அருணகிரிநாதர் (திருத்துருத்தியில் வேல் மயில் முத்திரைகள் பொறிக்கப் பெற்ற அற்புத நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் பெண்ணாகடம் எனும் தலத்திலுள்ள 'திருத்தூங்கானை மாடம்' எனும் சிவாலயத்தில் 'இடப  சூல முத்திரைகளை தன் மேனியில் பொறித்தருளுமாறு' இறைவரிடம் விண்ணப்பித்துப் பாட, 'சிவபரம்பொருளின் திருவருளால் சிவபூத கணமொன்று அங்கு தோன்றி, அப்பர் அடிகளின் திருத்தோள்களில் அவ்விரு முத்திரைகளையும் பொறித்துச் சென்ற' அற்புத நிகழ்வினைப் பெரிய புராணத்தில் நம் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார். 
-
(அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருத்தூங்கானை மாடம்)
பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இரும் கூற்றகல
மின்னார் மூவிலைச் சூலம் என் மேல்பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!!!

அம்முறையிலேயே நம் அருணகிரிப் பெருமானும் 'திருவண்ணாமலை; பொதியமலை; எட்டிக்குடி' ஆகிய மூன்று தலங்களிலும் 'தன் மேனியில் வேல் மயில் சின்னங்களைப் பொறித்தருளுமாறு' ஆறுமுகக் கடவுளிடம் விண்ணப்பித்துப் பாடி வர, திருத்துருத்தியில் வேலாயுத தெய்வம் அவ்வேண்டுதலை முற்றுவித்துப் பேரருள் புரிகின்றான். இனி இதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளை உணர்நது மகிழ்வோம்,

(1) 'சிவ மாதுடனே' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழ்,

இறையோனிடமாய் விளையாடுகவே
     இயல் வேலுடன் மா அருள்வாயே

(2) 'வெடித்த வார்குழல்' என்று துவங்கும் பொதியமலைத் திருப்புகழ்,

குறித்து நீஅருகழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமும் ஒருத்தனாமென ....சிந்தைகூராய்

(3) 'மை குழலொத்தவை' என்று துவங்கும் எட்டிக்குடித் திருப்புகழ்,

தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமையத்த கலா வேனாதா
          தத்து மயிற்பரி மீதே நீதான் ...வருவாயே

இறுதியாய்த் திருத்துருத்தித் தலத்தில் அருணகிரியாரின் கனவில் தோன்றும் அறுமுகக் கடவுள், 'அன்பனே, உன்னை நம் அடைக்கலப் பொருளாகக் கொண்டோம். இதோ வேல்; மயில் முத்திரைகளை இட்டு உன் விருப்பத்தினையும் முற்றுவித்தோம். முத்தி தரவல்ல அனுபூதியையும்; அருள் மயமான நம் திருப்புகழையும் ஓதுவதையே பணியெனக் கொள்வாய்' என்று பேரருள் புரிந்து மறைகின்றான், 
-

(4) ('மலைக் கனத்தென' என்று துவங்கும் திருத்துருத்தித் திருப்புகழ்)

அடைக்கலப் பொருளாமென நாயெனை
     அழைத்து முத்தியதாம் அநுபூதியென்  
          அருள் திருப்புகழ் ஓதுக வேல்மயில் ...அருள்வோனே

மேற்குறித்துள்ள அரிதினும் அரிதான திருப்புகழ் குறிப்பினை (திருப்புகழ் திருப்பாடல்களுக்கு முதன்முதலில் உரை கண்டருளிய) சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், தம்முடைய நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்தறிந்து வெளியிட்டுள்ளார்கள்.  

'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரும், திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களும் தன்னுடைய நூல் மற்றும் திருப்புகழ் விரிவுரைகளில் இவ்வரிய குறிப்பினை விவரித்துப் போற்றி வருவார்.

No comments:

Post a Comment