அருணகிரிநாதர் (சுவாமி மலையில் அருளிய திருஎழுகூற்றிருக்கை):

ஞானசம்பந்தப் பெருமான் சீகாழி தலத்திற்கு 'ஓர்உருவாயினை' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கையை அருளிச் செய்துள்ளது போலவே நம் அருணகிரியாரும் சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள சிவகுருநாதனுக்குத் திருவெழுகூற்றிருக்கை ஒன்றினை அருளிச் செய்துள்ளார்.

ஒன்றிலிருந்து ஏழு வரையிலான எண்களால் பாட்டுடை தெய்வத்தின் தன்மைகளையும் அருட்செயல்களையும், (கீழிருந்து மேலாகவும் பின்னர் மேலிருந்து கீழாகவும்) அமைத்தவாறே போற்றி வருவது எழுகூற்றிருக்கை பனுவல் வகை. 

அருணகிரியாரின் இவ்வகையிலான பாடல் அமைப்பு (படத்தில் குறித்துள்ளது போல்) தேரொன்றின் அமைப்பு போன்று விளங்குவது.

இனி இத்திருப்பாடலின் பொருளினைச் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
ஓருருவாகிய தாரகப் பிரமத்(து)
     ஒருவகைத் தோற்றத்(து) இரு மரபெய்தி
          ஒன்றாய்ஒன்றி இருவரில் தோன்றி மூவாதாயினை

(சுருக்கமான பொருள்: அறுமுகம் கொண்ட ஓருருவாய், பரம்பொருள் வடிவினனாய், சிவசக்தியர் அம்சமாய் - என்றும் இளமையாய்)

(2)
இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை
     ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்

(சுருக்கமான பொருள்: அந்தணர் மரபில் ஞானசம்பந்த மூர்த்தியாய்த் தோன்றினாய்) 

(3)
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
          மூவரும் போந்து இருதாள் வேண்ட
               ஒருசிறை விடுத்தனை

(சுருக்கமான பொருள்: அறியாமையால் உனை உணராது செருக்குற்றிருந்த பிரமனைப் பிரணவப் பொருள் கேட்டு தண்டித்தாய்) 

(4)
ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
     முந்நீர்உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை

(சுருக்கமான பொருள்: சிவஞானப் பழத்திற்காக உலகினை வலம் வந்தாய்) 

(5)
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

(சுருக்கமான பொருள்: ஐராவத யானையை உடைய இந்திரனின் புதல்வியாரான தெய்வயானை தேவியை மணந்தாய்)

(6)
ஒருவகை வடிவினில் இருவகைத்தாகிய
     மும்மதன் தனக்கு மூத்தோனாகி
          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
               அறுகு சூடிக்கிளையோன் ஆயினை

(சுருக்கமான பொருள்: வள்ளிமலையில் யானை வடிவினராய்த் தோன்றியருளிய விநாயக மூர்த்திக்கு இளையோனாய்)

(7)
ஐந்தெழுத்ததனில் நான்மறை உணர்த்து
     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்(கு)
          ஒரு குருவாயினை
(சுருக்கமான பொருள்: இருவினைக்கு மருந்தான சிவபரம்பொருளுக்கு குருவானாய்)

(8)
ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
               எழில்தரும் அழகுடன் கழுமலத்(து) உதித்தனை

(சுருக்கமான பொருள்: சீகாழியில் சம்பந்தச் செல்வராய்த் தோன்றினாய்)

(9)
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்(டு)
          அன்றிலங்கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை

(சுருக்கமான பொருள்: கார்த்திகைப் பெண்டிரால் வளர்ந்தாய், கிரௌஞ்ச மலையைப் பிளந்தாய்)

(10)
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
     ஆறெழுத்தந்தணர் அடியிணை போற்ற
          ஏரகத்திறைவன் என இருந்தனையே

(சுருக்கமான பொருள்: ஆறெழுத்து மந்திரத்தால் அந்தணர்கள் போற்றிப் பணிய சுவாமிமலையில் எழுந்தருளி இருக்கின்றாய்)

No comments:

Post a Comment