முருகப் பெருமான் நள்ளிரவில் வள்ளிதேவியின் இல்லம் நாடிச் சென்று, தேவியுடன் வள்ளிமலைப் பகுதியின் எல்லைக்கப்பாலுள்ள சோலையொன்றிற்குச் சென்று அங்கு இனிது எழுந்தருளி இருக்கின்றான். பொழுது புலர்கின்றது; வள்ளியம்மையைக் காணாது பதறும் தந்தையான நம்பிராஜன், வேடர்களும் உடன்வர மகளைத் தேடி வருகின்றான், வழித்தடங்களைத் தொடர்ந்தவாறே முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள சோலையை வந்தடைகின்றான்.
(1)
அங்கு வேடுவ வேலவனோடு மகளைக் கண்டு கடும் சீற்றம் கொள்கின்றான். நடந்தேறிய நிகழ்வுகள் குறித்து ஒருசிறிதும் விசாரித்தறியாமல், 'நம் மகளைக் கவர்ந்து சென்ற இவனை இக்கணமே கொல்லுவோம்' என்று ஆறுமுகக் கடவுளை அனைத்து பக்கங்களிலும் சூழந்து கொண்டு அம்புகளால் தாக்கத் துவங்குகின்றனர். கருணைப் பெருங்கடலான கந்தப் பெருமானின் மீது அம்புகள் படிவதைக் கண்ணுற்று வள்ளியம்மை துடித்துப் பதறுகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 182)
ஒட்டலராகிச் சூழ்ந்தாங்(கு) உடன்று போர் புரிந்து வெய்யோர்
விட்டவெம் பகழியெல்லாம் மென்மலர் நீரவாகிக்
கட்டழகுடைய செவ்வேல் கருணையம் கடலின் மீது
பட்டன பட்டலோடும் பைந்தொடி பதைத்துச் சொல்வாள்
-
(சொற்பொருள்: ஒட்டலர் - பகைவர், உடன்று - கோபம் கொண்டு)
(2)
வள்ளியம்மை, 'ஐயனே, சிங்கமானது தன் தன்மையினின்றும் நீங்கி அமைதி காத்திருந்தால், காட்டிலுள்ள மான்; பன்றி முதலியன எவ்வித அச்சமுமின்றி அருகில் வரத் துவங்கும். ஆதலின் அம்புகளைத் தொடுத்துத் தாக்கும் இவர்களை உம்முடைய திருக்கை வேலினால் இக்கணமே அழித்தருள் புரிதல் வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றாள்.
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 183)
நெட்டிலை வாளி தன்னை ஞெரேலென நும்மேல் செல்லத்
தொட்டிடு கையர் தம்மைச் சுடருடை நெடுவேல் ஏவி
அட்டிடல் வேண்டும் சீயம் அடுதொழில் குறியாதென்னில்
கிட்டுமே மரையும் மானும் கேழலும் வேழம் தானும்
-
(சொற்பொருள்: ஞெரேலென - விரைந்து, சீயம் - சிங்கம், மரை - மான்வகை, கேழல் - பன்றி)
-
இந்நிகழ்வினை மேலோட்டமாக அணுகினால், 'நம் வள்ளியம்மை சிறிதும் கருணையின்றித் தன் வளர்ப்புத் தந்தையையும்; சுற்றத்தினரையும் இவ்விதம் அழிக்கும் படி கூறலாமா?' என்றொரு வினா எழக்கூடும். 'இறைவனை முழுவதுமாய் அடையவொட்டாது தடுத்து நிற்கும் பந்தபாசங்களை ஆன்மாவானது முழுவதுமாய் விலக்கத் துணியும்' தத்துவக் குறியீடு இதனுள் பொதிந்துள்ளது. முதற்கண் அகங்காரத்தினை விடுத்திருந்த ஆன்மாவானது இச்சமயத்தில், 'எனது தந்தை; எனது சுற்றத்தினர்' எனும் மமகாரத்தையும் விட்டொழித்து இறைவனின் திருவடிகளையே சரணாகப் பற்றும் தன்மையையே இந்நிகழ்வு சுட்டுகின்றது.
(3)
தினைப்புன அரசியின் வேண்டுகோளினைச் செவி மடுத்தருளும் வேலாயுதப் பெருங்கடவுள் தன் கொடியிலுள்ள சேவலை நினைந்தருள, அச்சேவலானது அக்கணமே அங்கு தோன்றி அண்டங்களும் அதிருமாறு ஆர்ப்பரிக்கின்றது. அப்பேரொலியில் அங்கிருந்த வேடுவக் கூட்டத்தினர் ஒருவர் மீதமில்லாது மாண்டு வீழ்கின்றனர்.
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 184)
என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்
நின்றதோர் கொடிமாண் சேவல் நிமிர்ந்தெழுந்(து) ஆர்ப்புக் கொள்ளக்
குன்றவர் முதல்வன் தானும் குமரரும் தமரும் யாரும்
பொன்றினராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார்
-
(சொற்பொருள்: பாங்கர் - பக்கத்தில், குன்றவர் முதல்வன் - வேடுவ அரசனான நம்பிராஜன், பொன்றினராகி - நிலை தடுமாறி, பொள்ளென - விரைந்து)

No comments:
Post a Comment