சிவபெருமானை 'பித்தனோ நீ' என்று வெகுண்டுரைத்த அன்னை பார்வதி (கந்தபுராண நுட்பங்கள்):

மலையரசனின் தவத்தின் பயனாய் அம்பிகை அவனிடத்துப் புதல்வியாய்த் தோன்றி, 'பார்வதி' எனும் திருநாமத்தில் வளர்ந்து வருகின்றாள். தன்னுடைய 5ஆம் வயதில், 'இனி சிவமூர்த்தியைக் குறித்து தவமியற்றிப் பின் இறைவரை மணத்தால் சேர்வேன்' என்று துணிந்து, தந்தை; தாயிடம் அனுமதி பெற்றுத் தோழியர் சிலர் உடனிருந்து பணி செய்ய, இமயமலைச் சாரலில் அரிய பெரிய தவமியற்றி வருகின்றாள். 

எண்ணில் பல வருடங்கள் இந்நிலையில் அம்மை தன் திருமேனி மெலிந்து வருந்துமாறு கடும் நோண்பியற்றி வர, திருமணப் பருவமும் எய்துகின்றது. முக்கண்ணுடைப் பரம்பொருள் அம்மைக்கு அருள் புரியும் பொருட்டு, முதிய வேதியரொருவரின் திருக்கோலத்தில் அவ்விடத்திற்கு எழுந்தருளி வருகின்றார். தோழியர் இச்செய்தியினை அம்மைக்கு அறிவிக்க, அம்மை மறையவராய்த் தோன்றியுள்ள மகாதேவருக்குத் தக்கதொரு ஆசனமளித்துப் பணிகின்றாள். 

மறையவர், 'பெண்ணே, உன் பேரழகு அழிந்து படுமாறு நீ தவம் புரிவது எதன் பொருட்டு?' என்று வினவுகின்றார். அம்மை தன் திருக்கண்களால் குறிப்பு காட்ட, தோழியரும் 'ஆதிப்பரம்பொருளான சிவபெருமானின் திருக்கரம் பற்றி அவர்தம் இடபாகத்தில் என்றும் நிலைத்திருக்கவே எங்கள் உமையம்மை தவமியற்றி வருகின்றார்' என்றுரைக்கின்றனர். 

உடன் அம்மறையவர், 'நன்று உன் செய்கை, தெய்வங்களும் காண்பதற்கரிய அச்சிவ மூர்த்தி உனக்கு எளியவர் ஆவரோ? ஆதலின் இனி உன் அழகினை வீணாக்காமல் விரைந்து இத்தவத்தினை விடுவாயாக' என்றருளிச் செய்கின்றார். 

உடன் அம்மை கடும் சீற்றம் கொண்டு வேதியரிடம், 'ஆதிப்பரம்பொருளாகிய இறைவர் அடியவளின் தவத்திற்கு இரங்காராயினும், கொண்ட இந்நோண்பினை ஒருக்காலும் கைவிடேன். இன்னமும் எண்ணிலா வருடங்கள் தொடர்ந்து தவமியற்றி அந்நிலையிலேயே இன்னுயிரையும் விடுப்பேன். முதியவரென்று கருதினால், இத்தகு தகாத மொழிகளைக் கூறும் பித்தனோ நீர்?' என்று வெகுண்டுரைக்கின்றாள்.  
-
(உற்பத்தி காண்டம்: தவம்காண் படலம் - திருப்பாடல் 13)
முடிவிலாதுறை பகவன்என் வேட்கையை முடியாது
விடுவன்என்னினும் தவத்தினை விடுவனோ மிகஇன்னம் 
கடிய நோன்பினை அளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள் 

வேதியரும் அத்துடன் விடுவதாக இல்லை, சிவபெருமானின் தன்மைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக் கூறி, இவ்விதமான இறைவரை மணந்து நீ எச்செல்வத்தைப் பெற்று விட இயலும்?' என்று மேலும் அம்மையைச் சோதிக்க, அம்மை இச்சிவ அபராதச் சொற்களால் நடுங்கிப் பதறித் தன் இரு செவிகளையும் மூடிக்கொண்டு, விரைந்து அவ்விடம் விட்டு அகல முனைகின்றாள். இறைவர் தன் மெய்த் திருக்கோலத்துடன் விண்மிசை எழுந்தருளித் தோன்றுகின்றார். 

அம்மை நாணமும் அச்சமும் ஒருசேரத் தோன்ற வேத முதல்வரைப் பணிந்து, 'உம்முடைய மாயையை அறியாதவளாய்ப் பலவாறு பழித்துரைத்தேன், மன்னித்தருள வேண்டும்' என்று தொழுதேத்துகின்றாள்.  

கருணைப் பெருங்கடலான நம் இறைவரும், 'நல்ல தவமுடையவளே கேள், நம்மிடத்தே கொண்ட பேரன்பினால் நீ இகழ்ந்துரைத்தவைகளைத் துதியாகக் கொண்டோம், உன் மீது குற்றமிருந்தாலன்றோ பொறுப்பது? இனி நீ நோண்பியற்றி வருந்தாதே, நாளையே நாம் உன்னை மணத்தால் அணைவோம்' என்றருள் புரிகின்றார். 
-
(உற்பத்தி காண்டம்: தவம்காண் படலம் - திருப்பாடல் 31)
நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத்தன்பால் நீமுன்
சொற்றன யாவும் ஈண்டே துதித்தன போலக் கொண்டாம்
குற்றமுண்டாயின்அன்றே பொறுப்பது கொடிய நோன்பால்
மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருதுமென்றான்

மேற்குறித்துள்ள நிகழ்வுகளால், அடியார்க்கு அடியரான நம் சுந்தரனார் இறைவரை 'பித்தனோ மறையோன்' என்றழைப்பதற்கு எண்ணில் பல யுகங்களுக்கு முன்னரே நம் அன்னை, 'பித்தனோ நீ' என்று இறைவரை வெகுண்டுரைத்துள்ளது சுவையானதொரு குறிப்பன்றோ!


No comments:

Post a Comment