சூரசம்ஹார யுத்தக் காட்சி (கந்தபுராண நுட்பங்கள்):

'படைப்பு துவங்கிய காலமுதல் இதுபோன்றதொரு யுத்தம் நடந்தேறியதில்லை' என்று உறுதியாகக் கூறிவிடலாம். சிவ சிருஷ்டியிலுள்ள 1000 கோடி அண்டங்களுள், சூரபத்மனின் ஆளுகைக்கு உட்பட்ட 1008 அண்டங்களினின்றும் வலிமை மிகுந்த அசுரப் படையினர் அண்ட கடாகத்தின் வாயில் வழியே உட்புகுந்து, வீரமகேந்திரபுரத்தில் திரள் திரளாக வந்து குவிந்த வண்ணமிருக்கின்றனர்.

(குறிப்பு: 14 உலகங்களை உள்ளடக்கியது ஒரு அண்டம் என்று கொண்டால், ஒவ்வொரு அண்டத்திற்குள்ளும் தனித்தனியே பதினான்கு உலகங்களும் அவற்றிற்கென ஒரு பிரம்மாவும் உண்டு). எண்ணிறந்த அண்டங்களிலுள்ள அசுரப் படையினர் இடமின்மையால் சூரனின் தீவிற்குள் நுழைய இயலாமல் இந்த அண்டத்திலுள்ள மற்ற உலகங்களில் உத்திரவுக்காகக் காத்திருக்கின்றனர். 

கச்சியப்ப சிவாச்சாரியார் 'சூரனின் தீவில் குழுமியுள்ள அசுரர்களின் எண்ணிக்கையானது, அறிஞர்கள் வகுத்துரைக்கும் எவ்வித அளவீடுகளுக்குள்ளும் அடங்காதவை' என்று பதிவு செய்கின்றார்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 12 - இறுதியில் இடம்பெறும் வரிகள்)
...அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற்குவமையும் ஒன்றிலை பேசின்

108 யுகங்களாக சூரனின் கொடுமையை அனுபவித்து வந்த தேவர்கள் அசுரக் கூட்டத்தினரின் பெருவலிமையைக் கண்ணுற்றுக் கதறிப் பதறி கண்ணீர் சிந்துகின்றனர். வீரவாகு உள்ளிட்ட நவ வீரர்களும் உடனிருக்கும் எண்ணிறந்த பூதப்படையினரும் அசுரப் படையினரின் அழியாத் தன்மையால் தளர்கின்றனர். இந்நிலையில் சிவஞான சுவரூபியான நம் ஆறுமுகக் கடவுள் புன்முறுவலுடன் யுத்தகளத்திற்குள் பிரவேசிக்கின்றார்.  

கந்தக் கடவுளின் வில்லினின்றும் புறப்படும் கோடான கோடி சரங்களால் அசுரப் படையினரின் எண்ணிறந்த வெண்கொற்றக் குடைகளும்; கொடிகளும்; குதிரைகளும்; யானைகளும்; தேர்களும்; அசுரர்களின் சிரங்களும் அழிந்து படுகின்றன. 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 88)
கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே
கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ(டு) அவுணர்கள்தம்
முடிகளை அடுவன அளவிலவே முழுதுலகுடையவன் விடுசரமே

எங்கு நோக்கினும் உதிர வெள்ளமாகவும், தலைகளற்ற கோடிக்கணக்கான அசுர உடல்கள் நடமிடும்  காட்சியாகவும் தோற்றுகின்றது. வேலாயுதப் பெருங்கடவுள் ஒரு அண்டத்திலிருந்து வந்திருந்த அசுரக் கூட்டத்தினரை முற்றிலுமாய் அழித்தொழித்து முடிப்பதற்குள், மற்றொரு அண்டத்திலிருந்து அசுரப் படையினர் வந்த வண்ணமிருக்கின்றனர். இந்நிலையில் சூரபன்மன் சமர்க்களத்துக்குள் பிரவேசிக்கின்றான். 

அண்ட சராசரங்களின் தனிப்பெரும் முதல்வனான கந்தக் கடவுளுக்கும், கொடியவனான சூரபன்மனுக்கும் வார்த்தைகளால் விளக்கவொண்ணாத் தன்மையில் கடுமையான யுத்தம் நடந்தேறுகின்றது. 'வீர துர்க்கையானவள் இவ்விருவரில் எவரிடம் சென்று சேர்வது என்று வியக்குமளவிற்கு இப்போர்க்காட்சி அமைந்திருந்தது' என்று நம் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 196)
தார்கெழுவு வேற்படை தடக்கை உடையோனும் 
சூரனும் இவாறமர் இயற்று தொழில் காணா
வீரமட மாது உளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றாள்

No comments:

Post a Comment