வயோதிக வேலவன் புரிந்த காதல் திருவிளையாடல் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வள்ளி தேவியின் காதலைப் பெற பல்வேறு வடிவங்களையெடுத்துத் திருவிளையாடல் புரிகின்றான், வேடுவ இளைஞனாகத் தோன்றிப் பின் வேங்கை மரமென நின்று, இறுதியாய்ச் சைவ வயோதிக வேடத்தில் எழுந்தருளி வருகின்றான். வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் வயோதிக வேடத்தை மெய்யென்றெண்ணி தேவியைக் கந்தவேளிடம் ஒப்படைத்துச் செல்கின்றான்.   

வேடுவ மன்னன் அகன்றதும் வயோதிக வேலவன் 'பசியினால் தளர்வுற்று வருந்துகின்றேன்' என்று கூறியருள, வள்ளி நாயகி தேனும் தினைமாவும் தந்துதவுகின்றாள். பின் 'மிகுந்த தாகத்தினால் வருந்துகின்றேன்' என்று வடிவேலன் தளர, தேவியும் 'இங்குள்ள மலைப்பகுதிச் சுனைநீரை அருந்தி அயர்வு நீங்குவீர்' என்கின்றாள். விருத்த கோலத்து வேலவனும், 'தனித்து செல்லும் வயதோ இது?' என்றுரைத்து தேவியையும் உடனழைத்துச் சென்று சுனைநீரைப் பருகுகின்றான். 

(1)
பின்னர் 'அழகிய கூந்தலையுடைய நங்கையே, பசி போக்கினாய், தாகம் தீர்த்தாய், விதிவசத்தாலுற்ற காம நோயினையும் இச்சமயத்தில் தீர்த்து அருள் புரிவாயானால் குறைகள் யாவும் தீரப் பெற்றவனாவேன்' என்று காதல் யாசகம் கேட்டு நிற்கின்றான்.  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 104)
ஆகத்தை வருத்துகின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்
தாகத்தை அவித்தாய் இன்னும் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ
மேகத்தையனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட
மோகத்தைத் தணித்தியாயின் முடிந்ததென் குறையதென்றான்

(2)
வள்ளி நாயகி வயோதிக வடிவேலனின் தகாத அவ்வுரை கேட்டு நடுநடுங்கிப் பதறிச் சீறியுரைக்கத் துவங்குகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 105)               
ஈறில் முதியோன் இரங்கி இரந்துகுறை
கூறி மதிமயங்கிக் கும்பிட்டு நின்றளவில்
நாறு மலர்க்கூந்தல் நங்கை நகைத்துயிர்த்துச்
சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள்

(3)
'மேன்மையான தவவேடத்திற்கு சற்றும் பொருந்தா வார்த்தைகளை உரைத்தீர், பாலென்று எண்ணி பருகிய நிலையிலது ஆலகால விடமென மாறிய தன்மையிலுள்ளது உம்முடைய செயல்' என்று அம்மை வெகுண்டுரைக்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 106)
மேலாகிய தவத்தோர் வேடம் தனைப்பூண்டிங்(கு)
ஏலாதனவே இயற்றினீர் யார்விழிக்கும்
பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும்
ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கையதே

(4)
'தலைமுடியாவும் நரைத்த பின்னரும் நல்லுணர்வு சற்றும் இல்லாது இருக்கின்றீர், இதன் பொருட்டோ மூப்படைந்தீர்?, பித்துப் பிடித்தாற் போன்று பிதற்றியுழல்கின்றீர், வேடர்குலம் முழுமைக்கும் பெரும் பழியையன்றோ சேரச் செய்தீர்' என்று வள்ளி நாயகி படபடத்துச் சீறுகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 108)
நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னைவெஃகிப்
பித்துக் கொண்டார்போல் பிதற்றுவீர் இவ்வேடர்
கொத்துக்கெலாம்ஓர் கொடும்பழியைச் செய்தீரே

No comments:

Post a Comment