சூரசம்ஹார யுத்தக் காட்சி (கந்தபுராண நுட்பங்கள்):

'படைப்பு துவங்கிய காலமுதல் இதுபோன்றதொரு யுத்தம் நடந்தேறியதில்லை' என்று உறுதியாகக் கூறிவிடலாம். சிவ சிருஷ்டியிலுள்ள 1000 கோடி அண்டங்களுள், சூரபத்மனின் ஆளுகைக்கு உட்பட்ட 1008 அண்டங்களினின்றும் வலிமை மிகுந்த அசுரப் படையினர் அண்ட கடாகத்தின் வாயில் வழியே உட்புகுந்து, வீரமகேந்திரபுரத்தில் திரள் திரளாக வந்து குவிந்த வண்ணமிருக்கின்றனர்.

(குறிப்பு: 14 உலகங்களை உள்ளடக்கியது ஒரு அண்டம் என்று கொண்டால், ஒவ்வொரு அண்டத்திற்குள்ளும் தனித்தனியே பதினான்கு உலகங்களும் அவற்றிற்கென ஒரு பிரம்மாவும் உண்டு). எண்ணிறந்த அண்டங்களிலுள்ள அசுரப் படையினர் இடமின்மையால் சூரனின் தீவிற்குள் நுழைய இயலாமல் இந்த அண்டத்திலுள்ள மற்ற உலகங்களில் உத்திரவுக்காகக் காத்திருக்கின்றனர். 

கச்சியப்ப சிவாச்சாரியார் 'சூரனின் தீவில் குழுமியுள்ள அசுரர்களின் எண்ணிக்கையானது, அறிஞர்கள் வகுத்துரைக்கும் எவ்வித அளவீடுகளுக்குள்ளும் அடங்காதவை' என்று பதிவு செய்கின்றார்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 12 - இறுதியில் இடம்பெறும் வரிகள்)
...அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற்குவமையும் ஒன்றிலை பேசின்

108 யுகங்களாக சூரனின் கொடுமையை அனுபவித்து வந்த தேவர்கள் அசுரக் கூட்டத்தினரின் பெருவலிமையைக் கண்ணுற்றுக் கதறிப் பதறி கண்ணீர் சிந்துகின்றனர். வீரவாகு உள்ளிட்ட நவ வீரர்களும் உடனிருக்கும் எண்ணிறந்த பூதப்படையினரும் அசுரப் படையினரின் அழியாத் தன்மையால் தளர்கின்றனர். இந்நிலையில் சிவஞான சுவரூபியான நம் ஆறுமுகக் கடவுள் புன்முறுவலுடன் யுத்தகளத்திற்குள் பிரவேசிக்கின்றார்.  

கந்தக் கடவுளின் வில்லினின்றும் புறப்படும் கோடான கோடி சரங்களால் அசுரப் படையினரின் எண்ணிறந்த வெண்கொற்றக் குடைகளும்; கொடிகளும்; குதிரைகளும்; யானைகளும்; தேர்களும்; அசுரர்களின் சிரங்களும் அழிந்து படுகின்றன. 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 88)
கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே
கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ(டு) அவுணர்கள்தம்
முடிகளை அடுவன அளவிலவே முழுதுலகுடையவன் விடுசரமே

எங்கு நோக்கினும் உதிர வெள்ளமாகவும், தலைகளற்ற கோடிக்கணக்கான அசுர உடல்கள் நடமிடும்  காட்சியாகவும் தோற்றுகின்றது. வேலாயுதப் பெருங்கடவுள் ஒரு அண்டத்திலிருந்து வந்திருந்த அசுரக் கூட்டத்தினரை முற்றிலுமாய் அழித்தொழித்து முடிப்பதற்குள், மற்றொரு அண்டத்திலிருந்து அசுரப் படையினர் வந்த வண்ணமிருக்கின்றனர். இந்நிலையில் சூரபன்மன் சமர்க்களத்துக்குள் பிரவேசிக்கின்றான். 

அண்ட சராசரங்களின் தனிப்பெரும் முதல்வனான கந்தக் கடவுளுக்கும், கொடியவனான சூரபன்மனுக்கும் வார்த்தைகளால் விளக்கவொண்ணாத் தன்மையில் கடுமையான யுத்தம் நடந்தேறுகின்றது. 'வீர துர்க்கையானவள் இவ்விருவரில் எவரிடம் சென்று சேர்வது என்று வியக்குமளவிற்கு இப்போர்க்காட்சி அமைந்திருந்தது' என்று நம் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 196)
தார்கெழுவு வேற்படை தடக்கை உடையோனும் 
சூரனும் இவாறமர் இயற்று தொழில் காணா
வீரமட மாது உளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றாள்

பாற்கடல் வாசன் எடுத்துரைக்கும் ஆறுமுகக் கடவுளின் சிறப்புகள் (கந்தபுராண நுட்பங்கள்):

108 யுகங்கள் தொடர்ந்து சூரனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியிருந்த தேவர்கள் யுத்தகளத்தில் அவ்வப்பொழுது அச்சமுற்று நம்பிக்கையிழக்கும் நிலையில், வைகுந்த வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகக் கடவுளின் மேன்மைகளை எடுத்துரைத்து அவர்கட்கு ஊக்கத்தினை ஏற்படுத்தி வருவார். இருவேறு சமயங்களில் இவ்விதமான உரையாடல்கள் நடந்தேறியதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார்.

சூரசம்ஹாரப் போர் வீரமகேந்திரபுர எல்லையில் மட்டுமே நிகழந்ததன்று, சூரபத்மன் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட 1008 அண்டங்களுக்கும் ஒவ்வொன்றாய்ச் செல்லத் துவங்க, ஆறுமுகக் கடவுள் அந்த அண்டங்கள் தோறும் பின்தொடர்ந்து சென்று அவனுடன் இடையறாது போரிட்டு வருகின்றார். மற்றொரு புறம் யுத்தகளத்திலுள்ள தேவர்களோ, கந்தவேளையும் சூரனையும் காணாது வருந்திப் புலம்பத் துவங்க, அறிதுயில் கொண்டருளும் பரந்தாமன் பின்வருமாறு தேவர்களிடம் அருளிச் செய்கின்றார், 

(1)
குன்றுதோறும் திருவிளையாடல் புரிந்தருளும் குமாரக் கடவுள் முன்பொரு சமயம் மேரு மலையில், அண்டங்கள் மற்றும் அவற்றிலுள்ள உயிர்கள் யாவற்றையும் தன் திருமேனியில் வெளிப்படுத்திக் காட்டிய பெருவடிவத்தை உணர்ந்திருந்துமா இந்த ஐயப்பாடு எழுகின்றது?
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 71)
குன்றுதொறாடல் செய்யும் குமரவேள் மேருவென்னும்
பொன்திகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கண் 
சென்றுறை உயிர்கள் முற்றும் தேவரும் தன்பால் காட்டி
அன்றொரு வடிவம் கொண்டதயர்த்தியோ அறிந்த நீதான்

(2)
சூரனின் பெரும்படைகளை 'ஏ' என்று கூறும் கால அளவிற்குள் முழுவதுமாய் அழித்தொழிக்க வல்ல ஆறுமுகப் பெருமானைச் சிறுவன் என்றெண்ணி விடாதீர்கள். ஆயிரம் கோடி அண்டங்களிலுள்ள உயிர்களுக்கெல்லாம் தனிப்பெரும் நாயகனான அம்மூர்த்தி நாம் புரிந்துள்ள நல்வினைப் பயனால் இத்தருணத்தில் இங்கு எழுந்தருளி வந்துள்ளார்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 73)
பாயிரும் கடலில் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்
ஏயெனும் முன்னம் வீட்டும் சிறுவன் என்றெண்ணல் ஐய
ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட்கெல்லாம்
நாயகன் அவன்காண் நாம்செய் நல்வினைப் பயனால் வந்தான்

(3)
ஒப்புவமையில்லா முதற்பொருளான அறுமுகக் கடவுள் சூரனை அழிக்க வேண்டுமென்றுக் கருதுவாராயின், ஒரு  புன்சிரிப்பினால் அழிப்பார், சினத்தினால் அழிப்பார், தூய சொற்களால் அழிப்பார், திருக்கண் பார்வையாலேயே அழித்து விடுவார். இத்தன்மையில் விளங்கும் கந்தவேளின் அளப்பரிய ஆற்றலை யாரே விவரித்துக் கூறவல்லார்?
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 74)
சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தல் பாலார்

(4)
ஆதிஅந்தமில்லாப் பரம்பொருளாகிய சிவபெருமானே ஒரு குழந்தையின் வடிவில் ஆறு திருமுகங்களுடன் தோன்றியுள்ளார் என்பதன்றிப் பிறிதொரு சத்தியம் உளதோ! குமாரக் கடவுளின் மேன்மைகள் யாவும் அறிந்திருந்தும் உங்கள் சிந்தை (அச்சத்தால்) தெளிவற்ற நிலையிலுள்ளது, 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 282)
ஈறிலாதமர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறுமாமுகம் கொண்டுதித்தான் என்பதல்லால்
வேறு செப்புதற்கியையுமோ மேலவன் தன்மை
தேறியும் தெளிகின்றில உமது சிந்தையுமே

(5)
ஆதலின் ஒருசிறிதும் ஐயம் கொள்ளாதீர்கள், அந்த சூரனானவன் ஆயிரம் கோடி அண்டங்களுக்குச்  சென்றாலும், வேலாயுதக் கடவுள் அங்கெல்லாம் தொடர்ந்து சென்று சூரனுடன் போரிட்டு அவனை வலிமை குன்றச் செய்து, சிறிது கால அளவிற்குள் இவ்விடம் வந்து சேர்வதை உள்ளங்கை நெல்லிக்கனியென உங்களுக்குக் காட்டுவேன், யாவரும் காண்பீர். 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 283)
ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்யன் ஏகினும் தொடர்ந்துபோய் வெஞ்சமர் இயற்றிச்
செய்ய வேலவன் துரந்து வந்திடும் தினைத்துணையில்
கையின் நெல்லிபோல் காட்டுவன் நீவிரும் காண்டீர்

சூரபத்மன் எடுத்த பல்வேறு வடிவங்களும் ஆறுமுகக் கடவுளின் போர்த்திறனும் (கந்தபுராண நுட்பங்கள்):

சூரபத்மன் மலை போன்ற சக்கிரவாகப் பறவையாய் வடிவெடுத்துப் பெரும் ஆரவாரத்துடன் முருகப் பெருமானின் பூதப் படையினரைப் பெருமளவு குத்திக் கிழித்து விழுங்கத் துவங்குகின்றான். கந்தவேள் இந்திர மயிலேறிக் கடுமையான யுத்தத்தினால் அப்பறவை வடிவத்தினை அழிக்கின்றான். பின்னர் சூரன் பூமியாகவும்; பெரும் தீயாகவும்; ஊழிப்பெரு வெள்ளமாகவும், சூறாவளிக் காற்றாகவும் ஒவ்வொன்றாய் வர, குமாரக் கடவுள் அவைகளையும் அழித்தொழிக்கின்றான். 

சூரன் அத்துடன் அமைந்தானில்லை, மும்மூர்த்திகளின் வடிவில் வருவான்; தேவர்களாய் வருவான்; இந்திரனாய் வருவான்; இயமனாய் வருவான்; பேயாய் வருவான்; கடலாய் வருவான்; ஆலகால விடமாய் வருவான்; கொடிய பாம்பாய் வருவான்; சூரியனாய் வருவான்; எண்திசை யானைகளாய் வருவான்; ஆண் சிங்கமாய் வருவான்; தாரகாசுரனாய் வருவான்; சிங்கமுகாசுரனாய் வருவான்; தன் மகன் பானுகோபானாய் வருவான்; மாண்ட அசுரப் படை படை வீரர்கள் அனைவருமாய்த் திரண்டு வருவான், இவ்வாறு எண்ணிறந்த வடிவங்களை ஒரே சமயத்தில் எடுத்து வந்து பூதப் படையினரையும் தேவர்களையும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றான். வேலாயுதக் கடவுள் ஆயிரம் கோடி அம்புகளால் அவ்வடிவங்களையும் மிச்சமில்லாமல் அழிக்கின்றான். 

சூரன் கடும் சினத்துடன், அண்டம் முழுவதையும் மறைக்கும் தன்மையில் இருள் வடிவெடுத்துப் பெரும் ஆரவாரத்துடன் தேவர்களைக் கொன்று குவிக்க விரைந்து வருகின்றான்.

(1)
தேவர்கள் 'இன்றே நாம் அழிந்தோம்' என்று கதறிப் பதறி வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடியவாறே ஆறுமுகக் கடவுளை நோக்கி 'ஓலம்; ஓலம்' என்று அலறுகின்றனர்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 460)
நண்ணினர்க்(கு) இனியாய் ஓலம் ஞானநாயகனே ஓலம்
பண்ணவர்க்(கு) இறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற்கரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 461)
தேவர்கள் தேவே ஓலம் சிறந்த சிற்பரனே ஓலம்
மேவலர்க்(கு) இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்(கு) எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவருமாகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்

(2)
ஐயனே, 'சூரனின் காரிருள் வடிவத்தினை எதிர்கொள்ளவோ ஓடி ஒளியவோ வலிமையற்று வருந்துகின்றோம். இனியும் காலம் தாழ்த்தாமல் சூரனின் உயிரைப் போக்கி எங்கள் உடலிலுள்ள ஆவியை எங்களுக்கே உரியதாக்கித் தந்தருளுங்கள்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 462)
கங்குலின் எழுந்த கார்போல் கனையிருள் மறைவின் ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மையில்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையுநீ தாழ்க்கல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டெம்ஆவியை அருளுகென்றார்

(3)
ஆறுமுகப் பெருமான் தன் திருக்கரத்திலிருந்த வேலினை விடுக்க, அவ்வேலானது ஆயிரம் கோடி சூரியர்களின் ஒளியோடு, கூர்மையான தலைப் பகுதியில் தீப்பிழம்பினை வெளிப்படுத்தியவாறு விரைந்து சென்று, சூரனின் அப்பேரிருள் வடிவத்தினை முற்றிலுமாய் அழித்தொழிக்கின்றது (ஆயிரம் கோடி சூரியர்களின்  ஒளி சேர்ந்து போக்க வேண்டுமாயின், சூரன் எடுத்திருந்த இருள் வடிவம் எத்தன்மையில் அச்சமூட்டுவதாக இருந்திருக்கும் என்பது தெள்ளென விளங்குமன்றோ!),
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 465)
ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீயழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவமுற்றும் வல் விரைந்தகன்றதன்றே
-
(சொற்பொருள்: ஞாங்கர் - வேல், அருக்கர் - சூரியன், சிகழி - வேலின் கூர்மையான தலைப்பகுதி)

சூரபத்மன் கண்ட விஸ்வரூப தரிசனம் (பகுதி 1) - (கந்தபுராண நுட்பங்கள்):

சூரபத்மன் எண்ணிறந்த மாய வடிவங்களையெடுத்து போர் புரிந்து வர, வேலாயுதக் கடவுள் அவையனைத்தையும் அழித்து 'சூரனே உன்னுடைய வடிவங்கள் யாவையும் அழித்தொழித்தோம், இனி நம்முடைய அழிவில்லா வடிவத்தையும் காண்பாயாக' என்றுரைக்கின்றார். இன்னதென்று விளக்கவொண்ணா பேருருவம் கொண்டு அதனைத் தரிசிப்பதற்கு சூரனுக்கு விசேடப் பார்வையையும், நல்லறிவையும் அளித்தருள் புரிகின்றார்.   

சூரன், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்றருளும் ஆறுமுகப் பெருங்கடவுளின் திருமேனியில் ஆயிரமாயிரம் கோடி அண்டங்களையும், அவற்றுள் விளங்கி வரும் உயிரினங்களையும், விண்ணவர் முதலான கடவுளர் யாவரையும் காண்கின்றான்.  

(1)
அழகிய மயிலின் மீது எழுந்தருளி வரும் குமர நாயகனை இதுவரையிலும் பாலன் என்றெண்ணினேன், அப்பெருமானின் தன்மையினை உள்ளவாறு அறியாதிருந்தேன். விண்ணவர்க்கும் மற்றுமுள்ள கடவுளர் யாவர்க்கும் மூல காரணமாக விளங்கியருளும் ஆதி மூர்த்தி இவரேயென்று இத்தருணத்தில் தெளிந்துணர்ந்தேன், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 433)
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலன்என்றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன்யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ
-
(சொற்பொருள்: மஞ்சை - மயில், பரிசு - தன்மை)

(2)
முன்னர் தூதாய் வந்திருந்த வீரவாகு 'வேலவனே விருப்பு வெறுப்புகளைக் கடந்து விளங்கும் முழுமுதற் பொருள்' என்றுரைத்தான், அக்கூற்றை கருத்தில் கொள்ளாது விடுத்தேன். இன்று இம்மூர்த்தியே தனிப்பெரும் தலைவர் என்றுணர்ந்தேன்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 434)
ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிகலின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாம் துணிபெனக் கொண்டிலேனால்
இற்றைஇப்பொழுதில் ஈசன் இவனெனும் தன்மை கண்டேன்

(3)
குமாரக் கடவுளின் மேன்மை பொருந்திய இப்பெருவடிவத்திலுள்ள தோற்றப் பொலிவும், பேரழகும், இளமையும் பிறிதொருவரிடம் கண்டுவிடவும் இயலுமோ? அற்புதம் அடைந்து தரிசித்துக் கொண்டேயிருந்தாலும் இத்திருக்காட்சி தெவிட்டவில்லை, 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 437)
சீர்க்குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவம் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள உலகில் அம்மா அற்புதத்தோடும் பல்கால் 
பார்க்கினும் தெவிட்டிற்றில்லை இன்னுமென் பார்வை தானும்

(4)
ஒப்புவமையின்றி நின்றருளும் மூல முதல்வனாகிய ஆறுமுகப் பெருமானின் இப்பெருவடிவத்தை நேரெதிரில் நின்றவாறு, உள்ளத்தில் அச்சமின்றி இத்தன்மையில் தரிசிக்க இயலுகின்றதெனில் அது முன்னர் சிவபரம்பொருளிடம் கடும் தவமியற்றிப் பெற்றுள்ள சிறப்புடைய வரங்களே காரணம் என்பேன், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 438)
நேரிலனாகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேருருஅதனை நோக்கிப் பெரிதும் அச்சுறுவதல்லால்
ஆரிது நின்று காண்பார் அமரரில் அழிவிலாத
சீரிய வரம் கொண்டுள்ளேன் ஆதலில் தெரிகின்றேனால்

(5)
ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகையெல்லாம் ஒன்றாகத் திரட்டினும் இம்முருகக் கடவுளின் திருவடி அழகிற்கு அதனை ஒப்பாகக் கூறிவிட இயலாது எனில் இம்மூர்த்தியின் அரிய பெரிய இவ்வடிவத்திற்கு எவரொருவரால் உவமை கூடி விவரித்து விட இயலும்,  
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 439)
ஆயிர கோடி காமர் அழகெலாம் திரண்டொன்றாகி
மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்
தூயநல் எழிலுக்(கு) ஆற்றாதென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற்கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்

சூரபத்மன் கண்ட விஸ்வரூப தரிசனம் (பகுதி 2) - (கந்தபுராண நுட்பங்கள்):

போர்க்களத்தில் முருகப் பெருமான், கோடானகோடி அண்டங்களும் அவற்றிலுள்ள உயிரினங்களும் தன் திருமேனிக்குள் அடங்கியிருத்தலையும், தன் வடிவத்திற்கு அப்பாற்பட்டதொரு பொருளில்லை என்றுணர்த்தவும் பெருவடிவம் கொண்டருள்கின்றார். சூரனுக்கு அதனைத் தரிசிக்கும் ஞானப் பார்வையையும் நல்லறிவையும் சிறிது நேரத்திற்கு அளித்து அருள் புரிகின்றார். 

சூரன், கந்தவேளின் இப்பெருவடிவத்தைத் தரிசித்து எண்ணியவற்றை (நேற்று) முதற் பகுதியில் சிந்தித்தோம். இனி அதன் தொடர்ச்சியாய்க் கச்சியப்ப சிவாச்சாரியாரின் பின்வரும் திருப்பாடல்களை உணர்ந்து மகிழ்வோம், 

(1)
ஆறுமுக அண்ணல் கொண்டருளிய இப்பெருவடிவத்தினை, அடி முதல் முடி வரை ஆயிரமாயிரம் கோடி யுகங்கள் தொடர்ந்து தரிசித்தாலும், கண்ணிற்கும் கருத்திற்கும் அடங்காதது. இந்நிலையில் விளங்கியருளும் பெருங்கடவுள் என்னுடன் போர் புரிய எழுந்தருளியுள்ளார் எனில் அது அம்மூர்த்தியின் அருளேயன்றி பிறிதொன்றும் காரணமில்லை. 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 441)
அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும்
எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கினாலும் 
கண்ணினால் அடங்காதுன்னில் கருத்தினால் அடங்காதென்பால்
நண்ணினான் அமருக்கென்கை அருளென நாட்டலாமே

(2)
என் அகந்தையானது முற்றிலும் அழிந்தொழிந்தது, சிவஞானம் கைவரப் பெற்றேன், என் வலது கண்ணும் தோளும் சுபசகுனமாய்த் துடிக்கின்றன. அண்டகோடிகள் யாவையும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற குமாரக் கடவுளின் பெருவடிவத்தை இத்தருணத்தில் தரிசிக்கும் பேறு பெற்றேன், இதனைக் காட்டிலுமொரு தவப்பயன் உண்டோ?
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 443)
போயின அகந்தை போதம் புகுந்தன வலத்ததான
தூயதோர் தோளும் கண்ணும் துடித்தன புவனமெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படுகின்ற விண்ணோர்
நாயகன் வடிவன் கண்டேன் நற்றவப் பயன் ஈதன்றோ

(3)
முதற்பொருளான இம்முருகப் பெருமானை கால்களால் வலம் வருதல் வேண்டும், கைகளால் உச்சிகூப்பி வணங்குதல் வேண்டும், தலையைத் தாழ்த்திப் பணிந்திடல் வேண்டும், நாவினால் போற்றி செய்திடல் வேண்டும், தீமைகளகன்ற நிலையில் இவர்க்குத் தொண்டு புரிந்து வாழுதல் வேண்டும். எனினும் 'சமர்க்களத்திற்கு வந்த பின்னர் எவ்வாறு இச்செயல்களைப் புரிவது?' என்று மான உணர்ச்சியும் ஆணவமும் தடுக்கின்றதே! 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 444)
சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலு
ஆழுதல் வேண்டும் தீமை அகன்றுநான் இவற்காளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே
-
(சொற்பொருள்: தால் - நாக்கு)

(4)
விண்ணுளோர் யாவரையும் 108 யுகங்களாகச் சிறைவைத்தும், வதைத்தும் வந்ததைப் பலரும் தவறென்றார். இன்று அச்செயலாலன்றோ, தேவர்களும் தெய்வங்களும் காண்பதற்கரிய ஆறுமுகப் பெருங்கடவுள் இத்தன்மையில் என்னிடம் எழுந்தருளி வந்துள்ளார். ஆதலின் 'அச்செயல்கள் நன்மையையே விளைவித்துள்ளன' என்பேன், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 447)
ஏதமில் அமரர் தம்மை யான்சிறை செய்ததெல்லாம் 
தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கையாலே
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலரும் காணா
நாதன்இங்கணுகப் பெற்றேன் நன்றதே யானதன்றே

(5)
முதல்வருக்கும் முதல்வராய் எழுந்தருளி வந்துள்ள இக்குமாரக் கடவுளின் எதிர்நின்று போர் புரிந்துள்ளேன், இதை விடவும் ஒரு பெருமை வாய்த்து விட இயலுமோ? வீரனென்னும் நீங்கா நிலை பெற்றேன். இனி ஒருக்கணமும் உள்ளம் தளரேன், என் உடல் அழிந்து படலாம் எனினும் ஆறுமுகப் பரம்பொருளின் திருமுன்னர் நின்று சமர் செய்த புகழ் என்றுமே மறையாது நிலைக்குமன்றோ!
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 448)
ஒன்றொரு முதல்வனாகி உறைதரு மூர்த்தி முன்னம்
நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா
நன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானேயானேன்
என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்பதுண்டோ

மாமரமாய் வந்த சூரபத்மன் (கந்தபுராண நுட்பங்கள்):

சூரன் எடுத்திருந்த வடிவங்கள் அனைத்தையும் முருகப் பெருமான் அழித்து விட, இறுதியாய்ச் சூரன் மாமர வடிவெடுத்துக் கடல் நடுவினில் நிற்கின்றான். 'அதீத வரபலத்தால் 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆட்சி புரிந்த ஒருவன் மாமர வடிவில் தோன்றுவானேயாயின் அது எத்தன்மையதாக இருந்திருக்கும்?' என்பதை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாக முதலில் அறிந்துணர்வோம், 

கடலின் நடுவே, நெருப்புப் பிழம்பு போலும் சிவந்த விழுதுகளைக் கொண்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நீண்டு, திசைகளின் எல்லை முழுவதுமாய்த் தன் கிளைகளைப் பரப்பிய வண்ணம் நிற்கின்றான். பூமிக்குக் கீழுள்ள அதல; விதல; சுதல; தலாதல; மகாதல; ரசாதல; பாதாள லோகம் வரையிலும் தன்னுடைய வேரினைச் செலுத்தி நிற்கின்றான். நூறாயிரம் யோசனை தூரம் வரையிலும் பருத்த அடிப்பரப்புடைய தன்மையில் நிற்கின்றான். குபேரனும்; திசை யானைகளும்; இயமனும் அஞ்சுமாறு நின்றான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களும்; கொற்றவையும்; நான்முகக் கடவுளும்; ஆதிசேடனும் அஞ்சுமாறு நிற்கின்றான்.

வாயுதேவன்; சூரியன்; சனி ஆகியோரின் உடல் வியர்த்திட நிற்கின்றான். ஐராவதம் நிலை பெயர்ந்திட; அக்கினி தேவன் மெலிந்திட நிற்கின்றான். ஆதிசேடன் சுமை தாங்காது வருந்திட, நிலப்பகுதி முழுவதும் இருள் பொருந்திய சூறாவளிக் காற்று வீசுமாறு மாமர வடிவினனான சூரன் தன் உடலை அசைக்கின்றான். அந்த அசைவினால் அண்டங்கள் இடிந்து சரிகின்றன, பூமிக்குக் கீழுள்ள ஏழுலகங்களும் புழுதியால் நிறைகின்றன. கடல்கள் யாவும் நிலைகுலைந்து ஒன்றாகின்றன. மலைகள் யாவும் அழிந்து படுகின்றன. விண்மீன்கள் உதிர்கின்றன. சூரியனும் சந்திரனும் மிக வருந்தித் தத்தமது கிரகங்களை விலக்கிச் செல்கின்றனர். பூமிக்கு மேலுள்ள புவர்; சுவர்க்க; மகர்; ஜனோ; தபோ; சத்திய லோகங்கள் ஒவ்வொன்றாக அழிந்து படுகின்றன.  

(1)
வேலையுதக் கடவுள் சூரனை நோக்கித் தன் திருக்கை வேலை விடுக்கின்றார். அவ்வேலானது 1000 கோடி அண்டத்திலுள்ள அக்கினி யாவும் ஒன்று சேர்ந்து போன்று உயர்ந்தெழுந்து, மிகுந்த அச்சம் ஏற்படுத்தும் தன்மையில் மாமரத்தினை அழிக்க விரைகின்றது,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 481)
தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்(து)
ஆயிர கோடி அண்டத்(து) அங்கியும் ஒன்றிற்றென்ன
மீஉயர்ந்தொழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றம் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்ததன்றே
-
(சொற்பொருள்: அங்கி - அக்கினி, மீஉயர்ந்து - மிக உயர்ந்து, வெருவரும் - அச்சம் தரும்)

(2)
ஆறுமுக தெய்வத்தின் திருக்கை வேலானது அண்டகோடிகளையெல்லாம் அசைத்த கொடியவனான சூரபத்மனை இரு கூறுகளாக்கியும் சூரன் மாளாது நிற்கின்றான். எனில் அது அவன் முன்பு புரிந்திருந்த கடும் தவத்தின் பயனன்றோ, 'தவத்தினை விடவும் வலிமை தரக்கூடியதாய்ப் பிறிதொன்று உண்டோ?' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் இவ்விடத்தில் தவத்தின் அவசியத்தையும் சிறப்பையும் பதிவு செய்கின்றார், 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 488)
ஆடல்வேல் எறிதலோடும் ஆமிர வடிவாய் அண்ட
கூடமும் அலைத்த கள்வன் அரற்றொடு குறைந்து வீழ்ந்தும்
வீடிலன் என்ப மன்னோ மேலைநாள் வரத்தின் என்றால்
பீடுறு தவமே அன்றி வலியது பிறிதொன்றுண்டோ
-
(சொற்பொருள்: ஆமரம் - மாமரம், அரற்றோடு - ஒப்பாரியிட்டு, வீடிலன் - இறந்திலன், பீடு - பெருமை)

சூரபத்மன் பெற்ற பெருவாழ்வு (கந்தபுராண நுட்பங்கள்):

மாமர வடிவிலிருந்த சூரபத்மனை ஆறுமுகக் கடவுளின் சக்தி வேலானது இரு கூறுகளாகப் பிளக்க, சூரன் சிவந்த மாணிக்க மலை போன்ற சேவலாகவும்; பச்சை நிற மரகத மலை போன்ற மயிலாகவும் மீண்டுமொரு முறை வடிவெடுத்து, மிக உறுதியுடன் வேலாயுதப் பெருங்கடவுளின் திருமுன்னர் யுத்தமிடும் பொருட்டு செல்கின்றான். 

கருணைப் பெருங்கடலான கந்தக் கடவுள் தன் திருவருள் நோக்கினைச் சூரன் மீது செலுத்த, சேவலும் மயிலுமாயிருந்த சூரன் பகைமை முற்றிலுமாய் நீங்கித் தெளிவு பெற்ற மனத்தினனாய் நிற்கின்றான். 

(1)
பகைமையுடன் கடும் யுத்தம் புரிந்த சூரபத்மனே இத்தன்மையில் வரம்பிலா பெருவாழ்வு பெருவானாயின், 'எத்தகு தீமை புரிந்தவராயினும் குமாரக் கடவுளின் திருமுன்னர் வந்து சேர்ந்தால் தூயவராகி மேன்மைகள் யாவும் பெற்றுய்வு பெறுவர்' எனும் கூற்றிற்குப் பிறிதொரு சான்றும் வேண்டுமோ?
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 496)
தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான்

(2)
கந்தப் பெருமான் சேவலாகிய சூரனிடம், 'நீ விரைந்து கொடியாகி நமது பெரிய தேரில் பொருந்தியிருந்து ஆர்ப்பரிப்பாயாக' என்று திருவருள் புரிகின்றான். அச்சேவலும் 'இது தக்கதொரு பணியே' என்று தனித்து விண்மிசை எழுகின்றது, 
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 497)
அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட உருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி
மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்
தக்கதே பணிஇதென்னா எழுந்தது தமித்து விண்மேல்
-
(சொற்பொருள்: குக்குடம் - கோழி, ஆர்த்தி - ஆர்ப்பரிப்பாய், தமித்து - தனித்து)

அச்சேவல் குகக் கடவுளின் தேரிலுள்ள கொடியாகி, அண்டங்கள் யாவும் அதிருமாறு ஆர்ப்பரிக்கின்றது.

(3)
பின்னர் கார்த்திகேயக் கடவுள் அதுவரையிலும் ஆரோகணித்திருந்த இந்திர மயிலை நீக்கி, மெய்யுணர்வு பொருந்தி நின்றிருந்த சூரனாகிய மயிலிடம் 'இனி நீ நம்மைச் சுமப்பாயாக' என்றருளி அதன் மீது ஆரோகணித்து, இப்புவியிலுள்ள திசைகள் யாவிலும் வலம் வருகின்றான்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 499)
சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வு கொண்டொழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞையேறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்தலுற்றான்

(4)
மேருமலை பிளவு பட, நிலவுலகம் யாவும் அதிர்ந்து இடிபட, செந்தீயுமிழும் அக்கினி தேவனும்; சூறாவளிப் பெருங்காற்றை வெளிப்படுத்தும் வாயுதேவனும் அஞ்சித் துடிதுடிக்கும் தன்மையில், இடிக்கூட்டங்களின் பேரோசையும் பொடிபடுமாறு, தன் தோகைகளை வீசி சூரனாகிய ஆண்மயில் சிவகுமரனைச் சுமந்தவாறு விண்மிசை வலம் வருகின்றது,
-  
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 500)
தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத்தொடுங்கச் சூறை
துடித்திட அண்டகூடம் துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரள ஆர்த்திட்டேகிற்றுத் தோகை மஞ்ஞை

சூரசம்ஹார நிறைவு - தேவர்கள் ஆறுமுகக் கடவுளைப் போற்றுதல் (கந்தபுராண நுட்பங்கள்):

வீரமகேந்திரபுரத் தீவில் நடந்தேறிய சூரசம்ஹாரப் போரில் ஆறுமுகக் கடவுள் வெற்றி வாகை சூடி, சூரனை சேவலும் மயிலுமாக ஆட்கொண்டு, வெற்றி வேலாயுதக் கடவுளாக மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் அனைவருக்கும் திருக்காட்சி அளிக்கின்றான்.

(1)
தேவர்கள் இத்திருக்காட்சியைத் தரிசித்து உடலெலாம் புளகமுற ஆரவாரம் செய்கின்றனர். ஆனந்தத்தால் துள்ளுகின்றனர், ஆடிப் பாடுகின்றனர், பூத்தூவிப் போற்றுகின்றனர். குமாரக் கடவுளின் திருவருளை வேண்டித் தொழுகின்றனர், மயில் வாகனக் கடவுளைச் சூழ்ந்து நெருங்கி நின்றவாறு பலப்பல துதிகளால் போற்றி செய்கின்றனர். 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 2)
ஆர்த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்
போர்த்தனர் பொடிப்பின் போர்வை பொலங்கெழு பூவின்மாரி
தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர்வேல் கொண்ட
தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்து வாழ்த்தெடுக்கல் உற்றார் 

(2)
பெருமானே, 108 யுகங்களாக சூரபத்மன்; தாரகாசுரன்; சிங்கமுகாசுரன் ஆகியோரால் சொல்லொணாத் துயருக்கு உள்ளாகி, உளமிகப் புழுங்கிக் கதியற்றுக் கதறியிருந்த எங்களை ஆட்கொள்ளவன்றோ, ஆறு திருமுகங்களோடு தோன்றி அருளினாய், 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 4)
மாறுமுகம் கொண்டுபொரு வல்லவுணர் மாளாமல்
நூறு முகமெட்டு நோதக்கன புரியத்
தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளவன்றோ
ஆறுமுகம் கொண்டே அவதரித்தாய் எம்பெருமான்
-
(சொற்பொருள்: நோதக்கன புரிய - துன்பம் தரும் செயல்களைப் புரிய) 

(3)
குமரப் பெருமானே, அசுரர்களால் எண்ணில் பலகாலம் வதைக்கப்பட்டு, தன்னிலை மறந்து; சிறப்புகள் யாவற்றையும் இழந்து, உளம் பதைத்து, இறந்தவர்களே என்று கூறத் தகும் நிலையில் புலம்பித் திரிந்திருந்தோம். இன்று நீ அந்நிலையை மாற்றி அருள் புரிந்தமையால், மீண்டும் உயிர் பெற்றவர்களானோம், 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 6)
மன்ற அவுணர் வருத்திட இந்நாள்வரையும்
பொன்றினவர் என்னப் புலம்பித் திரிந்தனமால்
இன்று பகைமாற்றி எமக்கருள்நீ செய்கையினால்
சென்றஉயிர் மீண்ட திறம் பெற்றனம் ஐயா

(4)
ஐயனே, 'செயல்கள் யாவையும் செய்விப்பதும்; அச்செயல் புரிவதற்குரிய அறிவு மற்றும் ஆற்றலாக விளங்குவதும், அச்செயலால் வரும் பயனாக அமைவதும், யாவுமாக நின்றருள் புரிவதும் நீயே' எனும் சத்தியத்தை இன்று இச்சமயத்தில் ஐயமின்றி உணர்ந்து கொண்டோம். ஆதலின் பிறவிக் கடலினின்றும் நீங்கப் பெற்றவர்களாகி உய்ந்தோம்,
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 7)
செய்யும் அவனும் புலனும் செய்வித்து நிற்போனும்
எய்த வரும் பொருளும் யாவையு(ம்) நீயே என்கை
ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால்
வெய்ய பவமகன்று வீடும்இனிக் கூடுதுமால்

(5)
எங்களுக்குப் பெரிதும் இடர் புரிந்து வந்த அசுரர்களையெல்லாம் அழித்துக் காத்தருளினாய். ஆதலின் இனி அடியவர்களாகிய நாங்கள் பிறிதொன்றையும் வேண்டோம், உனையன்றி எவரொருவரையும் புகழோம், உன் திருவடிக்கே தொண்டு புரியும் பெருநிலையை எய்தினோம், 
-
(யுத்த காண்டம்: தேவர்கள் போற்று படலம் - திருப்பாடல் 8 )
ஈண்டே எமருக்கிடர்செய் அவுணரெலாம்
மாண்டே விளியும் வகைபுரிந்து காத்தனையால்
வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே
பூண்டேம் தொழும்பு புகழேம் பிறர்தமையே

சூரனின் தீவு நகரத்தினைக் கடலில் மூழ்கச் செய்தல் (கந்தபுராண நுட்பங்கள்):

சூர சம்ஹார நிகழ்விற்குப் பின்னர் கருணைக் கடலான கந்தக் கடவுள் வருண தேவனிடம், 'சூரனின் இத்தீவு நகரத்தினை, ஊழிக்கால வெள்ளம் பூமியை உண்பது போல் கடலினில் மூழ்கச் செய்வாயாக' என்றருளிச் செய்கின்றான்,
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 15)
கருணையங் கடலாகியோன் கனைகடற்(கு) இறையாகும்
வருணன் மாமுக நோக்கியே வெய்யசூர் வைகுற்ற
முரணுறும் திறல் மகேந்திர நகரினை முடிவெல்லைத்
தரணியாமென உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான்

முழுமுதற் பொருளான ஆறுமுக தெய்வத்தின் கட்டளையைச் சிரமேற் கொள்ளும் வருண தேவன், முன்பொரு சமயம் பாற்கடல் வாசனான பரந்தாமன் இந்நிலவுலகு முழுமையும் உண்ட தன்மையினைப் போன்று, சூரனின் தீவு நகரமான வீரமகேந்திரபுரம் முழுவதையும் கடலுக்குள் மூழ்குமாறு செய்கின்றான்
-
(குறிப்பு: கிருஷ்ணாவதார கால கட்டத்தில், ஸ்ரீகிருஷ்ணன் பால்ய பருவத்தில் யசோதை அன்னைக்குத் தன் திருவாயினுள் உலகங்கள் யாவையும் காண்பித்தருளிய நிகழ்வையே நம் கச்சியப்ப சிவாச்சாரியார் 'மாயவன் அடுவுலகு (உ)ண்டிடு நெறியேபோல்' என்று குறிக்கின்றார்),
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 16)
என்ற மாத்திரைச் சலபதி விழுமிதென்(று) இசைவுற்றுத்
துன்று பல்லுயிர் தம்மொடு மகேந்திரத் தொல்லூரை
அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக்கீழ்
நின்று மாயவன் அடுவுலகு (உ)ண்டிடு நெறியேபோல்
-
(சொற்பொருள்: சலபதி - வருண தேவன், தொல்லூர் - தொன்மையான நகரம், புணரி - கடல்)

திருச்செந்தூரில் ஆறுமுகக் கடவுளுக்கு நடந்தேறிய அற்புத வழிபாடு (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் சூரசம்ஹார நிகழ்விற்குப் பின்னர் யாவரும் உடன் வர, இலங்கையிலிருந்து புறப்பட்டுக் கடல் கடந்து திருச்செந்தூர் தலத்திற்கு மீண்டும் எழுந்தருளி வருகின்றான்.

அன்றைய மாலைப்பொழுதில் நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் கந்தவேளிடம், 'அடியவர்களாகிய நாங்கள் உம்முடைய திருவடிகளுக்குப் பூசனை புரியப் பெரிதும் விழைகின்றோம்' என்று பணிந்து வேண்டுகின்றனர், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 22)
அன்னதொரு போழ்துதனில் ஆறிரு தடந்தோள்
முன்னவனை நான்முகவனே முதல தேவர்
சென்னிகொடு தாழ்ந்து சிறியேங்கள் இவண்உந்தன் 
பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றார்

வேலாயுதப் பெருங்கடவுளும் அதற்கிசைந்தருள, மணம் பொருந்திய நன்னீர்; சந்தனம்; எண்ணிறந்த மலர்கள்; தூப தீபங்கள்; நிவேதனங்கள் என்றிவைகளை மிக விரைந்து சேகரித்துக் கொள்கின்றனர், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 23)
என்றுரைசெய் காலை எமையாளுடைய அண்ணல்
நன்றென இசைந்திட நறைக்கொள் புனல் சாந்தத்
துன்றுமலர் தீபம்அவி தூப முதலெல்லாம்
அன்றொரு கணத்தின்முன் அழைத்தனர்கள் அங்ஙன்

முன்பொரு சமயம் சிவபரம்பொருள் உமையம்மைக்கு உபதேசித்தருளிய 'குமார தந்திரம்' எனும் ஆகமநூலின் வழிநின்று, அறுமுகக் கடவுளை மன; மெய்; வாக்கினாலும் ஒருமையுற்றுப் பூசித்துப் பணிகின்றனர்,
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 24)
எந்தைஉமை தேர்ந்திட இயம்பிய குமார
தந்திர நெறிப்படி தவா(து) அறுமுகற்கு
முந்திய குடங்கர்முதல் மூவகையிடத்தும்
புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே

குகப் பெருமான் அவ்வழிபாட்டினால் திருவுள்ளம் மகிழ்ந்து, 'குறையேதும் இருப்பின் கூறுவீர்' என்றருள் புரிய, தேவர்களும் 'ஐயனே, சூரன் உள்ளிட்ட அசுரர்கள் யாவரையும் சம்ஹாரம் புரிந்து எங்களைக் காத்தருளினாய், உன் பேரருள் பெற்று நிற்கும் இந்நிலையில் யாதொரு குறையுமில்லை' என்று பணிகின்றனர்,
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 26)
நீண்டஅருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு
வேண்டுகுறை உண்டெனின் விளம்புதிர்கள் என்னக்
காண்டகைய சூர்முதல் களைந்தெமை அளித்தாய்
ஈண்டுனருள் பெற்றனம் யாதுகுறை மாதோ

தேவர்கள் மேலும் தொடர்கின்றனர், 'வேலேந்தும் இறைவனே, இனி எங்கட்கு அருள வேண்டிய வரமொன்றையும்  கூறுகின்றோம், அடியவர்களாகிய எங்கள் உடல் இவ்வுலகில் உள்ள காலஅளவு முழுவதும், சிவஞானமேயாகிய உன்னிரு திருவடிகளில் நிலைத்த அன்பினைத் தந்தருள்வாய் ஐயனே' என்று நெகிழ்ந்துருகி விண்ணப்பித்துப் பணிய, கருணைப் பெருவெள்ளமான செந்திலாண்டவனும் 'அவ்வாறே அளித்தோம்' என்றருள் புரிகின்றான், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 27)
ஒன்றினி அளிப்பதுள(து) உன்னடியம் யாக்கை
நின்றிடு பகல்துணையும் நின்னிரு கழற்கண்
மன்றதலை அன்புற வரம்தருதி எந்தாய்
என்றிடலும் நன்றென இரங்கியருள் செய்தான்

செந்திலாண்டவன் புரிந்த சிவ வழிபாடு (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள், சூரசம்ஹார நிகழ்விற்குப் பின்னர் யாவரும் உடன்வர, இலங்கையிலிருந்து கடல் கடந்து திருச்செந்தூர் தலத்திற்கு எழுந்தருளி வருகின்றான். அன்றைய மாலைப் பொழுதில் நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் செந்திலாண்டவனைப் பூசித்து நல்வரங்களைப் பெற்று மகிழ்கின்றனர்.  

பொழுது புலர்கின்றது, அறுமுக தெய்வம் தேவதச்சன் புதுக்கியுள்ள திருக்கோயிலுள் சிவலிங்கத் திருமேனியொன்றினைப் பிரதிட்டை செய்து, அதனுள் முக்கண் முதல்வரை எழுந்தருளச் செய்கின்றான். 
-
(1)
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 31)
அப்பொழுதவ்விடை அமரர் கம்மியன்
கைப்படு செய்கையால் கந்தவேள் ஒரு
செப்பரு நிகேதனம் செய்வித்தீசனை
வைப்புறு தாணுவில் வருவித்தான்அரோ!!!
-
(சொற்பொருள்: அமரர் கம்மியன் - தேவ தச்சன், நிகேதனம் - கோயில், தாணு - சிவலிங்கத் திருமேனி) 

(2)
தேவர்கள் பஞ்சகவ்யம்; மலர்கள்; மணம் பொருந்திய திருமஞ்சன நீர்; அமிர்தம்; சிறப்பான வஸ்திரங்கள்; மணி விளக்குகள்; தூப தீபங்கள்; சாமரை முதலிய பூசைப் பொருட்களைச் சேகரித்துத் தருகின்றனர், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 32)
ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்
மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்
தூமணி விளக்கொடு தூபம் கண்ணடி
சாமரை ஆதிகள் அமரர் தந்திட
-
(சொற்பொருள்: ஆமயம் - கோமயம், ஐந்து கந்திகள் - பஞ்ச கவ்வியங்கள்)

(3)
யாவற்றையும் ஒருங்கே உணரவல்ல வேலாயுத தெய்வம் சிவாகமங்கள் அறிவிக்கும் நெறி வழி நின்று, தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளை நெகிழ்ந்துருகிக் காதலுடன் வழிபாடு இயற்றிப் பணிகின்றான், 
-
(யுத்த காண்டம் - மீட்சிப் படலம் - திருப்பாடல் 33)
முழுதொருங்குணர்ந்திடு முருகன் யாவரும் 
தொழுதகும் இறைவனூல் தொடர்பு நாடியே
விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர்
வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால்
-
(சொற்பொருள்: இறைவனூல் - சிவாகமம்)

திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை அம்மை திருமண நிகழ்வுகள் - பகுதி 1 (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தக் கடவுள் சூரசம்ஹார நிகழ்விற்குப் பின்னர் இலங்கையிலிருந்து மீண்டும் திருச்செந்தூருக்கு எழுந்தருளி வருகின்றான். பின்னர் மறுதினமே அங்கிருந்து அனைவருடனும் திருப்பரங்குன்றத்துக்கு எழுந்தருளிச் செல்கின்றான். அங்கு இந்திரன் தன்னுடைய புதல்வியை மணத்தால் அணையுமாறு விண்ணப்பிக்க, கந்தவேளும் 'அவள் நமையடைய முன்னமே தவமியற்றியவள்' என்றுணர்த்தி அதற்கு இசைந்தருள் புரிகின்றான். 

இந்திரன் 'அடியவன் உய்ந்தேன்' என்று அகமிக மகிழ்ந்து தக்கோர் யாவருக்கும் தூதர் வாயிலாக மணநிகழ்விற்கு அழைப்பு விடுக்கின்றான், இவர்களுள் இந்திரனின் தோழரான முசுகுந்தச் சக்கரவர்த்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது (இத்திருமணப் படலத்திற்கு மட்டுமே நம் கச்சியப்ப சிவாச்சாரியார் 268 திருப்பாடல்களை அருளியுள்ளார்). 

அறுமுக தெய்வம் தன் பரிவாரங்களோடு திருமண மண்டபத்திற்கு எழுந்தருளி வர, இந்திராணி தேவி சிவகுமரனுக்குப் பாதபூசை செய்து வரவேற்றுப் பணிகின்றாள். கந்தப் பெருமான் அனைவருடனும் அம்மண்டபத்துள் இனிது வீற்றிருக்க, அண்டர் நாயகரான முக்கண் முதல்வர் உமையன்னையுடனும் மற்றுமுள்ள கணங்களுடனும் அவ்விடத்திற்கு எழுந்தருளி வருகின்றார்.  

(1)
சூரியனின் வருகையால் மலரும் தாமரை போன்று நம் குகக் கடவுள் திருவுள்ளம் மிக மகிழ்ந்து; விரைந்து சென்று எதிர்கொண்டு அம்மையப்பரின் பொன்போலும் திருவடிகளைத் தன் சென்னி மீது சூடி மகிழ்கின்றான். 
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 217)
அதுகண்டு நடந்(து) அறுமா முகவன்
எதிர்கொண்டு விரைந்(து) இருவோர் பதமும்
முதிர்அன்பொடுதன் முடி சூடினனால்
கதிரும் கமலங்களு(ம்) மேவிய போல்

வணங்கி நிற்கும் வேலாயுத தெய்வத்தைச் சிவசக்தியர் பேரன்புடன் தழுவி உச்சிமோந்து திருவுள்ளம் மகிழ்கின்றனர். பின்னர் கார்த்திகேயப் பெருமான் அம்மையப்பரைத் தக்கதோர் ஆசனத்தில் எழுந்தருளச் செய்கின்றான்,

(2)
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் இந்திரன், பண்டைய தவத்தால் வந்துதித்த தன் அருமைச் செல்வியை அம்மண்டபத்திற்கு அழைத்து வருகின்றான். அங்கு குழுமியிருந்த தவமுனிவரும்; தேவர்களும் மற்றுமுள்ளோரும், 'தெய்வயானை அம்மை வாழி வாழி' என்று அம்மையின் திருவடிகளுக்கு வாழ்த்துக் கூறிப் போற்றுகின்றனர்,  
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 233)
இன்ன எல்லையில் இந்திரன் தெய்வதக்
கன்னி தன்னைக் கடிமணச் சாலையின்
முன்னர் உய்ப்ப முனிவரும் தேவரும்
அன்னை வாழியென்றே அடி போற்றினார்

(3)
அனைவரும் கைதொழுது வரவேற்று நிற்கும் அப்பேரவையுள் செல்லும் நம் தெய்வயானை அம்மை, பராசக்தியுடன் எழுந்தருளியிருக்கும் ஆதிப்பரம்பொருளான சிவபெருமானின் திருவடிகளை முதற்கண் பணிகின்றாள். பின்னர் அறுமுக வள்ளலைத் தன் திருக்கண்களால் ஒருவாறாகத் தரிசித்து நாணமுற்று நிற்கின்றாள்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 234)
கணங்கொள் பேரவை கைதொழ ஆண்டுறும்
அணங்கு தன்னுடன் ஆதியம் தேவனை
வணங்கி வேலுடை வள்ளலை நோக்கியே
சுணங்கு சேர்முலை துண்ணென வெள்கினாள்

தெய்வயானை அம்மை திருமண நிகழ்வுகள் (பகுதி 2) - கந்தபுராண நுட்பங்கள்:

(1)
இந்திரன் அறுமுகக் கடவுளின் திருக்கரத்தில் தெய்வயானையாரைச் சேர்ப்பித்து, 'உம்முடைய அடியவன் இங்கு இவளை உம்மிடம் ஒப்புவிக்கின்றேன்' என்று கூறி மணம் பொருந்திய நன்னீரினால் தாரை வார்த்துப் பணிகின்றான்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 245)
அன்னுழி இந்திரன் ஆறுமுகேசன்
தன்னொரு கையிடை தந்தியை நல்கி
நின்னடியேன் இவண் நேர்ந்தனன் என்னாக்
கன்னல் உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான்
-
(சொற்பொருள்: அன்னுழி - அச்சமயத்தில், தந்தி - தெய்வயானையார், கடிப்புனல் - மணம் பொருந்திய நன்னீர்)

(2)
பின்னர் நான்முகக் கடவுள் எடுத்தளித்த திருமாங்கல்யத்தைக் கந்தக் கடவுள் தெய்வயானை தேவியின் கழுத்தினில் அணிவித்து, மலர் மாலையையும் சூட்டியருள் புரிகின்றான்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 247)
செங்கமலத்(து) இறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட
மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து
நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்
-
(சொற்பொருள்: ஆண்டகை - கந்தக் கடவுள், மணிக்களம் - அழகிய கழுத்து, தொடை - மாலை) 

(3)
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்ப் பிரமன் சிவவேள்வித் தீயினை வளர்த்து, குமர நாயகனைக் கொண்டு வைதீக முறைப்படி மணவேள்வித் தொழில் செய்விக்கின்றார், 
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 251)
ஆயது போழ்தினில் அம்புயமுற்றோன்
காயெரி தந்து கலப்பைகள் கூவித்
தூய மணம்புரி தொன்முறை வேள்வி
நாயகனைக்கொடு நன்று செய்வித்தான்
-
(சொற்பொருள்: அம்புயம் - தாமரை, கலப்பைகள் - வேள்விக்கான துணைப்பொருட்கள்) 

(4)
அண்டங்களுக்கெல்லாம் காரணப் பொருளான கந்தக் கடவுள் நம் தெய்வயானை அம்மையின் கரம் பற்றியவாறு வேள்வித் தீயினை வலமாக வருகின்றான். பின்னர், பிரமனின் முடி மீதுத் தன் திருவடியினை வைத்தருளும் கந்தப் பெருமான் இச்சமயத்தில் தெய்வயானை தேவியின் பாதத்தினை அம்மியின் மீது வைத்தருள் புரிகின்றான்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 252)
உலகருள் காரணன் ஒண்ணுதலோடும்
வலமுறையாக வயங்கனல் சூழ்ந்து
சிலையிடை அன்னவள் சீறடி தந்தான்
மலரயன் உச்சியின் மேலடி வைத்தான்
-
(சொற்பொருள்: ஒண்ணுதல் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய தெய்வயானை தேவியார், வயங்கனல் - ஒளியுடைய வேள்வித் தீ, சிலை - அம்மிக் கல், மலரயன் - பிரம்மா)

(5)
பின்னர் நால்வேதத் தலைவியான அம்பிகை; அன்னை மகாலக்ஷ்மி, அன்னை சரஸ்வதி மற்றுமுள்ளோர் யாவரும் சூழ்ந்திருக்க, குமாரக் கடவுள் தெய்வயானை தேவியுடன் விண்ணிலுள்ள அருந்ததி நட்சத்திரத்தினைப் பார்த்தருள் புரிகின்றான்,
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 253)
மாலினி காளிகள் மாமலராட்டி
பாலின் நிறத்தி பராயினர் சூழச்
சாலினி மங்கலை தன்னொடு கண்டான்
வேலினின் மாவினை வீழ எறிந்தோன்
-
(சொற்பொருள்: மாலினி - உமையன்னை, மாமலராட்டி - ஸ்ரீமகாலக்ஷ்மி, பாலின் நிறத்தி - அன்னை சரஸ்வதி, பராயினர் - வணங்கி நிற்போர், சாலினி - அருந்ததி, மங்கலை - தெய்வயானை தேவியார், மாவினை - மாமரத்தினை)

தெய்வயானை அம்மை திருக்கல்யாண நிகழ்வுகள் - இறுதிப் பகுதி (கந்தபுராண நுட்பங்கள்):

திருமண நிகழ்வு நடந்தேறிய பின்னர் குமாரக் கடவுள் தெய்வயானை தேவியுடன் அம்மையப்பரை அன்புடன் வலம் வந்து பெருவிருப்பத்துடன் அவர்களின் திருவடிகளில் மும்முறை வீழ்ந்துப் பணிகின்றான், 

(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 254)
இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
அவ்வையொ(டு) அத்தனை அன்பொடு சூழ்ந்து
வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான்
-
(சொற்பொருள்: மன்றல் - திருமணம், அவ்வை - அன்னை, அத்தன் - தந்தை)

சிவமூர்த்தியும் அம்பிகையும் தங்களை வணங்கியிருந்த மணமக்கள் இருவரையும், திருவுள்ளத்தில் பெருமகிழ்வுடன் எடுத்தணைத்துப் பேரருள் புரிந்து, தங்களுடைய பக்கத்திலிருத்தி உச்சி மோந்து,  'நம்முடைய முதன்மைத் தன்மையினை உங்களுக்கு அளித்தோம்' என்றருள் புரிகின்றனர். அற்புதப் பகுதியிது, சிவசக்தியரின் வற்றாத தனிப்பெரும்கருணைக்கு ஓர் எல்லையுமுண்டோ? அண்டசராசரங்கள் யாவினுக்கும் தனிப்பெரும் தலைமை கொண்டருளும் ஆதிப்பரம்பொருள் இச்சமயத்தில் சிவஞான வடிவினனான நம் குமர நாயகனுக்கு அத்தலைமையினைத் திருமணப் பரிசாக அளித்தருள் புரிகின்றார், 
-
(தேவ காண்டம்: தெய்வயானையம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 255)
அடித்தலத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்(து)
எடுத்தணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி
முடித்தலத்தினில் உயிர்த்(து) உமக்(கு) எம்முறு முதன்மை
கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்க கொள்கையினார்
-
(சொற்பொருள்: பாங்கரில்  - பக்கத்தில், முடித்தலத்தினில் உயிர்த்து - உச்சி மோந்து)

தெய்வயானை தேவியுடன் திருக்கயிலை சென்று வணங்கிய குமாரக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

இலங்கையில் சூரசம்ஹார நிகழ்வும் அதன் பின்னர் திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை அம்மையுடனான திருமண நிகழ்வும் இனிதே நடந்தேற, அறுமுகக் கடவுள் அனைவருடனும் இந்திரலோகத்திற்கு எழுந்தருளிச் செல்கின்றான். அங்கு கந்தவேளின் ஆணைக்கிணங்க நான்முகக் கடவுள் இந்திர பட்டாபிஷேக வைபவத்தினைச் சிறப்புற செய்துவிக்கின்றார். பின் கந்தக் கடவுள் தெய்வயானை தேவியுடன் தேவலோகத்தில் சிறிது காலம் எழுந்தருளியிருந்துப் பின் அங்கிருந்து திருக்கயிலைக்குச் செல்லத் திருவுள்ளம் பற்றுகின்றான்.

(1)
வீரவாகு தேரினைச் செலுத்த, பூதகணத்தினர் பெருவெள்ளமென உடன்வர, தெய்வயானையாருடன் திருக்கயிலை மலையைச் சென்றடைகின்றான், 
-
(தேவ காண்டம்: கந்த வெற்புறு படலம் - திருப்பாடல் 3)
தேரிடைப் புகுந்த ஐயன் திறலுடை மொய்ம்பன் பாகாய்ப்
பாரிடைச் சென்று முட்கோல் பற்றினன் பணியால் உய்ப்பப்
போருடைச் சிலை வல்லோரும் பூதர்தம் கடலும் சுற்றக்
காருடைக் களத்துப் புத்தேள் கயிலைமால் வரையில்  போந்தான்
-
(திறலுடை மொய்ம்பன் - வீரவாகு, பாகாய் - தேர்ப் பாகனாய்)

(2)
அங்கு இனிது எழுந்தருளியிருக்கும் முக்கண்ணுடப் பரம்பொருள்; உமையன்னை இருவரின் திருவடிகளிலும், தெய்வயானை தேவியுடன் வீழ்ந்துப் பணிந்து அம்மையப்பரின் பெருங்கருணையை ஆசியாகப் பெற்று மகிழ்ந்து, அங்கிருந்து புறப்பட்டுக் கந்தமலைக்கு எழுந்தருளிச் செல்கின்றான், 
-
(தேவ காண்டம்: கந்த வெற்புறு படலம் - திருப்பாடல் 4)
போனதோர் காலை வையம் பொள்ளென இழிந்து முக்கண்
வானவன் தன்னை ஆயோடடிகளை வணக்கம் செய்து
மேனதோர் கருணையோடும் விடைபெறீஇ விண்ணுளோர்கள்
சேனையம் தலைவன் கந்தச் சிலம்பினில் கோயில் புக்கான்
-
(சொற்பொருள்: வையம் - தேர், பொள்ளென - விரைந்து, ஆய் - அன்னை, சிலம்பு - மலை)

தணிகை வேலவனிடம் வள்ளிநாயகிக்கு அருளுமாறு விண்ணப்பிக்கும் நாரத முனிவர் (கந்தபுராண நுட்பங்கள்):

(1)
குமாரக் கடவுள், வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காவல் காத்து வரும் வள்ளி நாயகிக்குப் பேரருள் புரியத் திருவுள்ளம் பற்றுகின்றான். தெய்வயானை தேவியைக் கந்தமலையிலேயே இருக்குமாறு விடுத்துத் தான் மட்டும் தனியே திருத்தணிகை மலைக்கு எழுந்தருளி வருகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 55)
இந்த முறையில் இவள் ஏனற்புனம் காப்ப
அந்த அளவில் அவளுக்கருள் புரியக்
கந்தவரை நீங்கிக் கதிர்வேலவன் தனியே
வந்து தணிகை மலையிடத்து வைகினனே
-
இந்நிலையில் நாரத மாமுனிவர் தினைப்புனத்திலிருக்கும் வள்ளியம்மையைத் தொலைவிலிருந்தே (வள்ளிதேவி அறியாதவாறு) தரிசித்துத் தொழுகின்றார். 'இங்கு எழுந்தருளியுள்ள என் அம்மை கந்தவேளை அடைவதற்கு முன்னமே அரியபெரிய தவமியற்றியவளாயிற்றே, இனி இவளுக்கருள் புரியுமாறு இக்கணமே சென்று கந்தக் கடவுளிடம் வேண்டுவோம்' என்று திருத்தணிகைக்கு விரைகின்றார்.
-
(2)
தணிகை மாமலையைச் சென்றடையும் நாரத முனிவர் வேலாயுதப் பெருங்கடவுளின் திருவடிகளைப் பன்முறை வீழ்ந்துப் பணிந்துப் போற்றிப் பின் வள்ளியம்மை குறித்து கூறத் துவங்குகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 60)
தணிகையங்கிரி தன்னில் வைகிய
இணையில் கந்தனை எய்தி அன்னவன்
துணைமென் சீறடி தொழுது பன்முறை
பணிதல் செய்திவை பகர்தல் மேயினான்

(3)
பெருமானே, சிவமுனிவரின் திருக்கண் பார்வையினால் மானின் வயிற்றிலிருந்து தோன்றிய வள்ளியம்மை வேடர்குலத்தினரால் வளர்க்கப் பெற்று இன்று இச்சமயத்தில் அங்குள்ள தினைப்புனமொன்றில் காவல் காத்து வருகின்றாள்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 61)
மோன நற்றவ முனிவன் தன்மகள்
மானின் உற்றுளாள் வள்ளி வெற்பினில்
கானவக் குலக் கன்னியாகியே
ஏனலைப் புரந்(து) இதணில் மேயினாள்
-
(சொற்பொருள்: நற்றவ முனிவன் - சிவமுனிவர், ஏனல் - திணைப்புனம், இதண் - பரண்)

(4)
நாரதர் மேலும் தொடர்கின்றார், 'குமரப் பெருமானே, வள்ளியம்மையின் பேரழகிற்குத் திருமகளின் எழிலையும் ஒப்புமையாகக் கூற இயலாது, அடியவன் கூறும் இவ்வுரை பொய்யன்று, ஆதலின் அவளைத் தாம் கண்டருள் புரிவீராக' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார், 

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 62)
ஐயனேஅவள் ஆகம் நல்லெழில்
செய்ய பங்கயத் திருவிற்கும் இலை
பொய்யதன்றிது போந்து காண்டிநீ
கையனேன் இவண் கண்டு வந்தனன்

(5)
நாரதர் இறுதியாய், 'ஐயனே, அண்டசராசரங்களுக்கும் தாயாக விளங்கஇருக்கும் அப்பெண்ணின் நல்லாள், முன்னமே திருமாலின் திருக்கண்களினின்றும் வெளிப்பட்டு உம்முடைய திருத்தோள்களை அடைவதற்கு நோன்பியற்றிய தன்மையினள். ஆதலால் தாம் விரைந்து சென்று என் அம்மைக்கு அருள் புரிதல் வேண்டும்' என்று பணிகின்றார்,

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 63)
தாயதாகும் அத்தையல் முன்னரே
மாயவன் மகள் மற்றுன் மொய்ம்பினைத்
தோய நோற்றனள் சொற்ற எல்லையில்
போய் அவட்கருள் புரிதியால் என்றான்

(6)
முழுமுதற்பொருளான குமர நாயகன் 'குற்றமற்ற நாரதனே, நீ மொழிந்த செய்தி மிக நன்று, இனி நீ செல்வாயாக' என்றருள் புரிகின்றான். பின்னர் 'வள்ளிநாயகியை காண வேண்டுமே' என்று திருவுள்ளத்தில் நினைந்தருளிக் காமநோயினால் மிகவும் வாட்டமுறுகின்றான், 

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 64)
என்ற வேலையில் எஃக வேலினான்
நன்று நன்றிது நவையில் காட்சியோய்
சென்றி நீயெனச் செப்பித் தூண்டியே
கன்று காமநோய்க் கவலையுள் வைத்தான்

ஸ்ரீவள்ளி தேவியின் அவதாரம், வள்ளிமலையின் அமைவிடம் மற்றும் சிறப்புகள் (கந்தபுராண நுட்பங்கள்):

படலத்தின் 2ஆம் திருப்பாடலிலேயே 'வள்ளிமலை தொண்டை நாட்டுப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் ஐயத்திற்கு இடமின்றிக் குறித்து விடுகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 2):
அயன் படைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
பயன் படைத்த பழம்பதி என்பரால்
நயன் படைத்திடு நற்தொண்டை நாட்டினுள்
வியன் படைத்து விளங்குமேற் பாடியே
-
வேலூர் மாவட்டத்தில், வேலூர்; காட்பாடி மற்றும் காங்கேயநல்லூரிலிருந்து சுமார் 25 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது வள்ளிமலை.

'வள்ளி நாயகியின் அவதாரத் தலமாகவும், அறுமுக தெய்வம் பல்வேறு காதல் திருவிளையாடல்கள் புரிந்தருள இருக்கும் ஷேத்திரமாகவும் விளங்கும் இவ்வள்ளி மலையின் அளவற்ற சிறப்புகளை விவரிக்கவும் இயலுமோ?' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் வியந்து போற்றுகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 7):
கள்ளிறைத்திடும் பூந்தண்டார்க் கடம்பணி காளை பன்னாள் 
பிள்ளைமைத் தொழின் மேற்கொண்டு பெட்புடன் ஒழுகும் வண்ணம்
வள்ளியைத் தன்பால் வைத்து வள்ளிவெற்பென்னும் நாமம்
உள்ள அக்கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற்றாமோ
-
(சொற்பொருள்: கள் - தேன், பிள்ளைமைத் தொழில் - காதல் திருவிளையாடல், பெட்பு - பெருமை)

அம்மலைப் பகுதியில் சிவமுனிவர் எனும் உத்தம சீலர், தெய்வங்களும் காண்பதற்கரிய ஆதிப்பரம்பொருளான சிவபெருமானைக் குறித்து, சைவப்பெருஞ்சமயத்தின் வழிநின்று அரியபெரிய தவமியற்றி வருகின்றார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 19):
அவ்வரை மருங்கு தன்னில் ஐம்புலன் ஒருங்கு செல்லச்
செவ்விதின் நடாத்தும் தொன்மைச் சிவமுனி என்னும் மேலோன்
எவ்வெவர் தமக்கும் எய்தா ஈசனை உளத்துள் கொண்டு
சைவநல் விரதம் பூண்டு தவம் புரிந்(து) இருத்தலுற்றான்

அச்சமயத்தில் ஆறுமுகக் கடவுளின் திருவருளால், அங்கு உலவியிருந்த அழகிய மானொன்றின் மீது சிவமுனிவரின் பார்வை பதிய, அக்கணமே அம்மான் கருவுருகின்றது. திருமாலின் திருக்கண்களினின்றும் முன்னர் தோன்றி, கந்தக் கடவுளை மணத்தால் அணைவதற்குப் பன்னெடுங்காலம் தவமியற்றியிருந்த சுந்தரவல்லி எனும் தேவி, இதுவே தக்கதொரு தருணமென்று உணர்ந்து அம்மானின் கர்ப்பத்துள் பிரவேசிக்கின்றாள். பின்னர் அம்மான் அங்குள்ள சிறு குழியொன்றினுள் வள்ளிநாயகியை ஈன்றெடுத்துச் செல்கின்றது. 

அப்பகுதியின் வேடர் தலைவனான நம்பிராஜன் என்பான் குழந்தையைத் தன் மனைவியிடம் எடுத்துச் சென்றளித்து மகிழ்கின்றான். 'வள்ளிக் குழியினின்றும் கண்டெடுக்கப் பெற்ற இவளை வள்ளியென்றே அழைப்போம்' என்று யாவரும் அறிவித்து மகிழ்கின்றனர், 

பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு முன்னர் பெற்றருளிய அமிழ்தினை, சிவபரம்பொருளின் திருமைந்தனான குமர நாயகனின் தேவியை இவ்விதமாய் வளர்த்து வரும் பெறற்கரிய பேறு பெற்றுள்ளமையால், 'இவ்வேடுவர்களின் தவச் சிறப்பினை யாரே அளக்க வல்லார்' என்று வியந்து போற்றுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 45):
மூவா முகுந்தன் முதனாள் பெறும் அமுதைத்
தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை
மாவாழ் சுரத்தில்தம் மாமகளாப் போற்றுகையால்
ஆவா குறவர் தவமார் அளக்கவல்லாரே

12 வருடங்கள் கடந்து செல்ல, சிவஞானச் செல்வியான நம் வள்ளியம்மை இனிது வளர்ந்து மங்கைப் பருவத்தினை எய்தி, தேனினும் இனிய குரலில் ஆலோலம் பாடியவாறு தினைப்புனத்தினைக் காவல் காத்து வருகின்றாள்.

வள்ளிமலையிலொரு அற்புதக் காதல் திருக்காட்சி (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தக்கடவுள் வள்ளி நாயகியின் மீதான காதல் நோயினால் பெரிதும் வருந்தித் திருத்தணியிலிருந்து வள்ளிமலைக்கு, வேடுவ இளைஞனின் திருக்கோலத்தில் எழுந்தருளிச் செல்கின்றான். அங்குள்ள தினைப்புனத்தில், விவரிக்கவொண்ணா இளமையழகோடு கூடிய வள்ளி தேவி காவல் காத்து வரும் பரணுக்கு அருகாமையில் மெல்ல நடந்து செல்கின்றான்.

(1)
வள்ளி நாயகியிடம், 'வாள் போன்று உயிரையுண்ணும் கண்களை உடைய நங்கையே, இப்புவியிலுள்ள பெண்களுக்கெல்லாம் தலைவியென விளங்கியிருக்கும் உன்னை இத்தன்மையில் தினைப்புனக் காவலுக்கு வைத்தவர் எவரோ? அவர்களுக்கு பிரமன் சிறிதும் ஆய்ந்தறியும் உணர்வினைப் படைக்கவில்லை போலும்' என்று உரையாடலை மெதுவே துவக்கி வைக்கின்றான்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 70)
நாந்தகம்அனைய உண்கண் நங்கைகேள் ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கெல்லாம் இறைவியாய் இருக்கும் நின்னைப்
பூந்தினை காக்க வைத்துப் போயினார் புளினர்ஆனோர்க்(கு)
ஆய்ந்திடும் உணர்ச்சியொன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்
-
(சொற்பொருள்: நாந்தகம் - வாள், உண்கண் - உயிரை உண்ணும் கண்கள், ஏந்திழையார் - பெண்கள்)

(2)
(வள்ளிதேவி ஏதொன்றும் கூறாது நிற்க), 'நீண்ட கருங்கூந்தலை உடைய பெண்ணே, உன் மீதுள்ள காதலால் அறிவு தளர்ந்த நிலையிலுள்ள என்னிடம் உன் பெயரினைக் கூறுவாய், அல்லது உனது ஊரினையாவது விளம்புவாய், அதற்கும் இசையாவிடில் உன்னைத் தோற்றுவித்த பெருமையுடைய உன் ஊருக்குச் செல்லும் மார்க்கத்தையாவது பகர்வாய்' என்று கந்தப்பெருமான் உருகுகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 71)
வாரிரும் கூந்தல் நல்லாய் மதிதளர்வேனுக்(கு) உந்தன் 
பேரினை உரைத்தி மற்றுன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாதென்னில்
சீரிய நின் சீறூர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்

(3)
(வள்ளிதேவி தொடர்ந்து அமைதி காக்க), குமர நாயகன் பெரிதும் ஏக்கமுற்று, 'பெண்ணே, உன் வாய் திறந்து வார்த்தையொன்று உரைப்பாய், அல்லது சிறு புன்முறுவலாவது புரிந்து என் உயிரைக் காப்பாய், அதுவும் அமையாதெனில் உன் கடைக்கண்களால் சற்றேனும் பார்ப்பாய், விரக நோயினால் பெரிதும் வருந்தி நிற்கும் நான் உய்வு பெறுமாறு வழியொன்றினைப் புகல்வாய். இதன் பின்னரும் மனமுருகாது நீ நின்றிருந்தால் அப்பழி உன்னையே சாரும், ஆதலின் பாராமுகத்தினைத் தவிர்ப்பாய்' என்றுரைத்துத் தளர்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 72)
மொழியொன்று புகலாயாயின் முறுவலும் புரியாயாயின்
விழியொன்று நோக்காயாயின் விரகமிக்குழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின் மனமும் சற்றுருகாயாயின்
பழியொன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்

வேங்கை மரமாகி நின்ற வேலவன் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வேடுவ இளைஞனின் வடிவெடுத்துப் பல்வேறு காதல் மொழிகளால் வள்ளி நாயகியின் அன்பினைப் பெற முயன்று கொண்டிருக்கையில், வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் தனது வேடர் கூட்டத்தினருடன் மகளைக் காணும் பொருட்டு தினைப்புனத்திற்கு வருகின்றான். மறுகணமே அறுமுகப் பெருமான் ஒரு வேங்கை மரமாகி அவ்விடத்தே நிற்கின்றான். 

(1)
அம்மரத்தின் அடிப்பகுதி ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களாகவும், நடுப்பகுதி மேன்மைமிகு சிவாகம நூல்களாகவும், கிளைகள் யாவும் பல்வேறு கிளைகளாகவும் விளங்குமாறு கந்தப்பெருமான் எழுந்தருளி இருக்கின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 75)
ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்

(2)
வள்ளிக்கிழங்குகள்; தேன்; தினைமாவு; கலைமானின் பால்; இவற்றொரு இன்னபிற உணவு வகைகளையும் தன்னுடைய தவப் புதல்வியான வள்ளிதேவிக்கு அன்புடன் அளிக்கும் நம்பிராஜன், தினைப்புனத்தின் நடுவில் புதுமையாகத் தோன்றியிருந்த வேங்கை மரத்தினைக் கண்டு வியப்புறுகின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 76)
கானவர் முதல்வன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
மானினி தன்னைக் கண்டு வள்ளியம் கிழங்கு மாவும் 
தேனொடு கடமான் பாலும் திற்றிகள் பிறவு நல்கி
ஏனலம் புனத்தில் நின்ற யாணர் வேங்கையினைக் கண்டான்
-
(சொற்பொருள்: யாணர் - புதுமையான, கடமான் பால் - கலைமானின் பால்)

உடனிருந்த வேடர்கள் வேங்கை மரத்தினைக் கண்டு, 'எவ்விதம் இம்மரம் இங்கு தோன்றியது, தீங்கு விளைவிக்கும் பொருட்டே இது தோன்றியுள்ளது, இதனைக் காலம் தாழ்த்தாது கோடரியால் வெட்டி வீழ்த்துவோம்' என்று கடும் சினத்துடன் ஆரவாரம் செய்கின்றனர். நம்பிராஜன் அவர்களை அமைதியுறச் செய்து மகளான வள்ளியிடம், 'தினைப்புனத்தின் நடுவே இம்மரம் எவ்விதம் தோன்றியது, உரைப்பாயாக' என்று வினவுகின்றான். 

(4)
வள்ளி நாயகியும் வேடுவனாய் வந்திருந்த இளைஞனைக் குறித்து ஏதொன்றும் கூறாமல், 'தந்தையே, என்றுமில்லாத மாயமாய் இம்மரம் இங்கு புதிதாய்த் தோன்றியுள்ளது, இதன் தன்மையினை அறியாமல் நடுக்கமுற்று நிற்கின்றேன், இதுவே இங்கு நிகழந்தது' என்றுரைக்கின்றாள், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 80)
தந்தையாங்குரைத்தல் கேளாத் தையலும் வெருவி ஈது
வந்தவாறுணர்கிலேன் யான் மாயம்போல் தோன்றிற்றையா
முந்தைநாள் இல்லாதொன்று புதுவதாய் முளைத்ததென்னாச்
சிந்தைமேல் நடுக்கமெய்தி இருந்தனன் செயலிதென்றாள்

(5)
நம்பிராஜனும் சிவஞானச் செல்வியான நம் வள்ளியம்மையிடம், 'மகளே, அஞ்சாதே, இம்மரம் உனக்கு அரியதொரு துணை புரியவே இவ்விடம் தோன்றியுள்ளதாக உணர்கின்றேன், ஆதலின் நீ யாதொரு கவலையுமின்றி இவ்விடம் இருந்து வருவாயாக' என்று ஆறுதல்மொழி கூறி அவ்விடம் விட்டுச் செல்கின்றான்.  
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 81)
என்றிவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
நன்றிவண் வைகுதி நாண்மலர் வேங்கை
இன்துணையாய் இவண் எய்தியதென்னாக்
குன்றுவன் வேடர் குழாத்தொடு போனான்

தொடரும் கந்தக்கடவுளின் காதல் முயற்சிகள் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வள்ளி தேவியின் காதலைப் பெற பலவாறு முயல்கின்றான். இதற்கிடையில் வள்ளி நாயகியின் தந்தையான நம்பிராஜன் தன் கூட்டத்தினருடன் அங்கு வர, குமர நாயகன் வேங்கை மரமாக உருவெடுக்கின்றான். அவர்கள் அனைவரும் சென்ற பின்னர், மீண்டும் முன்னர் கொண்டிருந்த வேடுவத் திருக்கோலத்தில் தோன்றி நிற்கின்றான். தன் சுயவுருவினைக் காண்பித்துப் பேரருள் புரியுமுன்னம், எவ்விதமாவது தேவியின் காதலைப் பெற்று விட வேண்டுமென்பதில் வேலவன் உறுதியாக இருக்கின்றான். 

(1)
'குறவர் குல மங்கையே, உனையன்றி எனக்கினிப் புகலேதுமில்லை, ஆதலால் உன்னை இனி ஒருக்கணமும் பிரியேன்' என்று உருகுகின்றான். அண்ட சராசரங்களும் கந்த நாயகனே சரணென்றிருக்க, வேலவனோ இங்கு 'வள்ளிதேவியே சரண்' என்றுரைத்துக் காதல் திருவிளையாடல் புரிகின்றான், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 84)
கோங்கென வளர்முலைக் குறவர் பாவையே
ஈங்குனை அடைந்தனன் எனக்கு நின்னிரு
பூங்கழல் அல்லது புகலொன்றில்லையால்
நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே

(2)
குற மங்கையே, 'நீ அனுதினமும் நீராடும் சுனை நீராகவும், மேனியில் பூசிக் கொள்ளும் சந்தனக் குழம்பாகவும், சூடி மகிழும் மலர்களாகவும் விளங்கியேனும் உன் மேனியோடு தொடர்பு கொள்ளும் பேற்றினை நான் பெறாது தவித்து நிற்கின்றேன், இனியெனக்கொரு செயலும் உள்ளதோ?' 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 87)
கோடிவர் நெடுவரைக் குறவர் மாதுநீ
ஆடிய சுனையதாய் அணியும் சாந்தமாய்ச்
சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்
வாடினன் இனிச்செயும் வண்ணம் யாவதே

(3)
காதலை யாசகமாகப் பெறவும் நம் கந்தப் பெருமான் தயாராக இருக்கின்றான். இவ்வாறு பலப்பல கூறி நெகிழ்ந்துருகி நிற்கும் கந்தவேளின் கூற்றுகளை வள்ளியம்மை நன்றாகச் சிந்தித்துத் தெளிந்து 'இங்கிவர் கருத்துக்கள் மிக்க நன்று' என்று உள்ளத்தில் நாணமுற்றவாறு கூறத் துவங்குகின்றாள், 
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 89)
என்றிவை பலபல இசைத்து நிற்றலும் 
குன்றுவர் மடக்கொடி குமரன் சிந்தையில்
ஒன்றிய கருத்தினை உற்று நோக்கியே
நன்றிவர் திறமென நாணிக் கூறுவாள்

(4)
வள்ளிதேவி 'தினைப்புனத்தினைக் காத்து நிற்கும் எளியவள் நான், நீங்களோ உலகிற்கே அருள் புரிந்து நிற்கும் இறைவர், ஆதலின் இவ்விதம் என்னுடனான கலவியினை விரும்புவது தகுமோ? 'புலி பசித்து நிற்பினும் புல்லை உண்ணுமோ?' என்று மறுமொழி கூறுகின்றாள்,
-
தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 91)
இலைமுதிர் ஏனல் காத்திருக்கும் பேதையான்
உலகருள் இறைவர்நீர் உளமயங்கிஎன்
கலவியை விரும்புதல் கடனதன்றரோ
புலியது பசியுறில் புல்லும் துய்க்குமோ
-
இவ்விடத்தில் ஒரு நுட்பம், நம் கந்தக் கடவுள் எழுந்தருளியிருப்பதோ வேடுவ இளைஞனின் தோற்றத்தில், வள்ளியம்மையும் வேடர் குலத் தோன்றலே. எனில் 'நீங்கள் உலகிற்கே அருள் புரியும் இறைவர்' என்று தேவி எத்தன்மையில் உரைக்கின்றாள்? எனில் காதலை மறுத்துரைக்கையில் வேலவனின் மனம் வாட்டமுறாதிருக்க நம் வள்ளியம்மை தன்னைத் தாழ்த்தியும், வேடுவனாய் காதல் பேசி நிற்கும் குமர நாயகனை உயர்த்தியும் தன்மையாய்க் கூறுகின்றாள்.

வயோதிகனாய்த் தோன்றிய வடிவேலன் (கந்தபுராண நுட்பங்கள்):

தினைப்புனத்தில் வள்ளிதேவியின் காதலைப் பெறக் கந்தக் கடவுள் பலவாறு முயலுகையில், இருமுறை; வெவ்வேறு சமயங்களில் வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் (தன் கூட்டத்தினருடன்) அங்கு வந்ததாகக் கந்தபுராணம் விவரிக்கின்றது. முதல் வருகையின் பொழுது வேலவன் வேங்கை மரமாகி நின்று திருவிளையாடல் புரிகின்றான். 

(1)
இரண்டாம் வருகை சமயத்தில், வள்ளிதேவி வேடுவ உருவிலிருக்கும் வேலவனுக்கு இடரேதும் நேர்ந்து விடுமோ என்றஞ்சி, 'விரைந்து இவ்விடம் விட்டு சென்று விடுங்கள்' என்று கூறுகின்றாள். குமரக் கடவுள் 'நம்மீது கொண்டுள்ள அன்பினாலன்றோ இவ்விதம் பதறுகின்றாள்' என்று திருவுள்ளம் மகிழ்ந்து, சைவநல் வேடத்தில்; வயோதிகத் திருக்கோலத்தில் அங்கு எழுந்தருளித் தோன்றுகின்றான்.  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 94)
ஓடும்இனி என்றவள் உரைத்த மொழி கேளா
நீடு மகிழ்வெய்தி அவண் நின்ற குமரேசன்
நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த
வேடமது கொண்டு வரும் வேடர்எதிர் சென்றான்

(2)
அவ்வேடர்களுக்கு அருகாமையில் சென்று, நம்பிராஜனுக்குத் திருநீறு அளித்து, 'உன் வலிமை பெருகட்டும், எண்ணிறந்த வெற்றிகளோடு வளங்கள் யாவும் உன்னிடம் வந்து சேரட்டும்' என்று வாழ்த்துகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 95)
சென்று கிழவோன் குறவர் செம்மலெதிர் நண்ணி
நின்று பரிவோடு திருநீறு தனை நல்கி
வன்திறல் மிகுத்திடுக வாகை பெரிதாக
இன்றியமையாத வளன் எய்திடுக என்றான்

(3)
அன்புடன் திருநீற்றினை அளித்தருளிய வயோதிகரின் திருவடி மலர்களைப் பணிந்து வணங்கும் வேடுவ மன்னன், 'மேன்மை பொருந்திய இவ்வள்ளி மலைக்கு வயோதிகராய் வந்துள்ளீர்கள், வேண்டுவன கூறுவீர்' என்கின்றான்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 96)
பூதியினை அன்பொடு புரிந்த குரவன்தன்
பாதமலர் கைகொடு பணிந்து குறமன்னன்
மேதகு இவ்வெற்பினில் விருத்தரென வந்தீர்
ஓதிடுதிர் வேண்டியதை ஒல்லைதனில் என்றான்

(4)
வயோதிக வேலவனும், 'உன்னுடைய மலையிலுள்ள குமரி தீர்த்தத்தில் நீராடவே இங்கு வந்துள்ளேன்' என்று கூறுகின்றான் ('வள்ளி நாயகியின் இளமையழகாகிய தீர்த்தத்தில் மூழ்க வந்துள்ளேன்' என்பது உட்குறிப்பு). நம்பிராஜனும், 'எங்கள் தந்தை போன்ற தவப்பெரியவரே , தாங்கள் கூறிய பெருமை பொருந்திய தீர்த்தத்தில் நீராடிய பின்னர் தனித்திருக்கும் எங்கள் குலத்தோன்றலான வள்ளிக்குத் தக்கதொரு துணையாக இவ்விடத்தில் இருப்பீர்' என்று வணங்கி விடைபெறுகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 98)
நற்றவன் மொழியைக் கேளா நன்றுநீர் நவின்ற தீர்த்தம்
நிற்றலுமாடி எங்கள் நேரிழை தமியளாகி
உற்றனள் அவளுக்கெந்தை ஒருதனித் துணையதாகி
மற்றிவண் இருத்திர் என்ன அழகிதாம் மன்ன என்றான்

வயோதிக வேலவன் புரிந்த காதல் திருவிளையாடல் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தப் பெருமான் வள்ளி தேவியின் காதலைப் பெற பல்வேறு வடிவங்களையெடுத்துத் திருவிளையாடல் புரிகின்றான், வேடுவ இளைஞனாகத் தோன்றிப் பின் வேங்கை மரமென நின்று, இறுதியாய்ச் சைவ வயோதிக வேடத்தில் எழுந்தருளி வருகின்றான். வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜன் வயோதிக வேடத்தை மெய்யென்றெண்ணி தேவியைக் கந்தவேளிடம் ஒப்படைத்துச் செல்கின்றான்.   

வேடுவ மன்னன் அகன்றதும் வயோதிக வேலவன் 'பசியினால் தளர்வுற்று வருந்துகின்றேன்' என்று கூறியருள, வள்ளி நாயகி தேனும் தினைமாவும் தந்துதவுகின்றாள். பின் 'மிகுந்த தாகத்தினால் வருந்துகின்றேன்' என்று வடிவேலன் தளர, தேவியும் 'இங்குள்ள மலைப்பகுதிச் சுனைநீரை அருந்தி அயர்வு நீங்குவீர்' என்கின்றாள். விருத்த கோலத்து வேலவனும், 'தனித்து செல்லும் வயதோ இது?' என்றுரைத்து தேவியையும் உடனழைத்துச் சென்று சுனைநீரைப் பருகுகின்றான். 

(1)
பின்னர் 'அழகிய கூந்தலையுடைய நங்கையே, பசி போக்கினாய், தாகம் தீர்த்தாய், விதிவசத்தாலுற்ற காம நோயினையும் இச்சமயத்தில் தீர்த்து அருள் புரிவாயானால் குறைகள் யாவும் தீரப் பெற்றவனாவேன்' என்று காதல் யாசகம் கேட்டு நிற்கின்றான்.  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 104)
ஆகத்தை வருத்துகின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்
தாகத்தை அவித்தாய் இன்னும் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ
மேகத்தையனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட
மோகத்தைத் தணித்தியாயின் முடிந்ததென் குறையதென்றான்

(2)
வள்ளி நாயகி வயோதிக வடிவேலனின் தகாத அவ்வுரை கேட்டு நடுநடுங்கிப் பதறிச் சீறியுரைக்கத் துவங்குகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 105)               
ஈறில் முதியோன் இரங்கி இரந்துகுறை
கூறி மதிமயங்கிக் கும்பிட்டு நின்றளவில்
நாறு மலர்க்கூந்தல் நங்கை நகைத்துயிர்த்துச்
சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள்

(3)
'மேன்மையான தவவேடத்திற்கு சற்றும் பொருந்தா வார்த்தைகளை உரைத்தீர், பாலென்று எண்ணி பருகிய நிலையிலது ஆலகால விடமென மாறிய தன்மையிலுள்ளது உம்முடைய செயல்' என்று அம்மை வெகுண்டுரைக்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 106)
மேலாகிய தவத்தோர் வேடம் தனைப்பூண்டிங்(கு)
ஏலாதனவே இயற்றினீர் யார்விழிக்கும்
பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும்
ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கையதே

(4)
'தலைமுடியாவும் நரைத்த பின்னரும் நல்லுணர்வு சற்றும் இல்லாது இருக்கின்றீர், இதன் பொருட்டோ மூப்படைந்தீர்?, பித்துப் பிடித்தாற் போன்று பிதற்றியுழல்கின்றீர், வேடர்குலம் முழுமைக்கும் பெரும் பழியையன்றோ சேரச் செய்தீர்' என்று வள்ளி நாயகி படபடத்துச் சீறுகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 108)
நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னைவெஃகிப்
பித்துக் கொண்டார்போல் பிதற்றுவீர் இவ்வேடர்
கொத்துக்கெலாம்ஓர் கொடும்பழியைச் செய்தீரே

ஆறுமுகக் கடவுளின் காதலுக்கு உதவி அருள் புரிந்த யானைமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்)

கந்தப் பெருமான் தினைப்புனத்தில் வேடுவ இளைஞன்; சைவ வயோதிகர் என்று இருவேறு வடிவங்களில் தோன்றி காதல் திருவிளையாடல்கள் புரிந்தும் வள்ளி நாயகியின் காதலைப் பெற இயலாது போகின்றது. இனி என் செய்வதென்று வாட்டமுற்று, ஒப்புவமையில்லாத மூர்த்தியாகவும்; தமையனாகவும் விளங்கியருளும் விநாயகப் பெருமானை நினைந்து, 'முன்னே வந்தருள்வாய் முதல்வா' என்று அழைக்கின்றான்,  

(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 110)
பொன்னே அனையாள் முன்போகும் திறல்நோக்கி
என்னே இனிச் செய்வதென்றிரங்கி எம்பெருமான்
தன்னேரிலாதமரும் தந்திமுகத்(து) எந்தைதனை
முன்னே வருவாய் முதல்வா என நினைந்தான்

அக்கணமே பிரணவ முகத்தினரான நம் கணபதி இளவலான அறுமுகக் கடவுளுக்கு இரங்கி, மலைபோன்ற யானையொன்றின் திருவடிவு தாங்கித் தொடர்ந்து பிளிறியவாறு, வயோதிக வேலவனை நீங்கிச் சென்று கொண்டிருக்கும் வள்ளி தேவியின் முன்னாக எழுந்தருளிச் சென்று அச்சுறுத்துகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 111)
அந்தப் பொழுதில் அறுமாமுகற்(கு) இரங்கி
முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்
தந்திக் கடவுள் தனிவாரணப் பொருப்பு
வந்துற்றதம்மா மறிகடலே போல் முழங்கி

வள்ளியம்மை கணபதிக் களிற்றினைக் கண்ணுற்றுப் பதறியவாறு மீண்டும் பொய்த் தவவேடம் பூண்டிருந்த வயோதிக வேலவனிடத்து விரைந்து திரும்பி, 'இவ்வேழத்திடமிருந்து என்னைக் காத்தருள்வீர், உம்முடைய சொற்படி நடப்பேன்' என்று குமாரக் கடவுளின் பின்னாகச் சென்று அச்சத்தினால் தழுவிக் கொள்கின்றாள்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 112)
அவ்வேலையில் வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
பொய்வேடம் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
இவ்வேழம் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
செய்வேன் எனஒருபால் சேர்ந்து தழீஇக் கொண்டனளே

தினைப்புன அரசியின் தழுவுதலால் அறுமுகக் கடவுள் திருவுள்ளம் பெரிதும் மகிழ்கின்றான். (வள்ளி தேவி அறியாதவாறு) யானை முக வள்ளலைப் பணிந்து போற்றி, 'எம்பெருமானே, தம்முடைய வருகையினால் இவள் பால் கொண்டிருந்த மையல் தீரப் பெற்றேன், இனி தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்ப எழுந்தருளிச் செல்வீர்' என்று விண்ணப்பிக்கின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 114)
கந்த முருகன் கடவுள் களிறுதனை
வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்
புந்தி மயல் தீர்ந்தேன் புனையிழையும் சேர்ந்தனளால்
எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்
-
(குறிப்பு: நம் கந்தப் பெருமான் ஆயிரமாயிரம் கோடி அண்டங்களுக்குத் தனிப்பெரும் தலைவனாக விளங்கியிருப்பினும் தமையனான விநாயகப் பெருமானுக்கு என்றுமே அடங்கிய நிலையில், பேரன்புக்குரிய இளவலாகத் திகழ்பவன். 'எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்' எனும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல் வரி மூலம் இதனை உணரப் பெறலாம், 'எம் தந்தை' என்பதே 'எந்தையாக' மருவியது).

வள்ளி நாயகியை ஆட்கொண்டு அருளும் வேலாயுதக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள் வள்ளிமலையில் பல்வேறு வடிவங்களில் தோன்றி திருவிளையாடல்கள் புரிந்து இறுதியில், தமையனான விநாயகப் பெருமானின் அருளால் வள்ளி நாயகியின் காதலைப் பெற்று மகிழ்கின்றான். பின்னர் வள்ளிதேவிக்குப் பரம்பொருள் வடிவினனான தன் சுய திருக்கோலத்தினைக் காண்பித்து அருள் புரிகின்றான்.

(1)
ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருத்தோள்களுடனும், பன்னிரு திருக்கரங்களில் வேல்; வச்சிராயுதம் முதலிய ஆயுதப் படைகளோடும், மரகத மயிலும் உடனிருக்கப் பேரானந்தத் திருக்கோலத்தில் வள்ளிதேவியின் முன்னாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 116)
முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும் 
கொன்னார் வைவேலும் குலிசமும் ஏனைப்படையும்
பொன்னார் மணி மயிலுமாகப் புனக்குறவர்
மின்னாள் கண்காண வெளி நின்றனன் விறலோன்
-
(சொற்பொருள்: கொன்னார் - பெருமை பொருந்திய, விறலோன் - வெற்றி பொருந்திய)

(2)
ஆறுமுகப் பரம்பொருளின் காண்பதற்கரிய இத்திருக்கோலத்தைத் தரிசிக்கப் பெறும் நம் வள்ளியம்மை பெருவியப்புடன் கந்தவேளை வணங்கிப் பணிகின்றாள், திருமேனியில் வியர்வை தோன்றுமாறு  விதிர்விதிர்த்து நடுங்கி, அகம் குழைந்து ஆறாக் காதலுடன் விண்ணப்பிக்கத் துவங்குகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 117)
கூரார் நெடுவேல் குமரன் திருவுருவைப்
பாரா வணங்காப் பரவலுறா விம்மிதமும் 
சேரா நடுநடுங்காச் செங்கை குவியா வியரா
ஆராத காதலுறா அம்மையிது ஓதுகின்றாள்
-
(சொற்பொருள்: பரவலுறா - துதித்து, விம்மிதமும் சேரா - வியப்புற்று, வியரா - வியர்த்து)

(3)
'வேலேந்தி நின்றருளும் பெருமானே, உம்முடைய இவ்வற்புதத் திருக்கோலம் தாங்கி அடியவளைத் தழுவாமல் இவ்வளவு நேரம் (பல்வேறு வடிவங்களில் தோன்றி) வீணே கழித்தீரே, இனி இக்கொடியவள் செய்துள்ள குற்றங்கள் யாவற்றையும் பொறுத்து, அடியவளை விரைந்து ஆட்கொண்டு அருள்வீர்' என்று பணிகின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 118)
மின்னே அனையசுடர் வேலவரே இவ்வுருவம்
முன்னேநீர் காட்டி முயங்காமல் இத்துணையும் 
கொன்னே கழித்தீர் கொடியேன்செய் குற்றமெலாம்
இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளுமென்றாள்
-
(சொற்பொருள்: கொன்னே - வீணே)

(4)
குமாரக் கடவுளும் திருவுள்ளம் மகிழ்ந்து, 'வள்ளி நாயகியே, இப்பிறப்பிற்கு முன்னர் நீ உலகமுண்ட திருமாலின் மகளாகத் தோன்றியவள், நம்மை அடைவதற்கென அரியதொரு தவநெறியில் நின்றொழுகினாய். ஆதலின் இப்பிறவியில் இம்முறையில் உன்னை ஆட்கொண்டோம்' என்றருளிச் செய்து, நம் அம்மையான வள்ளிதேவியைத் தழுவி அருள் புரிகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 119)
உம்மை அதனில் உலகமுண்டோன் தன்மகள்நீ
நம்மை அணையும்வகை நற்றவம் செய்தாய் அதனால்
இம்மைதனில் உன்னை எய்தினோம் என்றெங்கள்
அம்மை தனைத் தழுவி ஐயன் அருள்புரிந்தான்
-
(சொற்பொருள்: உம்மை - முற்பிறப்பு)


வள்ளிமலையில் நடந்தேறிய 'வேலன் வெறியாட்டு விழா' (கந்தபுராண நுட்பங்கள்):

வள்ளி நாயகியைத் தினைப்புனத்தில் வேலாயுதக் கடவுள் ஆட்கொண்டருளிய நிகழ்விற்குப் பின்னர் வள்ளியம்மை தன் இல்லத்திற்குத் திரும்பிச் செல்கின்றாள். எனினும் எவரொருவரிடமும் உரையாடாமல் மோன நிலையிலேயே இருக்கின்றாள், அறுமுக தெய்வத்தின் பெருங்கருணையையும்; பேரழகுத் திருக்கோலத்தையும்; தன்னைத் தழுவியருள் புரிந்த திறத்தையும் எண்ணி எண்ணி விம்மிதமுறுகின்றாள், அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கிச் சிவஞானப் பெருவெள்ளத்தில் அமிழ்கின்றாள். குமாரக் கடவுளின் திருவுருவமன்றிப் பிறிதொரு சிந்தையில்லாத நிலையில், கந்தவேளின் பிரிவுத் துயரைத் தாளமாட்டாது அவ்வப்பொழுது மயங்கி வீழ்வதும் எழுவதுமாய் இருக்கின்றாள்.  

(1)
வள்ளி தேவியின் இந்நிலையால் தந்தையான நம்பிராஜனும்; தாயும்; மற்றுமுள்ளோரும் பெரிதும் வருத்தமுற்றுப் பல்வேறு உபாயங்களை விவாதிக்கின்றனர். இறுதியில், தங்களின் குலதெய்வமான முருகக் கடவுளுக்கு வெறியாட்டு விழாவினை நடத்தி வழிபடுவதாக முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் விரைந்து செய்கின்றனர். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 155)
தந்தையும் குறவர் தாமும் தமர்களும் பிறரும் ஈண்டிச்
சிந்தையுள் அயர்வு கொண்டு தெரிவைதன் செயலை நோக்கி
முந்தையின் முதியாளோடு முருகனை முறையில் கூவி
வெந்திறல் வேலினாற்கு வெறிஅயர்வித்தார் அன்றே

(2)
வெறியாடல் நிகழுகையில், வெறியாட்டாளன் மீது குமாரக் கடவுள் தோன்றி, 'தினைப்புனத்திலிருந்த வள்ளியை நாமே ஆட்கொண்டோம், நமக்குச் சிறப்புடன் வழிபாடுகளைப் புரிந்தால் வள்ளிக்கு உற்ற இக்குறையினைப் போக்குவோம்' என்று அறிவித்து அருள் புரிகின்றான், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 156)
வெறிஅயர்கின்ற காலை வேலன்மேல் வந்து தோன்றிப்
பிறிதொரு திறமும் அன்றால் பெய்வளை தமியளாகி
உறைதரு புனத்தில் தொட்டாம் உளமகிழ் சிறப்பு நேரில் 
குறையிது நீங்குமென்றே குமரவேள் குறிப்பில் சொற்றான்

(3)
வெறியாட்டாளன் வாயிலாக அறுமுக அண்ணல் உணர்த்தியருளிய செய்தி வள்ளியம்மையின் செவிகளில் வந்தடைந்த மறுகணமே, கொண்டிருந்த மயக்கநிலை முழுவதுமாய் நீங்கி நலம் பெற்றெழுகின்றாள். அது கண்டு மகிழும் செவிலித்தாய், 'நம் குலதெய்வமான முருகப் பெருமானுக்கு இனிச் சிறப்புற வழிபாடுகள் செய்வோம்' என்று போற்றித் துதித்து நிற்கின்றாள்,  
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 157)
குறிப்பொடு நெடுவேல் அண்ணல் கூறிய கன்ன மூல
நெறிப்பட வருதலோடும் நேரிழை அவசம் நீங்கி
முறைப்பட எழுந்து வைக முருகனை முன்னியாங்கே
சிறப்பினை நேர்தும் என்று செவிலித்தாய் பராவல் செய்தாள்
-
(சொற்பொருள்:கன்ன(ம்) - காதுகள், அவசம் - மயக்கம், பராவல் - துதித்தல்)

நள்ளிரவில் தோன்றிய வேடுவ வேலவன் (கந்தபுராண நுட்பங்கள்):

தினைப்புனத்தில் கந்தப் பெருமான் ஆட்கொண்டருளிய நிகழ்விற்குப் பின் இல்லம் திரும்பும் வள்ளியம்மை எவருடனும் உரையாடாமல், பிரிவுத் துயரால் பெரிதும் வருந்திய வண்ணமிருக்கின்றாள். வேட்டுவ குலத்தினர் தங்கள் குலதெய்வமான குமாரக் கடவுளுக்கு வெறியாட்டு விழாவொன்றினை நடத்தி வழிபட, கந்தவேளின் திருவருளால் வள்ளியம்மை மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்புகின்றாள். 

(1)
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய்க் குமர நாயகன் வள்ளிதேவியின் பிரிவுத் துயரைத் தாளமாட்டாமல், நள்ளிரவு நேரத்தில் (வேடுவ கோலத்தில்) வள்ளிமலைப் பகுதியிலுள்ள வேடுவக் குடியிருப்புப் பகுதிக்கு எழுந்தருளி வருகின்றான். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 161)
வல்லியை நாடுவான் போல் மாண்பகல் கழித்து வாடிக்
கொல்லையம் புனத்தில் சுற்றிக் குமரவேள் நடுநாள் யாமம் 
செல்லுறும்எல்லை வேடர் சிறுகுடி தன்னில் புக்குப்
புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம்போய் நின்றான்
*
வள்ளிதேவியின் தோழியானவள் வேடுவ வேலவனைப் பணிந்து வணங்கி, 'எங்கள் தலைவி உம்மைப் பிரிந்து இனி இனியொருக்கணமும் வாழ இயலாதவளாய்த் தவித்திருக்கின்றாள், ஆதலின் அவளை உம்மிடம் அழைத்து வருவேன்' என்று கூறிச் செல்கின்றாள்.

(2)
தோழியுடன் அறுமுக இறைவனின் திருமுன்பு வரும் வள்ளியம்மை, 'கொடிய வினைகளால் வருந்தியுழலும் அடியவளின் பொருட்டு இந்த நள்ளிரவு வேளையில் உம்முடைய திருவடி மலர்கள் நோகுமாறு நடந்து வருவதோ?' என்று நெகிழ்ந்துருகிப் பணிகின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 165)
அறுமுக ஒருவன் தன்னை ஆயிழை எதிர்ந்து தாழ்ந்து
சிறுதொழில் எயினர் ஊரில் தீயனேன் பொருட்டால் இந்த
நறுமலர்ப் பாதம் கன்ற நள்ளிருள் யாமம் தன்னில்
இறைவநீர் நடப்பதே என்றிரங்கியே தொழுது நின்றாள்

(3)
(கந்தவேளை அடைய) மாதவம் புரிந்திருந்த வள்ளிநாயகி வணங்கியிருக்க, தோழியானவள் வேடுவ வேலவனிடம் 'உங்களிருவரையும் இந்நிலையில் எங்கள் கூட்டத்தவர் காண நேரிடில் தீய விளைவுகள் நேரிடும், ஆதலின் விரைந்து எங்கள் இறைவியைச் சிறப்பு மிக்க உங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பீர்' என்று தேவியைக் கந்தக் கடவுளின் திருக்கரங்களில் ஒப்புவிக்கின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 166)
மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
தீத்தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும் இன்னே
ஏத்தரும் சிறப்பின்உம் ஊர்க்கிங்கவள் தனைக் கொண்டேகிக்
காத்தருள் புரியுமென்றே கையடையாக நேர்ந்தாள்
-
(சொற்பொருள்: இகுளை - தோழி, எயினர் - வேடர்)

(4)
கருணைப் பெருங்கடவுளான நம் சிவகுமரன் வள்ளியம்மையை ஒப்புவித்து வணங்கியிருக்கும் தோழியிடம், 'மங்கை நல்லாய், எங்களிருவர் பால் நீ கொண்டுள்ள மெய்யன்பினை என்றும் மறவோம்' என்றருள் புரிகின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 167)
முத்துறு முறுவலாளை மூவிரு முகத்தினான் தன்
கைத்தலம் தன்னில் ஈந்து கைதொழு(து) இகுளை நிற்ப
மெய்த்தகு கருணை செய்து விளங்கிழாய் நீயெம் பாலின்
வைத்திடு கருணை தன்னை மறக்கலம் கண்டாய் என்றான்

வேலவனைத் தாக்கிய வேடுவர்கள் (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள் (வேடுவ கோலத்தில்) நள்ளிரவில் வள்ளி நாயகியின் இல்லம் நாடிச் சென்று, எவரொருவரும் அறியாதவாறு தேவியை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நீங்கிச் செல்கின்றான். வள்ளிமலைப் பகுதியின் எல்லைக்கு அப்பாலுள்ள பசுமையான சோலையொன்றில் தினைப்புன அரசியுடன் இனிது எழுந்தருளி இருக்கின்றான்.

இந்நிகழ்வுகள் ஒருபுறமிருக்க, பொழுது புலரும் சமயத்தில் வள்ளி நாயகியைக் காணாது நம்பிராஜன் பதறுகின்றான், 'என் மகளைக் கவர்ந்து சென்ற வஞ்சகன் எவனோ?' என்று சீற்றத்துடன், எண்ணிறந்த வேடர்களும் உடன்வர, வழிதோறுமுள்ள பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவாறு தேடிச் செல்கின்றான்.

இவ்வாறாக வேடுவக் கூட்டம் வடிவேலனும் வள்ளிதேவியும் தங்கியிருந்த சோலைக்கருகில் வந்து சேர, அவர்களெழுப்பும் ஊதுகொம்பின் ஓசையினைச் செவியுற்று அம்மை பதறுகின்றாள். வேலாயுதப் பெருங்கடவுளின் திருப்பாதங்களில் வீழ்ந்து முறையிடுகின்றாள்.

(1)
'ஐயனே, எங்கள் கூட்டத்தினர் பல்வேறு கொலைக்கருவிகளோடு விரைந்து இவ்விடம் நோக்கி வருவதையறிந்து நடுக்கமுற்றிருக்கின்றேன். இனிச் செயலொன்றும் அறிகிலேன், உங்கள் திருவுள்ளம் யாதென்று உரைப்பீர்?' என்று விண்ணப்பிக்கின்றாள், 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 177)
கோலொடு சிலையும் வாளும் குந்தமும் மழுவும் பிண்டி
பாலமும் பற்றி வேடர் பலருமாய்த் துருவிச் சென்று
சோலையின் மருங்கு வந்தார் துணுக்கமுற்றுள(து) என் சிந்தை
மேலினிச் செய்வதென்கொல் அறிகிலேன் விளம்பாய் என்றாள்

(2)
கந்தவேள் வள்ளியம்மையிடம், 'தேவி கவலையை ஒழிப்பாய், உன் கூட்டத்தினர் நமையெதிர்த்துப் போர் புரிய முற்படுவாரேயாயின், கிரௌஞ்ச மலையையும்; சூரனின் மார்பையும் பிளந்த நம் சக்திவேலால் அவர்களைக் கணப்பொழுதில் அழிப்போம். அச்செயலினை நமக்குப் பின்னால் நின்ற வண்ணம் காண்பாயாக' என்றருளிச் செய்கின்றான்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 178)
நோக்கி வருந்தலை வாழி நல்லாய் மால்வரையோடு சூரன்
உரம்தனை முன்பு கீண்ட உடம்பிடியிருந்த நும்மோர்
விரைந்தமர் புரியச் சூழின் வீட்டுதும் அதனை நோக்கி
இருந்தருள் நம்பின் என்னா இறைமகட்(கு) எந்தை சொற்றான்
-
(சொற்பொருள்: உரம் - மார்பு, உடம்பிடி - வேல், வீட்டுதும் - அழிப்போம்)

வேலவனுடன் போரிட்டு மடிந்த வேடர்கள் (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமான் நள்ளிரவில் வள்ளிதேவியின் இல்லம் நாடிச் சென்று, தேவியுடன் வள்ளிமலைப் பகுதியின் எல்லைக்கப்பாலுள்ள சோலையொன்றிற்குச் சென்று அங்கு இனிது எழுந்தருளி இருக்கின்றான். பொழுது புலர்கின்றது; வள்ளியம்மையைக் காணாது பதறும் தந்தையான நம்பிராஜன், வேடர்களும் உடன்வர மகளைத் தேடி வருகின்றான், வழித்தடங்களைத் தொடர்ந்தவாறே முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள சோலையை வந்தடைகின்றான். 

(1)
அங்கு வேடுவ வேலவனோடு மகளைக் கண்டு கடும் சீற்றம் கொள்கின்றான். நடந்தேறிய நிகழ்வுகள் குறித்து ஒருசிறிதும் விசாரித்தறியாமல், 'நம் மகளைக் கவர்ந்து சென்ற இவனை இக்கணமே கொல்லுவோம்' என்று ஆறுமுகக் கடவுளை அனைத்து பக்கங்களிலும் சூழந்து கொண்டு அம்புகளால் தாக்கத் துவங்குகின்றனர். கருணைப் பெருங்கடலான கந்தப் பெருமானின் மீது அம்புகள் படிவதைக் கண்ணுற்று வள்ளியம்மை துடித்துப் பதறுகின்றாள்,
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 182)
ஒட்டலராகிச் சூழ்ந்தாங்(கு) உடன்று போர் புரிந்து வெய்யோர்
விட்டவெம் பகழியெல்லாம் மென்மலர் நீரவாகிக்
கட்டழகுடைய செவ்வேல் கருணையம் கடலின் மீது
பட்டன பட்டலோடும் பைந்தொடி பதைத்துச் சொல்வாள்
-
(சொற்பொருள்: ஒட்டலர் - பகைவர், உடன்று - கோபம் கொண்டு)

(2)
வள்ளியம்மை, 'ஐயனே, சிங்கமானது தன் தன்மையினின்றும் நீங்கி அமைதி காத்திருந்தால், காட்டிலுள்ள மான்; பன்றி முதலியன எவ்வித அச்சமுமின்றி அருகில் வரத் துவங்கும். ஆதலின் அம்புகளைத் தொடுத்துத் தாக்கும் இவர்களை உம்முடைய திருக்கை வேலினால் இக்கணமே அழித்தருள் புரிதல் வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 183)
நெட்டிலை வாளி தன்னை ஞெரேலென நும்மேல் செல்லத்
தொட்டிடு கையர் தம்மைச் சுடருடை நெடுவேல் ஏவி
அட்டிடல் வேண்டும் சீயம் அடுதொழில் குறியாதென்னில்
கிட்டுமே மரையும் மானும் கேழலும் வேழம் தானும்
-
(சொற்பொருள்: ஞெரேலென - விரைந்து, சீயம் - சிங்கம், மரை - மான்வகை, கேழல் - பன்றி)
-
இந்நிகழ்வினை மேலோட்டமாக அணுகினால், 'நம் வள்ளியம்மை சிறிதும் கருணையின்றித் தன் வளர்ப்புத் தந்தையையும்; சுற்றத்தினரையும் இவ்விதம் அழிக்கும் படி கூறலாமா?' என்றொரு வினா எழக்கூடும். 'இறைவனை முழுவதுமாய் அடையவொட்டாது தடுத்து நிற்கும் பந்தபாசங்களை ஆன்மாவானது முழுவதுமாய் விலக்கத் துணியும்' தத்துவக் குறியீடு இதனுள் பொதிந்துள்ளது. முதற்கண் அகங்காரத்தினை விடுத்திருந்த ஆன்மாவானது இச்சமயத்தில், 'எனது தந்தை;  எனது சுற்றத்தினர்' எனும் மமகாரத்தையும் விட்டொழித்து இறைவனின் திருவடிகளையே சரணாகப் பற்றும் தன்மையையே இந்நிகழ்வு சுட்டுகின்றது.

(3)
தினைப்புன அரசியின் வேண்டுகோளினைச் செவி மடுத்தருளும் வேலாயுதப் பெருங்கடவுள் தன் கொடியிலுள்ள சேவலை நினைந்தருள, அச்சேவலானது அக்கணமே அங்கு தோன்றி அண்டங்களும் அதிருமாறு ஆர்ப்பரிக்கின்றது. அப்பேரொலியில் அங்கிருந்த வேடுவக் கூட்டத்தினர் ஒருவர் மீதமில்லாது மாண்டு வீழ்கின்றனர். 
-
(தக்ஷ காண்டம்: வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 184)
என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்
நின்றதோர் கொடிமாண் சேவல் நிமிர்ந்தெழுந்(து) ஆர்ப்புக் கொள்ளக்
குன்றவர் முதல்வன் தானும் குமரரும் தமரும் யாரும்
பொன்றினராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார்
-
(சொற்பொருள்: பாங்கர் - பக்கத்தில், குன்றவர் முதல்வன் - வேடுவ அரசனான நம்பிராஜன், பொன்றினராகி - நிலை தடுமாறி, பொள்ளென - விரைந்து)