சிவபெருமானின் கட்டளையை இருமுறை மீறிய ஆறுமுகக் கடவுள் (கந்தபுராணம் விவரிக்கும் ஓர் அற்புத தெய்வ நாடகம்):

நான்முகக் கடவுளான பிரமன், திருக்கயிலையில் சிவபெருமானைத் தரிசித்துத் திரும்பும் வழியில், ஆணவமலம் நீங்காதிருந்த தன்மையினால், முன்வாயிலில் எழுந்தருளியிருந்த முருகக் கடவுளை முறைமையாக வணங்காது, ஒருவாறு வணங்கி நிற்கின்றார். இச்செயல் கண்டு, பிரமனைச் சில சோதனைகளுக்கு ஆட்படுத்திப் பின் தம்முடைய கந்தமலையில் சிறையலிடுகின்றான் சிவகுமரன். அவர்தம் படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொள்ளத் துவங்குகின்றான். 

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், திருமாலும் உடன்வர, இறைவரிடம் இதுகுறித்து முறையிட்டுப் பணிகின்றனர். முக்கண் முதல்வரும் நந்திதேவரிடம், 'கந்தனிடம் நம் கருத்தைக் கூறி, பிரமனை விடுவிக்கச் செய்து இவ்விடம் அழைத்து வருவாயாக' என்றருளிச் செய்கின்றார். நந்திதேவர் கந்தமலைக்கு விரைந்து சென்று, குமாரக் கடவுளைப் பணிந்துப் பின் சிவபெருமானின் ஆணையினைத் தெரிவிக்கின்றார். அத்துடன், 'பிரணவப் பொருளைப் பிரமனால் எவ்வாறு கூற இயலும்?' என்று தன்னுடைய கருத்தொன்றையும் சேர்த்துத் தெரிவிக்கின்றார். கார்த்திகேயக் கடவுள் கடும் சீற்றத்துடன், 'விரைந்து இவ்விடம் விட்டுச் செல்லாவிடில் உன்னையும் சிறையில் அடைப்பேன்' என்று எச்சரிக்கின்றார். 

அஞ்சி அவ்விடம் விட்டு அகலும் நந்திதேவர், திருக்கயிலையிலுள்ள இறைவரிடம் மீண்டு 'கந்தவேள் மறுத்துரைத்த நிகழ்வினைத் தெரிவிக்க', சிவமூர்த்தி மெலிதாகப் புன்முறுவல் புரிகின்றார் ('கந்தன் மொழிந்திடும் செய்தி செப்பச் சிறுநகை எய்தினான்' என்பார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்),
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 15)
மைதிகழ்ந்த மணிமிடற்று அண்ணல்முன்
வெய்தெனச் சென்று மேவி அவன்பதம் 
கைதொழூஉ நின்று கந்தன் மொழிந்திடும் 
செய்தி செப்பச் சிறுநகை எய்தினான்

யாவரும் உடன்வர, தாமே நேரில் கந்தமலைக்கு எழுந்தருளிச் செல்கின்றார். எந்தையின் வரவு கண்டு அவர்தம்  திருவடிகளைத் தொழுதேத்தும் கந்தவேள், தம்முடைய மணிஆசனத்தில் மறைநாயகரை எழுந்தருளச் செய்து, 'எவ்வுயிர்க்கும் உயிராக விளங்கும் பரம்பொருளே, தாம் இங்கு வந்ததன் காரணம் யாதோ?' என்று வினவுகின்றார். நீலகண்டப் பெருமானும், 'ஐயா! நான்முகனை விடுவிக்கும் கருத்துடன் நாம் இங்கு திருமால் உள்ளிட்ட தேவர்களுடன் வந்தனம், ஆதலின் அவனை விடுவிப்பாய்' என்று இரண்டாம் முறையாக அருளிச் செய்கின்றார். 
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 23)
மட்டுலாவு மலர் அயனைச் சிறை
இட்டு வைத்தனை யாமது நீக்குவான்
சுட்டி வந்தன மால்சுரர் தம்முடன்
விட்டிடு ஐய என்றெந்தை விளம்பினான்

சிவஞானமே ஒரு வடிவாய் விளங்கும் முருகப் பெருமான் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுப் பின் இறுதியாய், 'உம்மை நாள்தோறும் பூசித்தும் பிரமன் ஆணவம் நீங்கினானில்லை, ஆதலின் அவனை விடுவிக்கச் சம்மதியேன்' என்று ஆதிப் பரம்பொருளின் ஆணையினை மீண்டுமொரு முறை மறுத்துரைக்கின்றார்,
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 28)
நின்னை வந்தனை செய்யினும் நித்தலும் 
தன் அகந்தை தவிர்கிலன் ஆதலால்
அன்னவன் தன் அருஞ்சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே

கங்கை சூடும் பரம்பொருளும் 'மைந்த, முன்பு நந்தியின் மூலம் நம் கருத்தினைச் சொல்லிய போதும் ஏற்றாயில்லை, இச்சமயம் நாமே வந்து கூறிடினும் மறுத்துரைக்கின்றாய், உம்முடைய செயல் எத்தன்மையது?' என்று கோபம் கொள்பவர் போல் நடிக்கின்றார் ('வெகுள்வான் போல்' என்று இத்தெய்வ நாடகத்தினை இரு வார்த்தைகளில் அம்பலப்படுத்தி விடுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்)
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 29)
மைந்தநின் செய்கை என்னே மலரயன் சிறைவிடென்று
நந்திநம் பணியால்ஏகி நவின்றதும் கொள்ளாய் நாமும்
வந்துரைத்திடினும் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தாய் என்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல்

இறுதியாய் அறுமுக தெய்வம், 'ஐயனே! உன் திருவுள்ளம் அதுவானால் பிரமனை இக்கணமே விடுவிக்கின்றேன்' என்று பக்தியுடன் பணிந்திறைஞ்ச, சிவபெருமான் கந்தவேளுக்குப் பேரருள் புரிகின்றார்.  
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 30)
அத்தனது இயல்பு நோக்கி அறுமுகத்து அமலன் ஐய
சித்தம் இங்கிதுவேயாகில் திசைமுகத்தொருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவன் என்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான்

No comments:

Post a Comment