'கந்தர் அலங்காரத்தில்' ஈகையின் சிறப்பு:

'தாழாது அறம் செய்மின்' என்பார் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகள். அவ்வழியில் நம் அருணகிரிப் பெருமானும், 107 திருப்பாடல்களைக் கொண்ட தம்முடைய கந்தர் அலங்காரத் தொகுப்பில், வறியவர்க்கு உதவும் ஈகைச் செயலின் அவசியத்தை 9 திருப்பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். இனி அதன் நுட்பங்களை இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

(திருப்பாடல் 16):

'ஆறுமுகக் கடவுளின் திருவருள் தானே வந்து நம்மை எய்துவதற்கு' அருணகிரியார் கூறும் 4 வழிமுறைகளில் 'தானமிடுவதும்' ஒன்று ('தானம் என்றும் இடுங்கோள்'). 'என்றும்' என்று குறித்திருப்பதால் 'இச்செயல் வாழ்நாள் முழுவதுமே கைக்கொள்ள வேண்டிய நெறி' என்பது தெளிவு. 
-
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத், தானம்என்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழு பாரும்உய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே 

(திருப்பாடல் 18):

'நொய்யின் அளவேனும் பிறர்க்கு அளித்துதவுங்கள்; அதீதமாகச் சேர்த்து வைத்து வைத்துள்ள பொருள் யாவுமே வீண்; ஆன்மா உடலினை விட்டுச் செல்லும் இறுதி யாத்திரைக்கு வேறெதுவும் உடன் வராது' என்று இத்திருப்பாடலில் எச்சரிக்கின்றார். 
-
வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யின் பிளஅளவேனும் பகிர்மின்கள், நுங்கட்(கு) இங்ஙன்
வெய்யிற்கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல், 
கையில் பொருளும்உதவாது காணும் கடைவழிக்கே 

(திருப்பாடல் 51)

'அனுதினமும் அன்பொடு கந்தக் கடவுளைப் போற்றுவதும், இல்லாதவர்க்குத் தொடர்ந்து பகிர்ந்து வருதலுமே, இறுதி ஆன்ம யாத்திரைக்கு வழித்துணை' என்று மற்றுமொரு முறை இத்திருப்பாடலில் தெளிவுறுத்துகின்றார்,
-
மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும் 
தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்,
இலையாயினும் வெந்த(து) ஏதாயினும் பகிர்ந்(து) ஏற்றவர்க்கே 

(திருப்பாடல் 53)

'பொருள் உள்ள போதே பிறர்க்கு ஈயாதவர் வாழ்நாளை வீணுக்குக் கழிப்பவராவார், அவ்வகையில் சேர்த்து வைத்துள்ள பொருள் பலவகையிலும் மறைந்து, உரியவருக்கே உதவாமல் போகும்' என்றும் இத்திருப்பாடலில் எச்சரிக்கின்றார்,
-
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால் 
பாடிக் கசிந்(து) உள்ள போதே கொடாதவர், பாதகத்தால் 
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே

(திருப்பாடல் 54)

'ஐயனே, பிறர்க்கு உதவும் உத்தமமான ஈகைச் செயலுக்கு அடியவனை விதிக்காமல் விட்டனையே' என்று இத்திருப்பாடலில் அருணகிரியார் வருந்திப் பாடுகின்றார். 
-
சாகைக்கு(ம்) மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்(கு) ஒன்(று)
ஈகைக்கெனை விதித்தாய்இலையே, இலங்காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலை வளைத்தோன் மருகா, மயில் வாகனனே 

(திருப்பாடல் 59)

அற்புதத் திருப்பாடலிது, 'இல்லாதவர்க்கு நாம் இன்று செய்யும் ஈகைச் செயலானது, வேலாயுதக் கடவுளின் திருவருள் போலத் 'தக்க இடத்தில; தக்க நேரத்தில்' நம்மைத் தேடி வந்து துணை செய்யும்', அது விடுத்து 'நாம் அலங்காரமாய்ச் சேர்த்து வைத்துள்ள யாதொன்றுமே எள்ளளவும் துணை செய்யாது' என்று எச்சரிக்கின்றார் அருணகிரியார். 
-
பொங்கார வேலையில் வேலைவிட்டோன்அருள் போலுதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்(கு) இட்ட(து), இடாமல்வைத்த
வங்காரமும்; உங்கள் சிங்கார வீடு(ம்); மடந்தையரும் 
சங்காதமோ, கெடுவீர் உயிர்போம் அத்தனிவழிக்கே 

(திருப்பாடல் 66)

ஒரு புறம் 'இவ்வுடல் நீர்க்குமிழி போன்றது, செல்வம் நிலையற்றது; மின்னல் போலும் மறைந்து விடுவது' என்று பலவாறு அறிஞர்கள் போலும் பேசுவர், மற்றொரு புறம் 'எவரேனும் உதவி கேட்டு வந்தாலோ யாதொன்றும் கூறாமல் அவ்விடம் விட்டு அகன்று சென்று விடுவர்'. 'அறுமுகக் கடவுளின் மீது பக்தியிலாத இத்தகையோரின் செயல் மிகவும் நன்று' என்று பரிகசிக்கின்றார் அருணகிரியார். ஆதலின் 'பிறர்க்குதவும் ஈகைச் செயலும் பக்தியின் ஒரு அங்கம்' என்பது புலனாகின்றது. 
-
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கை, நில்லாதுசெல்வம்,
பார்க்குமிடத்(து)அந்த மின்போலும்என்பர், பசித்து வந்தே
ஏற்கும்அவர்க்கு இடஎன்னின் எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவு(ம்) நன்றே 

(திருப்பாடல் 75)

'பிறற்கு உதவி அதனால் எய்தும் வறுமைப் பேற்றினை எய்தாமல் போய் விட்டேனே' என்று தன்னைத் தானே நொந்து கொள்கின்றார் அருணகிரியார் ('முசியாமல்இட்டு மிடிக்கின்றிலை'). 
-
(குறிப்பு: 'இளையான்குடி மாற நாயனார்' வரலாற்றில் தெய்வச் சேக்கிழார் 'மாற நாயனாருக்கு வறுமைப்பதம் எய்துமாறு தில்லைப் பரம்பொருள் செய்தருளினார்' என்கின்றார் ('நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாடொறு மாறி வந்(து) ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்'). வாரியார் சுவாமிகள் தம்முடைய பெரிய புராண விரிவுரையில், 'அடியவர்க்கு உதவி, அதன் பொருட்டு எய்தியதால் வறுமையும் பதமாயிற்று' என்று இச்சொல்லாடலை வியந்து போற்றுவார்'. 
-
படிக்கின்றிலை, பழநித் திருநாமம் படிப்பவர்தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல்இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்த(ம்) மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே

(திருப்பாடல் 100)

'இடுதலாகிய ஈகைச் செயலை ஒரு சிறிதும் கருதாதவன்' என்று அருணகிரியார் இத்திருப்பாடலில் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாலும், இது நமக்கான அறிவுறுத்தல் என்றே கொள்ளுதல் வேண்டும். 
-
இடுதலைச் சற்றும் கருதேனைப் போதமிலேனை அன்பால் 
கெடுதல்இலாத் தொண்டரில் கூட்டியவா, கிரெளஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப் பட்டது, விட்டது பாச வினைவிலங்கே

No comments:

Post a Comment