வாரியார் சுவாமிகள் (காங்கேயநல்லூர் பிருந்தாவன வளாகம்):

வேலூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 2 1/2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது  காங்கேயநல்லூர். மிகத் தொன்மையான முருகன் திருக்கோயிலொன்று விளங்கி வரும் இப்புண்ணிய பூமியே நம் வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலமாகவும் திகழ்கின்றது. 
சுவாமிகள் 1993ஆம் ஆண்டு ஆறுமுகக் கடவுளின் திருவடிகளை அடைந்த பின்னர் அப்பெருமகனாரின் திருமேனியைக் காங்கேயநல்லூர் முருகன் ஆலயத்திற்கு நேரிதிரில் சமாதி கொள்ளச் செய்கின்றனர். ('சரவண பவன் உணவகத்தினர்' கைங்கர்யத்தினால்) அவ்விடத்திலேயே அழகியதொரு  பிருந்தாவன வளாகமும் உருவாக்கப் பெறுகின்றது. இதன் கருவறையில் சுவாமிகள் அமர்ந்த திருக்கோலத்தில், அதீத கருணை ததும்பும் திருப்பார்வையோடும், தெய்வீகப் புன்னகையுடனும் அற்புதத் தன்மையில் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி.
இவ்வளாகத்தின் பின்புறம், 'சரவண பவன் உணவகத்தினர்' தங்கும் விடுதியொன்றினையும் (குறைந்த கட்டண சேவையில்) அமைத்துள்ளனர். அனுதினமும் காலை 11.30 மணி அளவில் நடந்தேறும் தீபாராதனை அவசியம் தரிசிக்க வேண்டிய நிகழ்வு. இதன் முடிவில் 'சரவண பவன் உணவகம்' சார்பாக, அங்குள்ளோர் அனைவருக்கும் பிரசாத உணவு வழங்கப் பெற்று வருகின்றது.
சுவாமிகளுக்குப் பன்னிரு சைவத் திருமுறைகள் மற்றும் அருணகிரியாரின் திருப்பாடல்களில் அதீத ஈடுபாடு ஆதலின் இவ்வளாகத்தில் சுவாமிகளின் திருமுன்பு அமர்ந்து, தேவார; திருவாசக; திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வணங்கி, குருவருளோடு வேலாயுதக் கடவுளின் திருவருளையும் ஒருசேரப் பெற்று மகிழ்வோம்!!!
-
(கந்தர் அலங்காரம் - திருப்பாடல் 102)
திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப்
பொரு வடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள்ஆறும் மலர்க் கண்களும் 
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக் குதிகொண்டவே!!!


No comments:

Post a Comment