யுத்தக் காட்சியிலொரு நுட்பம் (தவத்தின் மேன்மை) - கந்தபுராண நுட்பங்கள்:

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய கந்தபுராணத் திருப்பாடல்களில் ஆங்காங்கே தவத்தின் மேன்மையையும், 'தவத்தால் மட்டுமே சிவத்தை அடைய இயலும்' எனும் சத்தியத்தையும் வலியுறுத்திக் கொண்டே வருவார். அவ்வாறு யுத்தகாண்டத்தில் இடம்பெறும் ஒரு திருப்பாடலை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

இறுதிக் கட்டப் போர்ச் சூழல், 1008 அண்டங்களினின்றும் வந்து குழுமியுள்ள எண்ணிலடங்கா அசுரப் படைகளுடன் சூரபத்மன் யுத்த களத்தினை வந்தடைகின்றான். நான்முகக் கடவுள் இச்செய்தியைக் கந்தவேளிடம் அறிவித்துப் பணிய, அறுமுக தெய்வம் புன்முறுவல் புரிந்தவாறு வாயுதேவனைக் குறிப்பால் பார்த்தருள, கணநேரத்தில் வாயுதேவன் திருத்தேருடன் அவ்விடத்திற்கு வந்து சேர்கின்றான், 

குமாரக் கடவுள் விரைந்தெழுந்து, ஒளி பொருந்திய மழு; வச்சிராயுதம்; வேல்; வாள்; கேடயம்; சக்ராயுதம்; தண்டாயுதம்; உலக்கை; வில்; அம்பு; கைவேல் ஆகிய ஆயுதங்களைத் தம்முடைய பன்னிரு திருக்கரங்களிலும் ஏந்திக் கொள்கின்றார். 

இவ்விடத்தில் ஒரு நுட்பம், 'தன்னுடைய சங்கல்ப சக்தியால் கண நேரத்தில் ஆயிரம் கோடி அண்டங்களையும் படைத்து, விளையாட்டாய் ஐந்தொழிலையும் புரிந்தருள வல்ல சிவபரம்பொருளின் குமார வடிவமாகிய நம் வேலாயுதப் பெருங்கடவுள், ஒரு அசுரனை சம்ஹாரம் புரிந்தருள இத்தனை விதமான ஆயுதங்களைத் தரித்துக் கொள்கின்றார் எனில் சூரபத்மனின் தவச் சிறப்பினை அளவிட்டுக் கூறவும் இயலுமோ?' என்று தவத்தின் மேன்மையை வியந்து போற்றுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்,
-
(யுத்த காண்டம்: சூரபன்மன் வதைப் படலம் - திருப்பாடல் 46)
உய்த்திடுகின்ற காலத்தொய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசம் சூலம் 
சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்
கைத்தலம் கொண்டான் என்னின் அவன்தவம் கணிக்கல் பாற்றோ
-
(சொற்பொருள்: ஒய்யென - விரைந்து, நீபம் - கடப்ப மலர், தார் - மாலை, புகர் - ஒளி, குலிசம் - வச்சிராயுதம், சத்தி - வேல், பலகை - கேடயம், நேமி - சக்கரம், தண்டு - தண்டாயுதம், எழு - உலக்கை, கணிக்கல் பாற்றோ - கணிக்கத் தக்கதோ?)

No comments:

Post a Comment