பிரமனிடம் ரிக் வேத மந்திரம் கேட்டுத் தலையில் குட்டிய ஆறுமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

நான்முகக் கடவுளான பிரமன், திருக்கயிலையில் சிவமூர்த்தியைத் தரிசித்து விட்டு, தேவர்களும் உடன்வர முன்வாயிலை அடைகின்றார். அங்கு நவவீரர்களுடன் எழுந்தருளியிருந்த ஆறுமுக தெய்வம் 'நம் முன் வருக' என்றழைக்க, (ஆணவமலம் நீங்காதிருந்த தன்மையினால்) பிரமன் முருகக் கடவுளைத் தலைதாழ்த்தி வணங்காது, கைகளை மட்டும் கூப்பி வணங்குகின்றார். பிரமனின் இச்செயல் காணும் கந்தக் கடவுள் 'உன் தொழில் யாது' என்று வினவுகின்றார். 'சிவபெருமானின் கட்டளைப்படி உயிர்களனைத்தையும் படைக்கின்றேன்' என்று பிரமன் மறுமொழி பகர்கின்றார்.  

'ஈரேழு புவனங்களையும் படைப்பதாயின் வேதங்கள் யாவுமே உனக்குப் பாடமோ - கூறுக? என்று அறுமுக தெய்வம் கேட்க, 'சிவபரம்பொருள் அருளியுள்ள எண்ணிறந்த மறைகளுள், யான் உய்யும் பொருட்டு அவர் உபதேசித்துள்ள மறைகளை அறிவேன்' என்கின்றார் பிரமன். 

அங்கனமாயின் நால்வேதங்களுள், 'ரிக் வேத மந்திரமொன்றினைக் கூறுக' என்று குகக் கடவுள் கேட்க, பிரமனும் மரபு கருதி முதலில் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தினை ஓதிப் பின் துவங்க முனைகின்றார்.   
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 8:)
என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீ விளம்புதிஎன முருகவேள் உரைப்ப
நன்றெனா மறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்றதோர் தனிமொழியை முன் ஓதினன் நெறியால்

சிவகுமரன் இடைமறித்து 'நிற்க! முதலில் ஓம் எனும் முதல்மொழியின் பொருளை இயம்புவாயாக' என்றுரைக்கின்றான். 

பிரணவத்தையே ஒரு திருமுகமெனக் கொண்டருளும் முருகப் பெருமான் இவ்வாறு புன்முறுவலுடன் கேட்டலும், நான்முகக் கடவுள் அப்பொருளறியாது திகைத்து விழிக்கின்றார், வெட்கத்தால் தலை கவிழ்கின்றார், தொண்டையடைத்து விக்கித் திணறி நிற்கின்றார். 

முருகப் பெருமான், 'சிருஷ்டித் தொழிலையும் இவ்விதமே பொருளறியாத தன்மையில் புரிந்து வருகின்றாயோ? மிக நன்று' என்று வெகுண்டுரைத்து, பிரமனின் நான்கு முடிகளும் குலுங்கி அதிருமாறு குட்டுகின்றான், 
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 14)
எட்டொணா தவக் குடிலையின் பயன் இனைத்தென்றே
கட்டுரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வது இத்தன்மையதோ எனாச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்கு மாமுடிகளும் குலுங்க

அது மட்டுமா, பிரமன் கீழே விழுமாறு தன் திருவடிகளால் உதைத்துப் பின் கந்தமலையில் அவரைச் சிறை வைக்கின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 15)
மறை புரிந்திடும் சிவனருள் மதலை மாமலர்மேல்
உறை புரிந்தவன் வீழ்தரப் பதத்தினால் உதைத்து
நிறை புரிந்திடு பரிசனரைக் கொடே நிகளச்
சிறை புரிந்திடுவித்தனன் கந்தமாம் சிலம்பில்

இதன் தொடர்ச்சியாய் நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னர், சிவபெருமானின் ஆணையினால் பிரமன் விடுவிக்கப் பெற்று வந்து பணிகின்றார். சிவபெருமான் பரிவுடன், 'நெடுநாட்கள் சிறையில் இளைத்து வாடினையோ?' என்று கேட்டருள, பிரமனும் 'உம்முடைய குமாரன் அளித்தருளிய தண்டனை மிகச் சரியே, அது அடியேனது அகந்தையைப் போக்கி, வினைகளை நீக்கிப் புனிதமடையச் செய்தது' என்று நெகிழ்ந்துருகிப் பணிகின்றார்,
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 14)
நாதன் இத்தன்மை கூறி நல்லருள் புரிதலோடும்
போதினன் ஐய உந்தன் புதல்வன் ஆற்றிய இத்தண்டம்
ஏதமன்றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித்
தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனிதமென்றான்

No comments:

Post a Comment