காசிப முனிவரின் சிவஞான உபதேசம் (தவத்தின் மேன்மை) - கந்தபுராண நுட்பங்கள்:

காசிப முனிவர் மாயை என்பவளின் அழகினால் மயக்கமுற்று, தவத்தைத் துறந்து, ஓர் இரவுப் பொழுதில் வெவ்வேறு வடிவங்களெடுத்துக் கூடிய தன்மையினால், அவர்களின் வியர்வையினின்றும் சூரபத்மன்; சிங்கமுகாசுரன்; தாரகாசுரன்; அஜமுகி மற்றும் எண்ணிறந்த அசுர குலத்தோர் தோன்றுகின்றனர். எங்கும் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றது, புதிதாகப் பிறவியெடுத்தோர் யாவரும் ஒன்றுகூடி தாய்; தந்தையரைப் பணிகின்றனர். காசிபர் அவர்களுக்கு முதலில் சிவபெருமானின் பரத்துவத்தையும் பின்னர் தவத்தின் மேன்மைகளையும் உபதேசிக்கின்றார். அற்புதமான இப்பகுதியிலிருந்து சில திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

புதல்வர்களே கேட்பீர், 'படைத்தல்; காத்தல்; அழித்தல்; மறைத்தல்; அருளல்' ஆகிய ஐந்தொழிலையும் புரிந்தருளுள்பவர் திருநீலகண்டத்தினை உடைய சிவபெருமானாவார், 'அம்மூர்த்தியையே ஆதிப்பரம்பொருள்' என்று வேதங்கள் ஐயத்திற்கு இடமின்றிச் சுட்டுகின்றன, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 4)
அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர்
ஒளித்திடல் பேரருள் உதவலேயனக்
கிளத்திடு செயல் புரிகின்ற நீலமார்
களத்தினன் பதியது கழறும் வேதமே
-
(சொற்பொருள்: நீலமார் களத்தினன் - நீலமான கழுத்தினை உடைய சிவபெருமான்)

'மாதவமே பேராற்றலை நல்க வல்லது; அதனினும் சிறப்பானதொன்று இல்லை' என்று அறிவீர்களாக, தவமே சிவகதியையும் பெற்றுத் தரவல்லது. ஆதலின் 'முயன்று தவத்தினைப் புரிதல் மட்டுமே' ஒருவர் இடையறாது கைக்கொள்ள வேண்டிய நெறியாகும், 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 15)
ஆற்றலை உளது மாதவம் அதன்றியே
வீற்றும் ஒன்றுளதென விளம்பலாகுமோ
சாற்றரும் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால்
-
(சொற்பொருள்: வீற்றும் - சிறப்பானது)

தவமே பிறவிப் பிணியைப் போக்கிச் சிவமுத்தியை நல்கவல்லது, யாவற்றிலும் முதன்மைத் தன்மையை அளிக்க வல்லது. அத்துடன் உள்ளத்தில் எண்ணியுள்ள இன்பங்கள் அனைத்தையும் இப்பிறவியிலேயே ஐயத்திற்கு இடமின்றிப் பெற்றுத்தர வல்லது, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 16)
அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மையாக்குறும்
இத்துணையன்றியே இம்மை இன்பமும்
உய்த்திடும் உளம்தனில் உன்னும் தன்மையே

'தேவர்கள் என்று எவரெல்லாம் போற்றப் பெறுகின்றார்களோ அவர்கள் யாவரும் அப்பெருஞ்சிறப்பினை அடைந்தது, முன்பு தத்தமது உடலினை வருத்தி பலகாலம் முயன்று புரிந்து வந்த தவச்சிறப்பினாலேயே' என்று தெளிவாக உணர்வீர்களாக, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 19)
ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகிலீர் கொலோ தேவராகியே
மேல்திகழ் பதம்தொறும் மேவுற்றோர் எலாம்

(எண்ணங்கள் யாவையும் முற்றுவிக்கும் தன்மையினால்) தவத்தினைக் காட்டிலும் சிறந்தது வேறொன்றுமில்லை, குற்றமற்ற தவத்திற்கு நிகராகப் பிறிதொன்றினைக் கூறிவிட இயலாது. தவம் புரிவது அரிய செயலாயினும் தவத்திற்கு ஒப்பாக தவத்தை மட்டுமே கூற இயலும்,
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 23)
தவம்தனின் மிக்கதொன்றில்லை தாவில்சீர்த்
தவம்தனை நேர்வது தானும் இல்லையால்
தவம்தனின் அரியதொன்றில்லை சாற்றிடில்
தவம் தனக்கொப்பது தவமதாகுமே

ஆதலின் புதல்வர்களே, தீய எண்ணங்களை முற்றிலும் நீக்கி இக்கணமே தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளினை நோக்கி தவம் புரியத் துவங்குங்கள், அதனைக் காட்டிலும் உங்களால் புரிதற்குரிய செயல் வேறொன்றுமில்லை, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 24)
ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்
தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே
மாதவம் புரிகுதிர் மற்றதன்றியே
ஏதுளதொரு செயல் இயற்றத் தக்கதே

No comments:

Post a Comment