'அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் மேற்கொண்டிருந்த 12 ஆண்டு கடுந்தவத்தின் முடிவில், ஆறுமுகக் கடவுள் மயில்மீது எழுந்தருளித் தோன்றி, அருணை மாமுனிவரின் நாவில் தன் திருக்கை வேலால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை எழுதி அருள் புரிந்த' நிகழ்வினைக் கேள்வியுற்றிருப்போம்.
அருணகிரியாரின் வரலாற்று நிகழ்வுகளை அவர்தம் திருப்புகழ் திருப்பாடல்களின் வாயிலாகவே நிறுவுவதில், சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்களுக்கு நிகர் அவரொருவரே என்றால் அது மிகையன்று. இனி மேற்குறித்துள்ள நிகழ்விற்குத் தணிகைமணி அவர்கள் முன்னிறுத்தும் இரு திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,
('விந்துப் புளகித' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழின் இறுதி வரிகள்):
அடியென் இடைஞ்சல் பொடிபட முன்புற்(று) அருள்அயில்தொடுத்தும், இளநகை பரப்பி, மயில்மிசை நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய பெருமாளே
(குறிப்பு: அயில் எனும் பதம் வேலினைக் குறிக்க வந்தது. அருணகிரியார் கவித்துவமாய் 'குமாரக் கடவுள் தன் மீது அருளே வடிவான வேலினைத் தொடுத்து அருள் புரிந்தான்' என்று மேற்குறித்துள்ள நிகழ்விற்கான அகச்சான்றினைப் பதிவு செய்து போற்றுகின்றார்)
('முகிலாமெனும்' என்று துவங்கும் சேயூர் திருப்புகழ்):
மதிமாமுகவா அடியேன்இருவினைதூள் படவே அயில்ஏவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன ...பெருமாளே
(குறிப்பு: இத்திருப்பாடலிலும், 'எண்ணில் பல கோடிப் பிறவிகளில் இதுவரையிலும் சேர்த்து வந்துள்ள இருவினைக் குவியல்களும் பொடிப்பொடியாகுமாறு, அடியேனின் மீது கந்தப் பெருமான் தன் திருக்கை வேலை ஏவி அருள் புரிந்தான்' என்று, 'தன் நாவினில் பிரணவம் பொறிக்கப் பெற்ற நிகழ்விற்கு' மற்றொரு அகச் சான்றினைப் பதிவு செய்கின்றார்).
No comments:
Post a Comment