திருப்புகழில் திருஞானசம்பந்தர் (அம்பிகையின் இரு அருளாசிகள்):

முருகப் பெருமானின் சாரூப்ய முத்தி பெற்றிருந்த ஓர் உன்னத ஆன்மாவையே சிவபரம்பொருள் திருஞானசம்பந்தராக அவதரிக்கச் செய்துள்ள காரணத்தால், அருணகிரியார் உள்ளிட்ட அருளாளர்கள் சம்பந்த மூர்த்தியை முருகப் பெருமானின் அவதாரமாகவே (உபச்சார வழக்கமாய்) போற்றி வந்துள்ளனர். இவ்வரிய நுட்பத்தினை நம் வாரியார் சுவாமிகள் பல்வேறு விரிவுரைகளில் தெளிவுறுத்தி வந்துள்ளார். இனி இப்புரிதலோடு பதிவிற்குள் பயணிப்போம். 

சிவமாகிய பரம்பொருள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு அரிய நிகழ்வுகளை, ஞானப் பெருநிலையிலுள்ள அடியவர்களுக்கு உணர்த்தி வருவது கண்கூடு. அம்முறையில் ஞானப்பாலுண்ட நிகழ்வு தொடர்பாக நம் தெய்வச் சேக்கிழாருக்கு இறைவர் உணர்த்தியருளிய குறிப்பினை முதற்கண் சிந்திப்போம், 
-
அம்பிகை சிவஞானமேயாகிய தன் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்திலிட்டு, 3 வயதே நிரம்பியிருந்த ஞானசம்பந்தக் குழவிக்கு, ''இதனை உண்பாய்' என்று அளித்தருளியதாக நம் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம் - 68)
எண்ணரிய சிவஞானத்(து) இன்னமுதம் குழைத்தருளி
'உண்அடிசில்' எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்(து)
அண்ணலைஅங்கழுகை தீர்த்(து) அங்கணனார் அருள்புரிந்தார்

இது ஒருபுறமிருக்க, 15ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரியாருக்கு நம் ஆறுமுகக் கடவுள் இந்நிகழ்வு தொடர்பான, அம்பிகையின் மேலும்இரு அருளாசிகளையும் உணர்த்திப் பேரருள் புரிந்துள்ளான். இதனைப் பின்வரும் பழனித் திருப்புகழ் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்து மகிழ்வோம்,

(1) ('பகர்தற்கரிதான செந்தமிழ் இசையில்' என்று துவங்கும் திருப்புகழ்)

நுகர்வித்தகமாகும் என்றுமை மொழியில்பொழி பாலைஉண்டிடு
     நுவல் மெய்ப்புள பாலன் என்றிடும் ...இளையோனே
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'நுகர் வித்தகமாகும்' - இதனை உண்டு சிவஞானம் பெறுவாய்' என்பதாக அம்பிகையின் முதல் அருளாசி அமைந்திருக்கின்றது)

(2)  ('கலவியில் இச்சித்திரங்கி' என்று துவங்கும் திருப்புகழ்),

பலவித நல்கற்படர்ந்த சுந்தரி
     பயில்தரு வெற்புத் தரும் செழும்கொடி
          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்ற பாலைப்

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகர்என இச்சித்துகந்து கொண்டருள்
          பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...தம்பிரானே
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகர்' - 'திசைகள் யாவும் போற்றும் தன்மையில், சிவஞானத்தை விளைவிக்கும் செந்தமிழ்ப் பாக்களைப் பாடுவாய்' என்பதாக நம் அம்பிகையின் மற்றொரு அருளாசி அமைந்திருக்கின்றது). 

(இறுதிக் குறிப்பு: இவ்வைகையான திருப்பாடல்களை நாமும் பலசமயம் படித்து வந்திருப்பினும், மேற்குறித்துள்ள நுட்பங்களை ஒருவாறு மேலோட்டமாய்க் கடந்து சென்றிருப்போம். சிவத்திரு. தணிகைமணி அவர்கள் தம்முடைய ஆய்வு நூலில் இவ்விதமான திருப்பாடல் வரிகள் ஒவ்வொன்றினையும் ஆய்ந்தறிந்து அதன் நுட்பங்களைப் பிரகடனப் படுத்தியுள்ளார். அப்பெருமகனாரை இச்சமயத்தில் நன்றியோடு நினைவு கூர்ந்து போற்றுதல் அடியவர் கடன்)

No comments:

Post a Comment