நள்ளிரவில் தோன்றிய வேடுவ வேலவன் (கந்தபுராண நுட்பங்கள்):

தினைப்புனத்தில் கந்தப் பெருமான் ஆட்கொண்டருளிய நிகழ்விற்குப் பின் இல்லம் திரும்பும் வள்ளியம்மை எவருடனும் உரையாடாமல், பிரிவுத் துயரால் பெரிதும் வருந்திய வண்ணமிருக்கின்றாள். வேட்டுவ குலத்தினர் தங்கள் குலதெய்வமான குமாரக் கடவுளுக்கு வெறியாட்டு விழாவொன்றினை நடத்தி வழிபட, கந்தவேளின் திருவருளால் வள்ளியம்மை மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்புகின்றாள். 

(1)
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்க் குமர நாயகன் வள்ளிதேவியின் பிரிவுத் துயரைத் தாளமாட்டாமல், நள்ளிரவு நேரத்தில் (வேடுவ கோலத்தில்) வள்ளிமலைப் பகுதியிலுள்ள வேடுவக் குடியிருப்புப் பகுதிக்கு எழுந்தருளி வருகின்றான். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 161)
வல்லியை நாடுவான் போல் மாண்பகல் கழித்து வாடிக்
கொல்லையம் புனத்தில் சுற்றிக் குமரவேள் நடுநாள் யாமம் 
செல்லுறும்எல்லை வேடர் சிறுகுடி தன்னில் புக்குப்
புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம்போய் நின்றான்
*
வள்ளிதேவியின் தோழியானவள் வேடுவ வேலவனைப் பணிந்து வணங்கி, 'எங்கள் தலைவி உம்மைப் பிரிந்து இனி இனியொருக்கணமும் வாழ இயலாதவளாய்த் தவித்திருக்கின்றாள், ஆதலின் அவளை உம்மிடம் அழைத்து வருவேன்' என்று கூறிச் செல்கின்றாள்.

(2)
தோழியுடன் அறுமுக இறைவனின் திருமுன்பு வரும் வள்ளியம்மை, 'கொடிய வினைகளால் வருந்தியுழலும் அடியவளின் பொருட்டு இந்த நள்ளிரவு வேளையில் உம்முடைய திருவடி மலர்கள் நோகுமாறு நடந்து வருவதோ?' என்று நெகிழ்ந்துருகிப் பணிகின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 165)
அறுமுக ஒருவன் தன்னை ஆயிழை எதிர்ந்து தாழ்ந்து
சிறுதொழில் எயினர் ஊரில் தீயனேன் பொருட்டால் இந்த
நறுமலர்ப் பாதம் கன்ற நள்ளிருள் யாமம் தன்னில்
இறைவநீர் நடப்பதே என்றிரங்கியே தொழுது நின்றாள்

(3)
(கந்தவேளை அடைய) மாதவம் புரிந்திருந்த வள்ளிநாயகி வணங்கியிருக்க, தோழியானவள் வேடுவ வேலவனிடம் 'உங்களிருவரையும் இந்நிலையில் எங்கள் கூட்டத்தவர் காண நேரிடில் தீய விளைவுகள் நேரிடும், ஆதலின் விரைந்து எங்கள் இறைவியைச் சிறப்பு மிக்க உங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பீர்' என்று தேவியைக் கந்தக் கடவுளின் திருக்கரங்களில் ஒப்புவிக்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 166)
மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
தீத்தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும் இன்னே
ஏத்தரும் சிறப்பின்உம் ஊர்க்கிங்கவள் தனைக் கொண்டேகிக்
காத்தருள் புரியுமென்றே கையடையாக நேர்ந்தாள்
-
(சொற்பொருள்: இகுளை - தோழி, எயினர் - வேடர்)

(4)
கருணைப் பெருங்கடவுளான நம் சிவகுமரன் வள்ளியம்மையை ஒப்புவித்து வணங்கியிருக்கும் தோழியிடம், 'மங்கை நல்லாய், எங்களிருவர் பால் நீ கொண்டுள்ள மெய்யன்பினை என்றும் மறவோம்' என்றருள் புரிகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 167)
முத்துறு முறுவலாளை மூவிரு முகத்தினான் தன்
கைத்தலம் தன்னில் ஈந்து கைதொழு(து) இகுளை நிற்ப
மெய்த்தகு கருணை செய்து விளங்கிழாய் நீயெம் பாலின்
வைத்திடு கருணை தன்னை மறக்கலம் கண்டாய் என்றான்

No comments:

Post a Comment