அருணகிரிநாதர் (வயோதிக வடிவில் தோன்றி உபதேசித்த அருணாச்சலேஸ்வரர்)

(1)
அருணகிரிப் பெருமானார், அறுமுகக் கடவுளின் திருவருளைப் பரிபூரணமாய் அடைவிக்கும் அரியதொரு தவமுயற்சியினை முந்தைய பிறவிகளில் மேற்கொண்டிருப்பினும், அந்நல்வினைப் பயன் எய்துமுன்னர், பண்டைய வல்வினைத் தொகுப்பின் சிறு விளைவொன்றினை இப்பிறவியில் நுகர வேண்டியிருந்த காரணத்தால், இளமைப் பருவத்தில் இன்பத்துறையில் அதீத நாட்டம் கொண்டு, ஆழம் காண இயலாதவராய் அதனுள் அமிழ்ந்து எளியராகின்றார். 

(2)
இந்நிலையில் ஒரு சமயம் உண்ணாமுலை அம்மையின் காதலரான அருணாச்சலப் பரம்பொருள் வயோதிக வேடத்தில் அருணகிரியாரின் பால் எழுந்தருளி வந்து, 'அன்பனே, நீ தற்பொழுது கொண்டுள்ள இன்ப நாட்டத்தை விடுத்து, அறுமுகக் கடவுளை நினைந்து தவநிலையினை மேற்கொள்வாய்' என்று அறவுரை பகர்கின்றார். எனினும் அருணகிரியார் அதனைச் சிந்தையிற் கொள்ளாதவராய்த் தன் முந்தைய இயல்பிலேயே நிலை கொள்ள, சிறிது காலம் வீணே கழிகின்றது. 

'இத்தகு சிறப்புடைய தவப்பெரியர் உபதேச மொழி கூறியும் இவர் திருந்தினார் இல்லையே' என்று ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றார். பின்னாளில் 'கமல குமிளித முலைமிசை துகிலிடு' எனும் பொதுத் திருப்புகழில் இந்நிகழ்வுகள் யாவையும் நினைவு கூர்ந்து, 'சிவநெறி பேணாது காலத்தை அவமே போக்கினேனே' என்று உளம் வெதும்பிப் பாடுகின்றார்,

அமுத மொழிகொடு தவநிலை அருளிய
     பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை
          அடைவு நடைபடி பயிலவு(ம்) முயலவும் ...... அறியாத

அசடன் அறிவிலி இழிகுலன் இவனென
     இனமு(ம்) மனிதருள் அனைவரும் உரைசெய
          அடியன் இதுபட அரிதினி ஒருபொருள் ...... அருள்வாயே

(3)
'பெரிய குணதரர்' என்பது அருணாச்சல இறைவரை எவ்வாறு குறிக்கும்? எனும் கேள்வியும் உடன் எழலாம். 'அருணகிரியார் சிவமாம் பரம்பொருளைப் பெரியர் என்றே பல திருப்பாடல்களில் குறித்து வந்துள்ளார்' என்று சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தெளிவுறுத்துகின்றார். பின்வரும் திருப்பாடலையும் அகச் சான்றாக முன்வைக்கின்றார், 

('பொருள்கவர் சிந்தை' என்று துவங்கும் திருச்சிராப்பள்ளி திருப்புகழ்)
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு
     திரிசிர குன்றில் ...... முதனாளில்

தெரிய இருந்த பெரியவர் தந்த
     சிறியவ அண்டர் ...... பெருமாளே.

(4)
பின்னாளில் அண்ணாமலையாரின் குருநாதனான அறுமுகப் பெருங்கடவுளே குருவாக எழுந்தருள இருக்கும் காரணத்தால், அருணாச்சல இறைவரின் உபதேச மொழிகள் அச்சமயத்தில் அருணகிரியாரின் உள்ளத்தினில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை போலும்.

'அணி செவ்வியார்' என்று துவங்கும் வடதிருமுல்லைவாயில் திருப்புகழில் 'அருணாச்சல குரு' என்று அருணகிரியார் கந்தக் கடவுளைப் போற்றி மகிழ்ந்துள்ளது இவ்விடத்தே எண்ணி இன்புறத் தக்கதொரு குறிப்பாகும், 
-
குண வில்லதா மக மேரினை
     அணிசெல்வியாய் அருணாசல
          குரு; வல்ல மாதவமே பெறு ....குணசாத

அருணகிரிநாதர் (உயிர் மாய்க்கத் துணிதலும், தடுத்தாட்கொள்ளப் பெற்று ஞானோபதேசம் பெறுதலும்):

(1)
அருணகிரிப் பெருமான் அறுமுகக் கடவுளுக்கு வழிவழி அடிமை பூண்டொழுகும் தகைமையாளர், அளவிடற்கரிய பண்டைய தவச் சிறப்புடைய பெரியர். எனினும் முந்தைய வல்வினையின் சிறு கூறொன்றினை இப்பிறவியில் நுகருமாறு விதிப்பயன் ஏவிய தன்மையினால், இளமைக் காலத்தில்; இன்பத் துறையில் அதீத நாட்டம் கொண்டவராய் விளங்குகின்றார். சிற்றின்பச் சாகரத்தில் ஆழம் காண இயலா அளவு மூழ்கியெழுந்த காரணத்தால், கடும் நோயினால் தாக்குற்று அவதியுறுகின்றார்,  
-
('மலைக் கனத்தென' என்று துவங்கும் திருத்துருத்தி திருப்புகழ்)
...வேசையர் ....மயல்மேலாய்
வெடுக்கெடுத்து மகாபிணி மேலிட
     முடக்கி வெட்கு(ம்) அதாமத வீணனை

(2)
தன்னிலை உணர்ந்து அகமிக வெம்பி நொந்து அண்ணாமலையார் ஆலய கோபுர உச்சியினை அடைந்து, 'கந்தப் பெருமானே, அறியாமையால் செய்யத் தகாதன செய்து அயர்ந்தேன். இனிக் கடையேன் இவ்வுடலைக் கணநேரமும் தரிக்க மாட்டேன்' என்று உச்சிக்கூப்பிய கையினராய்க் கீழே குதிக்கின்றார். சிவகுருநாதனே குருவாய் வரப்பெறும் வரம்பிலா பண்டைத் தவமுடைய தன் வழியடிமைத் தொண்டரை வேலவன் கைவிடுவனோ? சித்தரின் திருவுருவில் அங்கு தோன்றி, இப்புவி வாழ வந்துதித்த அப்பரம குருநாதரை மலர் மாலை போலும் தாங்கிக் காக்கின்றான், 
-
('மனையவள் நகைக்க' என்று துவங்கும் ஞானமலைத் திருப்புகழ்)
அடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போது
     அணுகி முனளித்த பாதம் அருள்வாயே
-
('கோதி முடித்துக் கனத்த கொண்டையர்' என்று துவங்கும் ஊதிமலைத் திருப்புகழ்)
...சடத்தில் நின்றுயிரான துறத்தற்(கு) இரக்கமும் சுப
          சோபனம் உய்க்கக் கருத்தும் வந்தருள் ....புரிவோனே

(3)
சித்தர் உருவிலிருந்த வேலாயுதக் கடவுள் அருணகிரியாரின் உள்ளச் சோர்வும், வேதனையும் நீங்குமாறு இதமான வார்த்தைகளால் ஆறுதல் அளித்து; சித்தம் தெளிவித்து அமைதியுறச் செய்கின்றான். பற்பல ஞானோபதேசங்களைப் புரிகின்றான். முழுவதுமாய் ஆட்கொண்டருள இன்னமும் காலம் இருப்பதால், 'சும்மாஇரு சொல்லற' என்ற அளவில் உபதேசித்து ஆசிகூறி, அவ்விடம் விட்டு அகன்றுப் பின் திருவுருவம் மறைகின்றான்,  
-
('முருகு செறிகுழல் என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழ்')
 அருணை நகர்மிசை கருணையொடருளிய
          மவுன வசனமும் இருபெரு சரணமும் ....மறவேனே
-
(கந்தர் அனுபூதி - திருப்பாடல் 12)
சும்மாஇரு சொல்லற  என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
-
('பக்குவ ஆசார' என்று துவங்கும் திருப்புக்கொளியூர் திருப்புகழ்)
அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
     அப்படையே ஞான ....உபதேசம்
அக்கற வாய்பேசு சற்குருநாதாஉன் 
     அற்புத சீர்பாத(ம்) ....மறவேனே

அருணகிரிநாதர் (திருவண்ணாமலையில் பெற்ற நயன தீட்சை):

அருணகிரியார், திருவண்ணாமலையில் மேற்கொண்டிருந்த பன்னெடுங்கால சிவயோகப் பயிற்சியின் முடிவில்; கந்தப் பெருமான் வெளிப்பட்டுத் தன் திருக்கண் நோக்கினால் நயன தீட்சை அளித்து அருள் புரிந்த நிகழ்வினைப் பின்னாளில் 'சீர்காழி; திருவேட்களத் திருப்பாடல்கள் மற்றும் திருவேளைக்காரன் வகுப்பு' ஆகியவற்றில் நன்றியோடு நினைவு கூர்ந்து போற்றுகின்றார். இனி அப்பனுவல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

1. (கொங்குலாவிய குழலினு(ம்) நிழலினு(ம்) என்று துவங்கும் சீர்காழித் திருப்புகழ்):

இத்திருப்பாடலில் 'விழியருள் தந்த பேரருள் மறவேனே' என்று நெகிழ்வுடன் போற்றுகின்றார்,

தண்டை நூபுரம் அணுகிய இருகழல்
     கண்டு நாளவ மிகையற விழியருள்
          தந்த பேரருள் கனவிலு(ம்) நனவிலு(ம்) ...மறவேனே

2. ('சதுரத்தரை நோக்கிய பூவொடு' என்று துவங்கும் திருவேட்களத் திருப்புகழ்)

இத்திருப்பாடலில் தான் பெற்ற முருக தரிசனக் காட்சியை முதற்கண் விவரித்துப் பின்னர் 'பரகதி பெற்றிட நோக்கிய பார்வையை மறவேனே' என்று உளமுருகப் போற்றுகின்றார்,

சரணக்கழல் காட்டிஎன்ஆணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குல மீட்டிய தோளொடு ....முகம்ஆறும் 

கதிர்சுற்றுக நோக்கிய பாதமு(ம்)
     மயிலின்புற நோக்கியனாம்என
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ....அடியேனைக்

கனகத்தினு(ம்) நோக்கினிதாய்!அடி
     யவர் முத்தமிழால் புகவே பர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையு(ம்) ....மறவேனே

3. (திருவேளைக்காரன் வகுப்பு)

ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி!அநு
    பூதி அடைவித்ததொரு பார்வைக்காரனும்

அருணகிரிநாதர் (திருக்கை வேலால் நாவில் பிரணவ மந்திரம் எழுதப் பெற்ற நிகழ்வு):

'அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் மேற்கொண்டிருந்த 12 ஆண்டு கடுந்தவத்தின் முடிவில், ஆறுமுகக் கடவுள் மயில்மீது எழுந்தருளித் தோன்றி, அருணை மாமுனிவரின் நாவில் தன் திருக்கை வேலால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை எழுதி அருள் புரிந்த' நிகழ்வினைக் கேள்வியுற்றிருப்போம். 

அருணகிரியாரின் வரலாற்று நிகழ்வுகளை அவர்தம் திருப்புகழ் திருப்பாடல்களின் வாயிலாகவே நிறுவுவதில்,  சிவத்திரு. தணிகைமணி  செங்கல்வராயப் பிள்ளை அவர்களுக்கு நிகர் அவரொருவரே என்றால் அது மிகையன்று. இனி மேற்குறித்துள்ள நிகழ்விற்குத் தணிகைமணி அவர்கள் முன்னிறுத்தும் இரு திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 


('விந்துப் புளகித' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழின் இறுதி வரிகள்): 

அடியென் இடைஞ்சல் பொடிபட முன்புற்(று) அருள்அயில்
தொடுத்தும், இளநகை பரப்பி, மயில்மிசை நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய பெருமாளே

(குறிப்பு: அயில் எனும் பதம் வேலினைக் குறிக்க வந்தது. அருணகிரியார் கவித்துவமாய் 'குமாரக் கடவுள் தன் மீது அருளே வடிவான வேலினைத் தொடுத்து அருள் புரிந்தான்' என்று மேற்குறித்துள்ள நிகழ்விற்கான அகச்சான்றினைப் பதிவு செய்து போற்றுகின்றார்) 

('முகிலாமெனும்' என்று துவங்கும் சேயூர் திருப்புகழ்):

மதிமாமுகவா அடியேன்இரு
     வினைதூள் படவே அயில்ஏவிய
          வளவாபுரி வாழ்மயில் வாகன ...பெருமாளே

(குறிப்பு: இத்திருப்பாடலிலும், 'எண்ணில் பல கோடிப் பிறவிகளில் இதுவரையிலும் சேர்த்து வந்துள்ள இருவினைக் குவியல்களும் பொடிப்பொடியாகுமாறு, அடியேனின் மீது கந்தப் பெருமான் தன் திருக்கை வேலை ஏவி அருள் புரிந்தான்' என்று,  'தன் நாவினில் பிரணவம் பொறிக்கப் பெற்ற நிகழ்விற்கு' மற்றொரு அகச் சான்றினைப் பதிவு செய்கின்றார்).

அருணகிரிநாதர் (அண்ணாமலை இறைவரிடமிருந்து திருநீறு பெற்ற நிகழ்வு):

அடிமுடி அறியவொண்ணா அருணாச்சலேஸ்வரப் பரம்பொருள் தனக்கு திருநீறு அளித்தருளிய அற்புத நிகழ்வினை 'தமிழோதிய குயிலோ' என்று துவங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழில் நம் அருணகிரிப் பெருமானார் பதிவு செய்து போற்றுகின்றார், 

 கமழ்மாஇதழ் சடையார்அடி|யேன்துயர் தீர்ந்திட வெண்
     தழல்மாபொடி அருள்வோர்அடல் மான்துடி தாங்கியவண்
          கரர்மாடருள் உமையாள்எமை ஈன்றவள் ஈன்றருள் மென் ...குரவோனே 
-
(பொருள்):
'அண்ணாமலையில் எழுந்தருளியுள்ள ஆதிமூர்த்தி மணம் கமழும் கொன்றையைத் திருமுடியில் சூடியருள்பவர், அடியவனின் துயர்கள் நீங்குமாறு (வெண்தழல் மாபொடியாகிய) திருநீற்றினை அளித்தருளியவர், மான்; உடுக்கை முதலியவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியருள்பவர். இத்தன்மையரான அண்ணாமலையாருக்கு அருகில் எழுந்தருளியுள்ள, அடியவனை ஈன்ற உண்ணாமுலையம்மை ஈன்றருளிய குருநாதா' என்று வேலாயுதக் கடவுளைப் போற்றிப் பணிகின்றார் திருப்புகழ் மாமுனிவர். 

(குறிப்பு):
'அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்' நூலாசிரியரும், திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் மேற்குறித்துள்ள நிகழ்வினைத் தம்முடைய திருப்புகழ் விரிவுரைகளில் சிலாகித்துக் கூறுவார். குறிப்பாக முதலில் அருணகிரியார் உண்ணாமுலை அம்மையை 'எமை ஈன்றவள்' என்று உரிமையோடு குறிப்பிட்டு அதன் பின்னர் 'எமை ஈன்றவள் ஈன்றருளிய மென் குரவொனே' என்று கந்தக் கடவுளைப் போற்றும் சொல்லாடல் நயத்தை நெகிழ்வுடன் விவரித்துப் போற்றுவார்.

அருணகிரிநாதர் (அண்ணாமலை இறைவரும், உண்ணாமுலை அம்மையும் அருள் புரிந்த நிகழ்வுகள்):

அருணகிரியாருக்கு ஆறுமுகக் கடவுள் அருள் புரிந்துள்ள நிகழ்வுகளை மட்டுமே நாம் பொதுவில் கேள்வியுற்று வந்திருப்போம். சிவகுடும்பமே 'நான்நீ' என்று போட்டி போட்டுக் கொண்டு அருணை மாமுனிவருக்குப் பேரருள் புரிந்துள்ள அற்புதக் குறிப்புகளை இனி இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1) ('நாலு சதுரத்த பஞ்சறை' என்று துவங்கும் சிதம்பரத் திருப்புகழ்):

ஆணவ மயக்கமும்கலி காமியம் அகற்றி என்றனை
     ஆள்உமை பரத்தி சுந்தரி ...தந்தசேயே

(குறிப்பு): 
'உண்ணாமுலை அம்மை' தன்னுடைய ஆணவ மாயையை வேரறுத்து, பந்தபாசங்கள் முழுவதையும் அகற்றி, ஆட்கொண்டு அருள் புரிந்த நிகழ்வினை அருணகிரியார் இத்திருப்பாடலில் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டுகின்றார் ('கல்லி' எனும் பதம் சந்த நயத்திற்காக 'கலி' என்று சுருக்கிக் கையாளப் பெற்றுள்ளது). 

ஆதலின் 'திருவண்ணாமலை இறைவி' நேரிலோ அல்லது கனவிலோ தோன்றி திருப்புகழ் வேந்தருக்கு அருள்மழையைப் பொழிந்துள்ளது தெளிவு. 'என்றனைஆள் உமை பரத்தி' என்பது நெகிழ்விக்கும் அற்புதச் சொல்லாடல். 

(2) ('கலகலெனப்பொற் சேந்த நூபுர' என்று துவங்கும் காஞ்சீபுரத் திருப்புகழ்):

திலதமுகப்பொற் காந்தி மாதுமை
     எனைஅருள் வைத்திட்டாண்ட நாயகி
          சிவன்உருவத்தில் சேர்ந்த பார்வதி ...சிவகாமி
-
(குறிப்பு): 
'எனைஅருள் வைத்திட்டாண்ட நாயகி' என்று இத்திருப்பாடலில் போற்றுகின்றார்.

(3) ('ஆசை நாலு சதுர' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழ்):

வாகு பாதிஉறை சத்திகவுரிக் குதலை
     வாயின் மாதுதுகிர் பச்சை வடிவிச் சிவைஎன்
          மாசு சேர்எழுபிறப்பையும் அறுத்தஉமை ...... தந்தவாழ்வே

(குறிப்பு): 
இத்திருப்பாடலிலும் அண்ணாமலைப் பேரரசியின் அருளை நினைவு கூர்ந்து 'என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்தஉமை' என்று நெகிழ்ந்து போற்றுகின்றார்.

(4) ('தமிழோதிய குயிலோ' என்று துவங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழ்):

கமழ்மாஇதழ் சடையார் அடியேன்துயர் தீர்ந்திட வெண்
     தழல்மாபொடி அருள்வோர்அடல் மான்துடி தாங்கியவண்
          கரர்மாடருள் உமையாள்எமை ஈன்றவள் ஈன்றருள் மென் ...குரவோனே 

(குறிப்பு):
'அண்ணாமலைப் பரம்பொருள் தன்னுடைய துயர்கள் யாவும் தீருமாறு நேரில் தோன்றி திருநீறு அளித்தருளி உள்ளார்' என்று இத்திருப்பாடலில் பதிவு செய்கின்றார் அருணகிரியார்.

(5) ('எகினினம் பழி நாடகமாடிகள்' என்று துவங்கும் திருபந்தணை நல்லூர் திருப்புகழ்):

கரிநெடும் புலி தோலுடையார் எனை
     அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
          கடவுள் எந்தையர் பாகம் விடாஉமை ....அருள் பாலா

(குறிப்பு):
' எனைஅடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்' என்று இத்திருப்பாடலில் அண்ணாமலையாரின் பேரருளை நன்றியுடன் நினைவு கூர்கின்றார்.

(6) ('விந்து பேதித்த வடிவங்களாய்' என்று துவங்கும் கந்தனூர் திருப்புகழ்)

எந்தன்ஆவிக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்
     எந்தை பாகத்துறையும் ....அந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
     எந்தை பூசித்து மகிழ் ....தம்பிரானே.

(குறிப்பு):
'எந்தன்ஆவிக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்' என்று இத்திருப்பாடலில் மற்றுமொரு முறை 'அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலைப் பெருங்கடவுள் தனக்கு அருள் புரிந்துள்ள திறத்தினை' வியந்து போற்றுகின்றார். 

(இறுதிக் குறிப்பு):

மேற்குறித்துள்ள அற்புதக் குறிப்புகளைச் சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய திருப்புகழ் உரையில் வெளிப்படுத்திச் சமய உலகிற்குப் பேருபகாரம் புரிந்துள்ளார்கள். இப்பெருமகனாரின் உரைநூல் 'அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்புகளை எவ்விதம் திருப்புகழ் திருப்பாடல்களில் கண்டறிவது?' எனும் நுட்பத்தினை நமக்குப் பயிற்றுவிக்க வல்லது.

அருணகிரிநாதர் (திருவண்ணாமலையில் வள்ளியம்மை ஸ்பரிச தீட்சை அளித்தருளிய நிகழ்வு):

அருணாச்சல ஷேத்திரத்தில் வள்ளியம்மை தனக்கு ஸ்பரிச தீட்சை அளித்தருளிய அற்புத நிகழ்வினை 'தமிழோதிய குயிலோ' என்று துவங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழின் இறுதி மூன்று வரிகளில் பதிவு செய்து போற்றுகின்றார் நம் அருணகிரிப் பெருமான், 
-
கடையேன்இரு வினைநோய்மல மாண்டிட தீண்டியஒண்
     சுகமோகினி வளிநாயகி பாங்கன் எனாம் பகர்மின்
          கலைநூலுடை முருகா அழலோங்கிய ஓங்கலின்வண் ...... பெருமாளே.

(பொருள்):
'கடையவனின் இருவினைகளும்; மும்மலங்களும் முற்றிலுமாய் அழிந்துபடுமாறு ஸ்பரிச தீட்சை அளித்தருளிய வள்ளியம்மையை நாயகியாக உடைய இறைவனே, கலைநூல்கள் யாவையும் அருளிய தெய்வமே, நெருப்பு மலையாகிய அண்ணாமலையில் விளக்கமாய் எழுந்தருளியுள்ள வேலாயுதப் பெருமாளே' என்று அருணகிரியார் போற்றிப் பரவுகின்றார் ('திருவடிகளில் வீழ்ந்தெழுந்த அருணகிரியாரின் சிரசில் நம் வள்ளியம்மை தன் திருக்கரத்தினை வைத்து ஆசி கூறி அருளியுள்ளார்' என்ற அளவில் இந்நிகழ்வினை உணர்ந்து போற்றுதல் ஏற்புடையது) 

(குறிப்பு)
அரிதினும் அரிதான இக்குறிப்பினை, திருப்புகழ் திருப்பாடல்களுக்கு முதன்முதலில் உரை கண்டருளிய சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்களின் நூலில் கண்டு மகிழலாம். மேலும் 'அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்' நூலாசிரியரும் திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய திருப்புகழ் விரிவுரைகளில் இந்நிகழ்வினை நெகிழ்வுடன் விவரித்துப் போற்றுவார்.

அருணகிரிநாதர் ('பொய்யா கணபதி' அருளிய திருப்புகழ் பாடல் வடிவமைப்பு முறை):

அருணகிரிப் பெருமானார் வயலூர் திருத்தலத்தினை வந்தடைகின்றார். அங்கு எழுந்தருளியுள்ள 'பொய்யா கணபதியை' தரிசித்துப் பணிகின்றார். 'நமையடிமை கொண்ட கந்தவேள் இம்மூர்த்தியின் அருளைப் பெற்றன்றோ வள்ளியம்மையின் பால் கொண்டிருந்த தன் காதலை முற்றுவித்துக் கொண்டார். 'ஆதலின் அடியேனும் இப்பெருமானின் அருளைப் பெற்று, தடையற்ற செம்மைச் சொற்களால் வேலவனைப் பணிந்தேத்துவேன்' என்றெண்ணுகின்றார். 

யாதொன்றை வேண்டுவதாகிலும் அறுமுகக் கடவுளிடம் மட்டுமே வேண்டிப் பெறும் கொள்கையுடையவர் அருணகிரியார். ஆதலின் யானை முக தெய்வத்தைப் போற்றி அவருடைய திருவருளைப் பெறுதற்கு முதற்கண் வயலூர் வேலவனிடம் அனுமதி வேண்டிப் பாடுகின்றார் ('பத்தினிப் பெண்போல' என்றிதனைத் தனது ஆய்வுரையில் சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அற்புதமாய்க் குறிக்கின்றார்).

வயலூர் அண்ணலே, 'உனது திருவடிகள்; வேல்; மயில்; சேவற்கொடி இவைகளை உள்ளத்தில் இருத்திப் பாடும் மெய்யுணர்வினைப் பெறுதற்கு, உனது தமையனாரான விக்னேஸ்வரரை முறையாய்த் தொழுது அவருடைய அருளைப் பெற்று வர விழைகின்றேன். அதற்கு நீ ஆசி கூறி அருள் புரிவாய் ஐயனே' என்று வேண்டி அனுமதி பெறுகின்றார்',

(வயலூர் திருப்புகழ் - துவக்க வரிகள்)
நினது திருவடி சத்தி மயிற்கொடி
     நினைவு கருதிடு புத்திகொடுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழம் அப்பமும் ...நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசி பருப்பவல் எள்பொரி
          நிகரில் இனி கதலிக்கனி வர்க்கமும் ....இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்ட கரத்தொரு
     மகர சலநிதி வைத்த துதிக்கர
          வளரு கரிமுக ஒற்றை மருப்பனை ....வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...மறவேனே

பின்னர் 'கைத்தல நிறைகனி; உம்பர் தரு' எனும் திருப்பாடல்களால் 'பொய்யா கணபதியை' உளமுருகிப் பணிந்தேத்துகின்றார். பிரணவ முகத்துப் பெருங்கடவுளும் திருவுளம் மிக மகிழ்ந்து, அருணகிரியாரின் கனவில் எழுந்தருளிச் சென்று 'அன்பனே, உன் திருப்புகழ் பாக்களில் மயில்; கடப்ப மலர் மாலை; வேல்; சேவற்கொடி; திருவடிகள்; பன்னிருதோள்கள் மற்றும் இவ்வயலூர் தலம் இவைகளை அமைத்து நம் இளவலான பன்னிரு கைப் பரமனைப் பாடுவாயாக' என்றருளி மறைகின்றார்.

உடன் கண்விழிக்கும் திருப்புகழ் மாமுனிவர் பொய்யா கணபதியின் பேரருளை எண்ணி எண்ணி விம்மிதமுறுகின்றார். கண்ணீர் பெருக்கிப் 'பக்கரை விசித்ரமணி' என்று துவங்கும் பின்வரும் விநாயகர் திருப்புகழில், 'செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே' என்று நன்றி பாராட்டிப் பணிகின்றார்,

(வயலூர் விநாயகர் திருப்புகழின் துவக்க வரிகள்)
பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்டநடை
     பட்சியெனும் உக்ர துரகமு(ம்) நீபப்

பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ....வடிவேலும்

திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு(ம்) முற்றிய ....பனிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பென எனக்கருள்கை ....மறவேனே

அருணகிரிநாதர் (வயலூரிலிருந்து விராலி மலைக்கு அழைத்த வேலவன்):

அருணகிரியார் வயலூர் தலத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அங்கு எழுந்தருளியுள்ள வேலாயுத தெய்வத்தை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார் (இங்குறையும் பொய்யா கணபதிக்கு 3 திருப்பாடல்களையும், குமரப் பெருமானுக்கு 19 திருப்பாடல்களையும் அருளிச் செய்துள்ளார் நம் அருணை மாமுனிவர்). 

(1)
இந்நிலையில் ஒரு சமயம் கந்தவேளின் திருமுன்பு நின்று, அகம் குழைந்து என்புருக 'விகட பரிமள' எனும் அற்புதத் திருப்புகழ் ஒன்றினால் போற்றித் துதிக்கின்றார் (ஒன்பது ஒன்பது அடிகளாக அமைக்கப் பெற்று மொத்தம் 72 அடிகளைக் கொண்டு விளங்குவது இத்திருப்பாடல்). 

விளக்கவொண்ணா அருமைத் தன்மை பொருந்திய இத்திருப்பாடலால் வயலூருறை வேலவன் திருவுள்ளம் மிகவும் உகக்கின்றான். அன்றிரவே திருப்புகழ் வேந்தரின் கனவில் மயில்மிசை எழுந்தருளித் தோன்றி, 'அன்பனே, நாம் உறைவது விராலிமலையில், அங்கு நீ வருக' என்றருளிச் செய்து, அருணகிரியாரை இவ்வுலகப் பற்றுகளினின்றும் முழுவதுமாய் விடுவித்துச் சிவஞான அமுதளித்துப் பேரருள் புரிந்து பின்னர் மறைகின்றான்,  

('தாமரையின் மட்டு' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
விராலி மாமலையில் நிற்ப நீகருதி உற்று
     வாவென அழைத்தென் ....மனதாசை
-
மாசினை அறுத்து ஞானமுதளித்த
     வாரம்இனி நித்த ....மறவேனே

(2)
உடன் கண் விழிக்கும் திருப்புகழ்ச் செல்வர் 'ஐயனே, எளியேனுக்குப் பேரருள் புரிந்தனையே, உன் ஆணைப்படியே விராலிமலைக்கு வருகின்றேன்' என்று நெகிழ்கின்றார்.

விராலி மலையினைச் சென்றடைந்து அங்குறையும் அறுமுக வள்ளலைத் தொழுது, 'எனை ஆளுடைய ஐயனே, வயிலி நகரில் அடியவன் (உன் திருவருளால்) புனைந்தேத்திய அரிய பெரிய திருப்புகழினைத் திருச்செவி மடுத்து, மயிலின் மீது எழுந்தருளி வந்து; அடியேனின் பிறவித் துயர் பற்றறுமாறு செய்தனையே' என்று நன்றி பாராட்டி, 'இதமுறு விரைபுனல்' எனும் திருப்புகழால் விராலி மலை ஆண்டவனை வாழ்த்தி வணங்குகின்றார், 

('இதமுறு விரைபுனல்' என்று துவங்கும் விராலிமலைத் திருப்புகழ்)
வயலியில் அடிமைய குடிமை இ(ன்)னலற
     மயலொடு மலமற அரிய பெரிய 
          திருப்புகழ் விளம்பு(ம்) என்முன் அற்புதம் எழுந்தருள் குக 
               விராலி மலையுறை குரவ

அருணகிரிநாதர் (சிற்றம்பலக் கருவறையில் கிடைத்த முருக தரிசனம்):

தல யாத்திரையாகச் செல்லும் வழியில் அருணகிரியார் தில்லைத் திருக்கோயிலை அடைகின்றார். 'ஆனந்தத் திருக்கூத்தியற்றும் நடராஜப் பரம்பொருளை முதற்கண் தொழுதுப் பின்னர் சிவகுமரனைத் தரிசிக்கலாம்' என்றெண்ணியவாறே, பெரும் ஆர்வத்துடன் சிற்றம்பலச் சன்னிதிக்குச் செல்கின்றார்.  

ஆடல்வல்லானின் தரிசனத்தை எதிர்நோக்கியிருந்த திருப்புகழ் வேந்தருக்கோ பெருவியப்பு, சிற்றம்பலக் கருவறையில் அம்பலவாணர் அறுமுகக் கடவுளாகத் திருக்காட்சி தருகின்றார். அருணை மாமுனிவருக்குத் தன் கண்களையே நம்ப இயலவில்லை. மீண்டுமொரு முறை உற்று நோக்க, இப்பொழுது கந்தப் பெருமான் சிற்சபேச மூர்த்தியாகத் தோன்றக் காண்கின்றார். இது வரையிலும் மெய்யுணர்வில் மட்டுமே உணர்ந்திருந்த, 'சிவபரம்பொருளுக்கும், சுப்ரமண்ய தெய்வத்துக்குமான பேதமற்ற தன்மையினை' இத்தருணத்தில் நேரிலேயே தரிசிக்கப் பெறுகின்றார். 

(1)
கண்ணருவி ஆறாய்ப் பெருகி வர, உளமெலாம் உருகி, உச்சி கூப்பிய கையினராய்த் தான் தரிசித்த அந்த அபேத தரிசனக் காட்சியைப் பின்வரும் திருப்பாடலால் நமக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றார். 
-
முதல் இரு வரிகளில் 'சிவகுருநாதனான நம் கந்தப் பெருமானைப் பாருங்கள்' என்று துவங்கிப் பாடிக்கொண்டே வருகையில், 9-10 வரிகளில் 'விடையேறி வரும் அம்பிகை மணாளராகிய நம் சிவமூர்த்தியைப் பாருங்கள்' என்று முதற்பொருளான ஒரே மூர்த்தியின் இருவேறு வடிவங்களைக் கலம்பமாகப் போற்றிப் பாடுகின்றார். 

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

பரமகுருநாத கருணைஉபதேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்

பகல்இரவிலாத ஒளிவெளியில் மேன்மை
     பகரும் அதிகாரப் ...... பெருமாள்காண்

திருவளரும் நீதி தின மனொகராதி
     செகபதியை ஆளப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானும் மருவை அவைபூத
     தெரிசனை சிவாயப் ...... பெருமாள்காண்

ஒருபொருளதாகி அருவிடையை ஊரும் 
     உமைதன் மணவாளப் ...... பெருமாள்காண்

உகமுடிவு காலம் இறுதிகள் இலாத
     உறுதிஅநுபூதிப் ...... பெருமாள்காண்

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
     கலவிபுகுதா மெய்ப் ...... பெருமாள்காண்

கனகசபை மேவி அன வரதமாடும் 
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே

(2)
'அவகுண விரகனை' என்று துவங்கும் பின்வரும் மற்றொரு தில்லைத் திருப்பாடலின் இறுதியிலும், 'மலைமகள் உமைதரு வாழ்வே' என்று முதலில் கந்தவேளைப் போற்றிப் பின்னர் 'திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம' என்று தில்லைப் பரம்பொருளையும் கலம்பமாகப் போற்றி மகிழ்கின்றார். 
-
...
மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர ...மன்றுளாடும்
-
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி ஆனாய் நமோநம
          திசையினும் இசையினும் வாழ்வே நமோநம ...செஞ்சொல்சேரும் 
-
திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...தம்பிரானே

(இறுதிக் குறிப்பு: 'சிவபரம்பொருளின் குமார வடிவமே ஆறுமுகக் கடவுள்' எனும் அபேத சத்தியத்தை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரும் தன் கந்தபுராண காவியத்தின் எண்ணிறந்த திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றியுள்ளார்).

அருணகிரிநாதர் (ஆவினன்குடியில் ஜெப மாலை பெற்ற நிகழ்வு):

பழனி எனும் ஷேத்திரத்தில் இரு முக்கியத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன, மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3ஆம் படைவீட்டுத் தலமான 'திருஆவினன்குடி' மற்றும் பழனியாண்டவன் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். அருணகிரிப் பெருமான் ஆவினன்குடிக்கென்று 12 திருப்பாடல்களையும், மலைக்கோயிலுக்கென்று 85 திருப்பாடல்களையும் தனித்தனியே அருளிச் செய்துள்ளார்.   
*
ஆவினன்குடியில் நம் கந்தப் பெருமான் 'குழந்தை வேலாயுத சுவாமி' எனும் திருநாமத்தில் பால சுவரூபியாய்; ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடும்; இடது திருவடியை மடித்தும் வலது திருவடியைத் தொங்கலிட்டும், சிவஞானமே ஒரு வடிவாய்; மலர்ந்த திருமுகத்துடன், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்தியே அருணகிரிப் பெருமானுக்கு ஜப மாலை தந்தருள் புரிந்துள்ளான், இதனைப் பின்வரும் திருப்பாடலில் அகச்சான்றாகப் பதிவு செய்கின்றார் திருப்புகழ் ஆசிரியர்,
-
தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான
-
அபகார நிந்தை பட்டுழலாதே
     அறியாத வஞ்சரைக் குறியாதே
-
உபதேச மந்திரப் பொருளாலே
     உனை நானினைந்தருள் பெறுவேனோ
-
இபமாமுகன் தனக்கிளையோனே
     இமவான் மடந்தை உத்தமிபாலா
-
ஜெபமாலை தந்த சற்குருநாதா
     திருஆவினன்குடிப் பெருமாளே.

பின்வரும் வரிகளோடு துவங்கும் 12 திருப்புகழ் திருப்பாடல்களும் திருஆவினன்குடிக்கு உரியன,
1. அபகார நிந்தை பட்டுழலாதே...
2. கனமாய் எழுந்து வெற்பெனவே உயர்ந்து....
3. காரணிந்த வரைப் பாரடர்ந்து வினை...
4. கோல குங்கும கற்புரம்...
5. சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரமிரு...
6. நாத விந்து கலாதீ நமோநம...
7. பகர்தற்கரிதான செந்தமிழ்...
8. போதகம் தரு கோவே நமோநம...
9. மூல மந்திரம் ஓதல்இங்கிலை
10. வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்...
11. வாரணம்தனை நேரான மாமுலை...
12. வேயிசைந்தெழு தோள்கள் தங்கிய...

ஆவினன்குடி தலத்திற்குச் சென்று தரிசிக்கையில் அவசியம் இப்பன்னிரண்டு திருப்பாடல்களையும் பாராயணம் புரிந்து நலமெலாம் பெற்றுச் சிவகதி சார்வோம் (சிவ சிவ)!!!

அருணகிரிநாதர் (கலிசைச் சேவகனாருடன் தோழமை பேணிய நிகழ்வு):

தம்பிரான் தோழரான சுந்தரனாருக்குச் சேரமான் பெருமாள் நாயனார் தோழராக விளங்கியது போன்று, நம் அருணகிரிப் பெருமானுக்கும் (பழனியிலுள்ள கலிசை நகரில் வாழ்ந்திருந்த) காவேரிச் சேவகனார் எனும் சிவபுண்ணிய சீலர் தோழராக விளங்கி வந்துள்ளார். இச்சேவகனார் 'வீரை' எனும் தலத்தில் பழனியாண்டவனை எழுந்தருளச் செய்தவராவார். அறுமுக தெய்வத்தை மட்டுமே பாடும் நியமம் பூண்டிருந்த, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரியாரின் திருப்புகழ் திருப்பாடல்களில் குறிக்கப் பெறுவாராயின் இப்பெருமகனாரின் சீர்மையினை என்னென்று போற்றுவது!

(1)
'தோகை மயிலே' என்று துவங்கும் பழனித் திருப்புகழில், 'விண்முகிலைப் போல் தன்னலமற்ற கொடைத் திறம் கொண்டவரும், தன் பெருஞ்செல்வத்தை (வாயு வேகத்தில்) வேண்டுவார்க்கு விரைந்தளித்து மகிழும் பாரிக்கு ஒப்பான வள்ளல் தன்மை உடையவரும், மன்மதனுக்கு ஒப்பான தோற்றப் பொலிவினை உடையவருமான காவேரிச் சேவகனாரின் உள்ளத்தில் மேவியிருந்து அருள் புரியும் வீரனே' என்று பழநியாண்டவனைப் போற்றுகின்றார் அருணை மாமுனிவர்.
-
மேகநிகரான கொடைமான் நாயகாதிபதி
     வாரிகலி மாருத கரோ பாரி மாமதன
          வேள் கலிசை வாழவரு காவேரி சேவகனது ...... உளமேவும்

(2)
'சீயுதிரம் எங்குமேய்' என்று துவங்கும் பழனித் திருப்புகழில்,
-
வேலைவிடு கந்த காவிரி விளங்கு
     கார்கலிசை வந்த சேவகன் வணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி அண்டர் ...பெருமாளே

(3)
'இருகனக மாமேரு' என்று துவங்கும் பழனித் திருப்புகழில்,
-
கருடனுடன் வீறான கேதனம் விளங்கு
     மதிலினொடு மாமாட மேடைகள் துலங்கு
          கலிசைவரு காவேரி சேவகனொடன்பு ...புரிவோனே

(4)
'சீறல்அசடன் வினைகாரன்' என்று துவங்கும் பழனித் திருப்புகழில்,
-
வீறு கலிசைவரு சேவகனதிதய
     மேவுமொரு பெருமை ...உடையோனே

(5)
'கோல மதிவதனம்' என்று துவங்கும் பழனித் திருப்புகழில்,
-
வீறு கலிசைவரு சேவகனதிதய
     மேவு முதல்வ வயல் வாவி புடைமருவு
          வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...பெருமாளே.

அருணகிரிநாதர் (திருத்துருத்தியில் வேல் மயில் முத்திரைகள் பொறிக்கப் பெற்ற அற்புத நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் பெண்ணாகடம் எனும் தலத்திலுள்ள 'திருத்தூங்கானை மாடம்' எனும் சிவாலயத்தில் 'இடப  சூல முத்திரைகளை தன் மேனியில் பொறித்தருளுமாறு' இறைவரிடம் விண்ணப்பித்துப் பாட, 'சிவபரம்பொருளின் திருவருளால் சிவபூத கணமொன்று அங்கு தோன்றி, அப்பர் அடிகளின் திருத்தோள்களில் அவ்விரு முத்திரைகளையும் பொறித்துச் சென்ற' அற்புத நிகழ்வினைப் பெரிய புராணத்தில் நம் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார். 
-
(அப்பர் சுவாமிகள் தேவாரம் - திருத்தூங்கானை மாடம்)
பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இரும் கூற்றகல
மின்னார் மூவிலைச் சூலம் என் மேல்பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!!!

அம்முறையிலேயே நம் அருணகிரிப் பெருமானும் 'திருவண்ணாமலை; பொதியமலை; எட்டிக்குடி' ஆகிய மூன்று தலங்களிலும் 'தன் மேனியில் வேல் மயில் சின்னங்களைப் பொறித்தருளுமாறு' ஆறுமுகக் கடவுளிடம் விண்ணப்பித்துப் பாடி வர, திருத்துருத்தியில் வேலாயுத தெய்வம் அவ்வேண்டுதலை முற்றுவித்துப் பேரருள் புரிகின்றான். இனி இதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளை உணர்நது மகிழ்வோம்,

(1) 'சிவ மாதுடனே' என்று துவங்கும் திருவண்ணாமலை திருப்புகழ்,

இறையோனிடமாய் விளையாடுகவே
     இயல் வேலுடன் மா அருள்வாயே

(2) 'வெடித்த வார்குழல்' என்று துவங்கும் பொதியமலைத் திருப்புகழ்,

குறித்து நீஅருகழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமும் ஒருத்தனாமென ....சிந்தைகூராய்

(3) 'மை குழலொத்தவை' என்று துவங்கும் எட்டிக்குடித் திருப்புகழ்,

தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமையத்த கலா வேனாதா
          தத்து மயிற்பரி மீதே நீதான் ...வருவாயே

இறுதியாய்த் திருத்துருத்தித் தலத்தில் அருணகிரியாரின் கனவில் தோன்றும் அறுமுகக் கடவுள், 'அன்பனே, உன்னை நம் அடைக்கலப் பொருளாகக் கொண்டோம். இதோ வேல்; மயில் முத்திரைகளை இட்டு உன் விருப்பத்தினையும் முற்றுவித்தோம். முத்தி தரவல்ல அனுபூதியையும்; அருள் மயமான நம் திருப்புகழையும் ஓதுவதையே பணியெனக் கொள்வாய்' என்று பேரருள் புரிந்து மறைகின்றான், 
-

(4) ('மலைக் கனத்தென' என்று துவங்கும் திருத்துருத்தித் திருப்புகழ்)

அடைக்கலப் பொருளாமென நாயெனை
     அழைத்து முத்தியதாம் அநுபூதியென்  
          அருள் திருப்புகழ் ஓதுக வேல்மயில் ...அருள்வோனே

மேற்குறித்துள்ள அரிதினும் அரிதான திருப்புகழ் குறிப்பினை (திருப்புகழ் திருப்பாடல்களுக்கு முதன்முதலில் உரை கண்டருளிய) சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், தம்முடைய நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்தறிந்து வெளியிட்டுள்ளார்கள்.  

'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரும், திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களும் தன்னுடைய நூல் மற்றும் திருப்புகழ் விரிவுரைகளில் இவ்வரிய குறிப்பினை விவரித்துப் போற்றி வருவார்.

அருணகிரிநாதர் (கிளி உருவத்தில் பாடியது 'கந்தர் அனுபூதியா' அல்லது திருவகுப்பா? - வியப்பூட்டும் ஆய்வுக் குறிப்புகள்)

அருணகிரியார் கிளியுருவம் கொண்ட பின்னர் அருளிச் செய்தது 'கந்தர் அனுபூதி' என்பது வழிவழியாய்க் கூறப் பெற்றுவரும் குறிப்பு, சமயப் பெரியோர்கள் பலரும் இச்செய்தியினை உள்ளவாறே ஏற்று வழிமொழிந்தும் வந்துள்ளனர். எனினும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரியாரின் பாடல் தொகுப்புகள் அனைத்திற்கும் முதன்முதலில் உரை கண்டருளிய சிவத்திரு. தணிகைமணி அவர்கள் இது தொடர்பாக அரியதொரு ஆய்வினை மேற்கொண்டு, வியப்பூட்டும் சில குறிப்புகளைச் சமய உலகிற்குப் பிரகடனப்படுத்தி உள்ளார். அது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
'அனுபூதிப் பாடல்கள் அருணகிரியாரால் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மனநிலையில் பாடப் பெற்றுப் பின்னாளில் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும்' என்பது தணிகைமணி அவர்களின் மிகமுக்கியப் பிரகடனம். இப்பெருமகனார் அனுபூதிப் பாடல்களைப் பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கின்றார், 

(தவம்கிடந்த நிலையில் பாடியவை: 13 பாடல்கள்): 1, 2, 3, 6, 15, 18, 21, 36, 37, 40, 47, 48, 51

(சாந்தி பெறாது கலக்கமுற்ற நிலையில் பாடியவை: 22 பாடல்கள்): 4, 5, 9, 10, 16, 19, (23 - 27), 29, (31-35), 39, 41, 45, 46, 50

(பேறு பெற்ற ஞான நிலையில் பாடியவை: 13 பாடல்கள்): 8, (11-13), 20, 22, 28, 30, 38, (42-44), 49

(நெஞ்சுக்கும், உலகுக்கும் உபதேசப் பாடல்கள் : 3): 7, 14, 17

மேற்குறித்துள்ள 51 அனுபூதிப் பாடல்களின் பொருளை ஆய்ந்தறிகையில், 'முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலுள்ள அனுபவங்களை, ஒரே சமயத்தில்; அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக நம் குருநாதர் பதிவு செய்திருக்க ஒருசிறிதும் வாய்ப்பில்லை' என்பது தெளிவாக விளங்கும். 

(2)
இனி தணிகைமணி அவர்கள் முன்னிறுத்தும் 2ஆவது கோணத்தினைக் காண்போம். 

அனுபூதிப் பாடல்கள் யாவும் நேரிடையாகப் பாடுமுகமாக ('தம்முடைய குறை கூறுவது, தாம் பெற்ற பேற்றினையெண்ணி மகிழ்வது' என்று 'தன்மை இடத்தனவாய்') அமைந்துள்ளது. 

மற்றொருபுறம் வேடிச்சிக் காவலன் வகுப்பில், 'அருணை நகரினொரு பக்தன்இடு.. திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்' என்று தன்னையே சேய்மைப் பதத்தில் 'அருணைநகரின் ஒரு பக்தன்' என்று குறித்துள்ளமையால், 'திருவகுப்பே கிளியுருவில் அருணகிரியார் அருளிச் செய்ததென்பது தணிகைமணி அவர்களின் அற்புதப் பிரகடனம்.

(3)
'தம்முடைய உடற்சிறையை அறுமுகக் கடவுள் விடுவித்தருளியது நியாயமே' என்று அருணகிரியார் 'திருவேளைக்காரன் வகுப்பில்' பதிவு செய்துள்ளது மற்றுமொரு அகச்சான்று - என்கின்றார் தணிகைமணி அவர்கள்,  

'ஏழையின் இரட்டை வினையாயதோர் உடற்சிறை 
இராமல் விடுவித்தருள் நியாயக்காரன்' 

(4)
'திருப்புகழ்; அனுபூதி; அலங்காரம்' எனும் பனுவல்களில் 'பெண்கள் மயக்கினின்றும் என்னை விடுவித்துக் காத்தருள்' எனும் விண்ணப்பம் இருக்கும். 'அப்படியொரு பேச்சே திருவகுப்பில் கிடையாது' என்கின்றார் தணிகைமணி அவர்கள். மேலும் 'யம பயத்தினின்றும் காத்தருள்' எனும் குறிப்பு 'சேவகன் வகுப்பு' ஒன்றினைத் தவிர, திருவகுப்பில் வேறெங்கும் கிடையாது என்பது தணிகைமணி அவர்களின் கூற்று, 

(குறிப்பு): திருவகுப்பின் 25 பாடல்களில், முதல் 18 மட்டுமே அருணகிரியார் அருளிச் செய்ததென்பதும், மற்றவை பிற்சேர்க்கை என்பதும் தணிகைமணி அவர்களின் கோட்பாடு).

(5)
மேலும், முதல் 18 திருவகுப்புப் பாடல்களில், (1, 3, 4, 6, 7, 9-12, 14-16) ஆகிய 12 வகுப்புகளில் திருத்தணிகை கூறப்பெற்றுள்ளது. ஆதலின் 'அருணகிரியார் இறுதியாய்த் திருத்தணிகை தலம் சென்று, அங்கு தணிகைவேலவனின் திருக்கரத்தில் கிளியாக நிலைகொண்ட பின்னர் திருவகுப்புப் பனுவல்களை அருளிச் செய்திருக்க வேண்டும்' என்று சிவஞானப் பெருநிலையில் நின்றவாறு பிரகடனம் செய்கின்றார் சிவத்திரு. தணிகைமணி அவர்கள். 

திருத்தணிகை இடம்பெறாத 6 திருவகுப்புகள் முன்னரே ஓரோர் சமயங்களில் பாடியதாக இருக்கலாம் என்பதும் தணிகைமணி அவர்களின் கருத்து.

(6)
'கரிக்குழல் விரித்தும்' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழில், 'உன் தலத்தினில் இருக்கும் ...படி பாராய்' என்று அருணகிரிப் பெருமானார் விண்ணப்பித்திருப்பதால், 'அருணகிரியாரின் முத்தித் தலம் திருத்தணி' என்பதும் தணிகைமணி அவர்களின் மற்றுமொரு பிரகடனம்,

தவக்கடல் குளித்திங்குனக்கடிமை உற்றுன்
     தலத்தினில் இருக்கும் ....படிபாராய்

அருணகிரிநாதர் (ஆறு தலங்களில் பெற்ற நடனக்கோல தரிசனம்):

அருணகிரியார் திருச்செந்தூரில் பெற்ற நடனக்கோல தரிசன நிகழ்வினை முதற்கண் நினைவு கூர்ந்து பின்னர் பதிவிற்குள் பயணிப்போம். 

(1) (திருச்செந்தூர்):

அன்று செந்தில் நகரில் பிரமோத்சவ 7ஆம் நாள் உற்சவம், பிரதான உற்சவ மூர்த்தியான ஷண்முகரின் புறப்பாடு துவங்கியிருந்த சமயம். எண்ணிறந்த அணிகலன்களுடன் எழுந்தருளி வரும் செந்திலாண்டவனைக் கண்களாரத் தரிசித்துப் பணியும் அருணகிரியார் 'ஐயனே, உன்னுடைய நடனக் கோல தரிசனத்தினை அளித்தருள்வாய்' என்று விண்ணப்பிக்கின்றார். 

செந்தில் இறைவனும் 'பின்புறமாய் வந்து நமது நடனக் கோலம் காண்பாய்' என்று அருள, அருணகிரியார் அவ்வண்ணமே செல்கின்றார். திருப்புகழ் வேந்தரின் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு செந்திலாண்டவன் பால வடிவில் தோன்றுகின்றான். செம்பொன்னால் வார்த்தெடுத்தது போன்ற திருமேனிப் பொலிவு, திருமேனியெங்கும் அணிகலன்கள், நெற்றியில் துலங்கும் திருநீறு, சிவஞானக் குழவியான செந்திற் கடவுள் பிஞ்சுப் பொற்பாதங்களை அசைத்துத் தன் திருநடத்தினைத் துவங்குகின்றான். 

அருணகிரியார் அகம் குழைந்து கண்ணீர் பெருக்கி 'தண்டையணி வெண்டையம்' எனும் திருப்பாடலொன்றினை எடுக்க, அதன் சந்தத்திற்கு ஏற்றாற்போல் குமர நாயகன் திருநடமிடுகின்றான். 'கொண்ட நடனம்பதம் செந்திலிலும் எந்தன்முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே' என்று அருணகிரியார் நெகிழ்ந்து போற்றுகின்றார். 

'செந்திலிலும்' என்று பன்மையில் குறித்திருப்பதால், 'பிற தலங்களிலும் குமாரக் கடவுள் தன் நடனக்கோல தரிசனத்தினை அளித்தருள் புரிந்துள்ளான்' என்பது புலனாகின்றது. இனி அதற்கான திருப்புகழ் அகச் சான்றுகளையும் அறிந்து மகிழ்வோம்,

(2) (திருவெண்ணெய்நல்லூர்):

('பலபல தத்துவ' என்று துவங்கும் திருப்புகழ்)
-
மகிழ் பெணையில்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின் மிசைக்கொடு திருநடமிட்டுறை ...பெருமாளே

(3) (கொடுங்குன்றம் - பிரான் மலை): 

('எதிர்பொருது கவிகடின' என்று துவங்கும் திருப்புகழ்),
-
பொழுதினிலும் அருள்முருக சுத்தக் கொடுங்கிரியில் 
     நிர்த்தச் சரண்களை மறந்திடேனே

(4) (சிதம்பரம்): 

('மகரமொடுறு குழை' என்று துவங்கும் திருப்புகழ்)
-
அரிதுயில் சயன வியாள மூர்த்தனும் 
     அணிதிகழ் மிகுபுலியூர் வியாக்ரனும் 
          அரிதென முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே
-
(குறிப்பு: மேற்குறித்துள்ள திருப்பாடலில், பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் 'இது அரிது அரிது' என்று வியந்து போற்றும் தன்மையில் தில்லையுறைக் குமாரக் கடவுள் தனக்கு ஆடல் தரிசனம் அளித்தருளியதாகப் பதிவு செய்கின்றார் நம் அருணகிரிப் பெருமானார்). 

(5) (திருத்தணி):

('குருவி எனப்பல' என்று துவங்கும் திருப்புகழ்)
-
"விணமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...பெருமாளே"
(குறிப்பு: இத்திருப்பாடலில் இருதேவியரும் உடனிருக்க, நிருத்த தரிசனத்தினை அளித்ததாகப் பதிவு செய்கின்றார்)

('மொகுமொகென நறைகொள்மலர்' என்று துவங்கும் மற்றொரு திருப்புகழ்)
-
"தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல ...... பெருமாளே"

(6) (திருவண்ணாமலை):

('விந்துப் புளகித' என்று துவங்கும் திருப்புகழ்)

அடியென் 
இடைஞ்சல் பொடிபட முன்புற்றருள் அயில்
    தொடுத்தும் இளநகை பரப்பி மயில்மிசை
      நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...பெருமாளே.

மேற்குறித்துள்ள அரிய குறிப்புகளை முதன்முதலில் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தியவர் சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். இதனைத் தொடர்ந்து 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய நூல்கள்; விரிவுரைகள்; கட்டுரைகள் தோறும் இக்குறிப்புகளை விவரித்துப் போற்றி வருவார்.

அருணகிரிநாதர் (திருவடி தீட்சை பெற்ற திருத்தலங்கள்):

நாவுக்கரசு சுவாமிகளுக்கு நல்லூரிலும், சுந்தரனாருக்குத் திருவதிகைக்கு அருகிலுள்ள சித்தவடமடத்திலும்  சிவபரம்பொருள் தன் திருவடியினைச் சூட்டி அருள் புரிந்த அற்புத நிகழ்வுகளைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார். 

அம்முறையில் நம் அறுமுகக் கடவுள் (விண்ணப்பம் ஏதுமின்றித் தானாகவே சென்று) திருவண்ணாமலையிலும் பின்னர் வயலூரிலும் தன் திருவடியினை திருப்புகழ் வேந்தரின் சென்னிமிசை சூட்டிப் பேரருள் புரிகின்றான். அத்துடன் அருணகிரியார் நிறைவு கண்டுவிடவில்லை, (இவ்வுலக மாயையினின்றும் முற்றிலுமாய்த் தொடர்பற) பழனி; சுவாமிமலை; திருத்தணி ஆகிய 3 திருத்தலங்களிலும் மீண்டுமொரு முறை தனை ஆளுடைய கந்தப் பெருமானிடம் அத்திருவடிப் பேற்றினை உரிமையுடன் வேண்டி விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்கின்றார்.

இனி கீழ்குறித்துள்ள 5 திருத்தலங்களில் அருணகிரியாரின் திருவடி தொடர்பான விண்ணப்பப் பாடல் வரிகளோடு, அவ்விருப்பம் முற்றுப் பெற்றதற்கான அகச் சான்றுகளையும் உணர்ந்து மகிழ்வோம்,

1. (திருவண்ணாமலையில் திருவடி தீட்சை)

('முருகு செறிகுழல் - திருவண்ணாமலை திருப்புகழ்')
 அருணை நகர்மிசை கருணையொடருளிய
          மவுன வசனமும் இருபெரு சரணமும் ....மறவேனே

2. (வயலூரில் திருவடி தீட்சை)

('குருவும் அடியவர்' - நெரூர் திருப்புகழ்)
வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை
     உதவு பரிமள மதுகர வெகுவித
          வனச மலரடி கனவிலு(ம்) நனவிலு(ம்) ....மறவேனே

3. (பழனியில் திருவடி தீட்சை)

('குறித்தமணிப் பணித்துகிலை' - பழனித் திருப்புகழ் - தீட்சைக்கு விண்ணப்பம்)
புலத்தலையில்  செலுத்துமனப்
     ப்ரமத்தையறப் ப்ரசித்தமுறப்
          புரித்தருளித் திருக்கழலைத் ....தருவாயே

('களபமுலையைத் திறந்து' - பழனித் திருப்புகழ் - தீட்சை அடையப் பெறுதல்)
இப முகவனுக்குகந்த இளையவ மருக் கடம்ப
     எனதுதலையில் பதங்கள் அருள்வோனே

4. (திருத்தணியில் திருவடி தீட்சை)

('ஏது புத்தி ஐயா' - திருத்தணித் திருப்புகழ் - தீட்சைக்கு விண்ணப்பம்)
பாதம் வைத்திடையா தெரித்தெனை
     தாளில் வைக்க நியே மறுத்திடில்
          பார் நகைக்குமையா தகப்பன்முன் ...மைந்தனோடி

('கொந்துவார் குரவடியினும்' - திருத்தணித் திருப்புகழ் - தீட்சை அடையப் பெறுதல்)
சஞ்சரீகரிகர முரல் தமனிய
     கிண்கிணீமுக இதபத யுகமலர்
          தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...மறவேனே

5. (சுவாமிமலையில் திருவடிப் பேறு)

(இத்தலத்தில் திருவடி தொடர்பான நான்கைந்து விண்ணப்பப் பாடல்களுண்டு)

('ஆனனம் உகந்து தோளொடு' - சுவாமிமலைத் திருப்புகழ் - திருவடி தீட்சைக்கு விண்ணப்பம்)
வாரிஜ பதங்கள் நாயடியேன் முடிபுனைந்து போதக
     வாசகம் வழங்கி ஆள்வதும் ஒருநாளே

('செகமாயை உற்றென்' - சுவாமிமலைத் திருப்புகழ் - திருவடி தரிசனம் பெறுதல்)
தகையாதெனக்குன் அடிகாண வைத்த
     தனிஏரகத்தின் ....முருகோனே

அருணகிரிநாதர் (சிதம்பரத்தில் கந்தக் கடவுள் தோழமை தந்து அருள் புரிதல்):

நமக்கின்று கிடைத்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுள், பின்வரும் தில்லைத் திருப்புகழொன்றில் மட்டுமே நம் அருணகிரிப் பெருமானார் அறுமுக தெய்வத்தைத் 'தோழா' என்று உரிமையோடு குறிப்பிட்டுப் போற்றுகின்றார். இனி இப்பதிவில் 'சக மார்க்கம்' எனும் தோழமை நெறி குறித்துச் சிறிது சிந்திப்போம்.

இப்புவியில் தோன்றும் ஒவ்வொரு உயிர்க்கும் தாய்;தந்தையர் உண்டு ஆதலின் இறைவர்; இறைவியை அம்மையப்பராகக் கொண்டு பக்தி புரிந்து வழிபடும் சத்புத்ர மார்க்கத்தினை உள்வாங்கிப் பின்பற்றுதல் எளிது. 

தத்துவ நோக்கில் ஆன்மாக்கள் அனைவரும் பரம்பொருளான அம்பிகை பாகனாருக்கு அடிமைத்திறம் பூண்டொழுகுபவை என்றிருப்பினும், உலகியல் வழக்கில் எவரொருவருக்கும் 'நாம் சிவமாகிய பரம்பொருளுக்கு அடிமை' எனும் உணர்வு இயல்பிலேயே சித்தித்து விடுவதில்லை. 'சிவனடியார் அல்லது சிவபக்தர்' எனும் புரிதலையே முதற்கண் எய்தப் பெறுகின்றோம். ஆதலின் இறைவரைத் தலைவராகவும் தன்னை அடிமையாகவும் கொண்டொழுகும் தாச மார்க்கம் என்பது தத்துவப் புரிதலினாலும்; சமயப் பயிற்சியினாலும்; குருவருளாலும் மட்டுமே சித்திக்க வல்லது. 

இறுதியாய் இறைவராக அளித்து அருளினாலன்றி 'தோழமை உணர்வு சித்திக்க வாய்ப்பேயில்லை' என்பது கண்கூடு. 63 நாயன்மார்களுள் சுந்தரனாருக்கு மட்டுமே அவ்வரிய பேறு வாய்க்கப் பெறுகின்றது. அதுவும் வன்தொண்டனார் அப்பேற்றினை விண்ணப்பித்துப் பெறவில்லை, திருவாரூர் மேவும் மறைமுதல்வர் தாமாக முன்வந்து 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்' என்று விண்ணொலியாய் அறிவித்து அருள் புரிகின்றார். 

'தோழமை உணர்வையும் அடிமைத் திறத்தினால் மட்டுமே அடைய இயலும்' என்பதொரு அரிய நுட்பம், தோழமை ஒரு கூடுதல் உரிமையே எனினும் அதனைக் கூட்டுவிப்பது 'அதீத அடிமைத்திறம்' எனும் உத்தம நிலையே. முதற் திருப்பதிகத்திலேயே சுந்தரனார் 'அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே' என்று 'தன்னை அடிமை' என்றே பிரகடனப்படுத்திக் கொள்வதால் இதனை உணரப் பெறலாம். 

திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரியாரும் எண்ணிறந்த திருப்பாடல்களில் தன்னை 'அடிமை' என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றார் ('அமிர்தகவித் தொடைப்பாட அடிமை தனக்கருள்வாயே').

ஆதலின் சிதம்பர ஷேத்திரத்தில் சிவகுமரனான நம் கந்தப் பெருமான் அருணகிரியாருக்குத் தம்முடைய நடனக் கோல தரிசனத்தோடு, தோழமை பேற்றினையும் அளித்து அருள் புரிந்துள்ளது தெளிவு. 'தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த தோழா கடப்பமலர் அணிவோனே' என்று பின்வரும் திருப்பாடலில் நெகிழ்ந்து போற்றுகின்றார் திருப்புகழ் வேந்தர்,

தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...தனதான

நாடா பிறப்பு முடியாதோ எனக்கருதி
     நாயேன் அரற்றுமொழி ...வினையாயின்

நாதா திருச்சபையின் ஏறாது சித்தமென
     நாலா வகைக்கும் உனதருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரேன் எனக்கெதிர் முன் ...வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தஅரி
     தோல்ஆசனத்தி உமை ...அருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த
     தோழா கடப்பமலர் ...அணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானாதனத்தி மிகு
     மேராள் குறத்திதிரு ....மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த் திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.

அருணகிரிநாதரின் முற்பகுதி வாழ்வின் நிகழ்வுகள் மெய்யானவையா? (சிவத்திரு. தணிகைமணி அவர்களின் அற்புத விளக்கவுரை):

திருப்புகழ் திருப்பாடல்களை நாமின்று பாராயணம் புரிந்தும் பாடியும் உய்வு பெறுகின்றோம் எனில் அதற்குக் காரணம் இருபெரும் தவசீலர்கள், சிவத்திரு. வ.த. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் மற்றும் அவர்தம் திருக்குமாரரான சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள். திருப்புகழ் திருப்பாடல்களைத் தங்களது பகீரத பிரயத்தனத்தினால் தேடித் தேடிச் சேகரித்து, பல்வேறு பிரதிகளோடு சரிபார்த்துத் தொகுத்து முதன்முதலில் பதிப்பித்த தனிச்சிறப்பு இவ்விரு பெரியோரையே சாரும். 

திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரியாரின் பாடல் தொகுப்புகள் யாவற்றிற்கும் முதன்முதலில் உரைகண்டருளியவர் சிவத்திரு. தணிகைமணி அவர்கள். அம்மட்டோ!, 'அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்' மற்றும் அப்பர் சம்பந்தர் தேவாரங்களுக்கான 'தேவார ஒளி நெறி' எனும் ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வரைத்தருளியுள்ளார். 'ஒரு பல்கலைக்கழகமே ஒன்றுதிரண்டு செய்திருக்க வேண்டிய அரியதொரு ஆய்வினைத் தனியொருவராக மேற்கொண்ட பெருமகனார் இவர்' என்று சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய விரிவுரைகள் தோறும் குறிப்பிட்டுப் போற்றி மகிழ்வார். 

தணிகைமணி அவர்கள் ஒருசமயம் திருத்தணித் தலத்தில் கந்தரந்தாதிப் பாடல்களைப் பாராயணம் புரிகையில், இடையில் 59ஆம் திருப்பாடல் விடுபட்டு விடுகின்றது. அன்றிரவே தணிகை வேலவன் கனவில் எழுந்தருளி வந்து, 'எலும்பிச்சப்பழப் பாடலைப் பாட மறந்தனையோ' என்று நினைவூட்டியருளிய நிகழ்வு இவர்தம் தவச்சிறப்பினைப் பறைசாற்றும்.

இனி மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமானாரின் முற்பகுதி வாழ்க்கையைப் பற்றிய தணிகைமணி அவர்களின் விளக்கவுரையினை அறிந்துணர்ந்துத் தெளிவுறுவோம். 

*******************************************
சுவாமிகள் மிக்க நன்றியறிவு உள்ளவர். 'காமச் சேற்றில் கிடந்த தம்மை முருகர் கைதூக்கிக் கரை காட்டினரே' என்ற நன்றியறிவு இவர் பாடல்களில் நன்கு பொலிகின்றது. முருகனடியார்களுள் சிறந்த பலரும் 'அருணகிரியார் காம வலையிற் படவில்லை; அடியார்களின் நற்கதிக்காக - மாணிக்கவாசகர் முதலான பெரியோர்கள் பாடினவாறு, ஆசையிற் கொடிதான பெண்ணாசையை உலகோர் விலக்குவதற்காக உபசாரமாகப்  பெண்கள் வலையிற் பட்டேன் எனத் தாமும் கூறினரே ஒழிய வேறில்லை' என்பர். 

எனினும் அருணகிரியார் கூறும் மொழிகளைப் பார்க்கும் பொழுது - உதாரணமாக,

(1)
('வெருட்டி யாட்கொளும்') என்று துவங்கும் திருசிராப்பள்ளி திருப்புகழ்) 
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
     அவிழ்த்த பூக்கமழ் குழலினு(ம்) நிழலினு(ம்)
          மதிக்கொணாத் தளர்இடையினு(ம்) நடையினு(ம்)...அவமேயான்

மயக்கமாய்ப் பொருள் வரும்வகை க்ருஷிபணு
     தடத்து மோக்ஷமதருளிய பலமலர்
          மணத்த வார்க்கழல் கனவிலு(ம்) நனவிலு(ம்) ...... மறவேனே

(2)
('காமாத்திரமாகி' என்று துவங்கும் விராலிமலைத் திருப்புகழ்)
ஏமாப்பற மோக இயல் செய்து
     நீலோற்பல ஆசில் மலருட(ன்)
          நேராட்ட விநோதமிடும் விழி ...... மடவார்பால்

ஏகாப்பழி பூணு(ம்) மருளற
     நீதோற்றி முனாளும் அடிமையை
          ஈடேற்றுதலால்உன் வலிமையை ...... மறவேனே

(3)
('பாரவித முத்தப் படீர' என்று துவங்கும் கதிர்காமத் திருப்புகழ்)
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த
     கால்களை மறக்கைக்கும் ...... வருமோதான்

(4)
('மின்னினில் நடுக்கமுற்ற' என்று துவங்கும் பொதுத் திருபுகழ்)
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த
     கன்மவசம் எப்படிக்கு ...... மறவேனே

'அவர் மெய்மையே பேசும் பெருந்தகையார் ஆதலின் - அவர் தமது சுய சரித்திரத்தையே நாணாது கூறி 'இத்தகைய கீழோனுக்கும் மேலோனாகிய நீ அருள் புரிந்தனையே' என முருகன் கருணையையே வியந்து பாராட்டித் தமது நன்றியறிவை புலப்படுத்தியுள்ளார் - என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

இதனால் அருணகிரியாரது பெருமை மேலெடுத்துக் காட்டுமே ஒழிய ஒருசிறிதும் தாழ்வு படாது. ஏனெனில் 'அவர் முன்செய்த தபோபலம் எத்துணைச் சிறப்புற்றிருக்க வேண்டும்' என்பது வெள்ளிடை மலை போல விளங்குகின்றது. முருகவேளின் ஆட்கொள்ளும் கருணைத் திறமும் மிகச் சிறப்பாகத் துலங்குகின்றது. 

வரகவி மார்க்கசகாயத் தேவரும் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் 'மாதர்இரு விழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி' எனக் கூறியுள்ளனர் அல்லவா?. 
*******************************************

அருணகிரிநாதர் அருளியுள்ள பாடல் தொகுப்புகள்:

அருணகிரியார் அருளியவை மொத்தம் 16,000 திருப்புகழ் திருப்பாடல்கள். எனினும் திருவருளால் நமக்கின்று கிடைக்கப் பெற்றுள்ளவையோ 1340 திருப்பாடல்களே (ஆதாரபூர்வமாக அறியப் பெற்றுள்ளவை 1326 திருப்பாடல்களே எனினும் பின்னாளில் 14 புதிய திருப்பாடல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன)

திருப்புகழோடு பின்வரும் பாடல் தொகுப்புகளையும் அருணை மாமுனிவர் அருளிச் செய்துள்ளார், 
1. கந்தர் அலங்காரம் (108 திருப்பாடல்கள்)
2. கந்தர் அந்தாதி (102 திருப்பாடல்கள்)
3. கந்தர் அனுபூதி (52 திருப்பாடல்கள்)
4. வேல் விருத்தம் (10 திருப்பாடல்கள்)
5. மயில் விருத்தம் (12 திருப்பாடல்கள்)
6. சேவல் விருத்தம் (12 திருப்பாடல்கள்)
7. திருவகுப்பு (25 திருப்பாடல்கள்)
8. திருஎழுகூற்றிருக்கை (1 திருப்பாடல்)

அருணகிரிநாதர் (சன்னிதி - சென்னை வடபழனி முருகன் திருக்கோயில்):





அருணகிரிநாதர் குருபூஜைத் திருநாள் (பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம்):

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தனிப்பெரும் குருநாதர். திருவண்ணாமலையையே அவதாரத் தலமாகவும்; தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலமாகவும்; முத்தித் தலமாகவும் கொண்டு விளங்கும் தகைமையாளர். கந்தவேளின் திருக்கை வேலால் 'ஓம்' என்று நாவில் பொறிக்கப் பெற்ற, மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய அணுக்கத் தொண்டர். சைவப் பெருஞ்சமயத்தின் வழிநின்று முருக வழிபாட்டினை இன்னுயிரெனப் பேணியதோடு, சைவ வைணவ ஒற்றுமைக்கு தனித்துவமான வழியொன்றினை வகுத்தளித்த அருளாளர்.

அருணகிரிப் பெருமான் கந்தக் கடவுளின் திருவடிப் பேற்றினை பெற்றுய்ந்த திருநாள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையில் அறியப்படாமலே இருந்து வந்தது. அதனை அறுமுகக் கடவுளின் திருவருளால் கண்டறிந்து சமய உலகிற்கு அறிவித்துப் பேருபகாரம் புரிந்தருளியவர் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளாவார். 

(தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதிகள்)
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றுரைத்தும்
நந்தா வகுப்பலங்காரம் அவற்கே நனிபுனைந்தும்
முந்தாதரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன
எந்தாய் அருணகிரிநாதா என்னை நீ ஏன்றருளே!!
-
நெடியான் உகந்த மருகன் திருப்புகழ் நித்தமுமே 
படியார் படித்துப் பரகதி பற்றப் பரிந்தளித்த 
அடியான் அருணகிரிநாதன் அம்பொன் அடிமலர்க்கே 
அடியார் எவரோ அவரேஎம் ஆவிக்(கு) அருந்துணையே 

(தாயுமான சுவாமிகள் திருவாக்கில் அருனை மாமுனிவர்)
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல் 
மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்?
-
யான்தான் எனல்அறலே இன்பநிட்டை என்(று)அருணைக் 
கோன்தான் உரைத்தமொழி கொள்ளாயோ?
-
கந்தரநுபூதி பெற்றுக் கந்தர்அனுபூதி சொன்ன 
எந்தையருள் நாடியிருக்கு நாள் எந்நாளோ!

(தணிகைச் சந்நிதிமுறையின் திருவாக்கில் அருணை வள்ளல்)
கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா(து) அனுதினமுன் 
திருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே 

(ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி)
அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்
மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 
பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 
ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!

(திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி):
விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்
பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று
கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்
திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

அருணகிரிநாதர் (ஆடும் பரிவேல் அணிசேவலென - ஒலிப்பதிவு)

(கந்தர் அனுபூதி - திருப்பாடல் 1)
ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனியானை சகோதரனே!!!

(குறிப்பு: பொதுவில் அருளாளர்களின் குருபூஜைத் திருநாளுக்கு திருநட்சத்திரத்தை மட்டுமே கணக்கில் கொள்வது மரபு. இருப்பினும் நம் அருணகிரிப் பெருமானுக்கு பௌர்ணமித் திதியோடு கூடிய மூல நட்சத்திரத்தைக் குருபூஜைத் திருநாளாக ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அறிவித்து அருளியுள்ளார், அதனை நம் வாரியார் சுவாமிகளும் வழிமொழிந்துள்ளார்).