தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது 'திருச்சேய்ஞலூர்' எனும் புண்ணியத் தலம் (தற்கால வழக்கில் சேங்கனூர்). ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது, சண்டீஸ்வர நாயனார் பேரருள் பெற்றுள்ள திருத்தலமாகவும் திகழ்வது. சிவமூர்த்தி இத்தலத்தில் சத்யகிரீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இனி இத்தலம் உருவான வரலாற்றினை, நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்து மகிழ்வோம்.
முருகப் பெருமான் சூரசம்ஹாரத்தின் பொருட்டு, திருமால்; நான்முகக் கடவுள்; இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் உடன்வரத் திருக்கயிலையிலிருந்து புறப்பட்டு, முதலில் தாரகாசுரனை வதம் புரிகின்றான். பின்னர் வழிதோறுமுள்ள சிவ ஷேத்திரங்களைத் தரிசித்தவாறு, தஞ்சைப் பகுதியிலுள்ள மண்ணியாற்றங்கரையை வந்தடைகின்றான். 'அந்த இரவுப் பொழுதில் அப்பகுதியிலேயே தங்கிச் செல்லலாம்' என்றனைவரும் விண்ணப்பிக்க, கந்தவேளும் அதனை ஏற்றருளி தேவதச்சனிடம், 'கலைத்தொழிலில் வல்ல மயனே, சிறிது கால அளவிற்குள் இவ்விடத்தில் நமக்கொரு நகரமொன்றினை உருவாக்குவாயாக' என்றருளிச் செய்கின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 10)
மெய் விதித்தொழிலில் வேதன் நிகர்க்கும்
கைவலோய் ஒரு கணம்படு முன்னர்
இவ்விடத்தினில் எமக்கொரு மூதூர்
செவ்விதில் புனைவு செய்குதி என்றான்
மயனும் விரைந்து அவ்விடத்தில் அற்புதமான நகரமொன்றினை உருவாக்கி அதனை வேலாயுதக் கடவுளுக்கு அறிவித்துப் பணிகின்றான். கந்தவேள் அவனுக்குக் கருணை புரிந்து, 'நாம் எழுந்தருளுதற்கு நல்லதொரு இடமிது' என்றருளிச் செய்கின்றான்.
உடன் அங்கிருந்த தேவர்கள் யாவரும், பேரழகு பொருந்திய அந்நகரத்தை (முருகக் கடவுளுக்கு உகந்த தலமானதால்) 'திருச்சேய்ஞலூர்' என்று பெயரிட்டுப் போற்றுகின்றனர்,
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 15)
வீர வேளிது விளம்புதலோடும்
ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
ஏரெலாமுடைய இந்நகர் சேய்ஞ
லூர் அதென்று பெயர் ஓதினர் அன்றே
பின்னர் பொழுது புலர்ந்ததும், செவ்வேளான கார்த்திகேயக் கடவுள் கரிய திருமேனியனான இந்திரனிடம், 'வேதங்களாலும் அறியவொண்ணா சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்குதற்குரிய பூசைப் பொருட்களை இவ்விடத்தே கொணர்வாயாக' என்றருளிச் செய்கின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 65)
கரியவன் தனைச் செய்யவன் கருணை செய்தருளி
வருதி என்றுகூய் மறைகளும் வரம்பு காண்கில்லா
அரன் தாள்களை அருச்சனை புரிதுநாம் அதனுக்(கு)
உரியவாய பல் கரணமும் தருதி என்றுரைத்தான்
இந்திரன் விரைந்து பூஜைப் பொருட்களை சேகரித்து வர, கந்தவேள் மயன் மூலமாய்ப் புதியதொரு சிவலிங்கத் திருமேனியினைச் செய்விக்கின்றான். பின்னர் இறைவரை மாணிக்க ஆசனத்தில் எழுந்தருளச் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் புரிந்து, சிறந்த அணிகலங்களையும் வஸ்திரங்களையும் அணிவித்து, மலர் மாலைகளால் அலங்கரித்து, எண்ணிறந்த சிறந்த உணவு வகைகள்; மணமிகுந்த பொருட்கள்; வெற்றிலை; பாக்கு இவைகளை நிவேதித்து, மும்முறை வணங்கிப் பணிகின்றான்.
குமாரக் கடவுளின் இவ்வற்புத சிவபூஜையால் திருவுள்ளம் மகிழும் ஆதிப்பரம்பொருள் உமையம்மையுடன் இடப வாகனத்தில் விண்மிசை எழுந்தருளித் தோன்றுகின்றார்.
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 71)
இருவரும் உணர்கிலாதிருந்த தாள்களைச்
சரவண மிசைவரு தனயன் பூசனை
புரிதலும் உமையொரு புடையில் சேர்தர
அருள்விடை மீமிசை அண்ணல் தோன்றினான்
கார்த்திகைப் பெண்களால் போற்றப் பெறும் நம் முருகக் கடவுள், நீலகண்டப் பெருமான் எழுந்தருளி இருப்பதனைக் கண்ணுற்று அகமெலாம் குழைந்துருகிப் பணிவுடன், உச்சி கூப்பிய கையினனாய் உமையொரு பாகனாரைப் போற்றுகின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: குமாரபுரிப் படலம் - திருப்பாடல் 72)
கார்த்திகை காதலன் கறைமிடற்றுடை
மூர்த்தி நல்லருள்செய முன்னி வந்தது
பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னிமேல்
சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான்

No comments:
Post a Comment