வள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் (கந்தபுராண நுட்பங்கள்):

வள்ளிதேவியின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும்; வளர்ப்புத் தாயும்; செவிலித் தாயும் மற்றுமுள்ளோரும் வள்ளி நாயகிக்கும் முருகப் பெருமானுக்குமான திருமண ஏற்பாடுகளை, வேடுவ குலத்தினரின் மரபுவழி நின்று சிறப்புற செய்கின்றனர்.  

மணப்பந்தலில் அருகே அமர்ந்திருந்த வள்ளிதேவியைக் கந்தப் பெருமான் கருணையோடு பார்த்தருள, அக்கணமே வேடுவ குலத்தினர் புனைந்திருந்த மணக்கோலம் நீங்கி, வள்ளியம்மை தன்னுடைய அவதாரத்திற்கு முன்பிருந்த, திருமாலின் திருக்கண்களினின்றும் தோன்றியிருந்த சுந்தரவல்லி தேவியின் தெய்வத் திருக்கோலத்தினைப் பெறுகின்றாள். அது கண்டு நம்பிராஜன் உள்ளிட்ட வேடுவ குலத்தினர் 'இவள் நம்மிடையே பிறந்து வளர்ந்தது நம்முடைய தவப்பயனே' என்று வியந்து போற்றுகின்றனர்.

(1)
மங்களமான அத்தருணத்தில் வேடுவ மன்னனான நம்பிராஜன் கந்தவேளின் திருக்கரத்தில் வள்ளியம்மையின் கரங்களை வைத்து, 'எங்கள் தவப்பயனாய் வந்துதித்த இவளை பெருவிருப்பத்துடன் உமக்குத் தருகின்றோம்' என்று நீரினால் தாரை வார்த்தளிக்க, அறுமுகப் பெருமான் நம் வள்ளியம்மையை ஏற்றருள் புரிகின்றான். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 199)
அந்தநல் வேலை தன்னில் அன்புடைக் குறவர் கோமான்
கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நம்தவமாகி வந்த நங்கையை நயப்பால் இன்று
தந்தனன் கொள்கவென்று தண்புனல் தாரை உய்த்தான்

(2)
இந்நிகழ்விற்குப் பின்னர், நல்ல தவமுடைய நாரத மாமுனிவன் நான்மறைகளாகிய 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்கள்' முன்னிறுத்தும் வைதீக நெறியின் வழியின் நின்று, யாதொரு குற்றமும் நேராதவாறு திருமண வேள்விச் சடங்குகளை செய்துவிக்கின்றார். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 200)
நற்றவம் இயற்றும் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
கொற்றமதுடைய வேலோன் குறிப்பினால் அங்கியோடு
மற்றுள கலனும் தந்து வதுவையின் சடங்கு நாடி
அற்றமதடையா வண்ணம் அருமறை விதியால் செய்தான்

(3)
அச்சமயத்தில் விண்ணில் நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு மற்றும் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் குழுவும், இவர்களுக்கு நடுநாயகமாய் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தியும் மலைமகளான அன்னை பார்வதிதேவியும் எழுந்தருளித் தோன்றுகின்றனர். சிவசக்தியர் திருமண நிகழ்வுகள் முழுவதையும் விண்ணிலிருந்து கண்டருளிய அற்புதத்தினைக் கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 201)
ஆவதோர் காலை தன்னில் அரியும் நான்முகனும் வானோர்
வொடு பிறரும் சூழக் குலவரை மடந்தையோடும் 
தேவர்கள் தேவன் வந்து சேண்மிசை நின்று செவ்வேள்
பாவையை வதுவை செய்யும் பரிசினை முழுதும் கண்டான்

(4)
ஆறுமுகப் பெருங்கடவுள் (வேடுவர்கள் ஒருசிறிதும் அறியாத தன்மையில்) விண்மிசை எழுந்தருளியிருந்த முக்கண் முதல்வரையும் உமையன்னையையும் அஞ்சலி கூப்பிப் பணிந்து வணங்குகின்றான். பின்னர் ஆர்ப்பரித்து வாழ்த்திப் போற்றியிருந்த மற்றுமுள்ளோர் யாவருக்கும் திருவுள்ளம் மகிழ்ந்துப் பேரருள் புரிகின்றான்.
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 203)
அறுமுகமுடைய வள்ளல் அன்னது நோக்கிச் சீறூர்
இறையதும் உணரா வண்ணம் இமையமேல் அணங்கினோடும் 
கறையமர் கண்டன் தன்னைக் கைதொழு(து) ஏனையோர்க்கு
முறைமுறை உவகை யோடு முழுதருள் புரிந்தான் அன்றே

No comments:

Post a Comment