அருணகிரியார் கிளியுருவம் கொண்ட பின்னர் அருளிச் செய்தது 'கந்தர் அனுபூதி' என்பது வழிவழியாய்க் கூறப் பெற்றுவரும் குறிப்பு, சமயப் பெரியோர்கள் பலரும் இச்செய்தியினை உள்ளவாறே ஏற்று வழிமொழிந்தும் வந்துள்ளனர். எனினும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரியாரின் பாடல் தொகுப்புகள் அனைத்திற்கும் முதன்முதலில் உரை கண்டருளிய சிவத்திரு. தணிகைமணி அவர்கள் இது தொடர்பாக அரியதொரு ஆய்வினை மேற்கொண்டு, வியப்பூட்டும் சில குறிப்புகளைச் சமய உலகிற்குப் பிரகடனப்படுத்தி உள்ளார். அது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.
(1)
'அனுபூதிப் பாடல்கள் அருணகிரியாரால் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மனநிலையில் பாடப் பெற்றுப் பின்னாளில் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும்' என்பது தணிகைமணி அவர்களின் மிகமுக்கியப் பிரகடனம். இப்பெருமகனார் அனுபூதிப் பாடல்களைப் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கின்றார்,
(தவம்கிடந்த நிலையில் பாடியவை: 13 பாடல்கள்): 1, 2, 3, 6, 15, 18, 21, 36, 37, 40, 47, 48, 51
(சாந்தி பெறாது கலக்கமுற்ற நிலையில் பாடியவை: 22 பாடல்கள்): 4, 5, 9, 10, 16, 19, (23 - 27), 29, (31-35), 39, 41, 45, 46, 50
(பேறு பெற்ற ஞான நிலையில் பாடியவை: 13 பாடல்கள்): 8, (11-13), 20, 22, 28, 30, 38, (42-44), 49
(நெஞ்சுக்கும், உலகுக்கும் உபதேசப் பாடல்கள் : 3): 7, 14, 17
மேற்குறித்துள்ள 51 அனுபூதிப் பாடல்களின் பொருளை ஆய்ந்தறிகையில், 'முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலுள்ள அனுபவங்களை, ஒரே சமயத்தில்; அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக நம் குருநாதர் பதிவு செய்திருக்க ஒருசிறிதும் வாய்ப்பில்லை' என்பது தெளிவாக விளங்கும்.
(2)
இனி தணிகைமணி அவர்கள் முன்னிறுத்தும் 2ஆவது கோணத்தினைக் காண்போம்.
அனுபூதிப் பாடல்கள் யாவும் நேரிடையாகப் பாடுமுகமாக ('தம்முடைய குறை கூறுவது, தாம் பெற்ற பேற்றினையெண்ணி மகிழ்வது' என்று 'தன்மை இடத்தனவாய்') அமைந்துள்ளது.
மற்றொருபுறம் வேடிச்சிக் காவலன் வகுப்பில், 'அருணை நகரினொரு பக்தன்இடு.. திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்' என்று தன்னையே சேய்மைப் பதத்தில் 'அருணைநகரின் ஒரு பக்தன்' என்று குறித்துள்ளமையால், 'திருவகுப்பே கிளியுருவில் அருணகிரியார் அருளிச் செய்ததென்பது தணிகைமணி அவர்களின் அற்புதப் பிரகடனம்.
(3)
'தம்முடைய உடற்சிறையை அறுமுகக் கடவுள் விடுவித்தருளியது நியாயமே' என்று அருணகிரியார் 'திருவேளைக்காரன் வகுப்பில்' பதிவு செய்துள்ளது மற்றுமொரு அகச்சான்று - என்கின்றார் தணிகைமணி அவர்கள்,
'ஏழையின் இரட்டை வினையாயதோர் உடற்சிறை
இராமல் விடுவித்தருள் நியாயக்காரன்'
(4)
'திருப்புகழ்; அனுபூதி; அலங்காரம்' எனும் பனுவல்களில் 'பெண்கள் மயக்கினின்றும் என்னை விடுவித்துக் காத்தருள்' எனும் விண்ணப்பம் இருக்கும். 'அப்படியொரு பேச்சே திருவகுப்பில் கிடையாது' என்கின்றார் தணிகைமணி அவர்கள். மேலும் 'யம பயத்தினின்றும் காத்தருள்' எனும் குறிப்பு 'சேவகன் வகுப்பு' ஒன்றினைத் தவிர, திருவகுப்பில் வேறெங்கும் கிடையாது என்பது தணிகைமணி அவர்களின் கூற்று,
(குறிப்பு): திருவகுப்பின் 25 பாடல்களில், முதல் 18 மட்டுமே அருணகிரியார் அருளிச் செய்ததென்பதும், மற்றவை பிற்சேர்க்கை என்பதும் தணிகைமணி அவர்களின் கோட்பாடு).
(5)
மேலும், முதல் 18 திருவகுப்புப் பாடல்களில், (1, 3, 4, 6, 7, 9-12, 14-16) ஆகிய 12 வகுப்புகளில் திருத்தணிகை கூறப்பெற்றுள்ளது. ஆதலின் 'அருணகிரியார் இறுதியாய்த் திருத்தணிகை தலம் சென்று, அங்கு தணிகைவேலவனின் திருக்கரத்தில் கிளியாக நிலைகொண்ட பின்னர் திருவகுப்புப் பனுவல்களை அருளிச் செய்திருக்க வேண்டும்' என்று சிவஞானப் பெருநிலையில் நின்றவாறு பிரகடனம் செய்கின்றார் சிவத்திரு. தணிகைமணி அவர்கள்.
திருத்தணிகை இடம்பெறாத 6 திருவகுப்புகள் முன்னரே ஓரோர் சமயங்களில் பாடியதாக இருக்கலாம் என்பதும் தணிகைமணி அவர்களின் கருத்து.
(6)
'கரிக்குழல் விரித்தும்' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழில், 'உன் தலத்தினில் இருக்கும் ...படி பாராய்' என்று அருணகிரிப் பெருமானார் விண்ணப்பித்திருப்பதால், 'அருணகிரியாரின் முத்தித் தலம் திருத்தணி' என்பதும் தணிகைமணி அவர்களின் மற்றுமொரு பிரகடனம்,
தவக்கடல் குளித்திங்குனக்கடிமை உற்றுன்
தலத்தினில் இருக்கும் ....படிபாராய்
No comments:
Post a Comment