ஸ்காந்த புராணத்திலிருந்து தோன்றிய கந்த புராணம்:

காஞ்சீபுரத்தில் 10ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில், ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவர் குமாரக் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளாலேயே 'திகட சக்கரம்' என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்று, வேத வியாசர் வடமொழியில் அருளியிருந்த ஸ்காந்த புராணத்தின் சிவரகசிய கண்டத்தினைத் தமிழ் மொழியில் கந்தபுராணத் திருப்பாடல்களாய் இயற்றித் தந்த உத்தம சீலராவார். இனி இக்குறிப்புகளுக்கான அகச் சான்றுகளைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்களின் வாயிலாகவே உணர்ந்து மகிழ்வோம், 

பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், 'முன்னர் வேத வியாசர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ஆறுமுக தெய்வத்தின் வரலாற்றை அறிந்து, அதனைத் தென்மொழியான தமிழில் இச்சிறியேன் உரைக்க முனைந்துள்ளேன்' என்று குறிக்கின்றார் (முனி - வேத வியாசர், தெரீஇ - தெரிந்து) , 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 3):
முன்சொல்கின்ற முனி வடநூல் தெரீஇத்
தென்சொலால் சிறியேன்உரை செய்தலால் 
மென் சொலேனும் வெளிற்றுரையேனும் வீண்
புன்சொலேனும் இகழார் புலமையோர்

பின்வரும் திருப்பாடலில், 'முன்னர் சிவபரம்பொருள் புராண நிகழ்வுகள் யாவையும் திருநந்திதேவருக்கு உபதேசிக்க, அவர் அதனை சனற்குமாரருக்கு உரைக்க, சனற்குமாரர் மூலம் அவைகளை அறியப் பெறும் வேத வியாசர் அவைகளைப் பதினெண் புராணங்களாக இயற்றியளித்து சூத முனிவரிடம் உபதேசிக்க, சூத முனிவர் வாயிலாக யாவருக்கும் உபதேசிக்கப் பெற்றுள்ளவையே இப்புராணங்கள்' என்று ஸ்காந்த புராண மூலத்தினைப் பதிவு செய்கின்றார் ('மூவாறு தொல்கதை' - பதினெண்  புராணங்கள், 'வாதராயண முனி' -  வேத வியாசர்). 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 8):
நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக்
கோதிலாதுணர் சனற்குமரன் கூறிட
வாதராயண முனி வகுப்ப ஓர்ந்துணர்
சூதன் ஓதியது மூவாறு தொல்கதை

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில், 'ஸ்காந்தமாகிய பெருங்கடலுள், சிவபெருமானின் திருநெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுக தெய்வம் வெளிப்பட்ட நிகழ்விலிருந்துத் துவங்கி, சூர சம்ஹாரம் முதலிய முக்கிய நிகழ்வுகளை இப்புராணத்தில் கூறவுள்ளேன்' என்று மேலும் விவரிக்கின்றார் (காந்தம் - ஸ்காந்தம்),
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 14):
காந்தமாகிய பெருங் கடலுள் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல் வந்தவுணர்கள் யாரும் அவ்வழி
மாய்ந்திட அடர்த்தது மற்றும் கூறுகேன்

இறுதியாய்ப் பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், வடமொழியில் சூதமுனிவர் முன்பு உபதேசித்த ஸ்காந்த புராணத்தினை ('முன்பு சூதன் மொழி வடநூல் கதை'), சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழியில் கூறுகின்றேன் ('பின்பு யான் தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்') என்று மீண்டுமொரு முறை ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி, கந்தபுராணத்தின் மூலமான ஸ்காந்த புராணத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 16):
முன்பு சூதன் மொழிவட நூல்கதை
பின்பு யான்தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்
என்பயன்எனில் இன்தமிழ்த் தேசிகர்
நன்புலத்தவை காட்டு நயப்பினால்

No comments:

Post a Comment