அருணகிரிநாதர் (அண்ணாமலை இறைவரும், உண்ணாமுலை அம்மையும் அருள் புரிந்த நிகழ்வுகள்):

அருணகிரியாருக்கு ஆறுமுகக் கடவுள் அருள் புரிந்துள்ள நிகழ்வுகளை மட்டுமே நாம் பொதுவில் கேள்வியுற்று வந்திருப்போம். சிவகுடும்பமே 'நான்நீ' என்று போட்டி போட்டுக் கொண்டு அருணை மாமுனிவருக்குப் பேரருள் புரிந்துள்ள அற்புதக் குறிப்புகளை இனி இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1) ('நாலு சதுரத்த பஞ்சறை' என்று துவங்கும் சிதம்பரத் திருப்புகழ்):

ஆணவ மயக்கமும்கலி காமியம் அகற்றி என்றனை
     ஆள்உமை பரத்தி சுந்தரி ...தந்தசேயே

(குறிப்பு): 
'உண்ணாமுலை அம்மை' தன்னுடைய ஆணவ மாயையை வேரறுத்து, பந்தபாசங்கள் முழுவதையும் அகற்றி, ஆட்கொண்டு அருள் புரிந்த நிகழ்வினை அருணகிரியார் இத்திருப்பாடலில் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டுகின்றார் ('கல்லி' எனும் பதம் சந்த நயத்திற்காக 'கலி' என்று சுருக்கிக் கையாளப் பெற்றுள்ளது). 

ஆதலின் 'திருவண்ணாமலை இறைவி' நேரிலோ அல்லது கனவிலோ தோன்றி திருப்புகழ் வேந்தருக்கு அருள்மழையைப் பொழிந்துள்ளது தெளிவு. 'என்றனைஆள் உமை பரத்தி' என்பது நெகிழ்விக்கும் அற்புதச் சொல்லாடல். 

(2) ('கலகலெனப்பொற் சேந்த நூபுர' என்று துவங்கும் காஞ்சீபுரத் திருப்புகழ்):

திலதமுகப்பொற் காந்தி மாதுமை
     எனைஅருள் வைத்திட்டாண்ட நாயகி
          சிவன்உருவத்தில் சேர்ந்த பார்வதி ...சிவகாமி
-
(குறிப்பு): 
'எனைஅருள் வைத்திட்டாண்ட நாயகி' என்று இத்திருப்பாடலில் போற்றுகின்றார்.

(3) ('ஆசை நாலு சதுர' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழ்):

வாகு பாதிஉறை சத்திகவுரிக் குதலை
     வாயின் மாதுதுகிர் பச்சை வடிவிச் சிவைஎன்
          மாசு சேர்எழுபிறப்பையும் அறுத்தஉமை ...... தந்தவாழ்வே

(குறிப்பு): 
இத்திருப்பாடலிலும் அண்ணாமலைப் பேரரசியின் அருளை நினைவு கூர்ந்து 'என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்தஉமை' என்று நெகிழ்ந்து போற்றுகின்றார்.

(4) ('தமிழோதிய குயிலோ' என்று துவங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழ்):

கமழ்மாஇதழ் சடையார் அடியேன்துயர் தீர்ந்திட வெண்
     தழல்மாபொடி அருள்வோர்அடல் மான்துடி தாங்கியவண்
          கரர்மாடருள் உமையாள்எமை ஈன்றவள் ஈன்றருள் மென் ...குரவோனே 

(குறிப்பு):
'அண்ணாமலைப் பரம்பொருள் தன்னுடைய துயர்கள் யாவும் தீருமாறு நேரில் தோன்றி திருநீறு அளித்தருளி உள்ளார்' என்று இத்திருப்பாடலில் பதிவு செய்கின்றார் அருணகிரியார்.

(5) ('எகினினம் பழி நாடகமாடிகள்' என்று துவங்கும் திருபந்தணை நல்லூர் திருப்புகழ்):

கரிநெடும் புலி தோலுடையார் எனை
     அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
          கடவுள் எந்தையர் பாகம் விடாஉமை ....அருள் பாலா

(குறிப்பு):
' எனைஅடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்' என்று இத்திருப்பாடலில் அண்ணாமலையாரின் பேரருளை நன்றியுடன் நினைவு கூர்கின்றார்.

(6) ('விந்து பேதித்த வடிவங்களாய்' என்று துவங்கும் கந்தனூர் திருப்புகழ்)

எந்தன்ஆவிக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்
     எந்தை பாகத்துறையும் ....அந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
     எந்தை பூசித்து மகிழ் ....தம்பிரானே.

(குறிப்பு):
'எந்தன்ஆவிக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்' என்று இத்திருப்பாடலில் மற்றுமொரு முறை 'அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலைப் பெருங்கடவுள் தனக்கு அருள் புரிந்துள்ள திறத்தினை' வியந்து போற்றுகின்றார். 

(இறுதிக் குறிப்பு):

மேற்குறித்துள்ள அற்புதக் குறிப்புகளைச் சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய திருப்புகழ் உரையில் வெளிப்படுத்திச் சமய உலகிற்குப் பேருபகாரம் புரிந்துள்ளார்கள். இப்பெருமகனாரின் உரைநூல் 'அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்புகளை எவ்விதம் திருப்புகழ் திருப்பாடல்களில் கண்டறிவது?' எனும் நுட்பத்தினை நமக்குப் பயிற்றுவிக்க வல்லது.

No comments:

Post a Comment