மேருமலையில் தேவர்கள் கண்ட விஸ்வரூப தரிசனம் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தபுராணத்தில் இரு வெவ்வேறு சமயங்களில் முருகப் பெருமான் தன்னுடைய விஸ்வரூப திருக்கோலத்தைக் காண்பித்து அருளியுள்ளதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். யுத்த நிகழ்வுகளுக்கு மிக முன்னதாக தேவர்களுக்கென்று மேருமலையில் ஒரு முறையும், பின்னர் யுத்த களத்தில் சூரபத்மனுக்காக மற்றொரு முறையும் அறுமுகக் கடவுள் பெருவடிவு கொண்டருளியுள்ளான். இனி இப்பதிவில் முதல் விஸ்வரூப தரிசன நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம், 

கந்தப்பெருமானின் அற்புதத் திருவிளையாடல்களை 'உற்பத்தி காண்டத்திலுள்ள திருவிளையாட்டுப் படலம்' விரிவாகப் பேசுகின்றது. நிலவுலகிலுள்ள கடல்களை பாதாள உலகிற்கு செலுத்துதல், சூரிய கிரகத்தைச் சந்திரனின் பாதையிலும்; சந்திரனைச் சூரியனின் பாதையிலும் பயணிக்கச் செய்தல்; கோள்களின் அமைப்பினை மாற்றியமைத்தல் என்று எண்ணிறந்த திருவிளையாடல்களைப் புரிந்து வருகின்றான் சிவகுமரன். 

இவ்விநோத நிகழ்வுகளால் அச்சமுற்றிருந்த தேவர்கள், மேருமலையில் பால வடிவில் எழுந்தருளியிருந்த குமரப் பெருமானை அசுரர்களின் மாய வடிவமென்று கருதி, அறியாமையால் சூழ்ந்து கொண்டு போரிடத் துவங்குகின்றனர். கந்தக் கடவுள் புன்முறுவலோடு அவர்களுடன் போரிட்டு ஒருவர் விடாது அழித்தொழிக்கின்றான். நடந்தேறிய நிகழ்வுகளை நாரத முனிவரின் மூலம் அறியப் பெறும் தேவகுருவான பிரகஸ்பதி மேருமலைக்கு விரைந்து வந்து வேலாயுதப் பெருங்கடவுளின் திருவடி தொழுது, தேவர்கள் சார்பாக பிழை பொருத்தருளுமாறு வேண்ட, உமை மைந்தன் மீண்டும் அனைவரையும் உயிர்ப்பித்து அருள் புரிகின்றான்.

(1)
உயிர் பெற்றெழும் தேவர்கள் நடந்தேறிய நிகழ்வுகளை உணர்ந்து உச்சி கூப்பிய கையினராய் அறுமுகத்து வள்ளலை, 'கந்தனே போற்றி; சிவமூர்த்தி தந்தருளிய முதல்வா போற்றி; ஆறுமுகப் பரம்பொருளான எங்கள் தந்தையே போற்றி; என்றும் இளையோய் போற்றி' என்று அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கிப்  பணிந்தேத்துகின்றனர், 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 82):
கந்தநம ஐந்துமுகர் தந்த முருகேசநம கங்கை உமை தன்
மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலை புனையும் 
தந்தைநம ஆறுமுக ஆதிநம சோதிநம தற்பரமதாம்
எந்தைநம என்றும் இளையோய்நம குமாரநம என்றுதொழுதார்

(2)
அச்சமயத்தில் குமரப் பெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெருவடிவு கொண்டருளி, அதனைக் கண்டுணரும் சிவஞானப் பார்வையையும் தேவர்களுக்கு அளித்தருள் புரிகின்றான். 

காண்பதற்கரிய அவ்வடிவத்திற்கு மண்ணுலகம் முதல் பாதாள உலகம் வரையில் திருவடிகளாகவும், திசைகளின் எல்லைகள் திருத்தோள்களாகவும், விண்ணிலுள்ள உலகங்கள் யாவையும் திருமுடியெனவும், ஒளிமிகு சுடர்கள் யாவும் திருக்கண்களெனவும், நால்வேதங்கள் அழகிய இதழ்களாகவும், மெய்யறிவு முழுதும் செவிகளாகவும், திருமாலும்; நான்முகக் கடவுளும் இரு பக்கங்களாகவும், பராசக்தியாகிய உமையன்னையே எண்ணமாகவும், ஆதிப்பரம்பொருளான சிவபெருமானே இன்னுயிராகவும், மற்றுமுள்ள ஆயிரம்கோடி அண்டங்களிலுள்ள எப்பொருளும் தானேயாகவும் வெளிப்படுத்திக் காட்டுகின்றான், 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 89):
மண்ணளவு பாதலமெலாம் சரணம், மாதிர வரைப்பும் மிகுதோள்,
விண்ணளவெலாம் முடிகள், பேரொளியெலாம் நயனம், மெய்ந்நடுவெலாம்
பண்ணளவு, வேதமணி வாய், உணர்வெலாம் செவிகள், பக்கம் அயன்மால்
எண்ணளவு சிந்தை உமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈசன் உயிரே

(3)
தேவர்கள் விதிர்விதிர்த்து உச்சி கூப்பிக் கந்தவேளைப் பலவாறு தொழுது, 'எம்பெருமானே, அருவுருவத்தில் விளங்கியருளும் சிவபரம்பொருள் நீரே என்றுணர்ந்தோம். எங்கள் தவப்பயனாய், சூராதி அசுரர்களை சம்ஹாரம் புரிந்து மீண்டும் எங்களை தேவருலகில் அமர்விக்கும் பொருட்டே இக்குமார வடிவினில் தோன்றி உள்ளாய்' என்று போற்றி செய்து பணிகின்றனர், 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 99):
ஆகையால் எம்பிரான்நீ அருவுருவாகி நின்ற
வேத நாயகனேயாகும் எமது மாதவத்தால் எங்கள்
சோகமானவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை
நாகமேல் இருத்துமாற்றால் நண்ணினை குமரனேபோல்
-
(சொற்பொருள்: நாக மேல் - தேவலோகத்தில்)




No comments:

Post a Comment