அருணகிரியார் திருச்செந்தூரில் பெற்ற நடனக்கோல தரிசன நிகழ்வினை முதற்கண் நினைவு கூர்ந்து பின்னர் பதிவிற்குள் பயணிப்போம்.
(1) (திருச்செந்தூர்):
அன்று செந்தில் நகரில் பிரமோத்சவ 7ஆம் நாள் உற்சவம், பிரதான உற்சவ மூர்த்தியான ஷண்முகரின் புறப்பாடு துவங்கியிருந்த சமயம். எண்ணிறந்த அணிகலன்களுடன் எழுந்தருளி வரும் செந்திலாண்டவனைக் கண்களாரத் தரிசித்துப் பணியும் அருணகிரியார் 'ஐயனே, உன்னுடைய நடனக் கோல தரிசனத்தினை அளித்தருள்வாய்' என்று விண்ணப்பிக்கின்றார்.செந்தில் இறைவனும் 'பின்புறமாய் வந்து நமது நடனக் கோலம் காண்பாய்' என்று அருள, அருணகிரியார் அவ்வண்ணமே செல்கின்றார். திருப்புகழ் வேந்தரின் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு செந்திலாண்டவன் பால வடிவில் தோன்றுகின்றான். செம்பொன்னால் வார்த்தெடுத்தது போன்ற திருமேனிப் பொலிவு, திருமேனியெங்கும் அணிகலன்கள், நெற்றியில் துலங்கும் திருநீறு, சிவஞானக் குழவியான செந்திற் கடவுள் பிஞ்சுப் பொற்பாதங்களை அசைத்துத் தன் திருநடத்தினைத் துவங்குகின்றான்.
அருணகிரியார் அகம் குழைந்து கண்ணீர் பெருக்கி 'தண்டையணி வெண்டையம்' எனும் திருப்பாடலொன்றினை எடுக்க, அதன் சந்தத்திற்கு ஏற்றாற்போல் குமர நாயகன் திருநடமிடுகின்றான். 'கொண்ட நடனம்பதம் செந்திலிலும் எந்தன்முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே' என்று அருணகிரியார் நெகிழ்ந்து போற்றுகின்றார்.
'செந்திலிலும்' என்று பன்மையில் குறித்திருப்பதால், 'பிற தலங்களிலும் குமாரக் கடவுள் தன் நடனக்கோல தரிசனத்தினை அளித்தருள் புரிந்துள்ளான்' என்பது புலனாகின்றது. இனி அதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளையும் அறிந்து மகிழ்வோம்,
(2) (திருவெண்ணெய்நல்லூர்):
('பலபல தத்துவ' என்று துவங்கும் திருப்புகழ்)-
மகிழ் பெணையில்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைக்கொடு திருநடமிட்டுறை ...பெருமாளே
(3) (கொடுங்குன்றம் - பிரான் மலை):
('எதிர்பொருது கவிகடின' என்று துவங்கும் திருப்புகழ்),-
பொழுதினிலும் அருள்முருக சுத்தக் கொடுங்கிரியில்
நிர்த்தச் சரண்களை மறந்திடேனே
(4) (சிதம்பரம்):
('மகரமொடுறு குழை' என்று துவங்கும் திருப்புகழ்)-
அரிதுயில் சயன வியாள மூர்த்தனும்
அணிதிகழ் மிகுபுலியூர் வியாக்ரனும்
அரிதென முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே
-
(குறிப்பு: மேற்குறித்துள்ள திருப்பாடலில், பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் 'இது அரிது அரிது' என்று வியந்து போற்றும் தன்மையில் தில்லையுறைக் குமாரக் கடவுள் தனக்கு ஆடல் தரிசனம் அளித்தருளியதாகப் பதிவு செய்கின்றார் நம் அருணகிரிப் பெருமானார்).
(5) (திருத்தணி):
('குருவி எனப்பல' என்று துவங்கும் திருப்புகழ்)-
"விணமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...பெருமாளே"
(குறிப்பு: இத்திருப்பாடலில் இருதேவியரும் உடனிருக்க, நிருத்த தரிசனத்தினை அளித்ததாகப் பதிவு செய்கின்றார்)
('மொகுமொகென நறைகொள்மலர்' என்று துவங்கும் மற்றொரு திருப்புகழ்)
-
"தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல ...... பெருமாளே"
(6) (திருவண்ணாமலை):
('விந்துப் புளகித' என்று துவங்கும் திருப்புகழ்)
அடியென்
இடைஞ்சல் பொடிபட முன்புற்றருள் அயில்
தொடுத்தும் இளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...பெருமாளே.
மேற்குறித்துள்ள அரிய குறிப்புகளை முதன்முதலில் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தியவர் சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். இதனைத் தொடர்ந்து 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய நூல்கள்; விரிவுரைகள்; கட்டுரைகள் தோறும் இக்குறிப்புகளை விவரித்துப் போற்றி வருவார்.
No comments:
Post a Comment