எந்த நாள்தொறும் ஏர்பாக நின்றுறு ...துதியோதும்

இந்திராணி தன் மாதோடு நன்குற
     மங்கை மானையு(ம்) மாலாய் !மணந்துல
          கெங்கு மேவிய தேவாலயம் தொறு ...பெருமாளே.

அருணகிரிநாதர் (சுவாமி மலையில் அருளிய திருஎழுகூற்றிருக்கை):

ஞானசம்பந்தப் பெருமான் சீகாழி தலத்திற்கு 'ஓர்உருவாயினை' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கையை அருளிச் செய்துள்ளது போலவே நம் அருணகிரியாரும் சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள சிவகுருநாதனுக்குத் திருவெழுகூற்றிருக்கை ஒன்றினை அருளிச் செய்துள்ளார்.

ஒன்றிலிருந்து ஏழு வரையிலான எண்களால் பாட்டுடை தெய்வத்தின் தன்மைகளையும் அருட்செயல்களையும், (கீழிருந்து மேலாகவும் பின்னர் மேலிருந்து கீழாகவும்) அமைத்தவாறே போற்றி வருவது எழுகூற்றிருக்கை பனுவல் வகை. 

அருணகிரியாரின் இவ்வகையிலான பாடல் அமைப்பு (படத்தில் குறித்துள்ளது போல்) தேரொன்றின் அமைப்பு போன்று விளங்குவது.

இனி இத்திருப்பாடலின் பொருளினைச் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
ஓருருவாகிய தாரகப் பிரமத்(து)
     ஒருவகைத் தோற்றத்(து) இரு மரபெய்தி
          ஒன்றாய்ஒன்றி இருவரில் தோன்றி மூவாதாயினை

(சுருக்கமான பொருள்: அறுமுகம் கொண்ட ஓருருவாய், பரம்பொருள் வடிவினனாய், சிவசக்தியர் அம்சமாய் - என்றும் இளமையாய்)

(2)
இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை
     ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்

(சுருக்கமான பொருள்: அந்தணர் மரபில் ஞானசம்பந்த மூர்த்தியாய்த் தோன்றினாய்) 

(3)
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
          மூவரும் போந்து இருதாள் வேண்ட
               ஒருசிறை விடுத்தனை

(சுருக்கமான பொருள்: அறியாமையால் உனை உணராது செருக்குற்றிருந்த பிரமனைப் பிரணவப் பொருள் கேட்டு தண்டித்தாய்) 

(4)
ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
     முந்நீர்உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை

(சுருக்கமான பொருள்: சிவஞானப் பழத்திற்காக உலகினை வலம் வந்தாய்) 

(5)
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

(சுருக்கமான பொருள்: ஐராவத யானையை உடைய இந்திரனின் புதல்வியாரான தெய்வயானை தேவியை மணந்தாய்)

(6)
ஒருவகை வடிவினில் இருவகைத்தாகிய
     மும்மதன் தனக்கு மூத்தோனாகி
          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
               அறுகு சூடிக்கிளையோன் ஆயினை

(சுருக்கமான பொருள்: வள்ளிமலையில் யானை வடிவினராய்த் தோன்றியருளிய விநாயக மூர்த்திக்கு இளையோனாய்)

(7)
ஐந்தெழுத்ததனில் நான்மறை உணர்த்து
     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்(கு)
          ஒரு குருவாயினை
(சுருக்கமான பொருள்: இருவினைக்கு மருந்தான சிவபரம்பொருளுக்கு குருவானாய்)

(8)
ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
               எழில்தரும் அழகுடன் கழுமலத்(து) உதித்தனை

(சுருக்கமான பொருள்: சீகாழியில் சம்பந்தச் செல்வராய்த் தோன்றினாய்)

(9)
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்(டு)
          அன்றிலங்கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை

(சுருக்கமான பொருள்: கார்த்திகைப் பெண்டிரால் வளர்ந்தாய், கிரௌஞ்ச மலையைப் பிளந்தாய்)

(10)
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
     ஆறெழுத்தந்தணர் அடியிணை போற்ற
          ஏரகத்திறைவன் என இருந்தனையே

(சுருக்கமான பொருள்: ஆறெழுத்து மந்திரத்தால் அந்தணர்கள் போற்றிப் பணிய சுவாமிமலையில் எழுந்தருளி இருக்கின்றாய்)