கந்தபுராணத்திற்கான அற்புத உரைநூல் (முக்கியக் குறிப்புகள்):

8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 10ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலான காலகட்டத்தில், காஞ்சிப்புரத்தில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ்; வடமொழி இரண்டிலுமே பெரும் புலமை கொண்டிருந்த தகைமையாளர். 

முருகக் கடவுள் கச்சியப்பரின் கனவில் தோன்றி, 'வேத வியாசரின் ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சம்ஹிதையில், சிவரகசிய கண்டத்திலுள்ள முதல் ஆறு பகுதிகளைத் தமிழில் இயற்றுவாயாக' என்று கட்டளையிட்டுப் பின்னர் 'திகட சக்கரம்' என்று அடியெடுத்தும் கொடுத்தருளியுள்ளார். அது மட்டுமா, அனுதினமும் கச்சியப்பர் இயற்றி வரும் திருப்பாடல்களில், (அவர் அறியுமாறு) அவ்வப்பொழுது சில திருத்தங்களையும் தன் திருக்கரங்களாலேயே புரிந்தருளி உள்ளார். இறுதியாய் நூல் அரங்கேற்ற சமயத்தில், 'திகழ் தச கரம்' என்பது 'திகட சக்கரம்' என்று புணர்வதற்கான இலக்கண விதியில்லை எனும் மறுப்பொன்று உருவாக, புலவரொருவரின் உருவில் அங்கு எழுந்தருளி வந்து, தக்க இலக்கணச் சான்றுகளைக் காண்பித்து அத்தடையினை நீக்கிப் பேரருள் புரிந்துள்ளார். 
இவ்விதம் குமாரகோட்டத்து இறைவனே இந்நூலின் பொருட்டு இத்தனை பிரயத்தனம் மேற்கொள்வார் எனில்,  இதனை முழுவதுமாய்க் கற்றுணர்வது அடியவர் கடனன்றோ!
தமிழில் வழங்கிவரும் சிறப்பான 3 புராணங்களுள், தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவமூர்த்தியின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது. உற்பத்தி காண்டம்; அசுர காண்டம்; மகேந்திர காண்டம்; யுத்த காண்டம்; தேவ காண்டம்; தக்ஷ காண்டம் எனும் ஆறு காண்டங்களாக, 10,345 திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றுள்ளது கந்தபுராணம்.  

ஏற்றமிகு இப்புராணத்திற்கான முழுமையான உரையை, ஆறு தனித்தனி பகுதிகளாக 'பாரி நிலையம்' எனும் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர், இதன் உரையாசிரியர் 'கயிலை மாமணி, முனைவர் சிவ.சண்முகசுந்தரம்' எனும் பெருமகனாராவார். அரிதினும் அரிதான திருப்பணியிது!!
வைதீக சைவ மரபு ஒருசிறிதும் பிறழாமல் உரையாசிரியர் இதனைக் கையாண்டிருப்பது மிகமிகச் சிறப்பு. ஒவ்வொரு திருப்பாடலின் கீழும் அப்பாடலில் இடம்பெறும் கடின பதங்களுக்கான பொருள் கொடுக்கப் பெற்றுள்ளது. மேலும் திருப்பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளிலோ வார்த்தைகளிலோ குறிக்கப் பெறும் புராண நிகழ்வுகளை, உரையாசிரியர் அந்ததந்த இடங்களிலேயே முழுமையாய் விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. பன்னிரு திருமுறைச் சான்றுகளையும் ஆங்காங்கே ஒப்பு நோக்கிக் குறித்திருப்பது மேலும் இனிமை சேர்க்கின்றது.  

கந்தபுராணம் ஒரு 'சிவநூல்' என்று நம் வாரியார் சுவாமிகள் தம்மடைய விரிவுரைகள் தோறும் கூறி வருவார். அதன் சத்தியத் தன்மையினை, இப்புராணத்தைப் பயிலுகையில் முழுமையாய் உணரப் பெறலாம். 'சிவ பரத்துவம் பேசப் பெறாத பகுதிகளே இதிலில்லை' எனலாம்.
அற்புத அற்புதமான சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இப்புராணத்தின் திருப்பாடல்கள் தோறும் விரவி இருக்கின்றது, நிகழ்வுகளின் மூலம் சித்தாந்த நுட்பங்களை இன்னமும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள இயலுமென்பது தெளிவு. இது வரையிலும் சமூக ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் புராண நிகழ்வுகளைச் சிறிது சிறிதாக, சரியும் தவறுமாகக் கண்டும் கேட்டும் வந்திருப்போம். 'கற்க கசடற' எனும் வள்ளுவனார் திருவாக்கிற்கேற்ப, அற்புதமான இந்த உரை நூலினைப் படிக்கையில், அந்நிகழ்வுகளுக்கான முறையான விளக்கங்களை அறிந்து கொள்ள முடிவதோடு, நம் புரிதலும் முழுமை பெறுவதை உணரப் பெறலாம். 

புராண இறுதியில் இடம்பெறும் பின்வரும் திருப்பாடலில், 'ஆறுமுக தெய்வத்தின் இப்புராணத்தினைக் கூறுவோரும், நூற்பொருளை ஆய்ந்து தெளிபவரும், கசடறக் கற்பவர்களும், கற்க முயற்சி மேற்கொள்பவர்களும், கசிந்துருகிக் கேட்போரும் சிவமுத்தியினைப் பெற்று இன்புறுவர்' என்று அறுதியிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் ,  
-
(தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம் - திருப்பாடல் 266)
வற்றா அருள்சேர் குமரேசன் வண்காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந்திடுவாரும் துகளுறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே
(சென்னை மயிலாப்பூர் 'கிரி டிரேடிங் சென்டரில்' இவ்வுரை நூல் கிடைக்கப் பெறுகின்றது. பாரி பதிப்பகத்தாரின் நேரடி தொலைபேசி எண்கள்: 044-25270795, 044-43227745, அஞ்சல் முகவரி: 184/88 பிராட்வே, சென்னை 104)  
(குறிப்பு: ஆறுமுகக் கடவுளின் திருவருளால், இந்நூலிலுள்ள 10,345 திருப்பாடல்களையும் உரையோடு, இரண்டு முறை முழுமையாய்ப் படித்து மகிழ்ந்து, அந்த அற்புத அனுபவத்தையே இப்பதிவில் விவரித்துள்ளேன்).

காஞ்சியில் விகடசக்கர விநாயகர் எங்கு கோயில் கொண்டுள்ளார்?

கச்சியப்ப சிவாச்சாரியார் தம்முடைய கந்தபுராண நூலினை விகட சக்கர விநாயகரைப் போற்றிப் பணிந்த பின்னரே துவங்குகின்றார்,
-
(விநாயகர் காப்பு - திருப்பாடல் 1)
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

பிரணவ முகத்தினரான இம்மூர்த்தி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுள், இறைவரின் திருச்சன்னிதிக்கு செல்லும் பிரதான வழியில் அல்லாமல், ஆயிரங்கால் மண்டபத்தில்; இறைவர் விழாக்காலத்தில் வெளிவரும் கோபுர வாயிலுக்கு இடப்புறம் எழுந்தருளி இருக்கின்றார். கச்சி ஏகம்பமெனும் இவ்வாலயத்திற்குச் செல்லுகையில் அவசியம் 'விகட சக்கர' விநாயகக் கடவுளைத் தரிசித்துப் பணிந்து நலமெலாம் பெற்று வாழ்வோம்,
-
(விநாயகர் காப்பு - திருப்பாடல் 2)
உச்சியின் மகுட மின்ன ஒளிர்தர நுதலின்ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகம் கொண்டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக்(கு) அன்பு செய்வாம்
-
(சொற்பொருள்: நுதலின் ஓடை - நெற்றிப் பட்டம், மருப்பு - தந்தம், கிம்புரி - தந்தத்தின் பூண், தூங்க - அசைய)

ஸ்காந்த புராணத்திலிருந்து தோன்றிய கந்த புராணம்:

காஞ்சீபுரத்தில் 10ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில், ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவர் குமாரக் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளாலேயே 'திகட சக்கரம்' என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்று, வேத வியாசர் வடமொழியில் அருளியிருந்த ஸ்காந்த புராணத்தின் சிவரகசிய கண்டத்தினைத் தமிழ் மொழியில் கந்தபுராணத் திருப்பாடல்களாய் இயற்றித் தந்த உத்தம சீலராவார். இனி இக்குறிப்புகளுக்கான அகச் சான்றுகளைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்களின் வாயிலாகவே உணர்ந்து மகிழ்வோம், 

பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், 'முன்னர் வேத வியாசர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ஆறுமுக தெய்வத்தின் வரலாற்றை அறிந்து, அதனைத் தென்மொழியான தமிழில் இச்சிறியேன் உரைக்க முனைந்துள்ளேன்' என்று குறிக்கின்றார் (முனி - வேத வியாசர், தெரீஇ - தெரிந்து) , 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 3):
முன்சொல்கின்ற முனி வடநூல் தெரீஇத்
தென்சொலால் சிறியேன்உரை செய்தலால் 
மென் சொலேனும் வெளிற்றுரையேனும் வீண்
புன்சொலேனும் இகழார் புலமையோர்

பின்வரும் திருப்பாடலில், 'முன்னர் சிவபரம்பொருள் புராண நிகழ்வுகள் யாவையும் திருநந்திதேவருக்கு உபதேசிக்க, அவர் அதனை சனற்குமாரருக்கு உரைக்க, சனற்குமாரர் மூலம் அவைகளை அறியப் பெறும் வேத வியாசர் அவைகளைப் பதினெண் புராணங்களாக இயற்றியளித்து சூத முனிவரிடம் உபதேசிக்க, சூத முனிவர் வாயிலாக யாவருக்கும் உபதேசிக்கப் பெற்றுள்ளவையே இப்புராணங்கள்' என்று ஸ்காந்த புராண மூலத்தினைப் பதிவு செய்கின்றார் ('மூவாறு தொல்கதை' - பதினெண்  புராணங்கள், 'வாதராயண முனி' -  வேத வியாசர்). 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 8):
நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக்
கோதிலாதுணர் சனற்குமரன் கூறிட
வாதராயண முனி வகுப்ப ஓர்ந்துணர்
சூதன் ஓதியது மூவாறு தொல்கதை

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில், 'ஸ்காந்தமாகிய பெருங்கடலுள், சிவபெருமானின் திருநெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுக தெய்வம் வெளிப்பட்ட நிகழ்விலிருந்துத் துவங்கி, சூர சம்ஹாரம் முதலிய முக்கிய நிகழ்வுகளை இப்புராணத்தில் கூறவுள்ளேன்' என்று மேலும் விவரிக்கின்றார் (காந்தம் - ஸ்காந்தம்),
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 14):
காந்தமாகிய பெருங் கடலுள் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல் வந்தவுணர்கள் யாரும் அவ்வழி
மாய்ந்திட அடர்த்தது மற்றும் கூறுகேன்

இறுதியாய்ப் பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், வடமொழியில் சூதமுனிவர் முன்பு உபதேசித்த ஸ்காந்த புராணத்தினை ('முன்பு சூதன் மொழி வடநூல் கதை'), சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழியில் கூறுகின்றேன் ('பின்பு யான் தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்') என்று மீண்டுமொரு முறை ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி, கந்தபுராணத்தின் மூலமான ஸ்காந்த புராணத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 16):
முன்பு சூதன் மொழிவட நூல்கதை
பின்பு யான்தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்
என்பயன்எனில் இன்தமிழ்த் தேசிகர்
நன்புலத்தவை காட்டு நயப்பினால்

வேத வியாசரின் அவதார நோக்கம் (கந்த புராண விளக்கங்கள்):

திருக்கயிலையிலுள்ள சிவபரம்பொருளின் திருச்சபையில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்; நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகாவிஷ்ணு முதலியோர் கூடியிருக்கின்றனர். தேவர்கள் முக்கண் முதல்வரிடம், 'நிலவுகிலுள்ளோர் யாவரும் தாம் அருளியுள்ள மறைகளுக்குத் தத்தமது விருப்பம் போல் பொருள் கற்பித்துக் கொண்டு, அற நெறியிலிருந்து பிறழ்ந்து வருகின்றனர்' என்று முறையிட்டுப் பணிகின்றனர்.   

நான்மறை நாயகரான சிவமூர்த்தி ஸ்ரீமகாவிஷ்ணுவிடம், 'காதலுடன் காத்தல் தொழிலைப் புரிந்து வரும் பரந்தாமா!, உம்முடைய குற்றமற்ற கலைகளில் ஓர் அம்சத்தைக் கொண்டு நிலவுலகில் வியாச முனியாகத் தோன்றுவீராக' என்று அருளிச் செய்கின்றார், 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 32)
காதலின் அருளுமுன் கலையின் பன்மையில் 
கோதறும் ஓர்கலை கொண்டு நேமிசூழ்
மேதினி அதனிடை வியாதன் என்றிடு
போதக முனியெனப் போந்து வைகுதி

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'அவ்வாறு வியாசனாய்த் தோன்றிய பின்னர், நாமருளிய மறைகளை ஆய்ந்தறிந்து அதனை நான்காகப் பகுத்து நிலவுலகிலுள்ளோர் அகஇருளை நீக்குவீராகுக, 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 33)
போந்தவண் இருந்தபின் புகரிலா மறை
ஆய்ந்திடின் வந்திடும் அவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபினோர்க்கெலாம்
ஈந்தனை அவர்அகத்திருளை நீத்தியால்

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'துன்பங்களைப் போக்கிடும் பதினெண் வகைப் புராணங்களை நாம் முன்னமே நந்தி அறியுமாறு கூறியுள்ளோம்', 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 36)
என்பெயர் அதற்கெனில் இனிது தேர்ந்துளோர்
துன்பம் அதகற்றிடும் தொல் புராணமாம்
ஒன்பதிற்றிருவகை உண்டவற்றினை
அன்புடை நந்திமுன்அறியக் கூறினேம்

சிவபெருமான் மேலும் தொடர்கின்றார், 'நந்தி அப்புராணங்களை சனற்குமாரருக்கு கூறினான், நிலவுலகில் வியாசனாய்த் தோன்றிய பின்னர் சனற்குமாரரிடமிருந்து அவைகளை அறிந்து கொள்வீராகுக', 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 37)
ஆதியில் நந்திபால் அளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையும் கருணையால் அவன்
கோதற உணர் சனற்குமாரற்கீந்தனன்
நீதியொடவனிடை நிலத்தில் கேட்டியால்

ஆக, 'பராசர மகரிஷியின் திருக்குமாரராகத் தோன்றிய வேத வியாசரின் பிரதான அவதார நோக்கங்கள் இரண்டு' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார், 

1. ஒவ்வொரு துவாபர யுக துவக்கத்திலும் தோன்றி, அது வரையிலும் ஒரே தொகுப்பாக விளங்கி வந்துள்ள வேதங்களை, 'ரிக், யஜூர், சாம, அதர்வணம்' என்று நான்மறைகளாக பகுத்தளிப்பது,

2. ஆதியில் சிவபெருமான் அருளியுள்ள பதினெண் புராணங்களையும் சனற்குமாரரிடமிருந்துக் கேட்டறிந்து அதனைச் சுலோக வடிவமாக்கி நமக்களித்தல், 

இவை நீங்கலாக, பிரம்ம சூத்திரம், 5ஆவது வேதமெனப் போற்றப் பெறும் மகாபாரத இதிகாசம் ஆகியவைகளையும் வடமொழியில் இயற்றி அருளியுள்ளார் வேத வியாசர்.

பதினெண் புராணங்களில் சைவ; வைணவ புராணங்களின் எண்ணிக்கை என்ன? (கந்த புராண விளக்கங்கள்):

வேத வியாசர் பதினெண் புராணங்களை வடமொழியில் இயற்றி அவைகளை சூத முனிவருக்கு உபதேசிக்கின்றார். ஆதலின் ஒவ்வொரு புராணத்தின் துவக்கமும், சூத முனிவர் நைமிசாரண்ய ஷேத்திரத்தில் குழுமியிருக்கும் எண்ணிறந்த முனிவர்களுக்கு அப்புராண நிகழ்வுகளை விவரிப்பதாகவே அமைந்திருக்கும். இனி இப்புராணங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பெற்றுள்ளன என்று நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'சிவபரம்பொருளுக்கென 10 புராணங்களும், ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கென 4 புராணங்களும், நான்முகக் கடவுளான பிரமனுக்கு 2 புராணங்களும், சூரிய தேவன் மற்றும் அக்கினி தேவனுக்கு ஓரோர் புராணமுமாய் மொத்தம் 18 புராணங்கள்' என்று பட்டியலிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் (அலரி - சூரிய தேவன், அங்கி - அக்கினி தேவன்),
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 53)
நம்பனார்க்கு ஒருபது நாரணற்கு நான்கு 
அம்புயத்தவற்கு இரண்டு அலரிஅங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக்கு ஓரொன்று என்பரால்
இம்பரில் இசைக்கும் அப்புராணத்து எல்லையே

பின்வரும் திருப்பாடலில் 12 புராணங்களை வகைப்படுத்தித் தொகுக்கின்றார், 
-
(சைவம் பேணும் சிவசம்பந்தமான புராணங்களின் வரிசை): 
1. சிவ புராணம் 
2. பவிஷ்ய புராணம் 
3. மார்க்கண்டேய புராணம் 
4. இலிங்க புராணம் 
5. ஸ்காந்த புராணம் 
6. வராக புராணம் 
7. வாமன புராணம் 
8. மத்சய புராணம் 
9. கூர்ம புராணம் 
10. பிரமாண்ட புராணம் 
-
(நான்முகக் கடவுளுக்கான புராணங்களின் வரிசை) :
11. பிரம்ம புராணம் 
12. பத்ம புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 54)
எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்டம் இலிங்கம்
மதிகொள் காந்த நல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவை சிவபுராணம்
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம்
*
பின்வரும் திருப்பாடலில் மீதமுள்ள 6 புராணங்களை வகைப்படுத்துகின்றார், 
-
(ஸ்ரீமன் நாராயணருக்கான புராணங்களின் வரிசை):
13. கருட புராணம் 
14. நாரத புராணம் 
15. ஸ்ரீவிஷ்ணு புராணம் 
16. ஸ்ரீமத் பாகவத புராணம் 
-
(அக்கினி தேவனுக்கான புராணம்):
17. ஆக்கினேய புராணம் 
-
(சூரிய தேவனுக்கான புராணம்):
18. பிரம்ம வைவார்த புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 55)
கருது காருடம் நாரதம் விண்டு பாகவதம்
அரிகதைப் பெயர் ஆக்கினேயம் அழல் கதையாம்
இரவி தன்கதை பிரமகைவர்த்தமாம் இவைதாம்
தெரியும் ஒன்பதிற்றிருவகைப் புராணமாம் திறனே

விநாயகப் பெருமானின் தோற்றம் (கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

(1)
திருக்கயிலையில், சோலையொன்றில் அமைந்துள்ள ஓவிய மண்டபத்திற்குச் சிவபெருமானும் அம்பிகையும் எழுந்தருளிச் செல்கின்றனர். அங்குள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றையும் உமையன்னை பார்த்தவாறு, நடந்து செல்கின்றாள். 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 141)
எண்தகு பெருநசை எய்தி ஐம்புலன்
விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
கண்டனள் கவுரி அக்கடிகொள் மண்டபம் 
கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே

(2)
பிரணவ மந்திரம் பொறிக்கப் பெற்றிருக்கும் ஓவியமொன்றினை அம்பிகை பார்த்திருக்கையில், சிவபரம்பொருளின் திருவருளால், மூலத்தனி எழுத்தான அப்பிரணவமானது இரு யானைகளின் வடிவுகொண்டு சங்கமிக்கின்றது, 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 142)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதியாகியே
ஓங்கிய தனியெழுத்(து) ஒன்றிரண்டதாய்த்
தூங்கு கைம்மலைகளில் தோன்றிற்றென்பவே

(3)
அக்கணத்திலேயே அப்பிரணவத்திலிருந்து, மூன்று திருக்கண்களோடும், ஐந்து திருக்கரங்களோடும், மும்மதங்கள் பொழியும் திருவாயுடனும், யானையின் திருமுகத்துடனும், சிறுவனின் திருவுருவில் நம் விநாயகப் பெருமான் தோன்றி வெளிப்படுகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 148)
அக்கணத்தாயிடை ஐங்கரத்தவன் அருள்
முக்கண் நால்வாயினான் மும்மதத்தாறு பாய்
மைக்கரும் களிறெனும் மாமுகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன் வந்தருளினான்

(4)
அந்நிலையில் தோன்றிய விக்னேஸ்வர மூர்த்தி, ஒருமுகப்பட்ட உணர்வினரால் மட்டுமே அறிந்துணர்தற்குரிய பெற்றியை உடையவர், எங்கும் யாவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையர், யாவராலும் தொழப்பெறும் பொன்போலும் திருவடிகளைக் கொண்டருள்பவர், சிவபெருமானே என்று கருதத்தக்க வகையில் திருவருள் புரிந்தருளும் அளப்பரிய பெருமையை உடையவர், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 149)
ஒருமையால் உணருவோர் உணர்வினுக்(கு) உணர்வதாம்
பெருமையால் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
அருமையால் ஏவரும் அடிதொழும் தன்மையான்
இருமையாம் ஈசனே என்ன நின்றருளுவான்

(5)
நான்மறைகளில் போற்றப்பெறும் மெய்ப்பொருளான சிவபரம்பொருள், அண்டசராசரங்களிலுள்ள உயிர்களின் அறியாமை இருளைப் போக்கியருளும் பொருட்டும், அவர்தம் இடர்களைக் களைந்தருளும் பொருட்டும், தாமே ஒரு திருவடிவு கொண்டு தோன்றிய மூர்த்தியே நம் விநாயகக் கடவுளாவார் (சிவபரம்பொருளுக்கும், விநாயகப் பெருமானுக்கும் பேதமின்மையைப் பறைசாற்றும் அற்புதத் திருப்பாடலிது). 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 150)
மருளறப் புகலு(ம்) நான்மறைகளில் திகழுமெய்ப்
பொருளெனப்படும்அவன் புவனமுற்றவர்கள் தம்
இருளறுத்(து)அவர் மனத்திடர் தவிர்த்தருள ஓர்
அருள் உருத்தனை எடுத்(து) அவதரித்துளன் அவன்

திருச்செங்காட்டங்குடி உருவான வரலாறு (கந்தபுராண நுட்பங்கள்):

நாகப்பட்டின மாவட்டத்தில், காவிரித் தென்கரையில், திருவாரூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் திருமருகலிலிருந்து 3 கி.மீ தூரத்திலும், திருப்புகலூரிலிருந்து 4 1/2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது 'திருச்செங்காட்டங்குடி' எனும் திருத்தலம், 'கணபதீஸ்வரம்' எனும் திருப்பெயரும் இதற்குண்டு. ஞானசம்பந்த மூர்த்தி மற்றும் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. இறைவர் உத்தராபதீஸ்வரர்; கணபதீஸ்வரர் எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார்.  

சிறுத்தொண்ட நாயனாரின் அவதாரத் தலமாகவும், முத்தித் தலமாகவும் திகழ்வது. 'இத்தலத்து இறைவர் பைரவ வேடத்தில் எழுந்தருளி வந்து, சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்டுப் பேரருள் புரிந்துள்ள நிகழ்வு' யாவரும் அறிந்தவொன்றே. இனி இத்திருத்தலம் உருவான வரலாற்றினை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்து மகிழ்வோம்.

பிரணவ முக இறைவனான நம் விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் எனும் அசுரனொருவனைச் சம்ஹாரம் புரிந்தருள, அவ்வசுரனின் உடலிலிருந்து புறப்பட்ட குருதியானது அருகிலிருந்த காடொன்றில் முழுவதுமாய் நிறைய, அப்பகுதி அதுமுதல் செங்காடு என்று வழங்கப் பெறுவதாயிற்று. 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 250)
ஏடவிழ் அலங்கல் திண்தோள் இபமுகத்து அவுணன் மார்பில் 
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர் பெற்றின்னும் காண்தக இருந்ததம்மா
-
(சொற்பொருள்: நீத்தம் - வெள்ளம், கான் - காடு, செய்ய காடு - செங்காடு)

பின்னர் விக்னேஸ்வர மூர்த்தி அச்செங்காட்டில் சிவலிங்கத் திருமேனியொன்றினைப் பிரதிஷ்டை செய்து, திருவுள்ளம் குழைந்துப் பெரும் அன்பு மீதூர ஆதிப்பரம்பொருளைப் பூசித்துப் பணிகின்றார். அதுமுதல் அத்தலம் 'கணபதீஸ்வரம்' என்றும் போற்றப் பெற்று, இன்றும் நம்மால் தரிசித்து மகிழக்கூடிய தன்மையில் சிறப்புடன் விளங்கி வருகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 264)
மீண்டு செங்காட்டில் ஓர்சார் மேவி மெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தாபித்தேத்திப்
பூண்ட பேரன்பில் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதீச்சரம் அதென்பார்
-
(சொற்பொருள்: தாபித்தத்தி - ஸ்தாபித்து ஏத்தி; பிரதிஷ்டை செய்து போற்றி)

பின்னாளில் சிறுத்தொண்ட நாயனார் பல்லவ மன்னனொருவனுக்காக, வடதேசத்திலுள்ள வாதாபி சென்று, அங்குக் கோலோச்சியிருந்த சாளுக்கிய மன்னரை வென்று, அங்கிருந்து கொணர்ந்த விநாயகப் பெருமானின் திருமேனியை இத்திருத்தலத்தில் 'வாதாபி கணபதி' எனும் திருநாமத்தில் எழுந்தருளச் செய்ததாக வரலாற்றுச் செய்தியொன்று உண்டு (எனினும் பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் 'சிறுத்தொண்ட நாயனார் இவ்விதம் பிரதிஷ்டை செய்ததாக' குறிக்கவில்லை). எதுவாயினும், இதற்கெல்லாம் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே, 'இத்திருத்தலம் உருவாவதற்கே நம் விநாயகப் பெருமான் தான் மூலகாரணர்' என்பதனை கச்சியப்ப சிவாச்சாரியார் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுறுத்தியுள்ளார்.

விண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்த காவிரி (தவறான திரைக்கதையும், உண்மை நிகழ்வும் - கந்தபுராண விளக்கங்கள்):

1972ஆம் வருடம் வெளிவந்த 'அகத்தியர்' திரைப்படத்தில், தன்னைப் பரிகசித்துப் பேசிய காவிரி தேவியை அகத்தியர் கமண்டலத்தில் அடைப்பதாகவும், பின்னர் காக்கையின் வடிவில் தோன்றும் விநாயகப் பெருமானால் அந்நதி வெளிப்படுவதாகவும் காட்சி அமைக்கப் பெற்றிருக்கும். இந்நிகழ்வுகளுள் விநாயக மூர்த்தியால் காவிரி வெளிப்பட்டது மட்டுமே உண்மை வரலாறு, அதற்கு முந்தைய நிகழ்வுகள் யாவும் திரைக்கதை சுவாரஸ்யத்திற்காகப் புனையப் பெற்றவையே. இனி இந்நிகழ்வுகள் குறித்த மெய்மையான வரலாற்றினை கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

அகத்திய மாமுனி சிவபரம்பொருளின் கட்டளைப்படி தென்திசை நோக்கிப் பயணித்துச் செல்லுகையில், தேவர்கள் 'விந்திய மலையின் ஆணவத்தை அடக்கி அருள் புரியுமாறு' அகத்தியரை வேண்டிப் பணிகின்றனர். குறுமுனியும் இதுகுறித்துச் சிவபெருமானின் திருவருளை வேண்டித் தொழ, முக்கண் முதல்வர் திருக்காட்சி அளித்து ஆசி கூறியருள் புரிகின்றார். அச்சமயத்தில் 'தென்திசையில் அனுஷ்டானம் மற்றும் வழிபாடு புரிதற் பொருட்டு தீர்த்தமொன்றினைத் தந்தருள வேண்டும்' என்று அகத்தியர் விண்ணப்பிக்க, சிவமூர்த்தி காவிரி தேவியை அகத்தியருடன் செல்லுமாறு கட்டளையிட்டு அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
தீது நீங்கிய தென் திசைக்கு ஏகிய
கோதிலாத குறுமுனி தன்னொடும்
போதல் வேண்டும் பொருபுனல் காவிரி
மாது நீஎன மற்றவள் கூறுவாள்

பின்னர் சிவபெருமான் அகத்தியரிடம், 'இனி இக்காவிரியை உன்னுடைய கமண்டலத்தில் நிறைத்துச் செல்வாய்' என்று அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
நீடு காவிரி நீத்தத்தை நீ இனிக்
கோடி உன் பெரும் குண்டிகைப் பால்என
நாடி அத்திறம் செய்தலும் நன்முனி
மாடு சேர்ந்தனள் மாநதி என்பவே
-
மேற்குறித்துள்ள திருப்பாடல்களால் 'அகத்திய மாமுனி தென்திசைக்கு வருவதன் முன்னமே காவிரி நதியானது அவருடைய கமண்டலத்தில் விளங்கியிருந்தது' என்பதும், 'காவிரி தேவி பரிகசித்து அகத்தியர் கமண்டலத்தில் அடைத்ததாகக் கூறுவது புனைந்துரையே' என்பதும் தெளிவாகின்றது. 

பின்னர் அகத்தியர் வில்லவன் வாதாபி எனும் அசுரர்களை அழித்தொழித்து அதிலுண்டான தோஷ நிவர்த்திக்காக கொங்கு தேசத்தில் சிவவழிபாடு புரிந்து வருகின்றார். சரி நம் விநாயகப் பெருமான் இந்நிகழ்விற்குள் எங்கு வருகின்றார் எனில், சூரபன்மனின் கொடுமையினால் இந்திரன் சீர்காழித் தலத்தில் மறைந்து வாழ்ந்து வருகின்றான்; சிவவழிபாட்டிற்குப் போதுமான நீர்நிலைகள் இல்லையாதலின், நாரதரின் உபாயப்படி விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்துப் பணிகின்றான்.

இந்திரனின் முன் தோன்றும் வேழ முகத்து இறைவரான கணபதி, இந்திரனின் வேண்டுகோளினை ஏற்றுக் காவிரியை இந்நிலப்பிறப்பில் பாயுமாறு செய்வதாக அருள் புரிகின்றார்.  
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அன்னவன் தனது மாட்டோர் அணி கமண்டலத்தினூடே
பொன்னி என்றுரைக்கும் தீர்த்தம் பொருந்தியே இருந்ததெந்தாய்
நன்னதி அதனை நீபோய் ஞாலமேல் கவிழ்த்து விட்டால்
இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீருமென்றான்

காக்கை வடிவில் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்துக் காவிரியை வெளிப்படச் செய்கின்றார். பின்னர் சிறுவனொருவனின் வடிவில் தோன்றி, கோபத்துடன் விரட்டி வரும் அகத்தியருக்கு அங்குமிங்கும் போக்குக் காட்டித் திருவிளையாடல் புரிந்துப் பின்னர் தன் சுய திருக்கோலத்தைக் காட்டியருள் புரிகின்றார். அகத்தியர் தன் தவுறுணர்ந்துத் தன் கரங்களாலேயே தலையில் குட்டிக் கொண்டு, தாரகப் பிரம்மமான விநாயகப் பெருமானிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் பணிகின்றார், யானை முக வள்ளலும் 'வருந்தற்க' என்று அருள் புரிகின்றார்,
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
சிந்தனை புரிந்தேன் யாதும் தெளிவிலேன் அதற்குத் தீர்வு
முந்தினன் இயற்றுகின்றேன் என்றலும் முறுவல் செய்து
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி என்றான்

காசியில் மரணிக்கும் ஆன்மாக்களுக்குச் சிவபெருமான் எந்த மந்திரத்தை உபதேசித்து முத்தியளிக்கின்றார்? (கந்தபுராண விளக்கங்கள்):

காசியில் மரணிக்கும் ஆன்மாக்களுக்கு ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் மந்திர உபதேசம் புரிந்துப் பின் முத்திப் பேற்றினையும் அளித்தருள்வதாகப் பொதுவில் கேள்வியுற்றிருப்போம். எனில் 'சிவமூர்த்தி எந்த மந்திரத்தை உபதேசம் செய்கின்றார்?' என்பதற்கான விடையை நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம்,

முதல் திருப்பாடல் 'திருக்கயிலையில் முருகப் பெருமான் பிரமனிடம் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டுச் சோதிக்கும்' நிகழ்வு தொடர்பானது. அச்சமயத்தில் பிரமன் அச்சத்துடன் 'சிவபெருமான் எழுந்தருளும் பீடமாய் விளங்குவதும், எழுத்துக்கள் மற்றும் நால்வேதங்களுக்கும் முதன்மையாகத் திகழ்வதும், காசி ஷேத்திரத்தில் மரணிக்கும் ஆன்மாக்களுக்கு சிவமூர்த்தி உபதேசிப்பதுமான பிரணவத்தின் பொருள் யாதென்று?' சிந்தித்துத் திகைப்பதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். ஆதலின் 'சிவபெருமான் காசியில் பிரணவ மந்திர உபதேசம் புரிகின்றார்' என்பது இதனால் புலனாகின்றது, 
-
(உற்பத்தி காண்டம் - அயனைச் சிறைபுரி படலம்):
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய் எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க்கு எம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான்

இரண்டாவதாக, 'அகத்தியர் வடதிசையிலிருந்து தென்திசைக்கு வரும் வழியில் காசித் தலத்தையும் தரிசிக்கும் நிகழ்வினை' விவரிக்கும் பின்வரும் திருப்பாடலில், 'காசியில் அந்தமடைவோருக்குச் சிவபெருமான் தனது மூல மந்திரத்தை உபதேசம் செய்தருள்வதாக' கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் ('அந்தமது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால் தனது மூல மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்'). ஆதலின் கீழ்க்குறித்துள்ள திருப்பாடலே, 'சிவபெருமான் காசியில் சிவ பஞ்சாக்ஷர உபதேசமும் புரிகின்றார்' என்பதற்கான பிரமாணம்,
-
(அசுர காண்டம் - விந்தம் பிலம்புகு படலம்)
பைந்தமிழ் முனிவன் வான்தோய் பனிவரையதனை நீங்கிக்
கந்தரம் செறி பொற்கோட்டுக் கடவுளர் வரைச்சார்எய்தி
அந்தமது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால் தனது மூல
மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்

சிவபெருமானுக்கு நீலகண்டம் தோன்றியது எவ்வாறு? (தவறான புரிதல்களும், முறையான கந்தபுராண விளக்கங்களும்)

சிவபரம்பொருள், பிரமன் உள்ளிட்ட தேவர்களையும், மற்றுள்ளோர் யாவரையும் காத்தருளும் பொருட்டு, பாற்கடலில் கிளர்ந்தெழுந்த ஆலகால விடத்தினை உண்ட நிகழ்வு அனைவரும் அறிந்ததே. இனி இந்நிகழ்வு தொடர்பாக வழங்கி வரும் ஒரு உப செய்தியையும் காண்போம், 'அந்நஞ்சு உட்சென்றால் இறைவருள் விளங்கியிருக்கும் அண்டசராசரங்களும் அழிவுறுமே' என்று உமையன்னை கருதியதாகவும், இறைவரின் திருக்கழுத்தினைத் தன் திருக்கரங்களால் பற்றி அவ்விடத்தினைக் கண்டத்திலேயே நிலைபெறச் செய்ததாகவும்' நிலவி வரும் இச்செய்தி குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,    

சிவமூர்த்தி அனைவரையும் காத்தருளவே நஞ்சினை உட்கொண்டுள்ளார், எனில் 'தன் திருமேனியுள் நஞ்சு சென்றால் அண்டசராசரங்களும் அழிவுறும்' என்றொரு தன்மை இருப்பின், அது இறைவற்கு அறியாதவொன்றாக எவ்விதம் இருந்திருக்க இயலும்?. இவ்விளக்கம் பரம்பொருள் இலக்கணத்திற்கு ஒருசிறிதும் ஒவ்வாததன்றோ?. மற்றொரு கோணம், இறைவனின் சங்கல்ப சக்தியினால் மட்டுமே ஒரு நிகழ்வின் பயன் அமையுமேயன்றிப் பிறிதொன்றால் அன்று (பின்னாளில் நம் நாவுக்கரசு சுவாமிகளுக்குச் சமணர்களால் அளிக்கப் பெறும் நஞ்சு, சிவமூர்த்தியின் திருவுள்ளச் சங்கல்பத்தினால் அமுதமென நலம் பயந்த நிகழ்வினை உய்த்துணர்க). 

இனி நடந்தேறிய மெய்மையான நிகழ்வினைக் கச்சியப்பரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக அறிந்துணர்வோம், 

சிவமூர்த்தி தேவர்களிடம், 'இக்கொடிய நஞ்சினை நாம் உட்கொள்ளவோ? அல்லது இதன் தன்மையினை நலிவுறச் செய்துப் பிறிதொரு இடத்தில் எறிந்திடவோ?' என்று கேட்டருள்கின்றார், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 355)
காளக உருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார்

அங்குள்ளோர் யாவரும், 'ஆதியும் அந்தமுமற்ற இறைவரே, பாற்கடல் கடைகையில் தோன்றிய முதல் விளைச்சலாகிய இந்த நஞ்சானது முழுமுதற் பொருளாகிய உமக்கு உரித்தானதன்றோ, ஆதலின் அடியவர்களாகிய நாங்கள் உய்யும் பொருட்டு இதனைத் தாமே அமுது செய்தருள வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர். முக்கண் முதல்வரும், 'அஞ்சேல்' என்று அபயமளித்து அருள் புரிகின்றார், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 357)
முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாகமெல்லாம்
விடமதே எனினுமாக வேண்டுதும் இதனை வல்லே
அடியரேம் உய்யுமாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனி நீரென்றான்

இறைவர் நஞ்சினை அமுது செய்கையில், அது இறைவரின் திருக்கண்டம் வழியே செல்வதை யாவரும் காண்கின்றனர். உடன் பிரமன், 'ஐயனே! இன்று எங்கள் யாவரையும் தாங்கள் காத்தருளிய தன்மைக்குச் சான்றாக, 'இந்த நஞ்சினைத் தங்கள் திருக்கண்டத்திலேயே நின்று நிலைபெறச் செய்தல் வேண்டும்' என்று தொழுதேத்துகின்றனர், 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 358)
என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட்கொள்ளச்
சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
இன்றெமதுயிர் நீ காத்தற்கிங்கிது சான்றாய் அங்கண்
நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார்

கருணைப் பெருவெள்ளமான சிவபெருமானும் 'அவ்வண்ணமே ஆகுக' என்றருளி, நீல மணியென அவ்விடம் தம்முடைய கண்டத்தில் விளங்குமாறு செய்தருள்கின்றார். அது கண்டு தேவர்களும் மற்றுள்ளோரும், 'இன்றே யாம் மீண்டும் பிறந்து உய்வு பெற்றோம்' என்று சிவபெருமானைப் போற்றி செய்து பணிகின்றனர். 
-
(தக்ஷ காண்டம் - ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 359)
போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணியதென்ன
மாற்றரும் தகைமைத்தான வல்விடம் நிறுவி அன்னார்க்கு 
ஏற்ற நல்லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
தோற்றினராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார்

ஆலகால விடத்தைக் கையிலெடுத்துக் கொணர்ந்த ஆலால சுந்தரர் (கந்தபுராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

'நம் சுந்தரனார், பாற்கடல் கடையும் நிகழ்வு சமயத்தில் வெளிப்பட்டெழுந்த ஆலகால விடத்தை, சிவபெருமானின் ஆணையினால், தம்முடைய கரங்களில் ஏந்திக் கொணர்ந்து சிவமூர்த்தியிடம் அளித்ததாக' பல்வேறு ஆன்மீக விரிவுரைகளிலும், வலைத்தளங்களிலும், முகநூல் பதிவுகளிலும் கேட்டும் படித்துமிருப்போம். 

எனினும் பெரியபுராணமோ சுந்தரரின் வரலாற்றினை, 'ஆலால சுந்தரர் திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வருகின்றார்' எனும் இடத்திலிருந்தே விவரிக்கத் துவங்குகின்றது. எனில், 'மேற்குறித்துள்ள நிகழ்விற்கு அகச்சான்றுகள் தான் என்ன?' என்று பெரிதும் ஏங்கித் தவித்திருப்போருக்குத் தம்முடைய தேனினும் இனிய கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக நம் கச்சியப்ப சிவாச்சாரியார் விடை பகர்கின்றார், 

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலின் இறுதி இரு வரிகளில் சிவபரம்பொருள் தம்மருகே நின்றிருக்கும் அணுக்கத் தொண்டரான நம் சுந்தரரைப் பார்த்து, 'அக்கொடிய விடத்தை இவ்விடத்தே கொண்டு வருக' என்று பணித்து அருள் புரிகின்றார், 
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 353)
வண்டமர் குழலெம் அன்னை மற்றிவை இசைத்தலோடும்
அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியம் கடவுள் தன்பால்
தொண்டு செய்தொழுகுகின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
கொண்டிவண் வருதியால் அக்கொடுவிடம் தன்னை என்றான்

நம் சுந்தரனார், முப்பத்து முக்கோடி தேவர்களையும் தகித்துப் பதற வைத்த, இன்னதென்று கூற இயலாத தன்மையில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்ப் பெருகியிருந்த அக்கொடிய ஆலகால விடத்தைத் திருவருளின் துணை கொண்டு, தம்முடைய கரங்களில் சிறு நாவல்பழம் போலும் திரட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் அளித்துப் பணிகின்றார்,  
-
(தக்ஷ காண்டம்: ததீசி உத்தரப் படலம் - திருப்பாடல் 354)
என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டும் 
துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடு வந்துய்ப்ப
ஒன்றொரு திவலையே போல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான்

ஆலகால விடத்தை ஏந்திக் கொணர்ந்த காரணத்தால் அதுமுதல் 'ஆலால சுந்தரர்' எனும் திருநாமத்தாலும் நம் சுந்தரனார் குறிக்கப் பெற்று வருகின்றார் (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!

திருக்கயிலையில் நடந்தேறிய சூதாட்ட நிகழ்வும், ஆலால சுந்தரரும் (கந்தபுராணம் விவரிக்கும் அரியதொரு நிகழ்வு):

திருக்கயிலையில் ஆதிப்பரம்பொருளான சிவமூர்த்தி திருவிளையாடல் ஒன்றினைப் புரிந்தருளும் திருவுள்ளக் குறிப்புடன் உமையன்னையை நோக்கி, 'நீ நம்முடன் சூதாட்டம் விளையாடுவாயாக, நீ தோல்வியுற்றால் உன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் நீ தந்திடல் வேண்டும், நாம் தோற்பின் நம் முடியிலுள்ள பிறைச் சந்திரன் உள்ளிட்ட ஆபரணங்கள் யாவையும் உனக்குத் தருவோம்' என்றருளிச் செய்கின்றார் (திருமேனி எங்கிலும் அலங்கரிக்கும் நாகாபரணங்களையே தம்முடைய அணிகலன்கள் என்று இறைவர் குறிக்கின்றார் போலும்).   
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 161)
சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
பாதியாம் சசிமுதல் பலவும் கோடியால்

உலகீன்ற உமையவளும் இறைவரின் கருத்திற்கு இசைவு தெரிவிக்க, முக்கண் முதல்வரும் அச்சமயத்தில் அருகிருந்த வைகுந்த வாசனாரை நோக்கி 'பரந்தாமா! இவ்விளையாட்டிற்குச் சாட்சியாக பொருத்தமுற விளங்கியிருப்பாய்' என்று நியமிக்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 162)
என்னலும் உமையவள் இசைவு கோடலும்
அன்னதொர் எல்லையில் அரியை நோக்கியே
தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
மன்னினை இருத்தியான் மாயநீ என்றான்

இத்திருவிளையாடலைத் தொடர்ந்து விரிவாகக் காண்பது இப்பதிவின் நோக்கமன்று, 'இந்நிகழ்வினில் நம் தலைவரான ஆலால சுந்தரர் இடம்பெறுகின்ற சுவையான குறிப்பொன்றினை வெளிக்கொணரவே' இப்பதிவு. 

பின்வரும் திருப்பாடலில் 'சுந்தரர் முதலாகவுள்ள அணுக்கத் தொண்டு புரிந்து வருவோர், சிவபெருமானின் கட்டளையினைச் சிரமேற் கொண்டு, அங்கு பலகைகள் உள்ளிட்ட சூதாடு கருவிகளை முறைப்படி கொணர்ந்து வைக்கின்றனர்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார்  பதிவு செய்கின்றார். 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம்  - திருப்பாடல் 183)
இந்தவாறாயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தமில் பெருங்குணத்து ஆதி ஏவலில்
தந்தனர் காசொடு பலகை தன்னையே

பொதுவில் பெரிய புராண நிகழ்வுகளின் மூலமாக மட்டுமே 'சுந்தரரின் ஏற்றமிகு சிறப்பினை' அறிந்துணர்ந்து மகிழ்ந்திருக்கும் அன்பர்களுக்கு, பிற சைவ புராணங்களிலும் திருமுறைகளிலும் நம் சுந்தரர் தொடர்பாக இடம்பெறும் சிறியதொரு குறிப்பும் வியப்பூட்டுவதாகவும், உள்ளத்திற்கு பெரும் இனிமையைக் கூட்டுவதாகவும் விளங்கி வருகின்றது.

கங்கை நதியின் தோற்றம் - அறிந்த செய்திகளும் அறியாத நிகழ்வுகளும் (கந்தபுராண நுட்பங்கள்):

திருக்கயிலையில் ஒரு சமயம் நம் உமையன்னை, இறைவரின் இரு திருக்கண்களையும் தன் திருக்கரங்களால் விளையாட்டாய் மறைக்கின்றாள். அக்கணமே புவனங்கள் யாவிலும் பேரிருள் சூழ்ந்து அனைத்துயிர்களும் அவதியுறுகின்றன. சிவமூர்த்தி உடன் தன் நெற்றிக்கண்ணினால் விழித்து நோக்கி, உலகங்கள் யாவினுக்கும் மீண்டும் ஒளியினை அளித்தருள்கின்றார். 

அம்மை தன் திருக்கரங்களை உடன் விலக்கிக் கொள்ள, அச்சத்தினால் திருக்கை விரல்கள் யாவிலும் வியர்வை தோன்றுகின்றது. அத்தன்மை கண்டு நடுக்கமுறும் அம்மையின் பத்து விரல்களிலிருந்தும் கங்கையெனும் நதியானது புதிதாகத் தோன்றிப் பெருக்கெடுத்துப் பாய்கின்றது,
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 369)
சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை
அங்குலி அவை ஈரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கை அத்தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
கங்கையோர் பத்தாய் யாண்டும் கடல்களில் செறிந்த அன்றே
(சொற்பொருள்: அங்குலி - கைவிரல், வியர்ப்பு - வியர்வை, விதர்ப்ப - நடுங்கிட, செறிந்த - கலந்த)

அத்துடன் நில்லாது அந்நதியானது, ஆயிரம்; கோடி எனும் தன்மையில் பல்வேறு கூறுகளாக எங்கும் பிரவகித்துப் பாய்ந்து யாவற்றையும் சூழ்ந்து கொள்ள துவங்குகின்றது. 'இதென்ன விபரீதம்?' என்று நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் திருக்கயிலையில் சிவபரம்பொருளிடம் சென்று முறையிட்டுக் காத்தருளுமாறு வேண்டுகின்றனர்,

முக்கண் முதல்வர் புவனங்களெங்கிலும் சூழ்ந்திருந்த கங்கையின் பெருவெள்ளக் கூறுகள் யாவையும் தன்முன் வருமாறு அழைத்தருளிப் பின் அதனைத் தன் செஞ்சடையின் உரோமம் ஒன்றிலுள் செல்லுமாறு விடுக்கின்றார்.  
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 372)
என்றலும் நதிகள் தோற்றம் இயம்பி எவ்வுலகும் சூழ்போய்
நின்றவம் நீத்தம் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்பருய்ப்ப
மன்றலம் கமலத்தோனும் மாலும் இந்திரனும் சொல்வார்

தேவர்கள் யாவரும் சிவமூர்த்தியிடம், 'அம்பிகையின் திருவிரல்களில் தோன்றித் தம்முடைய சடாமுடியை அலங்கரிக்கும் பேறு பெற்றுள்ள இப்புனித தீர்த்தத்தினை எங்கள் உலகங்களிலும் சிறிது பாய்வதற்கு அருள வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர்.

வேத முதல்வர் தன் சடையிலிருந்து சிறிதளவு கங்கையை எடுத்து, ஸ்ரீமகாவிஷ்ணு; நான்முகக் கடவுள்; இந்திரன் ஆகிய மூவருக்கும் அளித்தருள, அதுமுதல் அம்மூன்று கூறுகள் 'ஸ்ரீவைகுந்தம்; பிரமலோகம் மற்றும் தேவலோகத்திலும்' பிரவகிக்கத் துவங்குகின்றது,
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 374)
இறையவன் வேணியுள் புக்கிருந்ததோர் கங்கை தன்னில்
சிறுவதை வாங்கி மூவர் செங்கையும் செறிய நல்க
நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம்

அவற்றுள், இந்திரனால் தேவலோகத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்ற கங்கையையே பின்னாளில் பகீரத மன்னன் தன்னுடைய கடும்தவத்தினால், பூமிக்கு வரவழைக்கப் பிரயத்தனம் மேற்கொள்கின்றான். அச்சமயத்திலும் கங்கையின் அச்சிறு கூறின் வேகத்தையும் பூமியால் தாங்கவொண்ணாது எனும் நிலை உருவாக, சிவபெருமான் மீண்டுமொரு முறை கங்கையைத் தன் செஞ்சடையில் தாங்கியருளிப் பின் அவற்றுள் சிறிதளவை மட்டுமே இப்பூமிக்குச் செல்லுமாறு விடுக்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: ததீசி யுத்தரப் படலம் -  திருப்பாடல் 375)
அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
பன்னரும் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
பின்னரும் இமையா முக்கண் பெருந்தகை முடிமேல் தாங்கி
இந்நில வரைப்பில் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான்

கந்தபுராணம் பறைசாற்றும் காஞ்சீபுரத் தலச் சிறப்புகள்:

'முத்திப்பேறு தரவல்ல ஏழு நகரங்களுள் தலையாய சிறப்புடன் விளங்குவது இக்காஞ்சீபுர ஷேத்திரமே' என்று சிவபரம்பொருள் முன்பொரு சமயம் உமையன்னையிடம் அருளிச் செய்ததாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார் (மற்ற ஆறு முத்தி நகரங்கள் - ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதாரத் தலமான அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரத் தலமான மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், அவந்தி எனும் உஜ்ஜைன், வாரணாசி எனும் காசி மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் அரசு புரிந்த துவாரகாபுரி ஷேத்திரம்)    
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 221):
அழகிய அயோத்தி மதுரையே மாயை அவந்திகை காசிநற் காஞ்சி 
விழுமிய துவரையெனப் புவிதன்னில் மேலவாய் வீடருள்கின்ற 
எழுநகரத்துள் சிறந்தது காஞ்சியென்றுமுன் எம்பிரான் உமைக்கு 
மொழிதரு நகர் அந்நகர்எனில் அதற்கு மூவுலகத்து நேருளதோ

(பாவச்செயலென்று அறியாமல்) இக்காஞ்சியில் புரியப் பெறும் ஒரு கோடி பாவங்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்து விடும். மற்றொருபுறம், இந்த ஷேத்திரத்தில் புரியப்பெறும் தர்ம காரியங்களுக்கான நற்பலன்கள் ஒன்றிற்குக் கோடி மடங்காய்ப் பெருகி வரும். இத்தன்மையியினால் எண்ணிறந்த தேவர்களும் முனிவர்களும் தத்தமது வசிப்பிடங்களை நீக்கிக் காஞ்சிப்பதியில் விரும்பித் தங்கியிருந்து, தவமும் சிவாச்சார்ச்சனையும் புரிந்துப் பேறு பெற்றுள்ளார்கள்,  
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 225):
பாவமோர் கோடி புரியினும் ஒன்றாம் பரிவினில் தருமமொன்றியற்றின்
ஏவரும் வியப்பக் கோடியாய் மல்கும் இன்னதோர் பெற்றியை நாடித்
தேவர்கள் முனிவர் தம்பதம் வெறுத்துச் சிவனருச்சனை புரிந்தங்கண்
மேவினர் தவம் செய்திருத்தலால் காஞ்சி வியனகர்ப் பெருமையார் விரிப்பார்

பிரமனின் பிற்பகலான பிரளய காலத்திலும், முற்பகலான சிருஷ்டிக் காலங்களிலும் காஞ்சிபுரம் ஒருசிறிதும் அழிவுறாது விளங்கும், ஆதலின் இத்தலம் பிரம்ம சிருஷ்டியன்று, உமையொரு பாகனாரான சிவபெருமானே உருவாக்கியுள்ள புண்ணிய ஷேத்திரம்,
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 226):
கங்கைதன் சிறுவனருள் பெறு வேதாக் கண்படை கொண்ட காலையினும்
அங்கவன் துஞ்சும் பொழுதினும்  காஞ்சி அழிவுறாதிருந்த பான்மையினால்
துங்கவெண் பிறையும் இதழியும் அரவும் சுராதிபர் முடிகளும்அணிந்த
மங்கையோர் பங்கன் படைத்ததேயன்றி மலரயன் படைத்ததன்றதுவே

உமையன்னையாகிய காமாக்ஷி தேவி இன்னமும் தவம் புரிந்து வரும் இந்த புண்ணிய ஷேத்திரத்தில், இறப்போர்; பிறப்போர்; நிலையாய் வசிப்போர்; நான்மறைகளாகிய மாமர நிழலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிவோர் ஆகிய யாவருக்கும் சிவமுத்தியினை நல்க வல்ல ஷேத்திரம் காஞ்சீபுரம்,
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 232):
இன்னமும் உமையாள் நோற்றிடும் ஆங்கே இறப்பினும் பிறப்பினும் நிலையாய்
மன்னியே உறினும் ஒருகணமேனும் வைகினும் மறைகளாம் தனிமா
நன்னிழலிருந்த பரஞ்சுடர் புரியும் நடம் தரிசிக்கினும் அதனை
உன்னினும் முத்தி வழங்கு காஞ்சியைப் போல் உலகில் வேறொரு நகருளதோ

பாரத தேசமெங்கிலும் முத்தி தரவல்ல 108 ஆலயங்களுள், 20 சிவாலயங்கள் இக்காஞ்சியிலேயே அமையப்பெற்றுள்ளன. அவை முறையே கச்சபேசம், ஏகம்பம், கச்சி மயானம், காயாரோகணம், மாகாளேசம், திருமேற்றளி, அனேகதங்காபதம், கடம்பர் கோயில், பணாதரேசம், மணிகண்டேசம், வராகேசம், சுரகரேசம், பரசுராமேசம், வீரட்டகாசம், வேதநூபுரம் (திருமாகறல்), உருத்திரேசம், இந்திராலயம் (கச்சிநெறிக் காரைக்காடு), நான்முக சங்கரம், திருமால்பேறு, திருவோத்தூர் தலங்களாகும். 
-
(திருநகரப் படலம் - திருப்பாடல் 235):
கச்சபாலயம் ஏகம்பமே மயானம் கவின்கொள் காரோணம் மாகாளம்
பச்சிமாலயநல் அநேகபம் கடம்பை பணாதரம் மணீச்சரம் வராகம்
மெய்ச்சுரகரம் முன்னிராமம் வீரட்டம் வேதநூபுரம் உருத்திரர்கா
வச்சிரன்நகரம் பிரம மாற்பேறு மறைசையாம் சிவாலயம் இருபான்
-
(குறிப்பு: இவற்றுள் கடம்பர் கோயில் 'காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரிக்கு அடுத்தும்', பரசுராமேசம் 'காஞ்சீபுரம் அரக்கோணம் சாலையில் பள்ளூரிலும்', வராகேசம் 'காஞ்சிக்கு மேற்கேயுள்ள தாமலிலும்', நான்முக சங்கரம் 'காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையிலுள்ள பெருநகரத்திலும்', தேவாரத் தலமான திருமால்பேறு 'காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையிலுள்ள பள்ளூருக்கு மேற்கிலும்', தேவாரத் தலமான திருவோத்தூர் 'செய்யாற்றுக்கு அடுத்துள்ள திருவத்திபுரத்திலும்', தேவாரத் தலமான வேதநூபுரம் (திருமாகறல்) 'காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ  தொலைவிலும்', இந்திராலயம் என்பது தேவாரத் தலமான கச்சிநெறிக் காரைக்காட்டிலும் அமைந்துள்ளது. மற்ற 12 தலங்களும் சிவ காஞ்சியின் எல்லைக்குள்ளையே அமையப் பெற்றுள்ளன).

காசிப முனிவரின் சிவஞான உபதேசம் (தவத்தின் மேன்மை) - கந்தபுராண நுட்பங்கள்:

காசிப முனிவர் மாயை என்பவளின் அழகினால் மயக்கமுற்று, தவத்தைத் துறந்து, ஓர் இரவுப் பொழுதில் வெவ்வேறு வடிவங்களெடுத்துக் கூடிய தன்மையினால், அவர்களின் வியர்வையினின்றும் சூரபத்மன்; சிங்கமுகாசுரன்; தாரகாசுரன்; அஜமுகி மற்றும் எண்ணிறந்த அசுர குலத்தோர் தோன்றுகின்றனர். எங்கும் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றது, புதிதாகப் பிறவியெடுத்தோர் யாவரும் ஒன்றுகூடி தாய்; தந்தையரைப் பணிகின்றனர். காசிபர் அவர்களுக்கு முதலில் சிவபெருமானின் பரத்துவத்தையும் பின்னர் தவத்தின் மேன்மைகளையும் உபதேசிக்கின்றார். அற்புதமான இப்பகுதியிலிருந்து சில திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

புதல்வர்களே கேட்பீர், 'படைத்தல்; காத்தல்; அழித்தல்; மறைத்தல்; அருளல்' ஆகிய ஐந்தொழிலையும் புரிந்தருளுள்பவர் திருநீலகண்டத்தினை உடைய சிவபெருமானாவார், 'அம்மூர்த்தியையே ஆதிப்பரம்பொருள்' என்று வேதங்கள் ஐயத்திற்கு இடமின்றிச் சுட்டுகின்றன, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 4)
அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர்
ஒளித்திடல் பேரருள் உதவலேயனக்
கிளத்திடு செயல் புரிகின்ற நீலமார்
களத்தினன் பதியது கழறும் வேதமே
-
(சொற்பொருள்: நீலமார் களத்தினன் - நீலமான கழுத்தினை உடைய சிவபெருமான்)

'மாதவமே பேராற்றலை நல்க வல்லது; அதனினும் சிறப்பானதொன்று இல்லை' என்று அறிவீர்களாக, தவமே சிவகதியையும் பெற்றுத் தரவல்லது. ஆதலின் 'முயன்று தவத்தினைப் புரிதல் மட்டுமே' ஒருவர் இடையறாது கைக்கொள்ள வேண்டிய நெறியாகும், 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 15)
ஆற்றலை உளது மாதவம் அதன்றியே
வீற்றும் ஒன்றுளதென விளம்பலாகுமோ
சாற்றரும் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால்
-
(சொற்பொருள்: வீற்றும் - சிறப்பானது)

தவமே பிறவிப் பிணியைப் போக்கிச் சிவமுத்தியை நல்கவல்லது, யாவற்றிலும் முதன்மைத் தன்மையை அளிக்க வல்லது. அத்துடன் உள்ளத்தில் எண்ணியுள்ள இன்பங்கள் அனைத்தையும் இப்பிறவியிலேயே ஐயத்திற்கு இடமின்றிப் பெற்றுத்தர வல்லது, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 16)
அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மையாக்குறும்
இத்துணையன்றியே இம்மை இன்பமும்
உய்த்திடும் உளம்தனில் உன்னும் தன்மையே

'தேவர்கள் என்று எவரெல்லாம் போற்றப் பெறுகின்றார்களோ அவர்கள் யாவரும் அப்பெருஞ்சிறப்பினை அடைந்தது, முன்பு தத்தமது உடலினை வருத்தி பலகாலம் முயன்று புரிந்து வந்த தவச்சிறப்பினாலேயே' என்று தெளிவாக உணர்வீர்களாக, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 19)
ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகிலீர் கொலோ தேவராகியே
மேல்திகழ் பதம்தொறும் மேவுற்றோர் எலாம்

(எண்ணங்கள் யாவையும் முற்றுவிக்கும் தன்மையினால்) தவத்தினைக் காட்டிலும் சிறந்தது வேறொன்றுமில்லை, குற்றமற்ற தவத்திற்கு நிகராகப் பிறிதொன்றினைக் கூறிவிட இயலாது. தவம் புரிவது அரிய செயலாயினும் தவத்திற்கு ஒப்பாக தவத்தை மட்டுமே கூற இயலும்,
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 23)
தவம்தனின் மிக்கதொன்றில்லை தாவில்சீர்த்
தவம்தனை நேர்வது தானும் இல்லையால்
தவம்தனின் அரியதொன்றில்லை சாற்றிடில்
தவம் தனக்கொப்பது தவமதாகுமே

ஆதலின் புதல்வர்களே, தீய எண்ணங்களை முற்றிலும் நீக்கி இக்கணமே தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளினை நோக்கி தவம் புரியத் துவங்குங்கள், அதனைக் காட்டிலும் உங்களால் புரிதற்குரிய செயல் வேறொன்றுமில்லை, 
-
(அசுரகாண்டம்: காசிபன் உபதேசப் படலம் - திருப்பாடல் 24)
ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்
தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே
மாதவம் புரிகுதிர் மற்றதன்றியே
ஏதுளதொரு செயல் இயற்றத் தக்கதே

வாயு தேவனைச் சிறையிலடைக்கும் சூரபத்மன் (தவத்தின் மேன்மை) - கந்தபுராண நுட்பங்கள்:

சிவபரம்பொருள் குமார வடிவெடுத்து ஆறுமுகக் கடவுளாகத் தோன்றுவதற்கு முன்னதான காலகட்டமிது. சூரபத்மனுக்கு அஞ்சி இந்திரன் மறைந்து வாழ்ந்து வருகின்றான், சிவமூர்த்தியிடம் மீண்டுமொரு முறை தன்னுடைய நிலை குறித்து முறையிட்டு வரலாம் என்றெண்ணித் திருக்கயிலைக்குச் செல்கின்றான். செல்லுமுன் மனைவியான இந்திராணியை அரிகர புத்திரரான ஸ்ரீமகாசாஸ்தாவின் திருவடிகளில் அடைக்கலமாக விட்டுச் செல்கின்றான். இதற்கிடையில் சூரனின் தங்கையான அஜமுகி தனித்திருக்கும் இந்திராணியை அபகரித்துச் செல்ல முயல, மகாசாஸ்தாவின் பூதப் படைத் தலைவரான மகாகாளர் அவ்விடத்தே தோன்றி அஜமுகியின் கைகளைத் துண்டித்து இந்திராணியைக் காக்கின்றார்.  

உடன் அஜமுகி (இலங்கைக்கு அப்பாலுள்ள) வீரமகேந்திரபுரம் எனும் தீவிற்குச் சென்று, தமையனான சூரபத்மனிடம் இது குறித்து முறையிட்டுக் கதறுகின்றாள். தேவர்களில் ஒருவரே இச்செயலுக்குக் காரணம் என்றெண்ணும் சூரன் கடும் கோபம் கொள்கின்றான். சூரிய தேவனை அழைத்து 'நீயும் இச்செயலை விண்ணிலிருந்து கண்டிருப்பாயே, ஏன் எம்மிடம் இது குறித்து அறிவிக்கவில்லை?' என்று முழங்கி, நடுநடுங்கியிருந்த சூரிய தேவன் உள்ளிட்ட எண்ணிறந்த தேவர்களைச் சிறையிலிட்டுக் கொடுமைப்படுத்தத் துவங்குகின்றான்.

மேலும் சினம் தனியாதவனாய், வாயு தேவன் மற்றும் அவனுடைய சார்பில் பணிபுரிந்து வரும் வாயுதேவர்களின் கூட்டத்தினர் யாவரையும் சபையின் முன் கொண்டு வர ஆணையிடுகின்றான். பேசக்கூடத் திராணியற்ற நிலையில் அச்சமுற்று நிற்கும் வாயுதேவர்களின் கூட்டத்தினர் யாவரையும் 'எங்கும் வியாபித்துப் பரவும் நீங்களும் என் தங்கையின் நிலை குறித்து எம்மிடம் அறிவிக்கவில்லையே' என்று கூறி அவர்களையும் சிறையிலிட்டு வாட்டத் துவங்குகின்றான்,
-
(அசுரகாண்டம் :- சூரன் தண்டம்செய் படலம் - திருப்பாடல் 49)
வன்திறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
நின்றிடு கால்களை நீடு கால்களில் 
துன்றிய கனைகழல் சூரனென்பவன்
ஒன்றொரு சிறைதனில் உய்த்திட்டானரோ

இவ்விடத்தில் ஒரு நுட்பம், 'வாயு தேவனின் சக்தியோ அளப்பரியது, முன்பொரு சமயம் ஆதிசேடனுடனான போட்டியொன்றில் மேருமலையின் சிகரங்களையே தகர்த்தெறிந்தவன், சக்திக்கு இலக்கணமாய் விளங்கி வரும் வாயுவையும் ஒருவன் இவ்விதமாய் நடுநடுங்கச் செய்து சிறையிலிட முடியுமெனில், இவ்வுலகினில் தவத்தினால் அடைய இயலாத சக்தியும் செல்வங்களும் உளவோ?' என்றெண்ணி வியக்கின்றார் கந்தபுராண ஆசிரியரான நம் கச்சியப்ப சிவாச்சாரியார். 
-
(அசுரகாண்டம் :- சூரன் தண்டம்செய் படலம் - திருப்பாடல் 50)
ஈற்றினை இழைத்திட இருக்கும் கால்களைச்
சீற்றமொ(டு) அவுணர்கோன் சிறையில் வீட்டினான்
சாற்றிடின் உலகமேல் தவத்தினால் வரும்
பேற்றினும் உளதுகொல் பெருமைத்தானதே

கந்தபுராணத் திருப்பாடல்களில் ஆங்காங்கே தவத்தின் அவசியத்தையும் சிறப்பையும் பதிவு செய்து கொண்டே வருவார் கச்சியப்ப சிவாச்சாரியார் ('மேலை தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பாள் நம் அவ்வைப் பிராட்டி).

நான்முகக் கடவுள் தட்சனுக்கு உபதேசித்த சிவ பரத்துவ வைபவம் (பகுதி 1) - (கந்தபுராண நுட்பங்கள்):

ஒரு சமயம் சத்திய உலகிற்குச் செல்லும் தட்சன் தந்தையான நான்முகக் கடவுளிடம், 'மும்மூர்த்திகளுள் மேலான பரம்பொருளாகவும்; உயிர்க்குலம் முழுமைக்கும் தலைவராகவும் விளங்கும் மூர்த்தி யார்? என்பதனை ஐயம் நீங்குமாறு விளக்கியருள்வீர்' என்று விண்ணப்பிக்கின்றான். 

இந்நிலையில் படைப்புக் கடவுள் உபதேசித்த சிவபரத்துவ வைபவத்தினை 'தட்ச காண்டம் - உபதேசப் படலத்தில்' அற்புத அற்புதமான 24 திருப்பாடல்களில் பதிவு செய்கின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். அத்திருப்பாடல்களை இனிவரும் தொடர்ப் பதிவுகளில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,  

(1)
முன்பொரு சமயம், 'பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணுவும்; யானும் வாக்குவாதமொன்றில் ஈடுபட்டிருந்த சமயம், எங்களுக்கு நடுவில் விண்ணுயர் சோதியாக தோன்றியருளிய சிவபெருமானே மேலான பரம்பொருள்' என்பதனை உணர்ந்து தெளிவாயாக,
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 5)
என்றுதன் மைந்தன் இவ்வாறியம்பலும் மலரோன் கேளா
நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும்
அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில்
சென்றதோர் சிவனே யார்க்கு(ம்) மேலவன் தெளிநீ என்றான்
-
இதற்கிடையில் தட்சனானவன் 'மும்மூர்திகளுள் அழித்தல் தொழில் புரிந்தருளும் சிவபெருமானை மட்டுமே பரம்பொருள் என்று போற்றுவதன் காரணம் யாது?' என்றொரு துணைக்கேள்வி எழுப்ப பிரமதேவரும், 'நீ மறைப்பொருளை கற்றுணர்ந்த விதம் மிக மிக நன்று' என்று பரிகசித்துச் சிரித்து மேலும் தன் விளக்கத்தினைத் தொடர்கின்றார், 

(2)
மைந்தனே கேள், எங்கள் யாவரையும் மற்றுமுள்ள உயிர்த்தொகை அனைத்தையும் மகாப்பிரளய காலத்தில் தமக்குள் ஒடுக்கிக் கொள்பவர் அச்சிவமூர்த்தி எனில் அவ்வுயிர்களை முதலில் படைத்தளித்தவரும் அவரொருவரே என்பது தெள்ளென விளங்குமன்றோ (ஒடுங்கும் இடத்திலிருந்தே படைப்பு துவங்கும் என்பது உட்கருத்து), 
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 8 )
பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றும் தன்மை
என்னென உரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத்
துன்னிய உயிர்கள் தம்மைத் தொலைவு செய்திடுவன் ஈற்றில்
அன்னவன் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ

(3)
மகனே கேள், மகாப் பிரளய காலத்தில் தனியொரு மூர்த்தியாக நின்றருளி உயிர்களை ஒடுக்கிப் பின்னர் அவ்வூழிக் காலம் நிறைவுறும் வேளையில் அம்மையப்பராய்த் தானே விளங்கியிருந்து, அவ்வுயிர்களின் கர்மவினைக்கு ஏற்றாற்போன்று உடலினை அளித்தருளும் முக்கண் முதல்வரின் செயல்கள் இன்னதென்று உணர்தற்கரியவை,
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 9)
அந்தநாள் ஒருவனாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள்
வந்தவாறொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை
தந்தையாய் உயிர்கட்கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண்
எந்தைதன் செய்கை முற்றும் இனையதென்(று) இசைக்கல் பாற்றோ

(4)
மைந்தனே கேள், அச்சிவமூர்த்தியானவர் சிவந்த கண்களுடைய திருமாலையும் என்னையும் தன்னுடைய திருத்தோள்களினின்றும் தோற்றுவித்து, காத்தல்; படைத்தல் தொழில்களை முறையே அளித்தருளிப் பின் 'உங்களோடு நாமும் இருப்போம்' என்றருளி, அதுமுதல் உயிர்க்குயிராகவும் விளங்கியிருந்து எங்களைத் தொழிற்படுத்தி வருகின்றார். 'அம்மூர்த்தியன்றி எங்கள் சக்தியைக் கொண்டு மட்டுமே புரியக் கூடிய செயலென்று ஏதுமில்லை' என்பதனை நன்குணர்வாய்,   
-
(தக்ஷ காண்டம்: உபதேசப் படலம் - திருப்பாடல் 10)
செங்கண்மால் தன்னை என்னைத் திண்திறல் மொய்ம்பின் நல்கி
அங்கண்மா ஞாலம் காப்பும் அளிப்பதும் உதவி யாமும்
உங்கள்பால் இருத்தும் என்றெம் உயிருள் நின்றியற்றா நின்றான்
எங்களால் முடியும் செய்கை யாவதும் இல்லை கண்டாய்

மானசரோவரத்தில் அன்னை பார்வதியின் திருஅவதாரம் (கந்தபுராண நுட்பங்கள்):

உலகீன்ற உமையன்னை, 'சிவ அபராதம் புரிந்திருந்த தட்சனின் மகளாக முன்னர் அவதரித்திருந்த குற்றம் நீங்க, அவ்வுடலை முழுவதுமாய்த் துறந்து, புதியதொரு அவதாரத்தில் நற்தவமியற்றி அதன் பின்னர் திருக்கயிலைக்கு மீள விரும்புவதாக' இறைவரிடத்து விண்ணப்பிக்கின்றார். சிவபரம்பொருளும், இமயமலைச் சாரலில் தவமியற்றி வரும் மலையரசனின் புதல்வியாகச் செல்லுமாறு அம்பிகைக்கு அருள் புரிகின்றார். இனி இந்நிகழ்வினைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்து மகிழ்வோம்,

தயிர்க்கடலைக் கடைந்தெடுத்த வெண்ணையுள்; பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வைத்தது போன்று, இடைவிடாது பனிபொழிந்து வரும் இமையமலைச் சாரலின் உட்பகுதியில் 'மானசம்' எனும் ஏரி அமைந்துள்ளது (திருக்கயிலை மலையின் தரிசன எல்லைக்குள் அமையப் பெற்றுள்ள இப்புண்ணியப் புனல் 'மானசரோவரம்' என்று பிரசித்தமாக போற்றப் பெற்று வருகின்றது).   
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 19)
விண்ணவர் ததிக்கடல் கடைந்த வெண்ணெயுள்
அண்ணலம் பாற்கடல் அமுதம் வைத்தெனக்
கண்ணகன் பெரும்பனி கவைஇய வெற்பின்மேல்
உண்ணிறை புனல்தடமொன்று வைகிற்றே

அந்த மானசரோவரக் கரையில் மலையரசனாகிய இமவான், அம்பிகையைப் புதல்வியாகப் பெறும் பொருட்டும், பின்னர் அன்னையை மீளவும் சிவபெருமானுக்குத் திருமணம் செய்வித்துப் பணியும் பேற்றிற்காகவும் கடும் தவமியற்றி வருகின்றான்,
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 20)
அன்னதோர் தடத்திடை அசல மன்னவன்
மன்னிய கௌரிதன் மகண்மையாகவும் 
தன்னிகரிலா அரன் தனக்கு நல்கவும்
முன்னுற வரும்தவம் முயன்று வைகினான்

மெய்த்தவம் புரிந்து வரும் பர்வதராஜன் காணுமாறு, உலகீன்ற உமையன்னை, அம்மானசரோவரத் தீர்த்தத்தில், தாமரை மலரொன்றின் மீது சிறு குழந்தையின் திருவடிவில் தோன்றுகின்றாள், 
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 21)
மெய்த்தவம் இயற்றிய வெற்பன் காணிய
அத்தட மலருமோர் அரவிந்தத்தின் மேல் 
பைத்ததோர் குழவியின் படிவத்துற்றனள்
எத்திறத்துயிரையும் ஈன்ற தொன்மையாள்
(சொற்பொருள்: வெற்பன் - மலையரசன்; பர்வத ராஜன், அரவிந்தம் - தாமரை)

மலையரசன் அத்தெய்வீகக் குழவியைக் கண்டு, 'நால்வேதத் தலைவியான பராசக்தியே அடியேனின் பொருட்டு, சிவபரம்பொருளை விட்டு நீங்கி இவ்விடம் குழந்தையைத் தோன்றியுள்ளாள், இவையாவும் முக்கண் முதல்வரின் திருருவருளே' என்றெண்ணிச் சிவானந்தக் கடலில் மூழுகுகின்றான்,
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 22)
ஆங்கவள் கண்டு வெற்பன் அடியனேன் பொருட்டால் அம்மை
நீங்கினள் போலும் முக்கண் நிருமலன் தன்னை என்னா
ஏங்கினன் தனது நோன்புக்கிரங்கினன் இவைகள் ஈசன்
ஓங்கு பேரருளே என்னா உவகையம் கடலுள் பட்டான்

மலையரசன், கண்ணருவி பாய, அதீத அன்பினால் உரோமக் கால்களெங்கும் நீர் கசிய, உடலெங்கும் புளகமுற, 'அடியேன் உய்ந்தேன்' என்றவாறு குழந்தை வடிவிலிருந்த அம்பிகையைத் தொழுது நிற்கின்றான், 
-
(உற்பத்தி காண்டம் - பார்ப்பதிப் படலம் - திருப்பாடல் 23)
கண்ணுறு போத வாரி கான்றிட உரோம ராசி
உண்ணிகழ் அன்பு மிக்குப் புறந்தனில் ஒழுகிற்றென்ன
வண்ணன்மெய் பொடிப்பத் துள்ளி அடியனேன் உய்ந்தேன் என்னாத்
துண்ணெனப் பாடியாடி அமலையைத் தொழுது நின்றான்
(சொற்பொருள்: வாரி - கடல், கான்றிட - பெருகிட, உரோம ராசி - மயிர்க்கால்கள், பொடிப்ப - மயிர் கூச்செரிய)

பர்வத ராஜனின் புதல்வியாகத் தோன்றியதால் அது முதல் நம் அன்னை 'பார்வதி' எனும் ஒப்புவமையற்ற திருநாமத்தால் போற்றப் பெற்று வருகின்றாள். லலிதா சஹஸ்ரநாமத்தில் 246ஆம் திருநாமமாக இத்திருப்பெயர் இடம்பெறுகின்றது.

சிவபெருமானை 'பித்தனோ நீ' என்று வெகுண்டுரைத்த அன்னை பார்வதி (கந்தபுராண நுட்பங்கள்):

மலையரசனின் தவத்தின் பயனாய் அம்பிகை அவனிடத்துப் புதல்வியாய்த் தோன்றி, 'பார்வதி' எனும் திருநாமத்தில் வளர்ந்து வருகின்றாள். தன்னுடைய 5ஆம் வயதில், 'இனி சிவமூர்த்தியைக் குறித்து தவமியற்றிப் பின் இறைவரை மணத்தால் சேர்வேன்' என்று துணிந்து, தந்தை; தாயிடம் அனுமதி பெற்றுத் தோழியர் சிலர் உடனிருந்து பணி செய்ய, இமயமலைச் சாரலில் அரிய பெரிய தவமியற்றி வருகின்றாள். 

எண்ணில் பல வருடங்கள் இந்நிலையில் அம்மை தன் திருமேனி மெலிந்து வருந்துமாறு கடும் நோண்பியற்றி வர, திருமணப் பருவமும் எய்துகின்றது. முக்கண்ணுடைப் பரம்பொருள் அம்மைக்கு அருள் புரியும் பொருட்டு, முதிய வேதியரொருவரின் திருக்கோலத்தில் அவ்விடத்திற்கு எழுந்தருளி வருகின்றார். தோழியர் இச்செய்தியினை அம்மைக்கு அறிவிக்க, அம்மை மறையவராய்த் தோன்றியுள்ள மகாதேவருக்குத் தக்கதொரு ஆசனமளித்துப் பணிகின்றாள். 

மறையவர், 'பெண்ணே, உன் பேரழகு அழிந்து படுமாறு நீ தவம் புரிவது எதன் பொருட்டு?' என்று வினவுகின்றார். அம்மை தன் திருக்கண்களால் குறிப்பு காட்ட, தோழியரும் 'ஆதிப்பரம்பொருளான சிவபெருமானின் திருக்கரம் பற்றி அவர்தம் இடபாகத்தில் என்றும் நிலைத்திருக்கவே எங்கள் உமையம்மை தவமியற்றி வருகின்றார்' என்றுரைக்கின்றனர். 

உடன் அம்மறையவர், 'நன்று உன் செய்கை, தெய்வங்களும் காண்பதற்கரிய அச்சிவ மூர்த்தி உனக்கு எளியவர் ஆவரோ? ஆதலின் இனி உன் அழகினை வீணாக்காமல் விரைந்து இத்தவத்தினை விடுவாயாக' என்றருளிச் செய்கின்றார். 

உடன் அம்மை கடும் சீற்றம் கொண்டு வேதியரிடம், 'ஆதிப்பரம்பொருளாகிய இறைவர் அடியவளின் தவத்திற்கு இரங்காராயினும், கொண்ட இந்நோண்பினை ஒருக்காலும் கைவிடேன். இன்னமும் எண்ணிலா வருடங்கள் தொடர்ந்து தவமியற்றி அந்நிலையிலேயே இன்னுயிரையும் விடுப்பேன். முதியவரென்று கருதினால், இத்தகு தகாத மொழிகளைக் கூறும் பித்தனோ நீர்?' என்று வெகுண்டுரைக்கின்றாள்.  
-
(உற்பத்தி காண்டம்: தவம்காண் படலம் - திருப்பாடல் 13)
முடிவிலாதுறை பகவன்என் வேட்கையை முடியாது
விடுவன்என்னினும் தவத்தினை விடுவனோ மிகஇன்னம் 
கடிய நோன்பினை அளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள் 

வேதியரும் அத்துடன் விடுவதாக இல்லை, சிவபெருமானின் தன்மைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக் கூறி, இவ்விதமான இறைவரை மணந்து நீ எச்செல்வத்தைப் பெற்று விட இயலும்?' என்று மேலும் அம்மையைச் சோதிக்க, அம்மை இச்சிவ அபராதச் சொற்களால் நடுங்கிப் பதறித் தன் இரு செவிகளையும் மூடிக்கொண்டு, விரைந்து அவ்விடம் விட்டு அகல முனைகின்றாள். இறைவர் தன் மெய்த் திருக்கோலத்துடன் விண்மிசை எழுந்தருளித் தோன்றுகின்றார். 

அம்மை நாணமும் அச்சமும் ஒருசேரத் தோன்ற வேத முதல்வரைப் பணிந்து, 'உம்முடைய மாயையை அறியாதவளாய்ப் பலவாறு பழித்துரைத்தேன், மன்னித்தருள வேண்டும்' என்று தொழுதேத்துகின்றாள்.  

கருணைப் பெருங்கடலான நம் இறைவரும், 'நல்ல தவமுடையவளே கேள், நம்மிடத்தே கொண்ட பேரன்பினால் நீ இகழ்ந்துரைத்தவைகளைத் துதியாகக் கொண்டோம், உன் மீது குற்றமிருந்தாலன்றோ பொறுப்பது? இனி நீ நோண்பியற்றி வருந்தாதே, நாளையே நாம் உன்னை மணத்தால் அணைவோம்' என்றருள் புரிகின்றார். 
-
(உற்பத்தி காண்டம்: தவம்காண் படலம் - திருப்பாடல் 31)
நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத்தன்பால் நீமுன்
சொற்றன யாவும் ஈண்டே துதித்தன போலக் கொண்டாம்
குற்றமுண்டாயின்அன்றே பொறுப்பது கொடிய நோன்பால்
மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருதுமென்றான்

மேற்குறித்துள்ள நிகழ்வுகளால், அடியார்க்கு அடியரான நம் சுந்தரனார் இறைவரை 'பித்தனோ மறையோன்' என்றழைப்பதற்கு எண்ணில் பல யுகங்களுக்கு முன்னரே நம் அன்னை, 'பித்தனோ நீ' என்று இறைவரை வெகுண்டுரைத்துள்ளது சுவையானதொரு குறிப்பன்றோ!


சரவணப் பொய்கைக்குச் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் (கந்தபுராணம் விவரிக்கும் அரிய நிகழ்வு):

முருகப் பெருமானின் திருஅவதாரம் இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் நிகழ்ந்தேறிய பிறகு, கார்த்திகைப் பெண்களால் சிறிது காலம் வளர்க்கப் பெற்று வருகின்றார். பின்னர் சிவபெருமான் உமாதேவியாரோடு குமாரக் கடவுளைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு அப்பொய்கைக்கு நேரில் எழுந்தருளி வருகின்றார். அச்சமயத்தில் உடன் சென்ற எண்ணிறந்தோரைப் பட்டியலிடுகையில், நம் ஆலால சுந்தரரையே கச்சியப்ப சிவாச்சாரியார் முதலாவதாகக் குறிக்கின்றார் (இது ஆலால சுந்தரர் நம்பியாரூரராக திருநாவலூரில் அவதரிப்பதற்கு எண்ணில் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட புராண கால நிகழ்வு),

பின்வரும் திருப்பாடலில், 'பாற்கடல் கடைந்த சமயத்தில், எல்லையில்லாது எழுந்த ஆலகால விஷத்தினைத்  தம்முடைய கரத்தினில் அடக்கிச் சென்று சிவபெருமானிடம் அளித்த ஆலால சுந்தரர் மற்றுமுள்ள உருத்திர கணங்கள் யாவரும் இருமருங்கிலும் சூழ்ந்திருந்து போற்றியவாறு உடன் சென்றனர்' என்று பதிவு செய்கின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்,  

(உற்பத்தி காண்டம் - சரவணப் படலம் - திருப்பாடல் 7)
அந்தமில் விடத்தினை அடக்கு கையுடைச்
சுந்தரன் ஆதியாம் தொல் கணத்தினோர்
எந்தைதன் உருவு கொண்டிருந்த மேலவர்
வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார்

'முருகப் பெருமானை முதன்முதலில் இறைவர்; இறைவியோடு சென்று நம் சுந்தரர் தரிசித்துள்ளார்' எனும் குறிப்பு எவ்வளவு இனிமையானது (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!

இந்த விரதமிருந்தால் முக்தி நிச்சயம் - சிவபெருமானின் வாக்குறுதி (கந்தபுராண நுட்பங்கள்):

முருகப் பெருமானின் திருஅவதாரம் இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் நிகழ்ந்தேறுகின்றது.  கார்த்திகைப் பெண்களால் சிறிது காலம் வளர்க்கப் பெற்று வரும் குமாரக் கடவுளைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு, சிவபெருமானும் அம்பிகையும் அப்பொய்கைக்கு எழுந்தருளி வருகின்றனர். 

அங்கு ஆறு தனித்தனி திருவுருவங்களுடன் அற்புதத் திருவிளையாடல்கள் புரிந்திருந்த முருகக் கடவுளை அம்பிகை, தன் திருக்கரங்களால் காதலோடு எடுத்துத் தழுவி, ஆறு திருமுகங்களும் ஒரு திருமேனியும் கொண்டதோர் வடிவினனாகச் செய்கின்றாள். 

ஆறு கார்த்திகைப் பெண்களும் அங்கு வந்து அம்மையப்பரைப் பணிகின்றனர். சிவபெருமான் அவர்களிடம், 'இக்கந்தனை நீங்கள் பாலூட்டி வளர்த்தமையால், இவன் உங்கள் மைந்தனாகவும் அறியப் பெறும் பொருட்டுக் கார்த்திகேயன் எனும் பெயர் இவனுக்கு உரித்தாகுக. உங்களுடைய (கார்த்திகை) நட்சத்திரத்தில் இவனின் திருவடியினைப் போற்றி நல்விரதமிருப்போரின் துன்பங்கள் யாவையும் களைந்து, அவர்கட்கு முத்திப் பேற்றினையும் அளித்தருள்வோம்' என்று பேரருள் புரிகின்றார்.   

(உற்பத்தி காண்டம்  - சரவணப் படலம் - திருப்பாடல் 30)
கந்தன்தனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால் எவரேனும்
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம்குறை முடித்தே பரம்தனை நல்குவம் என்றான்
-
(சொற்பொருள்: நுந்தம் பகல் - உங்கள் கார்த்திகை நட்சத்திர தினம், நோன்றாள் - திருவடிகள், பரம் - சிவமுத்தி)

நவ வீரர்களின் தோற்றம் (கந்தபுராண நுட்பங்கள்):

சிவபெருமானின் ஐந்து திருமுகங்களினின்றும்; மற்றுமுள்ள அதோமுகத்தினின்றும் தோன்றிய ஆறு தீச்சுடர்களின் வெம்மை தாளாமல் திருக்கயிலையிலுள்ளோர் யாவரும் அங்குமிங்குமாய்ப் பதறி ஓடுகின்றனர். அருகில் எழுந்தருளியிருந்த நம் உமையன்னையும்  அவ்வெப்பத்தினைத் தாள மாட்டாது இறைவரிடமிருந்து விரைந்து விலகிச் செல்கின்றாள். அச்சமயத்தில் அம்மையின் திருவடிச் சிலம்பிலிருந்து எண்ணிறந்த மணிகள் சிதறுகின்றன. அம்மணிகளுள் உமா தேவியாரின் பிம்பம் தோன்றும் 9 மணிகளை இறைவர் பார்த்தருளி, 'விரைந்து வெளியில் வாருங்கள்' என்று அழைத்தருள, அவைகளினின்றும் நவசக்தி தேவியர் வெளிப்பட்டுப் பணிகின்றனர். 

9 தேவியரும் சிவமூர்த்தியின் திருவுள்ளத்தில் இடம்பெற விரும்ப அக்கணமே அவர்கள் யாவரும் (சிவசங்கல்பத்தால்) கருவுருகின்றனர். உமையன்னை அதுகண்டு உளம் வெதும்பி, 'இவ்விதம் நேர்வதற்கு நீங்கள் காரணமாக இருந்ததால் நெடுநாட்கள் இக்கருவினைச் சுமப்பீர்' என்று சாபமிடுகின்றாள். அதனால் அச்சமுற்று விளங்கிய அந்த 9 தேவியரிடத்தும் வெளிப்பட்ட வியர்வையினின்றும் 1 லட்சம் வீரர்கள் தோன்றுகின்றனர். 

இதனிடையில் சரவணப் பொய்கையில் சிவபரம்பொருளின் குமார வடிவமாக ஆறுமுக தெய்வம் திருஅவதாரம் புரிகின்றான். அம்மை விதித்த சாப நீக்கத்திற்கான காலமும் கூடிவர, அந்த 9 சக்தியரிடத்தும் ஓரோர் வீரராகத் தோன்றி, நவவீரர்களும் ஒன்று சேர்ந்து அம்மையப்பரின் திருமுன்பு வந்து பணிகின்றனர். 
-
அவர்கள் பெயர்கள் முறையே 'வீரவாகு, வீரகேசரி, வீரமா மகேந்திரன், வீரமா மகேச்சுரரன், வீரமா புரந்தரன், வீர ராக்கதன், வீர மார்த்தாண்டன், வீராந்தகன். வீரதீரன்' என்று வழங்கப் பெறுவதாயின. 

(1)
நவ வீரர்களும் பணிந்து தொழுதிருக்க சிவபெருமான் உமாதேவியாரிடம், 'தேவி, இவர்கள் புதியவரல்லர், நம் நந்தி கணத்தவரே இச்சமயத்தில் இங்கு நவ வீரர்களாகத் தோன்றியுள்ளனர். பெருவலிமையும் ஆற்றலும் மிக்க இவர்கள் நம் மைந்தர்களாவர்' என்றருளிச் செய்கின்றார். (ஆதலின் 'முன்னமே சிவமுத்தி பெற்று நந்தி கணத்தவராக விளங்கியிருந்த 9 முத்தான்மாக்களையே இறைவர் புதியதொரு வடிவில் மீண்டும் தோன்றுமாறு சங்கல்பிக்கின்றார்' என்பது புலனாகின்றது).
-
(உற்பத்தி காண்டம் - துணைவர் வரு படலம் - திருப்பாடல் 35)
உதிதரும் அத்திறல்வீரர் அரியணைமேல் அம்மையுடன் உறைந்த நாதன்
பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி
மதியுடையர் திறலுடையர் மான அரும்கலத்தினர் நம் மைந்தர் இன்னோர்
புதியரலர் நந்திதனிக் கணத்தவர்என்றான் சுருதிப் பொருளாய் நின்றான்

(2)
இறைவரின் திருவாக்கினைக் கேட்டு அம்மை திருவுள்ளம் மகிழ்ந்து அவர்கட்குப் பேரருள் புரிகின்றாள். முக்கண் முதல்வர் நவவீரர்கள் ஒவ்வொருவருக்கும் அற்புத வாளொன்றினை அருளி, 'நவசக்தியர் வியர்வையினின்றும் தோன்றிய லட்சம் வீரர்களோடு சேர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனான நமது மைந்தனை விட்டு நீங்காமல் அவனுக்குத் தொண்டு புரிந்து வருவீர்களாகுக' என்றருள் புரிகின்றார், 
-
(உற்பத்தி காண்டம் - துணைவர் வரு படலம் - திருப்பாடல் 36)
தேவியது கேட்டு மைந்தர்க்கருள் புரிய அவர்க்கெல்லாம் சிவன் வெவ்வேறு
தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கம் தனயரோடு
நீவிர்களும் ஒன்றி நுங்கட்(கு) இறையவனாகிய சேயை நீங்கலின்றி
ஏவலவன் பணித்தன செய்தொழுகுதிர் என்றான் அவரும் இசைந்து தாழ்ந்தார்

முருகப் பெருமான் உலவும் இடங்கள் (கந்தபுராண விளக்கங்கள்):

சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம்  சில காலம் வளர்ந்து வரும் கந்தக் கடவுளைச் சிவபரம்பொருளும் அம்பிகையும் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்நிலையில் முருகப் பெருமான் புரிந்தருளும் எண்ணிறந்த திருவிளையாடல்களை நம் கச்சியப்ப சிவாச்சாரியார் 'திருவிளையாட்டுப் படலம்' எனும் பகுதியில் காட்சிப்படுத்தி மகிழ்கின்றார். முருகப் பெருமான் உலவும் இடங்களைப் பட்டியலிடும் இப்படலத் திருப்பாடல்களுள் ஒன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

'முன்னவனான விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் தோறும் உலவி வருவார், அம்மையப்பரான சிவபெருமானும் உமையன்னையும் கோயில் கொண்டருளும் தலங்கள் தோறும் உலவுவார், கடப்ப மரங்கள் நிறைந்துள்ள பகுதிகள் தோறும் உலவுவார்' என்று விவரித்துக் கொண்டே வரும் கச்சியப்பர் இறுதியாய், 'செந்தமிழும்; மறைமொழியான வடமொழியும் இணைந்து வழங்கப் பெறும் பதிகள் தோறும் நம் சிவகுமரன் உலவி வருவார்' என்று பதிவு செய்கின்றார். 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 5)
இந்துமுடி முன்னவன் இடந்தொறும் உலாவும்
தந்தையுடன் யாயமர் தலங்களில் உலாவும்
கந்தமலர் நீபமுறை கண்டொறும் உலாவும்
செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி உலாவும்
(சொற்பொருள்: யாய் - தாய்)

சிவபெருமான் அருளியுள்ள, 'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நால்வேதங்களும் வடமொழியில் வழங்கி வருகின்றன. மற்றொருபுறம், அடியவர் பெருமக்கள் அருளிச் செய்துள்ள 'நால்வேத சாரமான திருமுறைகளும், ஏனைய தெய்வப் பனுவல்களும்' தமிழ் மொழியில் அமையப் பெற்றுள்ளன. சைவப் பெருஞ்சமயத்திற்கு இவ்விரண்டுமே இரு கண்களெனப் போற்றுதற்குரியன. 

எந்தெந்த இடங்களில் இவ்விரு மொழிகளிலுள்ள மந்திரங்களும்; பனுவல்களும் பேதமின்றிச் சமமாக இணைந்துச் சிறப்பிக்கப் பெறுகின்றதோ, அத்திருத்தலங்களில் 'நம் வேலாயுத தெய்வம் விருப்பத்தோடு எழுந்தருளிப் பேரருள் புரிகின்றான்' என்பது இதனால் புலனாகின்றது (சிவ சிவ).

பிரமனிடம் ரிக் வேத மந்திரம் கேட்டுத் தலையில் குட்டிய ஆறுமுகக் கடவுள் (கந்தபுராண நுட்பங்கள்):

நான்முகக் கடவுளான பிரமன், திருக்கயிலையில் சிவமூர்த்தியைத் தரிசித்து விட்டு, தேவர்களும் உடன்வர முன்வாயிலை அடைகின்றார். அங்கு நவவீரர்களுடன் எழுந்தருளியிருந்த ஆறுமுக தெய்வம் 'நம் முன் வருக' என்றழைக்க, (ஆணவமலம் நீங்காதிருந்த தன்மையினால்) பிரமன் முருகக் கடவுளைத் தலைதாழ்த்தி வணங்காது, கைகளை மட்டும் கூப்பி வணங்குகின்றார். பிரமனின் இச்செயல் காணும் கந்தக் கடவுள் 'உன் தொழில் யாது' என்று வினவுகின்றார். 'சிவபெருமானின் கட்டளைப்படி உயிர்களனைத்தையும் படைக்கின்றேன்' என்று பிரமன் மறுமொழி பகர்கின்றார்.  

'ஈரேழு புவனங்களையும் படைப்பதாயின் வேதங்கள் யாவுமே உனக்குப் பாடமோ - கூறுக? என்று அறுமுக தெய்வம் கேட்க, 'சிவபரம்பொருள் அருளியுள்ள எண்ணிறந்த மறைகளுள், யான் உய்யும் பொருட்டு அவர் உபதேசித்துள்ள மறைகளை அறிவேன்' என்கின்றார் பிரமன். 

அங்கனமாயின் நால்வேதங்களுள், 'ரிக் வேத மந்திரமொன்றினைக் கூறுக' என்று குகக் கடவுள் கேட்க, பிரமனும் மரபு கருதி முதலில் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தினை ஓதிப் பின் துவங்க முனைகின்றார்.   
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 8:)
என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீ விளம்புதிஎன முருகவேள் உரைப்ப
நன்றெனா மறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்றதோர் தனிமொழியை முன் ஓதினன் நெறியால்

சிவகுமரன் இடைமறித்து 'நிற்க! முதலில் ஓம் எனும் முதல்மொழியின் பொருளை இயம்புவாயாக' என்றுரைக்கின்றான். 

பிரணவத்தையே ஒரு திருமுகமெனக் கொண்டருளும் முருகப் பெருமான் இவ்வாறு புன்முறுவலுடன் கேட்டலும், நான்முகக் கடவுள் அப்பொருளறியாது திகைத்து விழிக்கின்றார், வெட்கத்தால் தலை கவிழ்கின்றார், தொண்டையடைத்து விக்கித் திணறி நிற்கின்றார். 

முருகப் பெருமான், 'சிருஷ்டித் தொழிலையும் இவ்விதமே பொருளறியாத தன்மையில் புரிந்து வருகின்றாயோ? மிக நன்று' என்று வெகுண்டுரைத்து, பிரமனின் நான்கு முடிகளும் குலுங்கி அதிருமாறு குட்டுகின்றான், 
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 14)
எட்டொணா தவக் குடிலையின் பயன் இனைத்தென்றே
கட்டுரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வது இத்தன்மையதோ எனாச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்கு மாமுடிகளும் குலுங்க

அது மட்டுமா, பிரமன் கீழே விழுமாறு தன் திருவடிகளால் உதைத்துப் பின் கந்தமலையில் அவரைச் சிறை வைக்கின்றான்,
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 15)
மறை புரிந்திடும் சிவனருள் மதலை மாமலர்மேல்
உறை புரிந்தவன் வீழ்தரப் பதத்தினால் உதைத்து
நிறை புரிந்திடு பரிசனரைக் கொடே நிகளச்
சிறை புரிந்திடுவித்தனன் கந்தமாம் சிலம்பில்

இதன் தொடர்ச்சியாய் நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னர், சிவபெருமானின் ஆணையினால் பிரமன் விடுவிக்கப் பெற்று வந்து பணிகின்றார். சிவபெருமான் பரிவுடன், 'நெடுநாட்கள் சிறையில் இளைத்து வாடினையோ?' என்று கேட்டருள, பிரமனும் 'உம்முடைய குமாரன் அளித்தருளிய தண்டனை மிகச் சரியே, அது அடியேனது அகந்தையைப் போக்கி, வினைகளை நீக்கிப் புனிதமடையச் செய்தது' என்று நெகிழ்ந்துருகிப் பணிகின்றார்,
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 14)
நாதன் இத்தன்மை கூறி நல்லருள் புரிதலோடும்
போதினன் ஐய உந்தன் புதல்வன் ஆற்றிய இத்தண்டம்
ஏதமன்றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித்
தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனிதமென்றான்

கல்லாதது உலகளவு (கந்தபுராண நுட்பங்கள்)

பதிவிற்குள் செல்லுமுன் 'நான்முகக் கடவுளான பிரமன் எவ்வளவு பெரியவர்?' என்பது குறித்துச் சிறிது சிந்திப்போம். பொதுவில் மும்மூர்த்திகளுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர், சிவபரம்பொருளின் கட்டளையினால் படைப்புத் தொழிலைப் புரிந்து வருபவர். இவரின் ஒரு நாளானது 2000 சதுர்யுக கால அளவினைக் கொண்டது (ஒரு சதுர்யுகமானது 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது). இவரது நாளின் முற்பாதி 1000 சதுர்யுகங்கள் சிருஷ்டிக் காலமாகவும், பிற்பாதி 1000 சதுர்யுகங்கள் பிரளய காலமாகவும் விளங்கி வரும் . இவ்விதமாய் நான்முகக் கடவுளுக்கு 100 ஆண்டுகள் ஆயுட்காலம். 14 உலகங்களிலும் சிறந்தது பிரமனின் சத்திய லோகம் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றது. 

'இவ்விதமான அரிய பெரிய சிறப்புகளோடு விளங்கி வரும் நான்முகக் கடவுளே ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளறியாது மயங்குவாராயின், நாம் பெற்றுள்ள மிகச் சிறிய அளவிலான ஞானத்தையெண்ணி அகந்தை கொள்வதென்பது நகைப்புக்குரியதே' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் திருப்பாடலில் அறிவுறுத்துகின்றார்.  
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறைபுரி படலம் - திருப்பாடல் 13)
தூமறைக்கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓமெனப்படும் ஓரெழுத்துண்மையை உணரான்
மாமலர்ப் பெரும் கடவுளும் மயங்கினான் என்றால்
நாம்இனிச்சில அறிந்தனம் என்பது நகையே!!!

சிவபெருமானின் கட்டளையை இருமுறை மீறிய ஆறுமுகக் கடவுள் (கந்தபுராணம் விவரிக்கும் ஓர் அற்புத தெய்வ நாடகம்):

நான்முகக் கடவுளான பிரமன், திருக்கயிலையில் சிவபெருமானைத் தரிசித்துத் திரும்பும் வழியில், ஆணவமலம் நீங்காதிருந்த தன்மையினால், முன்வாயிலில் எழுந்தருளியிருந்த முருகக் கடவுளை முறைமையாக வணங்காது, ஒருவாறு வணங்கி நிற்கின்றார். இச்செயல் கண்டு, பிரமனைச் சில சோதனைகளுக்கு ஆட்படுத்திப் பின் தம்முடைய கந்தமலையில் சிறையலிடுகின்றான் சிவகுமரன். அவர்தம் படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொள்ளத் துவங்குகின்றான். 

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், திருமாலும் உடன்வர, இறைவரிடம் இதுகுறித்து முறையிட்டுப் பணிகின்றனர். முக்கண் முதல்வரும் நந்திதேவரிடம், 'கந்தனிடம் நம் கருத்தைக் கூறி, பிரமனை விடுவிக்கச் செய்து இவ்விடம் அழைத்து வருவாயாக' என்றருளிச் செய்கின்றார். நந்திதேவர் கந்தமலைக்கு விரைந்து சென்று, குமாரக் கடவுளைப் பணிந்துப் பின் சிவபெருமானின் ஆணையினைத் தெரிவிக்கின்றார். அத்துடன், 'பிரணவப் பொருளைப் பிரமனால் எவ்வாறு கூற இயலும்?' என்று தன்னுடைய கருத்தொன்றையும் சேர்த்துத் தெரிவிக்கின்றார். கார்த்திகேயக் கடவுள் கடும் சீற்றத்துடன், 'விரைந்து இவ்விடம் விட்டுச் செல்லாவிடில் உன்னையும் சிறையில் அடைப்பேன்' என்று எச்சரிக்கின்றார். 

அஞ்சி அவ்விடம் விட்டு அகலும் நந்திதேவர், திருக்கயிலையிலுள்ள இறைவரிடம் மீண்டு 'கந்தவேள் மறுத்துரைத்த நிகழ்வினைத் தெரிவிக்க', சிவமூர்த்தி மெலிதாகப் புன்முறுவல் புரிகின்றார் ('கந்தன் மொழிந்திடும் செய்தி செப்பச் சிறுநகை எய்தினான்' என்பார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்),
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 15)
மைதிகழ்ந்த மணிமிடற்று அண்ணல்முன்
வெய்தெனச் சென்று மேவி அவன்பதம் 
கைதொழூஉ நின்று கந்தன் மொழிந்திடும் 
செய்தி செப்பச் சிறுநகை எய்தினான்

யாவரும் உடன்வர, தாமே நேரில் கந்தமலைக்கு எழுந்தருளிச் செல்கின்றார். எந்தையின் வரவு கண்டு அவர்தம்  திருவடிகளைத் தொழுதேத்தும் கந்தவேள், தம்முடைய மணிஆசனத்தில் மறைநாயகரை எழுந்தருளச் செய்து, 'எவ்வுயிர்க்கும் உயிராக விளங்கும் பரம்பொருளே, தாம் இங்கு வந்ததன் காரணம் யாதோ?' என்று வினவுகின்றார். நீலகண்டப் பெருமானும், 'ஐயா! நான்முகனை விடுவிக்கும் கருத்துடன் நாம் இங்கு திருமால் உள்ளிட்ட தேவர்களுடன் வந்தனம், ஆதலின் அவனை விடுவிப்பாய்' என்று இரண்டாம் முறையாக அருளிச் செய்கின்றார். 
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 23)
மட்டுலாவு மலர் அயனைச் சிறை
இட்டு வைத்தனை யாமது நீக்குவான்
சுட்டி வந்தன மால்சுரர் தம்முடன்
விட்டிடு ஐய என்றெந்தை விளம்பினான்

சிவஞானமே ஒரு வடிவாய் விளங்கும் முருகப் பெருமான் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுப் பின் இறுதியாய், 'உம்மை நாள்தோறும் பூசித்தும் பிரமன் ஆணவம் நீங்கினானில்லை, ஆதலின் அவனை விடுவிக்கச் சம்மதியேன்' என்று ஆதிப் பரம்பொருளின் ஆணையினை மீண்டுமொரு முறை மறுத்துரைக்கின்றார்,
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 28)
நின்னை வந்தனை செய்யினும் நித்தலும் 
தன் அகந்தை தவிர்கிலன் ஆதலால்
அன்னவன் தன் அருஞ்சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே

கங்கை சூடும் பரம்பொருளும் 'மைந்த, முன்பு நந்தியின் மூலம் நம் கருத்தினைச் சொல்லிய போதும் ஏற்றாயில்லை, இச்சமயம் நாமே வந்து கூறிடினும் மறுத்துரைக்கின்றாய், உம்முடைய செயல் எத்தன்மையது?' என்று கோபம் கொள்பவர் போல் நடிக்கின்றார் ('வெகுள்வான் போல்' என்று இத்தெய்வ நாடகத்தினை இரு வார்த்தைகளில் அம்பலப்படுத்தி விடுகின்றார் நம் கச்சியப்ப சிவாச்சாரியார்)
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 29)
மைந்தநின் செய்கை என்னே மலரயன் சிறைவிடென்று
நந்திநம் பணியால்ஏகி நவின்றதும் கொள்ளாய் நாமும்
வந்துரைத்திடினும் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தாய் என்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல்

இறுதியாய் அறுமுக தெய்வம், 'ஐயனே! உன் திருவுள்ளம் அதுவானால் பிரமனை இக்கணமே விடுவிக்கின்றேன்' என்று பக்தியுடன் பணிந்திறைஞ்ச, சிவபெருமான் கந்தவேளுக்குப் பேரருள் புரிகின்றார்.  
-
(உற்பத்தி காண்டம்: அயனைச் சிறை நீக்கு படலம் - திருப்பாடல் 30)
அத்தனது இயல்பு நோக்கி அறுமுகத்து அமலன் ஐய
சித்தம் இங்கிதுவேயாகில் திசைமுகத்தொருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவன் என்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான்

மேருமலையில் தேவர்கள் கண்ட விஸ்வரூப தரிசனம் (கந்தபுராண நுட்பங்கள்):

கந்தபுராணத்தில் இரு வெவ்வேறு சமயங்களில் முருகப் பெருமான் தன்னுடைய விஸ்வரூப திருக்கோலத்தைக் காண்பித்து அருளியுள்ளதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார். யுத்த நிகழ்வுகளுக்கு மிக முன்னதாக தேவர்களுக்கென்று மேருமலையில் ஒரு முறையும், பின்னர் யுத்த களத்தில் சூரபத்மனுக்காக மற்றொரு முறையும் அறுமுகக் கடவுள் பெருவடிவு கொண்டருளியுள்ளான். இனி இப்பதிவில் முதல் விஸ்வரூப தரிசன நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம், 

கந்தப்பெருமானின் அற்புதத் திருவிளையாடல்களை 'உற்பத்தி காண்டத்திலுள்ள திருவிளையாட்டுப் படலம்' விரிவாகப் பேசுகின்றது. நிலவுலகிலுள்ள கடல்களை பாதாள உலகிற்கு செலுத்துதல், சூரிய கிரகத்தைச் சந்திரனின் பாதையிலும்; சந்திரனைச் சூரியனின் பாதையிலும் பயணிக்கச் செய்தல்; கோள்களின் அமைப்பினை மாற்றியமைத்தல் என்று எண்ணிறந்த திருவிளையாடல்களைப் புரிந்து வருகின்றான் சிவகுமரன். 

இவ்விநோத நிகழ்வுகளால் அச்சமுற்றிருந்த தேவர்கள், மேருமலையில் பால வடிவில் எழுந்தருளியிருந்த குமரப் பெருமானை அசுரர்களின் மாய வடிவமென்று கருதி, அறியாமையால் சூழ்ந்து கொண்டு போரிடத் துவங்குகின்றனர். கந்தக் கடவுள் புன்முறுவலோடு அவர்களுடன் போரிட்டு ஒருவர் விடாது அழித்தொழிக்கின்றான். நடந்தேறிய நிகழ்வுகளை நாரத முனிவரின் மூலம் அறியப் பெறும் தேவகுருவான பிரகஸ்பதி மேருமலைக்கு விரைந்து வந்து வேலாயுதப் பெருங்கடவுளின் திருவடி தொழுது, தேவர்கள் சார்பாக பிழை பொருத்தருளுமாறு வேண்ட, உமை மைந்தன் மீண்டும் அனைவரையும் உயிர்ப்பித்து அருள் புரிகின்றான்.

(1)
உயிர் பெற்றெழும் தேவர்கள் நடந்தேறிய நிகழ்வுகளை உணர்ந்து உச்சி கூப்பிய கையினராய் அறுமுகத்து வள்ளலை, 'கந்தனே போற்றி; சிவமூர்த்தி தந்தருளிய முதல்வா போற்றி; ஆறுமுகப் பரம்பொருளான எங்கள் தந்தையே போற்றி; என்றும் இளையோய் போற்றி' என்று அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கிப்  பணிந்தேத்துகின்றனர், 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 82):
கந்தநம ஐந்துமுகர் தந்த முருகேசநம கங்கை உமை தன்
மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலை புனையும் 
தந்தைநம ஆறுமுக ஆதிநம சோதிநம தற்பரமதாம்
எந்தைநம என்றும் இளையோய்நம குமாரநம என்றுதொழுதார்

(2)
அச்சமயத்தில் குமரப் பெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெருவடிவு கொண்டருளி, அதனைக் கண்டுணரும் சிவஞானப் பார்வையையும் தேவர்களுக்கு அளித்தருள் புரிகின்றான். 

காண்பதற்கரிய அவ்வடிவத்திற்கு மண்ணுலகம் முதல் பாதாள உலகம் வரையில் திருவடிகளாகவும், திசைகளின் எல்லைகள் திருத்தோள்களாகவும், விண்ணிலுள்ள உலகங்கள் யாவையும் திருமுடியெனவும், ஒளிமிகு சுடர்கள் யாவும் திருக்கண்களெனவும், நால்வேதங்கள் அழகிய இதழ்களாகவும், மெய்யறிவு முழுதும் செவிகளாகவும், திருமாலும்; நான்முகக் கடவுளும் இரு பக்கங்களாகவும், பராசக்தியாகிய உமையன்னையே எண்ணமாகவும், ஆதிப்பரம்பொருளான சிவபெருமானே இன்னுயிராகவும், மற்றுமுள்ள ஆயிரம்கோடி அண்டங்களிலுள்ள எப்பொருளும் தானேயாகவும் வெளிப்படுத்திக் காட்டுகின்றான், 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 89):
மண்ணளவு பாதலமெலாம் சரணம், மாதிர வரைப்பும் மிகுதோள்,
விண்ணளவெலாம் முடிகள், பேரொளியெலாம் நயனம், மெய்ந்நடுவெலாம்
பண்ணளவு, வேதமணி வாய், உணர்வெலாம் செவிகள், பக்கம் அயன்மால்
எண்ணளவு சிந்தை உமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈசன் உயிரே

(3)
தேவர்கள் விதிர்விதிர்த்து உச்சி கூப்பிக் கந்தவேளைப் பலவாறு தொழுது, 'எம்பெருமானே, அருவுருவத்தில் விளங்கியருளும் சிவபரம்பொருள் நீரே என்றுணர்ந்தோம். எங்கள் தவப்பயனாய், சூராதி அசுரர்களை சம்ஹாரம் புரிந்து மீண்டும் எங்களை தேவருலகில் அமர்விக்கும் பொருட்டே இக்குமார வடிவினில் தோன்றி உள்ளாய்' என்று போற்றி செய்து பணிகின்றனர், 
-
(உற்பத்தி காண்டம்: திருவிளையாட்டுப் படலம் - திருப்பாடல் 99):
ஆகையால் எம்பிரான்நீ அருவுருவாகி நின்ற
வேத நாயகனேயாகும் எமது மாதவத்தால் எங்கள்
சோகமானவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை
நாகமேல் இருத்துமாற்றால் நண்ணினை குமரனேபோல்
-
(சொற்பொருள்: நாக மேல் - தேவலோகத்தில்)




முருகப் பெருமானுக்கு ஆட்டுக்கடா வாகனமா? (கந்தபுராண நுட்பங்கள்):

நாரத முனிவர் நிலவுலகில், எண்ணிறந்த தவமுனிவர்களும் அந்தணர்களும் சூழ்ந்திருக்கச் சிறந்ததொரு சிவவேள்வியினைப் புரியத் துவங்குகின்றார். எதிர்பாராத விதமாக அவ்வேள்வியினின்றும் சிவந்த நிறமுடைய ஆட்டுக்கடாவொன்று வெளிப்பட்டு, விண்ணிலும் மண்ணிலும் எண்திசைகளிலும் எதிர்ப்படுவோர் அனைவரையும் அழித்தொழிக்கத் துவங்குகின்றது. எவரொருவராலும் அதனைத் தடுக்க இயலாத நிலையில் அனைவரும் திருக்கயிலை மலைக்கு அபயம் வேண்டி விரைகின்றனர்.

அங்கு திருவாயிலுக்கருகில் லட்சத்து ஒன்பது வீரர்களுக்கு நடுவில் திருவிளையாடல்கள் புரிந்து மகிழ்ந்திருக்கும் ஆறுமுகக் கடவுளைத் தரிசிக்கின்றனர். கந்தவேளிடமே இதுகுறித்து முறையிடுவோம் என்று கருதி சிவகுமரனின் திருமுன்பு சென்று முறைமையாகப் பணிந்து, 'ஐயனே, மறைவழி நின்று வேள்வியொன்றினைப் புரிந்து வருகையில் அதனின்று ஒரு ஆட்டுக்கடா தோன்றி காண்பவரையெல்லாம் கடும் சீற்றத்துடன் கொன்று குவித்து வருகின்றது. இன்னமும் ஒரு நாழிகை நேரம் தாமதித்தால் இப்படைப்பிலுள்ள உயிர்கள் யாவையுமே அது அழித்து விடும், நீங்களே காத்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர்.  

முருகப் பெருமான் 'அஞ்சேல்' என்று அவர்களுக்கு அபயமளித்து வீரவாகுவிடம், 'அந்த ஆட்டுக்கடாவினை இவ்விடம் கொணர்க' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றான். வீரவாகுவும் விரைந்து சென்று கந்தப் பெருமானின் திருவருளால் அக்கடாவினை அடக்கி அதனுடன் குகக் கடவுளின் சன்னிதிக்கு மீள்கின்றார். அது கண்டு திருவுள்ளம் மகிழும் வேலவன் விண்ணோர்களை நோக்கி, இனி நீங்கள் இது குறித்து அஞ்சாமல் நிலவுலகு சென்று உங்கள் வேள்வியைத் தொடர்வீர்' என்றருளிச் செய்கின்றான்.

தேவர்கள் அகமிக மகிழ்ந்து நன்றிப் பெருக்குடன், 'பெருமானே, இன்று நீங்கள் எங்களைக் காத்து அருள் புரிந்துள்ள தன்மையினை யாவரும் உணருமாறு இந்த ஆட்டுக்கடாவினை உங்களது வாகனமாக ஏற்று அதன் மீது எழுந்தருளி வருதல் வேண்டும்' என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர். குமாரக் கடவுளும் அதற்கு இசைந்தருளி அன்று முதல் அக்கடாவின் மீது பெருவிருப்புடன் ஆரோகணித்து வலம் வருகின்றான், 
-
(உற்பத்தி காண்டம்: தகரேறு படலம் - திருப்பாடல் 25)
நவையில்சீர் முனிவர் தேவர் நயப்ப நாரதன் என்றுள்ளோன்
புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்வி
அவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட்(டு) அமல மூர்த்தி
உவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தியாக
-
(சொற்பொருள்: மேடம் - ஆட்டுக்கடா)