வேங்கை மரமாகி நின்ற வேலவன் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வேடுவ இளைஞனின் வடிவெடுத்துப் பல்வேறு காதல் மொழிகளால் வள்ளி நாயகியின் அன்பினைப் பெற முயன்று கொண்டிருக்கையில், வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் தனது வேடர் கூட்டத்தினருடன் மகளைக் காணும் பொருட்டு தினைப்புனத்திற்கு வருகின்றான். மறுகணமே அறுமுகப் பெருமான் ஒரு வேங்கை மரமாகி அவ்விடத்தே நிற்கின்றான். 

(1)
அம்மரத்தின் அடிப்பகுதி ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களாகவும், நடுப்பகுதி மேன்மைமிகு சிவாகம நூல்களாகவும், கிளைகள் யாவும் பல்வேறு கிளைகளாகவும் விளங்குமாறு கந்தப்பெருமான் எழுந்தருளி இருக்கின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 75)
ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்

(2)
வள்ளிக்கிழங்குகள்; தேன்; தினைமாவு; கலைமானின் பால்; இவற்றொரு இன்னபிற உணவு வகைகளையும் தன்னுடைய தவப் புதல்வியான வள்ளிதேவிக்கு அன்புடன் அளிக்கும் நம்பிராஜன், தினைப்புனத்தின் நடுவில் புதுமையாகத் தோன்றியிருந்த வேங்கை மரத்தினைக் கண்டு வியப்புறுகின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 76)
கானவர் முதல்வன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
மானினி தன்னைக் கண்டு வள்ளியம் கிழங்கு மாவும் 
தேனொடு கடமான் பாலும் திற்றிகள் பிறவு நல்கி
ஏனலம் புனத்தில் நின்ற யாணர் வேங்கையினைக் கண்டான்
-
(சொற்பொருள்: யாணர் - புதுமையான, கடமான் பால் - கலைமானின் பால்)

உடனிருந்த வேடர்கள் வேங்கை மரத்தினைக் கண்டு, 'எவ்விதம் இம்மரம் இங்கு தோன்றியது, தீங்கு விளைவிக்கும் பொருட்டே இது தோன்றியுள்ளது, இதனைக் காலம் தாழ்த்தாது கோடரியால் வெட்டி வீழ்த்துவோம்' என்று கடும் சினத்துடன் ஆரவாரம் செய்கின்றனர். நம்பிராஜன் அவர்களை அமைதியுறச் செய்து மகளான வள்ளியிடம், 'தினைப்புனத்தின் நடுவே இம்மரம் எவ்விதம் தோன்றியது, உரைப்பாயாக' என்று வினவுகின்றான். 

(4)
வள்ளி நாயகியும் வேடுவனாய் வந்திருந்த இளைஞனைக் குறித்து ஏதொன்றும் கூறாமல், 'தந்தையே, என்றுமில்லாத மாயமாய் இம்மரம் இங்கு புதிதாய்த் தோன்றியுள்ளது, இதன் தன்மையினை அறியாமல் நடுக்கமுற்று நிற்கின்றேன், இதுவே இங்கு நிகழந்தது' என்றுரைக்கின்றாள், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 80)
தந்தையாங்குரைத்தல் கேளாத் தையலும் வெருவி ஈது
வந்தவாறுணர்கிலேன் யான் மாயம்போல் தோன்றிற்றையா
முந்தைநாள் இல்லாதொன்று புதுவதாய் முளைத்ததென்னாச்
சிந்தைமேல் நடுக்கமெய்தி இருந்தனன் செயலிதென்றாள்

(5)
நம்பிராஜனும் சிவஞானச் செல்வியான நம் வள்ளியம்மையிடம், 'மகளே, அஞ்சாதே, இம்மரம் உனக்கு அரியதொரு துணை புரியவே இவ்விடம் தோன்றியுள்ளதாக உணர்கின்றேன், ஆதலின் நீ யாதொரு கவலையுமின்றி இவ்விடம் இருந்து வருவாயாக' என்று ஆறுதல்மொழி கூறி அவ்விடம் விட்டுச் செல்கின்றான்.  
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 81)
என்றிவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
நன்றிவண் வைகுதி நாண்மலர் வேங்கை
இன்துணையாய் இவண் எய்தியதென்னாக்
குன்றுவன் வேடர் குழாத்தொடு போனான்

No comments:

Post a Comment