சூரபத்மன் பெற்ற பெருவாழ்வு (கந்தபுராண நுட்பங்கள்):

மாமர வடிவிலிருந்த சூரபத்மனை ஆறுமுகக் கடவுளின் சக்தி வேலானது இரு கூறுகளாகப் பிளக்க, சூரன் சிவந்த மாணிக்க மலை போன்ற சேவலாகவும்; பச்சை நிற மரகத மலை போன்ற மயிலாகவும் மீண்டுமொரு முறை வடிவெடுத்து, மிக உறுதியுடன் வேலாயுதப் பெருங்கடவுளின் திருமுன்னர் யுத்தமிடும் பொருட்டு செல்கின்றான். 

கருணைப் பெருங்கடலான கந்தக் கடவுள் தன் திருவருள் நோக்கினைச் சூரன் மீது செலுத்த, சேவலும் மயிலுமாயிருந்த சூரன் பகைமை முற்றிலுமாய் நீங்கித் தெளிவு பெற்ற மனத்தினனாய் நிற்கின்றான். 

(1)
பகைமையுடன் கடும் யுத்தம் புரிந்த சூரபத்மனே இத்தன்மையில் வரம்பிலா பெருவாழ்வு பெருவானாயின், 'எத்தகு தீமை புரிந்தவராயினும் குமாரக் கடவுளின் திருமுன்னர் வந்து சேர்ந்தால் தூயவராகி மேன்மைகள் யாவும் பெற்றுய்வு பெறுவர்' எனும் கூற்றிற்குப் பிறிதொரு சான்றும் வேண்டுமோ?
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 496)
தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான்

(2)
கந்தப் பெருமான் சேவலாகிய சூரனிடம், 'நீ விரைந்து கொடியாகி நமது பெரிய தேரில் பொருந்தியிருந்து ஆர்ப்பரிப்பாயாக' என்று திருவருள் புரிகின்றான். அச்சேவலும் 'இது தக்கதொரு பணியே' என்று தனித்து விண்மிசை எழுகின்றது, 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 497)
அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட உருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி
மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்
தக்கதே பணிஇதென்னா எழுந்தது தமித்து விண்மேல்
-
(சொற்பொருள்: குக்குடம் - கோழி, ஆர்த்தி - ஆர்ப்பரிப்பாய், தமித்து - தனித்து)

அச்சேவல் குகக் கடவுளின் தேரிலுள்ள கொடியாகி, அண்டங்கள் யாவும் அதிருமாறு ஆர்ப்பரிக்கின்றது.

(3)
பின்னர் கார்த்திகேயக் கடவுள் அதுவரையிலும் ஆரோகணித்திருந்த இந்திர மயிலை நீக்கி, மெய்யுணர்வு பொருந்தி நின்றிருந்த சூரனாகிய மயிலிடம் 'இனி நீ நம்மைச் சுமப்பாயாக' என்றருளி அதன் மீது ஆரோகணித்து, இப்புவியிலுள்ள திசைகள் யாவிலும் வலம் வருகின்றான்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 499)
சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வு கொண்டொழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞையேறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்தலுற்றான்

(4)
மேருமலை பிளவு பட, நிலவுலகம் யாவும் அதிர்ந்து இடிபட, செந்தீயுமிழும் அக்கினி தேவனும்; சூறாவளிப் பெருங்காற்றை வெளிப்படுத்தும் வாயுதேவனும் அஞ்சித் துடிதுடிக்கும் தன்மையில், இடிக்கூட்டங்களின் பேரோசையும் பொடிபடுமாறு, தன் தோகைகளை வீசி சூரனாகிய ஆண்மயில் சிவகுமரனைச் சுமந்தவாறு விண்மிசை வலம் வருகின்றது,
-  
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 500)
தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத்தொடுங்கச் சூறை
துடித்திட அண்டகூடம் துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரள ஆர்த்திட்டேகிற்றுத் தோகை மஞ்ஞை

No comments:

Post a Comment