திருச்செங்காட்டங்குடி உருவான வரலாறு (கந்தபுராண நுட்பங்கள்):

நாகப்பட்டின மாவட்டத்தில், காவிரித் தென்கரையில், திருவாரூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் திருமருகலிலிருந்து 3 கி.மீ தூரத்திலும், திருப்புகலூரிலிருந்து 4 1/2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது 'திருச்செங்காட்டங்குடி' எனும் திருத்தலம், 'கணபதீஸ்வரம்' எனும் திருப்பெயரும் இதற்குண்டு. ஞானசம்பந்த மூர்த்தி மற்றும் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இறைவர் உத்தராபதீஸ்வரர்; கணபதீஸ்வரர் எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார்.  

சிறுத்தொண்ட நாயனாரின் அவதாரத் தலமாகவும், முத்தித் தலமாகவும் திகழ்வது. 'இத்தலத்து இறைவர் பைரவ வேடத்தில் எழுந்தருளி வந்து, சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டுப் பேரருள் புரிந்துள்ள நிகழ்வு' யாவரும் அறிந்தவொன்றே. இனி இத்திருத்தலம் உருவான வரலாற்றினை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்து மகிழ்வோம்.

பிரணவ முக இறைவனான நம் விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் எனும் அசுரனொருவனைச் சம்ஹாரம் புரிந்தருள, அவ்வசுரனின் உடலிலிருந்து புறப்பட்ட குருதியானது அருகிலிருந்த காடொன்றில் முழுவதுமாய் நிறைய, அப்பகுதி அதுமுதல் செங்காடு என்று வழங்கப் பெறுவதாயிற்று. 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 250)
ஏடவிழ் அலங்கல் திண்தோள் இபமுகத்து அவுணன் மார்பில் 
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர் பெற்றின்னும் காண்தக இருந்ததம்மா
-
(சொற்பொருள்: நீத்தம் - வெள்ளம், கான் - காடு, செய்ய காடு - செங்காடு)

பின்னர் விக்னேஸ்வர மூர்த்தி அச்செங்காட்டில் சிவலிங்கத் திருமேனியொன்றினைப் பிரதிஷ்டை செய்து, திருவுள்ளம் குழைந்துப் பெரும் அன்பு மீதூர ஆதிப்பரம்பொருளைப் பூசித்துப் பணிகின்றார். அதுமுதல் அத்தலம் 'கணபதீஸ்வரம்' என்றும் போற்றப் பெற்று, இன்றும் நம்மால் தரிசித்து மகிழக்கூடிய தன்மையில் சிறப்புடன் விளங்கி வருகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 264)
மீண்டு செங்காட்டில் ஓர்சார் மேவி மெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தாபித்தேத்திப்
பூண்ட பேரன்பில் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதீச்சரம் அதென்பார்
-
(சொற்பொருள்: தாபித்தத்தி - ஸ்தாபித்து ஏத்தி; பிரதிஷ்டை செய்து போற்றி)

பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் பல்லவ மன்னனொருவனுக்காக, வடதேசத்திலுள்ள வாதாபி சென்று, அங்குக் கோலோச்சியிருந்த சாளுக்கிய மன்னரை வென்று, அங்கிருந்து கொணர்ந்த விநாயகப் பெருமானின் திருமேனியை இத்திருத்தலத்தில் 'வாதாபி கணபதி' எனும் திருநாமத்தில் எழுந்தருளச் செய்ததாக வரலாற்றுச் செய்தியொன்று உண்டு (எனினும் பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் 'சிறுத்தொண்ட நாயனார் இவ்விதம் பிரதிஷ்டை செய்ததாக' குறிக்கவில்லை). எதுவாயினும், இதற்கெல்லாம் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே, 'இத்திருத்தலம் உருவாவதற்கே நம் விநாயகப் பெருமான் தான் மூலகாரணர்' என்பதனை கச்சியப்ப சிவாச்சாரியார் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment