அருணகிரிநாதர் குருபூஜைத் திருநாள் (பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம்):

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தனிப்பெரும் குருநாதர். திருவண்ணாமலையையே அவதாரத் தலமாகவும்; தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலமாகவும்; முத்தித் தலமாகவும் கொண்டு விளங்கும் தகைமையாளர். கந்தவேளின் திருக்கை வேலால் 'ஓம்' என்று நாவில் பொறிக்கப் பெற்ற, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய அணுக்கத் தொண்டர். சைவப் பெருஞ்சமயத்தின் வழிநின்று முருக வழிபாட்டினை இன்னுயிரெனப் பேணியதோடு, சைவ வைணவ ஒற்றுமைக்கு தனித்துவமான வழியொன்றினை வகுத்தளித்த அருளாளர்.

அருணகிரிப் பெருமான் கந்தக் கடவுளின் திருவடிப் பேற்றினை பெற்றுய்ந்த திருநாள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் அறியப்படாமலே இருந்து வந்தது. அதனை அறுமுகக் கடவுளின் திருவருளால் கண்டறிந்து சமய உலகிற்கு அறிவித்துப் பேருபகாரம் புரிந்தருளியவர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளாவார். 

(தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதிகள்)
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங்காரம் அவற்கே நனிபுனைந்தும்
முந்தாதரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரிநாதா என்னை நீ ஏன்றருளே!!
-
நெடியான் உகந்த மருகன் திருப்புகழ் நித்தமுமே 
படியார் படித்துப் பரகதி பற்றப் பரிந்தளித்த 
அடியான் அருணகிரிநாதன் அம்பொன் அடிமலர்க்கே 
அடியார் எவரோ அவரேஎம் ஆவிக்(கு) அருந்துணையே 

(தாயுமான சுவாமிகள் திருவாக்கில் அருனை மாமுனிவர்)
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல் 
மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்?
-
யான்தான் எனல்அறலே இன்பநிட்டை என்(று)அருணைக் 
கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ?
-
கந்தரநுபூதி பெற்றுக் கந்தர்அனுபூதி சொன்ன 
எந்தையருள் நாடியிருக்கு நாள் எந்நாளோ!

(தணிகைச் சந்நிதிமுறையின் திருவாக்கில் அருணை வள்ளல்)
கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா(து) அனுதினமுன் 
திருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே 

(ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி)
அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்
மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 
பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 
ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!

(திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி):
விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்
பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று
கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்
திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

No comments:

Post a Comment