வாரியார் சுவாமிகள் (குருபூஜைத் திருநாள் - ஐப்பசி ஆயில்யம்)

வேலூர் மாவட்டத்திலுள்ள பரம புண்ணியத் தலம் காங்கேயநல்லூர், சென்னையிலிருந்து சுமார் 2 1/2 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. காங்கேயக் கடவுளான நம் கந்தப் பெருமானுக்கு பெருவிருப்புடைய தலமாக விளங்குவதால் காங்கேயநல்லூர். திருமுருக வாரியார் சுவாமிகளின் அவதாரத் தலம். நம் சுவாமிகள் நவம்பர் 7 1993 அன்று சிவமாம் பேறு பெற்றுக் குகசாயுச்சியப் பெருநிலையை எய்திய பின்னர் சிவத்தொண்டால் பழுத்திருந்த அப்பெருமகனாரின் திருமேனியை இத்தலத்தில் சமாதி கொள்ளச் செய்து அவ்விடத்திலேயே அழகிய பிருந்தாவன வளாகமொன்றையும் உருவாக்கினர்.

ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள இச்சமாதிக் கோயிலில் சுவாமிகள் தனக்கே உரித்தான அதீத கருணை ததும்பும் திருப்பார்வையோடும், தெய்வீகப் புன்னகையுடனும் அதி ஆச்சர்யமான திருக்கோலத்தில் பிருந்தாவனக் கருவறையில் எழுந்தருளி இருக்கின்றார். சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கு நேரெதிரில் கந்தக் கடவுளின் புராதனத் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஒவ்வொரு அணுவிலும் சுவாமிகளின் திருப்பணி பொதிந்துள்ளது. 
அடியவர் வழிபாடு நம் இந்து தர்மத்தில் மிகமுக்கிய இடத்தினை வகிக்கின்றது. அடியவர் வழிபாடு அடியவர்களை அடைவதோடு மட்டுமல்லாது அப்பெருமக்களின் உள்ளத்தில் எழுந்தருளியுள்ள சிவபரம்பொருளையும் சென்று சேர்கின்றது என்று திருமந்திரம் அறுதியிடுகின்றது. 

நேரம் அமைத்துக் கொண்டு காங்கேயநல்லூர் சென்று ஆறுமுகக் கடவுளையும், அப்பெருமானின் திருவடிகளில் நிலை கொண்டுள்ள நம் சுவாமிகளையும் தரிசித்துப் பணிவோம். சுவாமிகளின் தரிசனம் பரம புண்ணியமானது; வல்வினைகளை சுட்டெரிக்க வல்லது; சீரிய பக்தியையும் நல்லொழுக்கத்தையும் ஆன்ம பக்குவத்தையும் ஏனைய நலன்கள் அனைத்தையும் நல்க வல்லது. 
-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

No comments:

Post a Comment