நான்முகக் கடவுள் தட்சனுக்கு உபதேசித்த சிவ பரத்துவ வைபவம் (பகுதி 1) - (கந்தபுராண நுட்பங்கள்):

ஒரு சமயம் சத்திய உலகிற்குச் செல்லும் தட்சன் தந்தையான நான்முகக் கடவுளிடம், 'மும்மூர்த்திகளுள் மேலான பரம்பொருளாகவும்; உயிர்க்குலம் முழுமைக்கும் தலைவராகவும் விளங்கும் மூர்த்தி யார்? என்பதனை ஐயம் நீங்குமாறு விளக்கியருள்வீர்' என்று விண்ணப்பிக்கின்றான். 

இந்நிலையில் படைப்புக் கடவுள் உபதேசித்த சிவபரத்துவ வைபவத்தினை 'தட்ச காண்டம் - உபதேசப் படலத்தில்' அற்புத அற்புதமான 24 திருப்பாடல்களில் பதிவு செய்கின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். அத்திருப்பாடல்களை இனிவரும் தொடர்ப் பதிவுகளில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,  

(1)
முன்பொரு சமயம், 'பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவும்; யானும் வாக்குவாதமொன்றில் ஈடுபட்டிருந்த சமயம், எங்களுக்கு நடுவில் விண்ணுயர் சோதியாக தோன்றியருளிய சிவபெருமானே மேலான பரம்பொருள்' என்பதனை உணர்ந்து தெளிவாயாக,
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 5)
என்றுதன் மைந்தன் இவ்வாறியம்பலும் மலரோன் கேளா
நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும்
அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில்
சென்றதோர் சிவனே யார்க்கு(ம்) மேலவன் தெளிநீ என்றான்
-
இதற்கிடையில் தட்சனானவன் 'மும்மூர்திகளுள் அழித்தல் தொழில் புரிந்தருளும் சிவபெருமானை மட்டுமே பரம்பொருள் என்று போற்றுவதன் காரணம் யாது?' என்றொரு துணைக்கேள்வி எழுப்ப பிரமதேவரும், 'நீ மறைப்பொருளை கற்றுணர்ந்த விதம் மிக மிக நன்று' என்று பரிகசித்துச் சிரித்து மேலும் தன் விளக்கத்தினைத் தொடர்கின்றார், 

(2)
மைந்தனே கேள், எங்கள் யாவரையும் மற்றுமுள்ள உயிர்த்தொகை அனைத்தையும் மகாப்பிரளய காலத்தில் தமக்குள் ஒடுக்கிக் கொள்பவர் அச்சிவமூர்த்தி எனில் அவ்வுயிர்களை முதலில் படைத்தளித்தவரும் அவரொருவரே என்பது தெள்ளென விளங்குமன்றோ (ஒடுங்கும் இடத்திலிருந்தே படைப்பு துவங்கும் என்பது உட்கருத்து), 
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 8 )
பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றும் தன்மை
என்னென உரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத்
துன்னிய உயிர்கள் தம்மைத் தொலைவு செய்திடுவன் ஈற்றில்
அன்னவன் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ

(3)
மகனே கேள், மகாப் பிரளய காலத்தில் தனியொரு மூர்த்தியாக நின்றருளி உயிர்களை ஒடுக்கிப் பின்னர் அவ்வூழிக் காலம் நிறைவுறும் வேளையில் அம்மையப்பராய்த் தானே விளங்கியிருந்து, அவ்வுயிர்களின் கர்மவினைக்கு ஏற்றாற்போன்று உடலினை அளித்தருளும் முக்கண் முதல்வரின் செயல்கள் இன்னதென்று உணர்தற்கரியவை,
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 9)
அந்தநாள் ஒருவனாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள்
வந்தவாறொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை
தந்தையாய் உயிர்கட்கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண்
எந்தைதன் செய்கை முற்றும் இனையதென்(று) இசைக்கல் பாற்றோ

(4)
மைந்தனே கேள், அச்சிவமூர்த்தியானவர் சிவந்த கண்களுடைய திருமாலையும் என்னையும் தன்னுடைய திருத்தோள்களினின்றும் தோற்றுவித்து, காத்தல்; படைத்தல் தொழில்களை முறையே அளித்தருளிப் பின் 'உங்களோடு நாமும் இருப்போம்' என்றருளி, அதுமுதல் உயிர்க்குயிராகவும் விளங்கியிருந்து எங்களைத் தொழிற்படுத்தி வருகின்றார். 'அம்மூர்த்தியன்றி எங்கள் சக்தியைக் கொண்டு மட்டுமே புரியக் கூடிய செயலென்று ஏதுமில்லை' என்பதனை நன்குணர்வாய்,   
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 10)
செங்கண்மால் தன்னை என்னைத் திண்திறல் மொய்ம்பின் நல்கி
அங்கண்மா ஞாலம் காப்பும் அளிப்பதும் உதவி யாமும்
உங்கள்பால் இருத்தும் என்றெம் உயிருள் நின்றியற்றா நின்றான்
எங்களால் முடியும் செய்கை யாவதும் இல்லை கண்டாய்

No comments:

Post a Comment