அருணகிரிநாதர் (சிற்றம்பலக் கருவறையில் கிடைத்த முருக தரிசனம்):

தல யாத்திரையாகச் செல்லும் வழியில் அருணகிரியார் தில்லைத் திருக்கோயிலை அடைகின்றார். 'ஆனந்தத் திருக்கூத்தியற்றும் நடராஜப் பரம்பொருளை முதற்கண் தொழுதுப் பின்னர் சிவகுமரனைத் தரிசிக்கலாம்' என்றெண்ணியவாறே, பெரும் ஆர்வத்துடன் சிற்றம்பலச் சன்னிதிக்குச் செல்கின்றார்.  

ஆடல்வல்லானின் தரிசனத்தை எதிர்நோக்கியிருந்த திருப்புகழ் வேந்தருக்கோ பெருவியப்பு, சிற்றம்பலக் கருவறையில் அம்பலவாணர் அறுமுகக் கடவுளாகத் திருக்காட்சி தருகின்றார். அருணை மாமுனிவருக்குத் தன் கண்களையே நம்ப இயலவில்லை. மீண்டுமொரு முறை உற்று நோக்க, இப்பொழுது கந்தப் பெருமான் சிற்சபேச மூர்த்தியாகத் தோன்றக் காண்கின்றார். இது வரையிலும் மெய்யுணர்வில் மட்டுமே உணர்ந்திருந்த, 'சிவபரம்பொருளுக்கும், சுப்ரமண்ய தெய்வத்துக்குமான பேதமற்ற தன்மையினை' இத்தருணத்தில் நேரிலேயே தரிசிக்கப் பெறுகின்றார். 

(1)
கண்ணருவி ஆறாய்ப் பெருகி வர, உளமெலாம் உருகி, உச்சி கூப்பிய கையினராய்த் தான் தரிசித்த அந்த அபேத தரிசனக் காட்சியைப் பின்வரும் திருப்பாடலால் நமக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றார். 
-
முதல் இரு வரிகளில் 'சிவகுருநாதனான நம் கந்தப் பெருமானைப் பாருங்கள்' என்று துவங்கிப் பாடிக்கொண்டே வருகையில், 9-10 வரிகளில் 'விடையேறி வரும் அம்பிகை மணாளராகிய நம் சிவமூர்த்தியைப் பாருங்கள்' என்று முதற்பொருளான ஒரே மூர்த்தியின் இருவேறு வடிவங்களைக் கலம்பமாகப் போற்றிப் பாடுகின்றார். 

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

பரமகுருநாத கருணைஉபதேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்

பகல்இரவிலாத ஒளிவெளியில் மேன்மை
     பகரும் அதிகாரப் ...... பெருமாள்காண்

திருவளரும் நீதி தின மனொகராதி
     செகபதியை ஆளப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானும் மருவை அவைபூத
     தெரிசனை சிவாயப் ...... பெருமாள்காண்

ஒருபொருளதாகி அருவிடையை ஊரும் 
     உமைதன் மணவாளப் ...... பெருமாள்காண்

உகமுடிவு காலம் இறுதிகள் இலாத
     உறுதிஅநுபூதிப் ...... பெருமாள்காண்

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
     கலவிபுகுதா மெய்ப் ...... பெருமாள்காண்

கனகசபை மேவி அன வரதமாடும் 
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே

(2)
'அவகுண விரகனை' என்று துவங்கும் பின்வரும் மற்றொரு தில்லைத் திருப்பாடலின் இறுதியிலும், 'மலைமகள் உமைதரு வாழ்வே' என்று முதலில் கந்தவேளைப் போற்றிப் பின்னர் 'திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம' என்று தில்லைப் பரம்பொருளையும் கலம்பமாகப் போற்றி மகிழ்கின்றார். 
-
...
மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர ...மன்றுளாடும்
-
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி ஆனாய் நமோநம
          திசையினும் இசையினும் வாழ்வே நமோநம ...செஞ்சொல்சேரும் 
-
திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...தம்பிரானே

(இறுதிக் குறிப்பு: 'சிவபரம்பொருளின் குமார வடிவமே ஆறுமுகக் கடவுள்' எனும் அபேத சத்தியத்தை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரும் தன் கந்தபுராண காவியத்தின் எண்ணிறந்த திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார்).

No comments:

Post a Comment