திருவண்ணாமலையில் ஆறுமுகப் பெருங்கடவுள் 'முத்து முத்தாய்ப் பாடுவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிய, அருணகிரிப் பெருமான் 'முத்தைத் தரு' எனும் அற்புதத் திருப்புகழால் கந்தக் கடவுளைப் பணிந்தேத்துகின்றார்.
முதல் திருப்புகழான இத்திருப்பாடலிலேயே ஸ்ரீமன் நாராயணரின் தசாவதாரங்களுள் மூன்றினைப் பதிவு செய்து போற்றி மகிழ்கின்றார்; ஸ்ரீராமாவதார நிகழ்வு ; கூர்மாவதார நிகழ்வு மற்றும் ஸ்ரீகிருஷ்ண லீலைகள். இவற்றுள் நம் கண்ணனைப் பற்றிய திருப்பாடல் வரிகளை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,
மாபாரதக் கண்ணன், குருஷேத்திர யுத்தகளத்தில் தன் சுதர்சன சக்கரத்தால் சூரியனின் ஒளியை மறைத்து; ஜயத்ரதனை வெளிப்படச் செய்து; அர்ஜுனனால் அவன் மாளுமாறு செய்தருளிய லீலையை, ' பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக' என்று போற்றுகின்றார்.
பக்தனான பார்த்தனுக்கு எளிவந்து, மாபாரத யுத்த சமயத்தில் சாரதியாக விளங்கியருளிய நிகழ்வினை, 'பத்தற்(கு) இரதத்தைக் கடவிய' எனும் வரியில் போற்றுகின்றார்.
இறுதியாய் வைகுந்த வாசரைப் 'பச்சைப் புயல்' எனும் அற்புத அடைமொழியொன்றினால் சிறப்பித்துப் பின் 'அத்தகு சீர்மை பொருந்திய கண்ணன் மெச்சும் முதற்பொருளாகிய அறுமுக தெய்வமே' என்று சிவகுமரனைப் போற்றிப் பரவுகின்றார். 'பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்' என்பது நம் அருணகிரியாருக்கே உரித்தான தனித்துவமான; கவித்துவமான சொல்லாடலன்றோ (கிருஷ்ண கிருஷ்ண)!!
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...இரவாகப்
பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ...ஒருநாளே
No comments:
Post a Comment