திருச்செந்தூரில் ஆறுமுகக் கடவுளுக்கு நடந்தேறிய அற்புத வழிபாடு (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் சூரசம்ஹார நிகழ்விற்குப் பின்னர் யாவரும் உடன் வர, இலங்கையிலிருந்து புறப்பட்டுக் கடல் கடந்து திருச்செந்தூர் தலத்திற்கு மீண்டும் எழுந்தருளி வருகின்றான்.

அன்றைய மாலைப்பொழுதில் நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் கந்தவேளிடம், 'அடியவர்களாகிய நாங்கள் உம்முடைய திருவடிகளுக்குப் பூசனை புரியப் பெரிதும் விழைகின்றோம்' என்று பணிந்து வேண்டுகின்றனர், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 22)
அன்னதொரு போழ்துதனில் ஆறிரு தடந்தோள்
முன்னவனை நான்முகவனே முதல தேவர்
சென்னிகொடு தாழ்ந்து சிறியேங்கள் இவண்உந்தன் 
பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றார்

வேலாயுதப் பெருங்கடவுளும் அதற்கிசைந்தருள, மணம் பொருந்திய நன்னீர்; சந்தனம்; எண்ணிறந்த மலர்கள்; தூப தீபங்கள்; நிவேதனங்கள் என்றிவைகளை மிக விரைந்து சேகரித்துக் கொள்கின்றனர், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 23)
என்றுரைசெய் காலை எமையாளுடைய அண்ணல்
நன்றென இசைந்திட நறைக்கொள் புனல் சாந்தத்
துன்றுமலர் தீபம்அவி தூப முதலெல்லாம்
அன்றொரு கணத்தின்முன் அழைத்தனர்கள் அங்ஙன்

முன்பொரு சமயம் சிவபரம்பொருள் உமையம்மைக்கு உபதேசித்தருளிய 'குமார தந்திரம்' எனும் ஆகமநூலின் வழிநின்று, அறுமுகக் கடவுளை மன; மெய்; வாக்கினாலும் ஒருமையுற்றுப் பூசித்துப் பணிகின்றனர்,
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 24)
எந்தைஉமை தேர்ந்திட இயம்பிய குமார
தந்திர நெறிப்படி தவா(து) அறுமுகற்கு
முந்திய குடங்கர்முதல் மூவகையிடத்தும்
புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே

குகப் பெருமான் அவ்வழிபாட்டினால் திருவுள்ளம் மகிழ்ந்து, 'குறையேதும் இருப்பின் கூறுவீர்' என்றருள் புரிய, தேவர்களும் 'ஐயனே, சூரன் உள்ளிட்ட அசுரர்கள் யாவரையும் சம்ஹாரம் புரிந்து எங்களைக் காத்தருளினாய், உன் பேரருள் பெற்று நிற்கும் இந்நிலையில் யாதொரு குறையுமில்லை' என்று பணிகின்றனர்,
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 26)
நீண்டஅருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு
வேண்டுகுறை உண்டெனின் விளம்புதிர்கள் என்னக்
காண்டகைய சூர்முதல் களைந்தெமை அளித்தாய்
ஈண்டுனருள் பெற்றனம் யாதுகுறை மாதோ

தேவர்கள் மேலும் தொடர்கின்றனர், 'வேலேந்தும் இறைவனே, இனி எங்கட்கு அருள வேண்டிய வரமொன்றையும்  கூறுகின்றோம், அடியவர்களாகிய எங்கள் உடல் இவ்வுலகில் உள்ள காலஅளவு முழுவதும், சிவஞானமேயாகிய உன்னிரு திருவடிகளில் நிலைத்த அன்பினைத் தந்தருள்வாய் ஐயனே' என்று நெகிழ்ந்துருகி விண்ணப்பித்துப் பணிய, கருணைப் பெருவெள்ளமான செந்திலாண்டவனும் 'அவ்வாறே அளித்தோம்' என்றருள் புரிகின்றான், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 27)
ஒன்றினி அளிப்பதுள(து) உன்னடியம் யாக்கை
நின்றிடு பகல்துணையும் நின்னிரு கழற்கண்
மன்றதலை அன்புற வரம்தருதி எந்தாய்
என்றிடலும் நன்றென இரங்கியருள் செய்தான்

No comments:

Post a Comment