முருகப் பெருமானின் பரத்துவத்தைப் பறைசாற்றும் வீரவாகு தூது (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமானின் நவவீரர்களுள் ஒருவரான வீரவாகு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு, விண்வழி இலங்கையைக் கடந்து, சூரபத்மனின் தீவான வீரமகேந்திரபுரத்தினை அடைகின்றான். சூரனின் சபையுள் புகுந்து, கந்தக் கடவுளின் திருவருளால் உயர்ந்ததோர் ஆசனமொன்றினை அமைத்து, அதன்மீது அமர்ந்தவாறு தூதுச் செய்தியைத் தெரிவிக்கின்றான். 

சூரன் தேவர்களை விடுவிக்கச் சம்மதிக்காததோடு, வேலாயுத தெய்வத்தைச் சிறுவனென்று இகழ்ந்துரைக்கின்றான். அச்சமயத்தில் வீரவாகு, சிவகுமரனின் பரத்துவத்தையும், பல்வேறு சிறப்புகளையும் எடுத்துரைப்பதை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்துத் தெளிவுறுவோம், 

(1)
முன்னவர் யாவர்க்கும் முதன்மையானவரும், தமக்கு மேலொரு முதன்மை இல்லாதவரும், அண்டசராசரங்களிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இன்னுயிராகவும், அருவம்; உருவம்; அருவுருவம் எனும் மூன்று நிலைகளில் விளங்கியருளும் சிவபரம்பொருளே முருகப் பெருமானாவார், 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 128)
முன்னவர்க்கு முன்னாகுவோர் தமக்கு முற்பட்டுத்
தன்னை நேரிலா(து) ஈசனாம் தனிப்பெயர் தாங்கி
இன்னுயிர்க்குயிராய் அருவுருவமாய் எவர்க்கும்
அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண்

(2)
சிவபெருமானே தம்முடைய திருவிளையாடலினால் தமக்குத் தாமேயொரு குழந்தையாய்த் தோன்றியுள்ளார். குற்றமற்ற ஆறு திருமுகங்களையுடைய கந்தவேளின் தன்மையினால் இதனை நீ அறிவாய். ஒளி பொருந்திய மணியிடமிருந்து ஒளி பரவும் தன்மை போல், சிவபெருமானிடத்திருந்து அறுமுகச் சிவமாய் முருகக் கடவுள்  தோன்றியுள்ளார். ஆதலின் அவ்விரு மூர்த்திகளுக்கும் யாதொரு பேதமுமில்லை, 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 129)
ஈசனேஅவன் ஆடலால் மதலைஆயினன்காண்
ஆசிலாஅவன் அறுமுகத்துண்மையால் அறிநீ
பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன்
தேசுலாஅகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல்

(3)
ஆறு திருமுகங்கள் என்று பொதுவில் வழங்கப் பெறினும், முருகப் பெருமானுக்கு எங்குமே திருமுகங்கள், எவ்விடத்தும் திருக்கண்கள், எவ்விடத்தும் திருச்செவிகள், எங்கும் திருக்கரங்கள், எங்குமேயாம் யாவராலும் வணங்கப் பெறும் அம்மூர்த்தியின் திருவடிகள்,
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 133)
எங்கணும்பணி வதனங்கள் எங்கணும் விழிகள்
எங்கணும் திருக்கேள்விகள் எங்கணும் கரங்கள்
எங்கணும் திருக்கழலடி எங்கணும் வடிவம்
எங்கணும் செறிந்தருள் செயும் அறுமுகத்(து) இறைக்கே.

(4)
தெய்வங்கள், மறைகள் மற்றுமுள்ள யாவற்றிற்கும் முதன்மையான 'ஓம்' எனும் பிரணவம் கந்தக் கடவுளின் ஆறு திருமுகங்களில் ஒன்று எனில் அப்பெருமானின் சீர்மையினை எவரால் விவரிக்க இயலும்?
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 134)
தாமரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும்
ஏமுறப்படு மறைக்கெலாம் ஆதி பெற்றியலும்
ஓமெனப்படும் குடிலையே ஒப்பிலா முருகன்
மாமுகத்துள் ஒன்றாம்அவன் தன்மையார் வகுப்பார்

(5)
அம்மூர்த்தி சிறுவர் போலும் எழுந்தருளி வருவார், குருவாகவும் விளங்கித் தோன்றுவார், அணுவினும் சிறிதாவார், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நெடிதுயர்ந்து நிற்பார். இவ்விதம் எண்ணிலடங்கா திருவடிவங்களோடு, ஞானியரும் அறிதற்கரிய தன்மையில் விளங்கும் முருகவேளின் திருவிளையாடல்களை யாரே வகுத்துணர வல்லார்? 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 137)
சிறுவன் போலுறும் குரவனே போலுறும் தினையில்
குறியன் போலுறும் நெடியவனாகியும் குறுகும்
நெறியின் இன்னணம் வேறு பல்லுருக்கொடு நிலவும்
அறிவர் நாடரும் கந்தவேள் ஆடலார் அறிவார்

(6)
சிவபெருமானின் திருவிளையாடல் வடிவெனத் தோன்றி அருளியுள்ள முருகப் பெருமானின் ஆணையினை மீறி அணுவும் அசைய ஒண்ணுமோ?. அப்பெருமானின் மாயையினால் அதனை நீ அறியாதவனாய் உள்ளாய், 
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 138)
சிவனதாடலின் வடிவமாய் உற்றிடும் செவ்வேள்
அவனதாணையின் அன்றியே பெயர்கிலாதணுவும்
எவர்அவன்தனி ஆற்றலைக் கடந்தவர் இவண்நீ
தவ மயங்கினை அவன்தனி மாயையில் சார்வாய்

(7)
முன்பொரு சமயம் முருகப் பெருமான் தேவர்களுக்குத் தன்னுடைய விஸ்வரூபத் திருக்கோலத்தைக் காண்பித்து அருளுகையில், இன்று உன்னுடைய ஆட்சிப் பொறுப்பிலுள்ள 1008 அண்டங்களும் அம்மூர்த்தியின் சிறு உரோமத்துள் அடங்கியிருந்தன. இத்தன்மையிலுள்ள பரம்பொருளை நீ சிறுவனென்று இகழ்கின்றாயோ?
-
(மகேந்திர காண்டம் - அவைபுகு படலம் - திருப்பாடல் 144)
அன்று கந்தவேள் அமைந்ததோர் பெருவடிவதனுள்
ஒன்று ரோமத்தின் இருந்ததற்(கு) ஆற்றிடாதுனதாய்த்
துன்றும் ஆயிரத்தெட்டெனும் அண்டமாம் தொகையும்
இன்று நீயது தெரிகிலை சிறுவனென்றிசைத்தாய்

No comments:

Post a Comment