தாராகாசுரன் ஆறுமுகக் கடவுளைத் தரிசிக்கும் போர்க்களக் காட்சி (கந்தபுராண நுட்பங்கள்):

ஆறுமுகக் கடவுள் சூரசம்ஹாரத்தின் பொருட்டுத் திருக்கயிலையிலிருந்து புறப்பட்டு, வீரவாகு உள்ளிட்ட நவவீர்கள்; திருமால்; பிரமன்; இந்திரன் மற்றும் எண்ணிலடங்கா பூதப் படையினரும் உடன்வர நிலவுலகினை வந்தடைகின்றார். முதலில் சூரபத்மனின் (யானை முக) சகோதரனான தாரகாசுரன் கோலோச்சி வரும்  கிரவுஞ்ச மலைக்குச் செல்கின்றார். 

பூதப் படையினருக்கும் அசுரப் படையினர்க்கும் பெரும் யுத்தம் மூள்கின்றது, தாரகாசுரன் வேலாயுதக் கடவுளின் படையினருக்குப் பெரும் சேதத்தினை உருவாக்குகின்றான். வீரவாகு உள்ளிட்ட நவவீரர்களையும் மாயையால் மயங்கச் செய்து இடியென முழங்குகின்றான். பூதப் படையினர் பெரிதும் கலங்கி வருந்த, சிவகுமாரன் 'அஞ்சேல்' என்று அபயமளித்துத் தாரகாசுரனுடன் போரிட நேரில் எழுந்தருளிச் செல்கின்றார். 

ஆர்ப்பரித்தவாறு (யானை முக) தாரகாசுரன் கந்தக் கடவுளின் திருமுன்பு வருகின்றான், எதிரே பூரண சந்திரனைப் போன்ற குளிர்ந்த ஆறு திருமுகங்களையும், பேரருள் பொழியும் பன்னிரு திருக்கண்களையும், பன்னிரு திருக்கரங்கள் மற்றும் அவைகளில் வேல் உள்ளிட்ட ஆயுதங்களையும், தண்டைகள் பொருந்திய மலர் போலும் திருவடிகளையும் திருத்தமுறத் தரிசிக்கின்றான். காண்பதற்கரிய இத்திருக்காட்சியைத் தரிசிக்கப் பெற்ற தாரகாசுரனின் தவச்சிறப்பினை விளக்கவும் ஒண்ணுமோ என்று வியந்து போற்றுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார், 
-
(உற்பத்தி காண்டம்: தாரகன் வதைப்படலம் - திருப்பாடல் 126):
முழுமதியன்ன ஆறு முகங்களும் முந்நான்காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரம்ஈராறும் அணிமணித் தண்டையார்க்கும் 
செழுமலர் அடியும் கண்டான் அவன்தவம் செப்பல் பாற்றோ!!

ஆணவமுடைய தாரகாசுரன் முருகக் கடவுளின் திவ்யத் திருக்கோல தரிசனத்தினால் அற்புதம் அடைகின்றான், பெருவியப்புடன் 'நம்முடன் இன்று போர் புரிய வருகை புரிந்திருப்பது எவ்விதக் கற்பனைகளுக்கும் எட்டாத மூல முதற்பொருளே' என்று உறுதிபட எண்ணுகின்றான்,    
-
(உற்பத்தி காண்டம்: தாரகன் வதைப்படலம் - திருப்பாடல் 127):
தற்பமதுடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால்
சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு அனைத்தும் நோக்கி
அற்புதமெய்தி நம்மேல் அமர்செய வந்தானென்றால்
கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன் கொல்என்றான்
-
(சொற்பொருள்: தற்பம் - ஆணவம், சிற்பர மூர்த்தி - பரம்பொருள்)

ஆதிப்பரம்பொருளான சிவபெருமானின் குமார வடிவமே ஆறுமுகக் கடவுள் எனும் சத்தியத்தினைப் பறைசாற்றும் மற்றுமொரு அற்புதப் பகுதியிது (சிவ சிவ).

No comments:

Post a Comment