பரம்பொருளினும் மேம்பட்ட ஆறுமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானே குமார வடிவெடுத்துக் கந்தக் கடவுளாய்த் தோன்றியுள்ளார்' எனும் சத்தியத்தைக் கந்தபுராணத்தின் பல்வேறு பகுதிகள் ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றது. இப்புரிதலோடு கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்களை அணுகுதல் வேண்டும். 

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய திருப்பாடல்களில், ஆறுமுக தெய்வத்தின் மேன்மைகளையும் சிறப்பியல்புகளையும் ஆங்காங்கே பல்வேறு அடைமொழிகளால் போற்றிக் கொண்டே வருவார். முதற்பொருள்; மூலப் பொருள்; மூல முதல்வன்; மயிலேறும் பரம்பொருள்; ஆதிக்கடவுள் என்று படலங்கள் தோறும் சிறப்பித்தும் நிறைவு தோன்றாமையால், கீழ்க்குறித்துள்ள இரு திருப்பாடல்களில் 'சிவபரம்பொருளை விட மேன்மை பொருந்திய ஆறுமுகக் கடவுள்' என்று போற்றித் துதித்து மகிழ்கின்றார் ('பரத்தின் மேற்படு பண்ணவன்', 'பரத்தினும் மேதகு பண்ணவன்').

(1)
சிங்கமுகாசுரன் மிகவும் சினந்து ஓராயிரம் அம்புகளை, பரம்பொருளான சிவபெருமானை விடவும் மேன்மை பொருந்திய ஆறுமுகக் கடவுளின் தேரோட்டியான வாயு தேவனின் நெஞ்சில் பதியுமாறு செய்கின்றான்,
-
(யுத்த காண்டம்: சிங்கமுகாசுரன் வதைப் படலம் - திருப்பாடல் 405)
திருத்தகும் திறல் சீய முகத்தினான்
உருத்து வாளியொர் ஆயிரம் தூண்டுறாப்
பரத்தின் மேற்படு பண்ணவன் தேர்விடு
மருத்தின் மார்புற வல்லை அழுத்தினான்
-
(சொற்பொருள்: மருத்து - வாயுதேவன், பண்ணவன் - இறைவன்)

(2)
பரம்பொருளான சிவமூர்த்தியைக் காட்டிலும் மேம்பட்ட அறுமுகக் கடவுளின் வில்லேந்தும் திருக்கரத்தையும், அக்கரங்கள் செலுத்தும் சரங்களையும், உறுதிவாய்ந்த அற்புதத் தேரையும், அத்தேரினைச் செலுத்தி வரும் வாயுதேவனின் வலிமையையும் யுத்தகளத்தில் காண்போரெல்லாம் வியந்து போற்றிப் புகழ்கின்றார், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 121)
பரத்தினும் மேதகு பண்ணவன் வார்வில்
கரத்தினையும் விரை வால் கரம் தூண்டும் 
சரத்தினையும் தடந்தேரினையும் கால்
உரத்தினையும் புகழ்வார் புடையுள்ளார்
-
(சொற்பொருள்: கால் - காற்றின் அதிதேவதையாகிய வாயு தேவன்)

சிவபரத்துவம் மட்டுமே பேச வந்த கந்தபுராண மாகாவியத்தில், (உபச்சார வழக்கிற்காக இருப்பினும்) நம் வேலாயுதப் பெருங்கடவுளை 'பரத்தினும் மேம்பட்ட பண்ணவன்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் போற்றுவாராயின், ஆறு திருமுகங்கள் கொண்டருளும்  அப்பெருமானின் பெருமைகளை யாரே அளக்க வல்லார்!

மூவிரு முகங்கள் போற்றி (கந்தபுராணத் துவக்கத்தில் இடம்பெறும் சுப்பிரமணியர் காப்பு)

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி!!!

அம்பிகை இடபாகம் பெற்ற திருத்தலம் (கந்தபுராண நுட்பங்கள்):

உமையன்னை, தனை விடுத்துச் சிவமூர்த்தியை மட்டுமே வலம் வந்து வழிபடும் நோன்புடைய பிருங்கி முனிவரின் செயலினைச் சிந்தித்து, 'இனி எனை ஆளுடைய இறைவரின் இடபாகத்தினைச் சேர்வேன்' என்று திருவுள்ளத்தில் சங்கல்பித்து, இமயமலையிலுள்ள திருக்கேதாரம் எனும் திருத்தலத்தில் முறைமையாக 'கேதார கௌரி' விரதமிருந்து; வழிபாடு புரிந்து பேறு பெற்ற நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்,  
-
(உற்பத்தி காண்டம்: வழிநடைப் படலம் - திருப்பாடல் 3):
தன்னை நீக்கியே சூழ்வுறும் தவமுடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை உணரா
என்னை ஆளுடையான்இடம் சேர்வன் என்றிமையக்
கன்னி பூசனை செய்த கேதாரமுன் கண்டான்

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் பழனியாண்டவன் வரலாறு இடம்பெற்றுள்ளதா? (கந்தபுராண நுட்பங்கள்):

வேத வியாசர் வடமொழியில் அருளியுள்ள பதினெண் புராணங்களுள் அளவில் மிகப்பெரியது ஸ்காந்த புராணம். 7 காண்டங்களாகவும் எண்ணிறந்த சம்ஹிதைகளாகவும் தொகுக்கப் பெற்றுள்ள ஸ்காந்தபுராணத்தில், சங்கர சம்ஹிதையின் சிவரகசிய கண்டத்திலுள்ள முதல் ஆறு பகுதிகளை மட்டுமே நம் கச்சியப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானின் கட்டளையினை ஏற்றுத் தமிழ்மொழியில் இயற்றி அளித்துள்ளார். 

கச்சியப்பர் அருளியுள்ள கந்தபுராண நூல் சூர சம்ஹார நிகழ்வினையொட்டியதாக அமைக்கப் பெற்றிருப்பதால், அதன் 6 காண்டங்களிலும், முருகப் பெருமான் சிவஞானப் பழத்திற்காக புரிந்த திருவிளையாடலும், அதன் தொடர்ச்சியாய்க் கோபமுற்றுப் பழனி மலை மீது எழுந்தருளிய அற்புத நிகழ்வும் குறிக்கப் பெறவில்லை. 

எனினும் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரம குருநாதரான நம் அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில் இவ்வரிய நிகழ்வினைப் போற்றிப் பரவியுள்ளார். 

'புடவிக்கணி துகில்' என்று துவங்கும் பழனித் திருப்புகழின் பின்வரும் திருப்பாடல் வரிகளில், 'ஆறுமுகக் கடவுள் உலகங்கள் யாவையையும் நொடிப்பொழுதில் வலம்வந்து சேர, சிவபெருமானோ அச்சிவஞானப் பழத்தினை வேழ முகத்துக் கடவுளான நம் விநாயகப் பெருமானுக்கு அளித்தருள, பரம்பொருளாகிய அச்சிவ மூர்த்தி வருந்துமாறு, சிவஞான வடிவினனாகிய நம் கந்தப் பெருமான் வெகுண்டெழுந்து; சிவகிரி எனும் பெயருடைய பழனி மலையின் மீது எழுந்தருளிய, உணர்தற்கரிய திருவிளையாடலை' அருணகிரியார் உளமுருகிப் போற்றுகின்றார்
-
படியிற் பெருமித தகவுயர் செம்பொன் 
     கிரியைத் தனிவலம் வரஅரன்அந்தப்
          பலனைக் கரிமுகன் வசமருளும் பொற்பதனாலே
-
பரன்வெட்கிடஉள மிகவும் வெகுண்டக்
     கனியைத் தரவிலையென அருள் செந்தில் 
          பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் பெருமாளே.

வள்ளி தெய்வயானை தேவியர்க்கிடையில் முருகப் பெருமானின் பொருட்டு விவாதமா? (திரைக்கதையும்; புராண நிகழ்வுகளும்):

1967ஆம் ஆண்டு வெளிவந்த 'கந்தன் கருணை' திரைப்படத்தில் திரைக்கதை சுவாரஸ்யத்திற்காக, 'முருகப் பெருமான் - வள்ளி தேவி திருமண நிகழ்வினை' வீரவாகு வாயிலாக தெய்வயானையார் அறிந்து கோபமுறுவது போலவும், பின்னர் முருகப் பெருமான் சமாதானம் புரிவது போலவும் காட்சி அமைக்கப் பெற்றிருக்கும். மூலநூலான கந்தபுராண நிகழ்வுகளை அறிந்திராமல் இத்திரைப்படக் காட்சியினைப் பார்ப்போர்க்கு, 'இம்முறையிலேயே சம்பவங்கள் நடந்தேறியுள்ளது போலும்' என்று தோன்றி விடுவது இயல்பே. இனி நடந்தேறிய மெய் வரலாற்றினை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வழிநின்று உணர்ந்து தெளிவுறுவோம்,

(1)
வள்ளியம்மை திருமண நிகழ்விற்குப் பின்னர் முருகப் பெருமான் தேவியோடு கந்தமலைக்குச் செல்கின்றார். அங்கு நம் வள்ளியம்மை தெய்வயானையாரின் திருவடிகளில் முதற்கண் வீழ்ந்து வணங்குகின்றாள், தெய்வயானை தேவியும் (எவரென்று அறியுமுன்னரே) 'தனியேயிருந்த எனக்குத் தக்கதொரு தோழியாய் வந்துள்ளாய்' என்று முதலில் தோழியாய் அங்கீகரிக்கின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 235)
ஆங்கது காலை வள்ளி அமரர்கோன் அளித்த பாவை
பூங்கழல் வணக்கம் செய்யப் பொருக்கென எடுத்துப் புல்லி
ஈங்கொரு தமியளாகி இருந்திடுவேனுக்(கு) இன்றோர்
பாங்கி வந்துற்றவாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள்

(2)
பின்னர் தெய்வயானையார் வள்ளிதேவியின் வரலாறு குறித்து கூறியருளுமாறு முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்க, கந்தப் பெருமானும் 'முற்பிறவியில் அவ்விரு தேவியரும் திருமாலின் திருக்கண்களினின்றும் தோன்றி தன்னை அடைய தவம் புரிந்த நிகழ்வில் துவங்கி, வள்ளி தேவியை மணம் புரிந்தருளியது வரையிலான நிகழ்வுகளை அருளிச் செய்கின்றான். இதன் பின்னர் வள்ளிதேவி மீண்டுமொரு முறை மூத்த சகோதரியான தெய்வயானையாரின் திருவடிகளில் வீழ்ந்து நெகிழ்கின்றாள். தெய்வயானையாரும் வள்ளிதேவியை அணைத்தெடுத்து 'உன்னைத் தங்கையெனப் பெற்ற எனக்கு இனிப் பெறுவதற்குப் பிறிதொன்றும் உளவோ' என்று இச்சமயத்தில் சகோதரியாகவும் அங்கீகரிக்கின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 254)
வன்திறல் குறவர் பாவை மற்றிது புகன்று தௌவை
தன்திருப்பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி
இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற்றேன்
ஒன்றெனக்கரியதுண்டோ உளந்தனில் சிறந்ததென்றாள்

(3)
இதன் பின்னரும் கச்சியப்ப சிவாச்சாரியார் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி பின்வரும் மற்றொரு திருப்பாடலில், 'இரு தேவியரும் எவ்வித வேற்றுமையுமின்றி, மிக்க அன்புடன்; உள்ளம்; உயிர்; புரியும் செயல்கள் ஆகிய யாவற்றிலும் ஒன்றியிருந்து, மணமும் மலரும் போன்று ஒருமையுற்று இருக்கின்றனர்' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 255) 
இந்திரன் அருளும் மாதும் எயினர்தம் மாதும் இவ்வா(று)
அந்தரம் சிறிதுமின்றி அன்புடன் அளவளாவிச்
சிந்தையும் உயிரும் செய்யுஞ் செயற்கையும் சிறப்பும்ஒன்றாக்
கந்தமும் மலரும் போலக் கலந்து வேறின்றி உற்றார்
-
(சொற்பொருள்: அந்தரம் - பேதம்; வேற்றுமை)

ஆதலின் வள்ளியம்மை; தெய்வயானையார் திருமண நிகழ்வுகளை உலகியல் கண் கொண்டு பார்க்காமல், கச்சியப்ப சிவாச்சாரியார் உணர்த்தியுள்ள அருளியல் நோக்கினை ஆய்ந்துணர்ந்து தெளிவுறுதல் வேண்டும். வள்ளி நாயகியை இச்சா சக்தியாகவும்; தெய்வயானையாரைக் கிரியா சக்தியாகவும் கொண்டு நம் வேலாயுதப் பெருங்கடவுள் தானே ஞானசக்தியாக விளங்கி யாவர்க்கும் சிவமுத்திப் பேற்றினை அளித்து அருள் புரிகின்றான்.  

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 261)
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்

கந்தபுராணச் சிறப்பு:

10,345 திருப்பாடல்களைக் கொண்ட கந்தபுராண மாகாவியத்தின் இறுதியில், புராண ஆசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியாரின் கூற்றுகளாக இடம்பெற்றுள்ள இரு திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

அடியவனை ஆட்கொண்டருளிய நாயகனும், விண்ணுளோர் யாவர்க்கும் நாயகனும், 'தெய்வயானை' எனும் திருநாமமுடைய தேவியின் நாயகனும், ரிக்; யஜுர்; சாம அதர்வண வேதங்களாகிய நான்மறைகளின் நாயகனும், வேடர்குலத் தோன்றலான வள்ளி தேவியின் நாயகனும், சிவஞான வேலேந்தும் ஒப்புவமையற்ற நாயகனுமான குமாரப் பெருங்கடவுளின் அவதார நிகழ்வுகளை விரித்துரைக்கும் இப்புராணத்தினை, புராணங்கள் யாவினுக்கும் தலைமைப் புராணமெனக் கொண்டு போற்றுங்கள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 265)
என்நாயகன் விண்ணவர் நாயகன் யானை நாமம்
மின்நாயகன் நான்மறை நாயகன் வேடர் நங்கை
தன்நாயகன் வேல் தனிநாயகன் தன்புராணம்
நன்நாயகமாம் எனக்கொள்க இஞ்ஞாலமெல்லாம்

வற்றாத திருவருள் புரிந்தருளும் முருகப் பெருமானின் இப்புராணத்தினைப் பிறர்க்கு எடுத்துரைப்போரும், இதன் திருப்பாடல்களிலுள்ள உண்மைப்பொருளை முனைந்து ஆராய்ந்திடுவோரும், குற்றமில்லாது கற்றறிபவர்களும், கற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்பவர்களும், உளமுருகிக் கேட்போரும் சிவமுத்திப் பேற்றினைப் பெற்று இன்புறுவர், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 266)
வற்றா அருள்சேர் குமரேசன் வண்காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகளுறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடுநெறிப் பாலின் உறுவர் அன்றே

கந்தபுராணத்தில் முசுகுந்தச் சக்கரவர்த்தி (அறிந்த செய்திகளும், அறியாத நிகழ்வுகளும்):

கருவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில், நந்திதேவரின் திருமேனிக்கு இடதுபுறம் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் இத்திருமேனியைத் தரிசித்து மகிழலாம். 

(1) திருக்கயிலைச் சோலையிலுள்ள வில்வ மரத்தில் அமர்ந்திருந்த குரங்கொன்று, அதன் கீழ் அம்பிகையோடு எழுந்தருளியிருந்த சிவபரம்பொருளின் மீது வில்வ இலைகளை விளையாட்டாய்ப் பறித்துப் போட, அச்சிவபுண்ணியப் பலனால் மெய்யறிவு பெற்று, மண்ணுலகில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுக்கின்றது. 

(2) இந்த முசுகுந்த மன்னரே இந்திரனால் பூசிக்கப் பெற்று வந்த ஆதி சோமாஸ்கந்த தியாகராஜ மூர்த்தியைத் திருவாரூரிலும், மற்ற 6 பிரதி தியாகராஜ மூர்த்தங்களைத் திருவாரூரைச் சுற்றிலுமுள்ள திருநள்ளாறு; திருக்கோளிலி; திருநாகைக்காரோணம்; திருக்காறாயில்; திருமறைக்காடு; திருவாய்மூர் ஆகிய 6 தலங்களிலும்  பிரதிஷ்டை செய்வித்த புண்ணிய சீலர் (இவ்வேழு பதிகளும் சப்த விடங்கத் தலங்கள் என்று இன்றளவும் போற்றப் பெற்று வருகின்றன). 

3. முசுகுந்த சக்கரவர்த்தி எண்ணிலடங்கா யுகங்களுக்கு முற்பட்ட கந்தபுராண காலத்தவர். கரூரில் இருந்த வண்ணமே இவர் தன்னுடைய ஆட்சி பரிபாலனத்தினை மேற்கொண்டு வந்துள்ளார். கந்தக் கடவுளுக்கும் தெய்வயானை அம்மைக்கும் நடந்தேறிய திருமண வைபவத்திற்கு இந்திரன் வாயிலாக முசுகுந்த மன்னருக்கு அழைப்பு சென்றதையும், முசுகுந்தர் கரூரிலுள்ள தன்னுடைய குடிமக்கள் அனைவருடனும் திருப்பரங்குன்றம் சென்று கந்தவேளின் திருமண நிகழ்வினைத் தரிசித்த நிகழ்வையையும் 'தெய்வயானை அம்மை திருமணப் படலத்தில்' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். 

4. ஒரு சமயம் கடும் நோன்பிருந்து ஆறுமுகக் கடவுளின் தரிசனம் பெறும் முசுகுந்த மன்னர் 'ஐயனே இம்மண்ணுலகினை ஒருகுடையின் கீழ் பரிபாலனம் புரிந்து வர உங்கள் நவ வீரர்களையும் அடியேனுக்குப் படைத்துணையாய் அளித்தருள வேண்டும்' என்று திருவடி தொழுது வேண்ட, முருகப் பெருமானும் அவ்வரத்தினை அளித்தருள் புரிகின்றார். 

எனினும் வீரவாகு உள்ளிட்ட நவவீரர்களும் 'நந்தி கணத்தவரான நாங்கள் இம்மண்ணுலக மன்னனுக்குப் படைத்துணையாய்ச் செல்வதோ?' என்று கந்தவேளிடமே மறுத்துரைக்கின்றனர். 'இறை வாக்கினை மீறிய குற்றத்தினால் அவ்வீரர்கள் மானுடப் பிறப்பெடுத்து, முசுகுந்த மன்னனுக்குப் படைத்துணையாய் விளங்கிப் பின்னர் பன்னெடுங்கால தவத்தினால் மீண்டும் ஆறுமுகக் கடவுளுக்கு அணுக்கத் தொண்டு புரியும் பேற்றினைப் பெறுகின்றனர்' என்று 'கந்தவிரதப் படலத்தில்' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்.