சூரபத்மன் எடுத்த பல்வேறு வடிவங்களும் ஆறுமுகக் கடவுளின் போர்த்திறனும் (கந்தபுராண நுட்பங்கள்):

சூரபத்மன் மலை போன்ற சக்கிரவாகப் பறவையாய் வடிவெடுத்துப் பெரும் ஆரவாரத்துடன் முருகப் பெருமானின் பூதப் படையினரைப் பெருமளவு குத்திக் கிழித்து விழுங்கத் துவங்குகின்றான். கந்தவேள் இந்திர மயிலேறிக் கடுமையான யுத்தத்தினால் அப்பறவை வடிவத்தினை அழிக்கின்றான். பின்னர் சூரன் பூமியாகவும்; பெரும் தீயாகவும்; ஊழிப்பெரு வெள்ளமாகவும், சூறாவளிக் காற்றாகவும் ஒவ்வொன்றாய் வர, குமாரக் கடவுள் அவைகளையும் அழித்தொழிக்கின்றான். 

சூரன் அத்துடன் அமைந்தானில்லை, மும்மூர்த்திகளின் வடிவில் வருவான்; தேவர்களாய் வருவான்; இந்திரனாய் வருவான்; இயமனாய் வருவான்; பேயாய் வருவான்; கடலாய் வருவான்; ஆலகால விடமாய் வருவான்; கொடிய பாம்பாய் வருவான்; சூரியனாய் வருவான்; எண்திசை யானைகளாய் வருவான்; ஆண் சிங்கமாய் வருவான்; தாரகாசுரனாய் வருவான்; சிங்கமுகாசுரனாய் வருவான்; தன் மகன் பானுகோபானாய் வருவான்; மாண்ட அசுரப் படை படை வீரர்கள் அனைவருமாய்த் திரண்டு வருவான், இவ்வாறு எண்ணிறந்த வடிவங்களை ஒரே சமயத்தில் எடுத்து வந்து பூதப் படையினரையும் தேவர்களையும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றான். வேலாயுதக் கடவுள் ஆயிரம் கோடி அம்புகளால் அவ்வடிவங்களையும் மிச்சமில்லாமல் அழிக்கின்றான். 

சூரன் கடும் சினத்துடன், அண்டம் முழுவதையும் மறைக்கும் தன்மையில் இருள் வடிவெடுத்துப் பெரும் ஆரவாரத்துடன் தேவர்களைக் கொன்று குவிக்க விரைந்து வருகின்றான்.

(1)
தேவர்கள் 'இன்றே நாம் அழிந்தோம்' என்று கதறிப் பதறி வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடியவாறே ஆறுமுகக் கடவுளை நோக்கி 'ஓலம்; ஓலம்' என்று அலறுகின்றனர்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 460)
நண்ணினர்க்(கு) இனியாய் ஓலம் ஞானநாயகனே ஓலம்
பண்ணவர்க்(கு) இறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற்கரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 461)
தேவர்கள் தேவே ஓலம் சிறந்த சிற்பரனே ஓலம்
மேவலர்க்(கு) இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்(கு) எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவருமாகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்

(2)
ஐயனே, 'சூரனின் காரிருள் வடிவத்தினை எதிர்கொள்ளவோ ஓடி ஒளியவோ வலிமையற்று வருந்துகின்றோம். இனியும் காலம் தாழ்த்தாமல் சூரனின் உயிரைப் போக்கி எங்கள் உடலிலுள்ள ஆவியை எங்களுக்கே உரியதாக்கித் தந்தருளுங்கள்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 462)
கங்குலின் எழுந்த கார்போல் கனையிருள் மறைவின் ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மையில்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையுநீ தாழ்க்கல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டெம்ஆவியை அருளுகென்றார்

(3)
ஆறுமுகப் பெருமான் தன் திருக்கரத்திலிருந்த வேலினை விடுக்க, அவ்வேலானது ஆயிரம் கோடி சூரியர்களின் ஒளியோடு, கூர்மையான தலைப் பகுதியில் தீப்பிழம்பினை வெளிப்படுத்தியவாறு விரைந்து சென்று, சூரனின் அப்பேரிருள் வடிவத்தினை முற்றிலுமாய் அழித்தொழிக்கின்றது (ஆயிரம் கோடி சூரியர்களின்  ஒளி சேர்ந்து போக்க வேண்டுமாயின், சூரன் எடுத்திருந்த இருள் வடிவம் எத்தன்மையில் அச்சமூட்டுவதாக இருந்திருக்கும் என்பது தெள்ளென விளங்குமன்றோ!),
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 465)
ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீயழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவமுற்றும் வல் விரைந்தகன்றதன்றே
-
(சொற்பொருள்: ஞாங்கர் - வேல், அருக்கர் - சூரியன், சிகழி - வேலின் கூர்மையான தலைப்பகுதி)

No comments:

Post a Comment