அருணகிரிப் பெருமானார் ஞானசம்பந்த மூர்த்தியின் மீது அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்த தகைமையாளர், எண்ணிறந்த தமது திருப்பாடல்களில் சீகாழி வேந்தரின் அவதார நிகழ்வுகளையம் அருட்செயல்களையும் போற்றிப் பரவி மகிழ்ந்துள்ளார்.
(1)
முதற்கண் அருணகிரியார் காழி அண்ணலுக்கு சூட்டி மகிழ்ந்துள்ள பல்வேறு அடைமொழிகளையும், சிறப்புத் திருநாமங்களையும் காண்போம்,
1. கவுணிய குலாதித்தன் ('சமரமுக வேலொத்த' என்று துவங்கும் கதிர்காமத் திருப்புகழ்)
2. சதுர்வேதச் சிறுவன் ('கறுவி மைக்கணிட்டு' என்று துவங்கும் திருவரத்துறைத் திருப்புகழ்)
3. சுருதித் தமிழ்க்கவிப் பெருமாள் ('கவடுற்ற சித்தர்' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழ்)
4. ஞானபுனிதன், கவிவீரன் ('எழுகுநிறை' என்று துவங்கும் திருக்கழுக்குன்றத் திருப்புகழ்)
5. முத்தமிழ் விரகன், நாற்கவி ராஜன் ('ஓருருவாகி' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கை)
6. தவமுனி ('நெய்த்த சுரி குழல்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
7. திருந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோன் ('இருந்த வீடும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்)
8. புகலியில் வித்தகர் ('புமியதனில்' என்று துவங்கும் திருக்கயிலைத் திருப்புகழ்)
9. முத்தமிழாகரன் ('ஒய்யாரச் சிலையாம்' என்று துவங்கும் சீகாழித் திருப்புகழ்)
10. விருது கவிராஜ சிங்கம் ('கருவினுருவாகி' என்று துவங்கும் பழனித் திருப்புகழ்)
(2)
குமாரக் கடவுளின் சாரூப முத்தி பெற்றிருந்த முத்தான்மா ஒருவரே திருஞானசம்பந்தராக அவதரித்திருந்த தன்மையினால், அருணகிரியார் சம்பந்தச் செல்வரைக் குமாரக் கடவுளின் சுவரூபமாகவே போற்றும் கொள்கையைக் கொண்டிருந்தார். இது தொடர்பான இரு திருப்பாடல்களை இனிக் காண்போம்,
(நெய்த்த சுரி குழல்' என்று துவங்கும் வயலூர் திருப்புகழ்)
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீறிடவே
புக்க அனல்வய மிக ஏடுயவே ....உமையாள்தன்
புத்ரனென இசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் ....வருவோனே
('ஓருருவாகி' என்று துவங்கும் திருவெழுகூற்றிருக்கை)
ஒருநாள் உமைஇரு முலைப்பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
எழில்தரும் அழகுடன் கழுமலத்(து) உதித்தனை
(3)
தமை ஆளுடைய கந்தப் பெருமானிடம், 'ஐயனே! இப்புவிக்கே பிரபுவாக; தனித்தலைமை கொண்டு விளங்கும் புகலி வேந்தரின் அருளிச் செயல்களைப் போல, அற்புத அற்புதமான பாமாலைகளை உன்மீது புனைந்தேத்தும் அரியதொரு ஞானத்தை, உன் திருவடித் தொண்டனான அடியேனுக்கும் அளித்தருள் புரிவாய்' என்று உளமுருக வேண்டுகின்றார். கந்தவேளும் திருப்புகழ் அரசரின் அவ்விண்ணப்பத்தினை முற்றுவிக்கின்றான்,
('புமியதனில்' என்று துவங்கும் திருக்கயிலைத் திருப்புகழ்)
புமியதனில் ப்ரபுவான
புகலியில் வித்தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமை தனக்கருள்வாயே!
சீகாழி வள்ளல் 16,000 திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளதாக சைவ சமயச் சான்றோர் பொதுவில் குறிப்பர். அம்முறையிலேயே நம் அருணகிரியாரும் (சம்பந்த மூர்த்தியின் குருவருளாலும்; அறுமுகக் கடவுளின் திருவருளாலும்) 16,000 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.
(4)
மேற்குறித்துள்ள அனைத்திற்க்கும் சிகரம் வைக்குமாற்போலே, பின்வரும் கந்தர்அந்தாதித் திருப்பாடலில், 'ஞானசம்பந்த மூர்த்தியைத் தவிர்த்துப் பிறிதொரு தெய்வமேயில்லை' என்று போற்றுவாராயின், திருஞானசம்பந்தரின் மீது அருணகிரியார் கொண்டிருந்த பெருமதிப்பு தெள்ளென விளங்குமன்றோ,
(கந்தர் அந்தாதி - திருப்பாடல் 29)
திகழும் அலங்கல் கழல்பணிவார் சொற்படி செய்ய !ஓ
தி கழுமலம் கற்பகவூர் செருத்தணி செப்பி வெண் !பூ
தி கழுமலம் கற்பருளும் என்னா அமண் சேனை !உபா
தி கழு மலங்கற்(கு) உரைத்தோன் அலதில்லை தெய்வங்களே!!!
(கடினப் பதங்களை உடைய இத்திருப்பாடலின் சுருக்கமான பொருளை இனிக் காண்போம்)
அடித்தொண்டர் உய்யுமாறு தேவாரப் பனுவல்களை அருளிச் செய்தவரும், 'சீகாழி; அமராவதி; திருத்தணி எனும் திருப்பெயர்களை உச்சரித்தவாறே திருநீற்றினைத் தரித்துக் கொள்வதே சிவமாகிய மெய்ப்பொருளை அடைவிக்கும்' எனும் மெய்யுணர்வற்ற அமணர்களின் திறத்தை அழித்தவருமாகிய, (அறுமுகக் கடவுளின் வடிவினரான) ஞானசம்பந்த மூர்த்தியை அன்றிப் பிறிதொரு பிரத்யட்ச தெய்வமில்லை!!!
No comments:
Post a Comment