திருப்புகழில் திருவள்ளுவ தேவர் (முக்கியக் குறிப்புகள்):

அருணகிரிப் பெருமான் இருவேறு திருப்பாடல்களில் திருவள்ளுவ தேவரையும், திருக்குறளையும் சிறப்பித்துள்ளார். இனி அதன் நுட்பங்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

(1) ('படர்புவியின் மீது மீறி' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

'திருவளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை' என்று இத்திருப்பாடலில் அருணகிரியார் குறிக்கின்றார். பண்பாலும்; தவச்சிறப்பாலும் உயர்ந்த பெரியர் ஆதலின் 'வள்ளுவ தேவர்' என்றும், அப்பெருந்தகையார் அருளியுள்ள குறட்பாக்களை 'வாய்மையாகிய பழமொழி' என்றும் திருப்புகழ் வேந்தர் சிறப்பிக்கின்றார்.  

மற்றொரு புறம் நெறியற்ற புலவர்களை இத்திருப்பாடலில் சாடுகின்றார். 'நெறி நூல்கள்; சங்கப் பாடல்கள்; 64 கலை நூல்கள்; காவியங்கள்; பிரபந்த வகைகள்; பொய்யா மொழியாகிய திருக்குறள்' இவைகளை வெறும் படாடோபத்திற்கும்; லோபிகளாகிய செல்வந்தர்களைப் புகழ்வதற்காகவும் மட்டுமே பயின்று (அப்பனுவல்கள் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகள் யாதொன்றிலும் நில்லாமல்), 'மதுரகவி ராஜன்; ஆசுகவி; சண்டமாருதன்' என்று பட்டங்களைச் சூட்டிக் கொண்டு, ஆடம்பரச் சின்னங்களோடு உலவி வரும் இத்தகையோரின் மமதையும்; அறியாமையும் என்று தீருமோ?' என்று வெகுள்கின்றார் அருணகிரியார்.

(முதல் 12 வரிகள்):
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானுவாய் வியந்துரை
          பழுதில்பெரு சீல நூல்களும் தெரி ...... சங்கபாடல்
-
பனுவல்கதை காவ்யமாம் எணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மைஎன்கிற
          பழமொழியை ஓதியேஉணர்ந்துபல் ...... சந்தமாலை
-
மடல்பரணி கோவையார் கலம்பகம் 
     முதல்உளது கோடி கோள் ப்ரபந்தமும்
          வகை வகையிலாசு சேர்பெரும்கவி ...... சண்டவாயு
-
மதுரகவி ராஜநானென் வெண்குடை
     விருதுகொடி தாள மேள தண்டிகை
          வரிசையொடுலாவு மால்அகந்தை தவிர்ந்திடாதோ

(2) ('அகல்வினை உள்சார் சட் சமயிகளொடு' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
-
இத்திருப்பாடலின் இறுதியில், 'முப்பால் செப்பிய கவிதையின் மிக்(க) ஆரத்தினை' (திருக்குறளினும் மேன்மை பொருந்திய தேவாரப் பனுவல்கள்) என்று அருணகிரியார் குறிக்கின்றார். 

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகையிட்டே சுட்டருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...மதலாய்!வென்
-
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்காரத்தினை
     எழுதி வனத்தே எற்றிய ...பெருமாளே

'அறம்; பொருள்; இன்பம்; வீடு' எனும் 4 நெறிகளையும் புருஷார்த்தங்கள் என்பர். இவற்றுள் முதல் மூன்றினை விளக்கமாகக் கூறுவதால் திருவள்ளுவ தேவனாரின் குறட்பாக்கள் 'அறநூல்' வகையென்பர். மற்றொரு புறம்  சிவஞானப் பிழிவாகிய மூவர் தேவாரப் பனுவல்கள் (அற நெறிகளோடு கூடிய) அருள் நூல் ஆதலின் 'திருக்குறளினும் விழுமிய தேவாரம்' என்று அருணகிரியார் சிறப்பித்துப் போற்றுகின்றார். 

வள்ளுவனார் காட்டிய அறவழி நின்றொழுகிப் பின்னர் சமயக் குரவர்களான நால்வர் பெருமக்கள் காட்டும் அருள் வழி பயணித்து இறுதியில் சிவமுத்தி பெற்று உய்வு பெறுவதே, ஆன்ம யாத்திரையின் உன்னத லட்சியமெனக் கொள்ளுதல் வேண்டும்.

ஒப்புவமையில்லாத தேவாரப் பனுவலைச் சிறப்பித்துக் கூறுகையில், வள்ளுவப் பெருந்தகையின் வாக்கோடு ஒப்பு நோக்கி அருணகிரியார் விளக்கியிருக்கும் தன்மையினால், வள்ளுவனாரின் மேன்மையும் அவர்தம் வாக்கின் தனிச்சிறப்பும் தெள்ளென விளங்குமன்றோ!!

No comments:

Post a Comment