சூரபத்மன் கண்ட விஸ்வரூப தரிசனம் (பகுதி 2) - (கந்தபுராண நுட்பங்கள்):

போர்க்களத்தில் முருகப் பெருமான், கோடானகோடி அண்டங்களும் அவற்றிலுள்ள உயிரினங்களும் தன் திருமேனிக்குள் அடங்கியிருத்தலையும், தன் வடிவத்திற்கு அப்பாற்பட்டதொரு பொருளில்லை என்றுணர்த்தவும் பெருவடிவம் கொண்டருள்கின்றார். சூரனுக்கு அதனைத் தரிசிக்கும் ஞானப் பார்வையையும் நல்லறிவையும் சிறிது நேரத்திற்கு அளித்து அருள் புரிகின்றார். 

சூரன், கந்தவேளின் இப்பெருவடிவத்தைத் தரிசித்து எண்ணியவற்றை (நேற்று) முதற் பகுதியில் சிந்தித்தோம். இனி அதன் தொடர்ச்சியாய்க் கச்சியப்ப சிவாச்சாரியாரின் பின்வரும் திருப்பாடல்களை உணர்ந்து மகிழ்வோம், 

(1)
ஆறுமுக அண்ணல் கொண்டருளிய இப்பெருவடிவத்தினை, அடி முதல் முடி வரை ஆயிரமாயிரம் கோடி யுகங்கள் தொடர்ந்து தரிசித்தாலும், கண்ணிற்கும் கருத்திற்கும் அடங்காதது. இந்நிலையில் விளங்கியருளும் பெருங்கடவுள் என்னுடன் போர் புரிய எழுந்தருளியுள்ளார் எனில் அது அம்மூர்த்தியின் அருளேயன்றி பிறிதொன்றும் காரணமில்லை. 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 441)
அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும்
எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கினாலும் 
கண்ணினால் அடங்காதுன்னில் கருத்தினால் அடங்காதென்பால்
நண்ணினான் அமருக்கென்கை அருளென நாட்டலாமே

(2)
என் அகந்தையானது முற்றிலும் அழிந்தொழிந்தது, சிவஞானம் கைவரப் பெற்றேன், என் வலது கண்ணும் தோளும் சுபசகுனமாய்த் துடிக்கின்றன. அண்டகோடிகள் யாவையும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற குமாரக் கடவுளின் பெருவடிவத்தை இத்தருணத்தில் தரிசிக்கும் பேறு பெற்றேன், இதனைக் காட்டிலுமொரு தவப்பயன் உண்டோ?
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 443)
போயின அகந்தை போதம் புகுந்தன வலத்ததான
தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன புவனமெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படுகின்ற விண்ணோர்
நாயகன் வடிவன் கண்டேன் நற்றவப் பயன் ஈதன்றோ

(3)
முதற்பொருளான இம்முருகப் பெருமானை கால்களால் வலம் வருதல் வேண்டும், கைகளால் உச்சிகூப்பி வணங்குதல் வேண்டும், தலையைத் தாழ்த்திப் பணிந்திடல் வேண்டும், நாவினால் போற்றி செய்திடல் வேண்டும், தீமைகளகன்ற நிலையில் இவர்க்குத் தொண்டு புரிந்து வாழுதல் வேண்டும். எனினும் 'சமர்க்களத்திற்கு வந்த பின்னர் எவ்வாறு இச்செயல்களைப் புரிவது?' என்று மான உணர்ச்சியும் ஆணவமும் தடுக்கின்றதே! 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 444)
சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலு
ஆழுதல் வேண்டும் தீமை அகன்றுநான் இவற்காளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே
-
(சொற்பொருள்: தால் - நாக்கு)

(4)
விண்ணுளோர் யாவரையும் 108 யுகங்களாகச் சிறைவைத்தும், வதைத்தும் வந்ததைப் பலரும் தவறென்றார். இன்று அச்செயலாலன்றோ, தேவர்களும் தெய்வங்களும் காண்பதற்கரிய ஆறுமுகப் பெருங்கடவுள் இத்தன்மையில் என்னிடம் எழுந்தருளி வந்துள்ளார். ஆதலின் 'அச்செயல்கள் நன்மையையே விளைவித்துள்ளன' என்பேன், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 447)
ஏதமில் அமரர் தம்மை யான்சிறை செய்ததெல்லாம் 
தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா
நாதன்இங்கணுகப் பெற்றேன் நன்றதே யானதன்றே

(5)
முதல்வருக்கும் முதல்வராய் எழுந்தருளி வந்துள்ள இக்குமாரக் கடவுளின் எதிர்நின்று போர் புரிந்துள்ளேன், இதை விடவும் ஒரு பெருமை வாய்த்து விட இயலுமோ? வீரனென்னும் நீங்கா நிலை பெற்றேன். இனி ஒருக்கணமும் உள்ளம் தளரேன், என் உடல் அழிந்து படலாம் எனினும் ஆறுமுகப் பரம்பொருளின் திருமுன்னர் நின்று சமர் செய்த புகழ் என்றுமே மறையாது நிலைக்குமன்றோ!
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 448)
ஒன்றொரு முதல்வனாகி உறைதரு மூர்த்தி முன்னம்
நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா
நன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானேயானேன்
என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்பதுண்டோ

No comments:

Post a Comment