அருணகிரிநாதர் (உயிர் மாய்க்கத் துணிதலும், தடுத்தாட்கொள்ளப் பெற்று ஞானோபதேசம் பெறுதலும்):

(1)
அருணகிரிப் பெருமான் அறுமுகக் கடவுளுக்கு வழிவழி அடிமை பூண்டொழுகும் தகைமையாளர், அளவிடற்கரிய பண்டைய தவச் சிறப்புடைய பெரியர். எனினும் முந்தைய வல்வினையின் சிறு கூறொன்றினை இப்பிறவியில் நுகருமாறு விதிப்பயன் ஏவிய தன்மையினால், இளமைக் காலத்தில்; இன்பத் துறையில் அதீத நாட்டம் கொண்டவராய் விளங்குகின்றார். சிற்றின்பச் சாகரத்தில் ஆழம் காண இயலா அளவு மூழ்கியெழுந்த காரணத்தால், கடும் நோயினால் தாக்குற்று அவதியுறுகின்றார்,  
-
('மலைக் கனத்தென' என்று துவங்கும் திருத்துருத்தி திருப்புகழ்)
...வேசையர் ....மயல்மேலாய்
வெடுக்கெடுத்து மகாபிணி மேலிட
     முடக்கி வெட்கு(ம்) அதாமத வீணனை

(2)
தன்னிலை உணர்ந்து அகமிக வெம்பி நொந்து அண்ணாமலையார் ஆலய கோபுர உச்சியினை அடைந்து, 'கந்தப் பெருமானே, அறியாமையால் செய்யத் தகாதன செய்து அயர்ந்தேன். இனிக் கடையேன் இவ்வுடலைக் கணநேரமும் தரிக்க மாட்டேன்' என்று உச்சிக்கூப்பிய கையினராய்க் கீழே குதிக்கின்றார். சிவகுருநாதனே குருவாய் வரப்பெறும் வரம்பிலா பண்டைத் தவமுடைய தன் வழியடிமைத் தொண்டரை வேலவன் கைவிடுவனோ? சித்தரின் திருவுருவில் அங்கு தோன்றி, இப்புவி வாழ வந்துதித்த அப்பரம குருநாதரை மலர் மாலை போலும் தாங்கிக் காக்கின்றான், 
-
('மனையவள் நகைக்க' என்று துவங்கும் ஞானமலைத் திருப்புகழ்)
அடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போது
     அணுகி முனளித்த பாதம் அருள்வாயே
-
('கோதி முடித்துக் கனத்த கொண்டையர்' என்று துவங்கும் ஊதிமலைத் திருப்புகழ்)
...சடத்தில் நின்றுயிரான துறத்தற்(கு) இரக்கமும் சுப
          சோபனம் உய்க்கக் கருத்தும் வந்தருள் ....புரிவோனே

(3)
சித்தர் உருவிலிருந்த வேலாயுதக் கடவுள் அருணகிரியாரின் உள்ளச் சோர்வும், வேதனையும் நீங்குமாறு இதமான வார்த்தைகளால் ஆறுதல் அளித்து; சித்தம் தெளிவித்து அமைதியுறச் செய்கின்றான். பற்பல ஞானோபதேசங்களைப் புரிகின்றான். முழுவதுமாய் ஆட்கொண்டருள இன்னமும் காலம் இருப்பதால், 'சும்மாஇரு சொல்லற' என்ற அளவில் உபதேசித்து ஆசிகூறி, அவ்விடம் விட்டு அகன்றுப் பின் திருவுருவம் மறைகின்றான்,  
-
('முருகு செறிகுழல் என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழ்')
 அருணை நகர்மிசை கருணையொடருளிய
          மவுன வசனமும் இருபெரு சரணமும் ....மறவேனே
-
(கந்தர் அனுபூதி - திருப்பாடல் 12)
சும்மாஇரு சொல்லற  என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
-
('பக்குவ ஆசார' என்று துவங்கும் திருப்புக்கொளியூர் திருப்புகழ்)
அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
     அப்படையே ஞான ....உபதேசம்
அக்கற வாய்பேசு சற்குருநாதாஉன் 
     அற்புத சீர்பாத(ம்) ....மறவேனே

No comments:

Post a Comment