நமக்கின்று கிடைத்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுள், பின்வரும் தில்லைத் திருப்புகழொன்றில் மட்டுமே நம் அருணகிரிப் பெருமானார் அறுமுக தெய்வத்தைத் 'தோழா' என்று உரிமையோடு குறிப்பிட்டுப் போற்றுகின்றார். இனி இப்பதிவில் 'சக மார்க்கம்' எனும் தோழமை நெறி குறித்துச் சிறிது சிந்திப்போம்.
இப்புவியில் தோன்றும் ஒவ்வொரு உயிர்க்கும் தாய்;தந்தையர் உண்டு ஆதலின் இறைவர்; இறைவியை அம்மையப்பராகக் கொண்டு பக்தி புரிந்து வழிபடும் சத்புத்ர மார்க்கத்தினை உள்வாங்கிப் பின்பற்றுதல் எளிது.
தத்துவ நோக்கில் ஆன்மாக்கள் அனைவரும் பரம்பொருளான அம்பிகை பாகனாருக்கு அடிமைத்திறம் பூண்டொழுகுபவை என்றிருப்பினும், உலகியல் வழக்கில் எவரொருவருக்கும் 'நாம் சிவமாகிய பரம்பொருளுக்கு அடிமை' எனும் உணர்வு இயல்பிலேயே சித்தித்து விடுவதில்லை. 'சிவனடியார் அல்லது சிவபக்தர்' எனும் புரிதலையே முதற்கண் எய்தப் பெறுகின்றோம். ஆதலின் இறைவரைத் தலைவராகவும் தன்னை அடிமையாகவும் கொண்டொழுகும் தாச மார்க்கம் என்பது தத்துவப் புரிதலினாலும்; சமயப் பயிற்சியினாலும்; குருவருளாலும் மட்டுமே சித்திக்க வல்லது.
இறுதியாய் இறைவராக அளித்து அருளினாலன்றி 'தோழமை உணர்வு சித்திக்க வாய்ப்பேயில்லை' என்பது கண்கூடு. 63 நாயன்மார்களுள் சுந்தரனாருக்கு மட்டுமே அவ்வரிய பேறு வாய்க்கப் பெறுகின்றது. அதுவும் வன்தொண்டனார் அப்பேற்றினை விண்ணப்பித்துப் பெறவில்லை, திருவாரூர் மேவும் மறைமுதல்வர் தாமாக முன்வந்து 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்' என்று விண்ணொலியாய் அறிவித்து அருள் புரிகின்றார்.
'தோழமை உணர்வையும் அடிமைத் திறத்தினால் மட்டுமே அடைய இயலும்' என்பதொரு அரிய நுட்பம், தோழமை ஒரு கூடுதல் உரிமையே எனினும் அதனைக் கூட்டுவிப்பது 'அதீத அடிமைத்திறம்' எனும் உத்தம நிலையே. முதற் திருப்பதிகத்திலேயே சுந்தரனார் 'அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே' என்று 'தன்னை அடிமை' என்றே பிரகடனப்படுத்திக் கொள்வதால் இதனை உணரப் பெறலாம்.
திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரியாரும் எண்ணிறந்த திருப்பாடல்களில் தன்னை 'அடிமை' என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றார் ('அமிர்தகவித் தொடைப்பாட அடிமை தனக்கருள்வாயே').
ஆதலின் சிதம்பர ஷேத்திரத்தில் சிவகுமரனான நம் கந்தப் பெருமான் அருணகிரியாருக்குத் தம்முடைய நடனக் கோல தரிசனத்தோடு, தோழமை பேற்றினையும் அளித்து அருள் புரிந்துள்ளது தெளிவு. 'தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த தோழா கடப்பமலர் அணிவோனே' என்று பின்வரும் திருப்பாடலில் நெகிழ்ந்து போற்றுகின்றார் திருப்புகழ் வேந்தர்,
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...தனதான
நாடா பிறப்பு முடியாதோ எனக்கருதி
நாயேன் அரற்றுமொழி ...வினையாயின்
நாதா திருச்சபையின் ஏறாது சித்தமென
நாலா வகைக்கும் உனதருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை ...அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரேன் எனக்கெதிர் முன் ...வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தஅரி
தோல்ஆசனத்தி உமை ...அருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
தோழா கடப்பமலர் ...அணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானாதனத்தி மிகு
மேராள் குறத்திதிரு ....மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த் திரளை
ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
No comments:
Post a Comment