சூரசம்ஹார நிறைவு - தேவர்கள் ஆறுமுகக் கடவுளைப் போற்றுதல் (கந்தபுராண நுட்பங்கள்):

வீரமகேந்திரபுரத் தீவில் நடந்தேறிய சூரசம்ஹாரப் போரில் ஆறுமுகக் கடவுள் வெற்றி வாகை சூடி, சூரனை சேவலும் மயிலுமாக ஆட்கொண்டு, வெற்றி வேலாயுதக் கடவுளாக மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் அனைவருக்கும் திருக்காட்சி அளிக்கின்றான்.

(1)
தேவர்கள் இத்திருக்காட்சியைத் தரிசித்து உடலெலாம் புளகமுற ஆரவாரம் செய்கின்றனர். ஆனந்தத்தால் துள்ளுகின்றனர், ஆடிப் பாடுகின்றனர், பூத்தூவிப் போற்றுகின்றனர். குமாரக் கடவுளின் திருவருளை வேண்டித் தொழுகின்றனர், மயில் வாகனக் கடவுளைச் சூழ்ந்து நெருங்கி நின்றவாறு பலப்பல துதிகளால் போற்றி செய்கின்றனர். 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 2)
ஆர்த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்
போர்த்தனர் பொடிப்பின் போர்வை பொலங்கெழு பூவின்மாரி
தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர்வேல் கொண்ட
தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்து வாழ்த்தெடுக்கல் உற்றார் 

(2)
பெருமானே, 108 யுகங்களாக சூரபத்மன்; தாரகாசுரன்; சிங்கமுகாசுரன் ஆகியோரால் சொல்லொணாத் துயருக்கு உள்ளாகி, உளமிகப் புழுங்கிக் கதியற்றுக் கதறியிருந்த எங்களை ஆட்கொள்ளவன்றோ, ஆறு திருமுகங்களோடு தோன்றி அருளினாய், 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 4)
மாறுமுகம் கொண்டுபொரு வல்லவுணர் மாளாமல்
நூறு முகமெட்டு நோதக்கன புரியத்
தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளவன்றோ
ஆறுமுகம் கொண்டே அவதரித்தாய் எம்பெருமான்
-
(சொற்பொருள்: நோதக்கன புரிய - துன்பம் தரும் செயல்களைப் புரிய) 

(3)
குமரப் பெருமானே, அசுரர்களால் எண்ணில் பலகாலம் வதைக்கப்பட்டு, தன்னிலை மறந்து; சிறப்புகள் யாவற்றையும் இழந்து, உளம் பதைத்து, இறந்தவர்களே என்று கூறத் தகும் நிலையில் புலம்பித் திரிந்திருந்தோம். இன்று நீ அந்நிலையை மாற்றி அருள் புரிந்தமையால், மீண்டும் உயிர் பெற்றவர்களானோம், 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 6)
மன்ற அவுணர் வருத்திட இந்நாள்வரையும்
பொன்றினவர் என்னப் புலம்பித் திரிந்தனமால்
இன்று பகைமாற்றி எமக்கருள்நீ செய்கையினால்
சென்றஉயிர் மீண்ட திறம் பெற்றனம் ஐயா

(4)
ஐயனே, 'செயல்கள் யாவையும் செய்விப்பதும்; அச்செயல் புரிவதற்குரிய அறிவு மற்றும் ஆற்றலாக விளங்குவதும், அச்செயலால் வரும் பயனாக அமைவதும், யாவுமாக நின்றருள் புரிவதும் நீயே' எனும் சத்தியத்தை இன்று இச்சமயத்தில் ஐயமின்றி உணர்ந்து கொண்டோம். ஆதலின் பிறவிக் கடலினின்றும் நீங்கப் பெற்றவர்களாகி உய்ந்தோம்,
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 7)
செய்யும் அவனும் புலனும் செய்வித்து நிற்போனும்
எய்த வரும் பொருளும் யாவையு(ம்) நீயே என்கை
ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால்
வெய்ய பவமகன்று வீடும்இனிக் கூடுதுமால்

(5)
எங்களுக்குப் பெரிதும் இடர் புரிந்து வந்த அசுரர்களையெல்லாம் அழித்துக் காத்தருளினாய். ஆதலின் இனி அடியவர்களாகிய நாங்கள் பிறிதொன்றையும் வேண்டோம், உனையன்றி எவரொருவரையும் புகழோம், உன் திருவடிக்கே தொண்டு புரியும் பெருநிலையை எய்தினோம், 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 8 )
ஈண்டே எமருக்கிடர்செய் அவுணரெலாம்
மாண்டே விளியும் வகைபுரிந்து காத்தனையால்
வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே
பூண்டேம் தொழும்பு புகழேம் பிறர்தமையே

No comments:

Post a Comment