கந்தபுராணத்தில் முசுகுந்தச் சக்கரவர்த்தி (அறிந்த செய்திகளும், அறியாத நிகழ்வுகளும்):

கருவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில், நந்திதேவரின் திருமேனிக்கு இடதுபுறம் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் இத்திருமேனியைத் தரிசித்து மகிழலாம். 

(1) திருக்கயிலைச் சோலையிலுள்ள வில்வ மரத்தில் அமர்ந்திருந்த குரங்கொன்று, அதன் கீழ் அம்பிகையோடு எழுந்தருளியிருந்த சிவபரம்பொருளின் மீது வில்வ இலைகளை விளையாட்டாய்ப் பறித்துப் போட, அச்சிவபுண்ணியப் பலனால் மெய்யறிவு பெற்று, மண்ணுலகில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுக்கின்றது. 

(2) இந்த முசுகுந்த மன்னரே இந்திரனால் பூசிக்கப் பெற்று வந்த ஆதி சோமாஸ்கந்த தியாகராஜ மூர்த்தியைத் திருவாரூரிலும், மற்ற 6 பிரதி தியாகராஜ மூர்த்தங்களைத் திருவாரூரைச் சுற்றிலுமுள்ள திருநள்ளாறு; திருக்கோளிலி; திருநாகைக்காரோணம்; திருக்காறாயில்; திருமறைக்காடு; திருவாய்மூர் ஆகிய 6 தலங்களிலும்  பிரதிஷ்டை செய்வித்த புண்ணிய சீலர் (இவ்வேழு பதிகளும் சப்த விடங்கத் தலங்கள் என்று இன்றளவும் போற்றப் பெற்று வருகின்றன). 

3. முசுகுந்த சக்கரவர்த்தி எண்ணிலடங்கா யுகங்களுக்கு முற்பட்ட கந்தபுராண காலத்தவர். கரூரில் இருந்த வண்ணமே இவர் தன்னுடைய ஆட்சி பரிபாலனத்தினை மேற்கொண்டு வந்துள்ளார். கந்தக் கடவுளுக்கும் தெய்வயானை அம்மைக்கும் நடந்தேறிய திருமண வைபவத்திற்கு இந்திரன் வாயிலாக முசுகுந்த மன்னருக்கு அழைப்பு சென்றதையும், முசுகுந்தர் கரூரிலுள்ள தன்னுடைய குடிமக்கள் அனைவருடனும் திருப்பரங்குன்றம் சென்று கந்தவேளின் திருமண நிகழ்வினைத் தரிசித்த நிகழ்வையையும் 'தெய்வயானை அம்மை திருமணப் படலத்தில்' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். 

4. ஒரு சமயம் கடும் நோன்பிருந்து ஆறுமுகக் கடவுளின் தரிசனம் பெறும் முசுகுந்த மன்னர் 'ஐயனே இம்மண்ணுலகினை ஒருகுடையின் கீழ் பரிபாலனம் புரிந்து வர உங்கள் நவ வீரர்களையும் அடியேனுக்குப் படைத்துணையாய் அளித்தருள வேண்டும்' என்று திருவடி தொழுது வேண்ட, முருகப் பெருமானும் அவ்வரத்தினை அளித்தருள் புரிகின்றார். 

எனினும் வீரவாகு உள்ளிட்ட நவவீரர்களும் 'நந்தி கணத்தவரான நாங்கள் இம்மண்ணுலக மன்னனுக்குப் படைத்துணையாய்ச் செல்வதோ?' என்று கந்தவேளிடமே மறுத்துரைக்கின்றனர். 'இறை வாக்கினை மீறிய குற்றத்தினால் அவ்வீரர்கள் மானுடப் பிறப்பெடுத்து, முசுகுந்த மன்னனுக்குப் படைத்துணையாய் விளங்கிப் பின்னர் பன்னெடுங்கால தவத்தினால் மீண்டும் ஆறுமுகக் கடவுளுக்கு அணுக்கத் தொண்டு புரியும் பேற்றினைப் பெறுகின்றனர்' என்று 'கந்தவிரதப் படலத்தில்' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்.

No comments:

Post a Comment